Sunday, September 11, 2011

பாரதி என்னும் பாட்டன்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

தேடிச் சோறு நிதம் தின்றுஅதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்றுபிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்திகொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலேநான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”


என்று-

தன் அமர நிலை பற்றித் தீர்க்கத் தரிசனத்தோடு எழுதியவன் அந்த மகாகவி.

இன்று அவன் அமரத்துவம் எய்திய நாள் (11-9-1921)

ஆம்.

’வேடிக்கை மனிதரைப் போல அவன் இந்த மண்ணில் விழவில்லை; ஒப்பிட்டுச் சொல்லமுடியாத தெய்வக் கவியாய் இந்த மண்ணில் எழுந்தான்’ என்றே சொல்ல வேண்டிய நாள் இது!

பாரதி-

‘தமிழரும் தமிழ் உறவும் இந்திய தேசீயத்தில் எப்படி இருக்க வேண்டும்?’ என்பதற்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்ந்த மாகவி.

“பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி” என்பது, அவன் வழி வந்த வாரிசுக் கவியின் வைர மொழி.

அந்தப் பாரதி,நம் பாட்டுக்குரிய பாட்டன்;பாட்டுப் புலமைக்கு மட்டுமல்ல,தமிழர் உறவுக்கும் கூட.

தமிழருக்கு ‘இந்திய வீட்டைக் கட்டி,அதில் அவர்களைக் குடி வைத்து, அதன்   தேசீய உரிமையைப் பட்டயம் செய்து வைத்த பாட்டன் அவன்.

“பாரத நாடு பழம் பெரும் பூமி;
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்”

என்பது அவன் நமக்கு அந்தப் பட்டயத்தில் பதித்துள்ள சாசன வரிகள்!

பாரதியின் தோற்றத்துக்குப் பிறகே தென்னகத்தில்,குறிப்பாகத் தமிழகத்தில் “மக்கள் கவிஞர்கள்’’ அடையாளம் ஆகினர்.

‘பாரதிக்கு முன்’ என்றும் பாரதிக்குப் பின்” என்றும் நாம் ஆராய்ச்சிக் கண் பெற்றுத் தேசீயத்தைத் தெரிந்து கொண்டவர்களானோம்.

‘பா.மு’வில் பாடிய கவிஞர்களில் பெரும்பாலானோர் ரசத்தையும் விரசத்தையும் பாடியே அன்றைய வேந்தர்களின் வித்துவான்களாகவும் அவர்களைப் பரவசப்படுத்துவதற்கென்றே அவர்களுடன் சுற்றுவான்களாகவும் இருந்தவர்கள்; அவர்கள் படைத்த இலக்கியம் அனைத்தும் தனி நபர் துதியே தவிர,மக்கள் இலக்கியம் அல்ல.

பாரதியோ-

கவிஞர்களுக்குப் புதிய இலக்கணம் படைத்த எழுச்சிக் கவிஞனாக உருவெடுத்தவன். கற்பனைகளில் கூட வாழ்க்கையின் எதார்த்தத்தையும், எதார்த்தமான சாடல்களையும் துடிப்பான உணர்ச்சிகளின் தெய்வீகத் தாவல்களை வடித்த வரகவி.

வறுமை வாட்டியபோதும் குன்றிப் போகாத கவிக் குன்று!.

தலைமறைவாக வாழ நேர்ந்த காலக்கட்டங்களிலும் தன்னை மறைத்துக் கொள்ளாதத் தமிழ்ச் சிங்கம்.

அவன் பணத்துக்காகப் பாடவில்லை;பயந்து கொண்டும் பாடவில்லை.

தேசத்துக்காகவும்,தெய்வீக உணர்வுகளுக்காகவும் தீந்தமிழ்க் கவிதைகளைத் தீட்டி,எதுகையும் மோனையும் எளிய கருத்துமாய் எவரும் பாடுகின்றவாறு பாட்டெழுதிய பாவலன்.

கங்கை நதி புறத்துக் கோதுமையை காவிரி வெற்றிலைக்கும்;சிங்க மராட்டியர்தம் கவிதையை சேர நாட்டுத் தந்தங்களுக்கும் பண்ட மாற்றம் செய்து பாரத தேசத்தைப் பாட்டால் பிணைத்த பாட்டரசன்.

எதையும் தீர்க்க தரிசனத்தோடு பாடியவன் பாரதி.

உண்மையெல்லாம் அவன் பாட்டில் வந்தது;அவன் பாடியதெல்லாம் உண்மையாயிற்று!

உண்மை!

‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று நம்மைத் தூண்டியவன் அல்லவா,அவன்?

அவன் சொற்படிப் பாலம் அமைந்திருக்குமாயின், இன்று எண்ணற்ற ஈழத் தமிழர்களின் கபாலம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

அந்தப் பாட்டனின் கூற்றை நாம் நம் கபாலத்தில் அல்லவோ வைக்கத் தவறி விட்டோம்!


உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாதனாலாயே, அவனது வாக்கில் ஒளி உண்டாயிற்று.அந்தப் பாட்டன் சொன்னவற்றை ஆராய்ந்து பார்த்தால், வியத்தகு விஞ்ஞான உண்மைகள்கூட நிரூபணம் ஆகியிருப்பதைக் கண்டு பேருவகை கொள்ளலாம்.

அந்தப் பாட்டன் நமக்கு எத்தனையோ உரைத்துள்ளான்;எச்சரிக்கையும் செய்துள்ளான்.

அத்தனையையும் எண்ணிப் பார்ப்பது ஒன்றே அவனுக்கு நாம் செய்யும் மகத்தான கடமை.

“சென்றிடுவீர்,எட்டுத் திக்கும்;கலைச் செல்வங்கள் யாவும்,கொண்டிங்கு சேர்ப்பீர்” என்றுதமிழ்த் தாயாய்,தன் பிள்ளைகளுக்குப் பாடிப் பெருமை காணத் துடித்தவன்.

அடிமை இருளைக் கிழித்தெழுந்த,அந்தக் கவிச் சூரியன், பாதி வானத்திலேயே அஸ்தமித்துப் போனாலும் நம் மனங்களில்  நிரந்தரமாய் உதித்திருந்து, அமர கவியாய் ஆட்சி செய்கின்றான்.

அந்தப் பாட்டனின் பெருமைகளை மட்டுமின்றி,அவன் சொன்ன பாட்டு மொழிகளையும் கேட்டு,சிந்தித்து வாழ்வதே நமக்கு மேன்மை என்பதை மறவோம்!

இந் நாள் அவனை எண்ணும்
எம் உயிர், கண்ணீர் சிந்தும்;
எந் நாளும் அவன்எண்ணம்;
எமை வாழ்விக்கும்தானே?

இவண்-
கிருஷ்ணன் பாலா
11.09.2011 / பாரதி நினைவு நாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
இக் கட்டுரை ‘வாழும் தமிழ் உலகம்’அக்டோபர்,1985- இதழில் இதே தலைப்பில் பிரசுரம் ஆகியுள்ளது.

No comments: