Thursday, September 8, 2011

எழுத்தின் கடமை! (எழுதுகிறேன் - தொடர்:13 )

நண்பர்களே,வணக்கம்.
முக நூலிலும் இங்கும் கடந்த 30.8.2011 செவ்வய் அன்று ‘நீதி இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது‘ என்று எழுதிப் பதிவு செய்திருந்தேன். அதற்குத் திருவாளர்கள் Shanmuganathan Swaminathan.Atthippatturinivasan, Muralitharan ஆகியோர் முக நூலில் தங்கள் கருத்தினைப் பதிவு செய்தார்கள்.நண்பர்கள் திரு,முத்து பாலகன் மற்றும் Usha Tvshankar, Karuna Gsm, Kalai Kumar ஆகியோர் தங்கள் பார்வையைப் பதிவு செய்திருந்தனர்.


இந்தப் பதிவைத் தொடர்ந்து தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்’ என்ற இன்னொரு பதிவையும் 6.9.2011 அன்று அதேபோல் முக நூலிலும் இங்கும் எழுதினேன். இதை, தோழர்.பாவலர் @இராஜ.தியாகராஜன், Saravanai Saravanan,Santhi M Mary, ,மன்னார் அமுதன், ஆகியோர் ‘LIKE’ செய்திருந்தனர். நண்பர்கள் Loganadan Ponnusamy, Natarajan Baskaran முத்து பாலகன், திருமதி கீதா ராமஸ்வாமி ஆகியோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


திரு லோகநாதன் பொன்னுசாமி அவர்களும் திரு.முத்து பாலகன் அவர்களும் நீண்ட கருத்துக்களை வழங்கியிருக்கின்றார்கள்.


இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு நண்பர்கள் அனைவருடைய கருத்துக்களையும் மதிக்கின்றேன்.


இது பற்றி மேல் விளக்கம் தருவதற்காக இங்கே இதனை எழுதுவது அவசியமாகின்றது என்பதால் ‘தூக்குத் தண்டனைச் சட்டம் கூடாது’என்பதை உறுதியாக வலியுறுத்தி அதற்கான காரணத்தை சுருங்கச் சொல்லி வைக்கின்றேன்.


இதில் உடன்பாடு கொள்ளவும் முரண்பாடு கொள்ளவும் எவருக்கும் உரிமை உண்டு என்பதில் எனக்கு உடன்பாடுதான்.எனினும் எனது கருத்து இதுதான் என்பதை இங்கே சொல்வது எனது எழுத்தின் கடமை.


நண்பர்களே,


‘தூக்குத் தண்டனை’ என்கிற வன்கொடுமைத் தண்டனை இந்தத் தேசத்தில் இருக்கலாமா? வேண்டாமா? என்கிற வாதம் இப்போது பரவலாக எழுந்து மீடியாக்களில் அதிகம் பேசப்படுகிறது.


இந்த விவாதம் நமது சுப்ரீம் கோர்ட்டால் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரின் கருணக்காகக் காத்திருக்கும் அப்சல்குரு என்வரின் விஷயத்தில் எழுச்சி பெற்றது. இப்போது பேரறிவாளன், சாந்தன்,முருகன் என்ற மூவருக்காக மறுமலர்ச்சி பெற்று தமிழகம் எங்கும் தனலாகத் தகித்துக் கொண்டுள்ளது.


அதன் வெப்பம், நமது எண்ணங்களை மட்டுமல்லாது,தமிழ்நாடு சட்டமன்றத்தையும் தாக்கி, அம் மூவரின் உயிரை மீட்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி ஏக மனதான தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறது.


நண்பர்களே,


இங்கிருந்துதான் நம்முடைய வாதங்களின் கருப்பொருளைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


நமது தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் எதை நோக்கி எடுக்கப் பட்டது? அதன் மூலாம் விளையவேண்டிய பயன் என்ன?


பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகிய மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதானே.?


அப்படிக் காப்பாற்றப் பட்டால், இதுவரை நடந்த வழக்குகளின் நீண்ட விவாதம்;கோர்ட்டுக்களின் அணுகுமுறை, இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லாம் கிடக்கட்டும். இந்த மூவரையும் விடுதலை செய்யுங்கள் என்பதுதானே!


அப்படியானால்,தமிழக மக்களின் ஒட்டு மொத்தப் பிரதி நிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் 233 பேர்களும் சேர்ந்து ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மதித்து ஏற்கனவே வழங்கப் பட்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாகத்தானே பொருள்?


ஆக,தீர்ப்பு எதுவாயினும் இறுதியில் ஜன நாயகத்தின் மெஜாரிட்டித் தீர்மானமே இறுதியில் ஏற்கப் படக்கூடியது என்றாகும்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றக் கூடிய சக்தி ஜனநாயகத்துக்கு இருக்கிறதல்லவா?


தனி மனித ஒழுக்கமும் மனித நேயமும் இல்லாதா ஜன பிண நாயகமாகத்தான் இருக்க முடியும்.


வறுமை ஒரு பக்கமும் வசதி ஒருபக்கமும் குடிசைகள் ஒரு பக்கமும் கோபுர மாளிகைகள் ஒருபக்கமும் குவிந்துள்ள ஜனநாயக நாட்டில் மனித நேயம் புனித நேயமாக எப்படி இருக்க முடியும்?


குற்றங்களும் கொலைகளும் சட்டப் போராட்டங்களும் தொடர்ந்து மலிந்து வருவது நீதியும் தர்மமும் நிலைகுலைந்து போய்க் கொண்டிருப்பதன் அடையாளம்.


ஆட்சி அதிகாரத்தின் மூலம் ’நீதிக்குத் தலை வணங்கு’ என்பது நீதியை வளைக்கின்ற அநேக காரியங்கள் நடக்கத் தலைப் பட்டுவிட்டன.


’சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்’ என்பது பேசளவில் மட்டுமே அளிக்கபட்டுள்ள உத்தரவாதம் என்பதை இன்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.


ராஜிவ் காந்தி அவர்களின் கொலையில் அவருடன் அதே மனித வெடியில் சிதறிபோன 15 பேர்களின் குடும்பம் பற்றியோ செத்துப் போனவர்களுக்குரிய மரியாதை பற்றியோ எந்த வழக்கு மன்றமும் சட்டமும் வாய் திறக்கவில்லை.;கவலைப் இது பற்றிய எந்தச் சிந்தனைகளை நாமும் கொள்ளவில்லை.


இங்கே ராஜிவ் கொலை தொடர்புடையவர்கள் எனக் குற்ற சாட்டப் பட்டுள்ளவர்களைத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோஷத்துக்குக் கொடி பிடிப்பதற்காக எனது கருத்தை இங்கே நான் சொல்லவில்லை.


தூக்கில் இடும் சட்டத்தின் நோக்கம் சரியானபடி நிலை நிறுத்தப் படவில்லை என்பதாலேயே, தூக்குத் தண்டனையைத் தூக்கில் போடுங்கள்’ என்கிறேன்.


இல்லயெனில் தூக்குத் தண்டனை என்று இந்தியாவின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு,அரசும், ஏன் இந்திய ஜனாதிபதியுமே ‘நீதிக்குத் தலை வணங்கும் நியதியைக் கடைப் பிடிக்க வேண்டும்.


‘கருணை மனு’ என்ற பேரில் ‘காத்திருப்பும் கழுத்தறுப்பும் வேலைகள் நடக்க இடம் கொடுப்பதானது, அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கும் திரை மறைவு வேலைகளுக்கும் அரசியல் சித்து வேலைகளுக்கும் இடம் தரும் என்பது என் அசைக்க முடியாத கருத்து.


இன்றைய இந்திய ஜனாதிபதிகள் எவரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல; சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. அவர்கள் இப்பதவிக்கு வரும்முன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் சார்புத் தன்மையில் இருந்தவர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


இதன் அடிப்படையில் நீதி தடுமாறி விடுவதைச் சகித்துக் கொள்வது தர்மமா?


தவிர,தூக்குத் தண்டனை என்பது பெரும்பாலும் கொலைக் குற்றவாளிகளுக்கே தரப்படுகிறது.


இதன் தாத்பர்யம் என்ன?


கிடைப்பதற்கரிய மனித உயிரைக் கொன்ற குற்றத்துக்காகத்தான் இந்தத் தண்டனை என்றால்,கொலை செய்தவர்களும் மனித உயிர்கள்தானே?.


அவர்கள் கொலை செய்யும் அளவுக்கு அவர்களைக் கொலை செய்யத் தூண்டிய குற்றத்ததைக் கொலையுண்டவர் எந்த அளவுக்குச் செய்தார் என்பதையும் விரிவாக அதே வழக்கு மன்றத்தில் விவாதிக்கப் பட்டு மக்கள் மன்றத்தில் வைக்கப் பட வேண்டும். குறைந்த பட்சம், கொலைகார்கள் தூக்கில் இடப்படுவதற்கு முன் அவர்கள் செய்த குற்றத்துக்கான காரணம் என்ன என்பதை அவர்கள் அதே நீதி மன்றத்தின் மூலம் முழுமையாகச் சொலவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒருதலைபட்ட விசாரணையாக இல்லாமல் கொலையுண்டவர்கள் செய்த குற்றம் என்ன என்பது; அந்தக் குற்றத்தின் மூலம் கொலைவெறி தூண்டப் பட்டதா என்பதையும் சரியான கோணத்தில் எதிர் விசாரனை நடத்தும் சட்டமும் உருவாக்கப் பட வேண்டும்.


ஜனநாயகம் என்ற பெயரில் ’உண்மையிலேயே அரசியல் ஊழல்களுக்கு எதிராகத் திரண்டெழும் எழுச்சிக்கு’ சட்டத்தின் பெயரால் முட்டுக் கட்டையாகி நீதியும் தர்மமும் முடக்கப்படுகின்றன, இதற்கு தூக்குத் தண்டனைச் சட்டம் சில சமயங்களில் அரசியல் பித்தலாட்டக் காரர்களுக்கு நிச்சயம் துணை போகின்றன.


எனவே,நீதியின் முழுப் பரிமாணமும் தெரியாதவரை ஒருவரைத் தூக்கில் இட்டுக் கொல்வது என்பது அநீதிதான்.


இந்த அநீதி நிகழ்வதற்கான அரசியல் சூழ்நிலை உள்ள நாட்டில் தூக்குதண்டனைச் சட்டம் இருப்பதை விட ஆயுட்காலச் சிறை வாசம் என்ர சட்டமே குற்றவாளிகளைத் திருத்தவும் நாட்டில் குற்றங்கள் குறையவும் உதவும்.


உண்மையான கொலைக் குற்றவளியைத் தூக்கில் இட்டதும் அவன் தான் செய்த குற்றத்துக்காகக் கொல்லப் படுகிறான் எனபது ‘நீ அடித்தாய்;நான் அடித்தேன்; நீ கத்தியால் குத்தினாய்;நானும் கத்தியால் குத்தினேன்; என்னை வெட்டினாய்;நானும் உன்னை வெட்டினேன்’ என்று பதிலுக்குப் பதில் கொலை செய்வதே அன்றி, சட்டத்தின் நோக்கம் உண்மையாகவே நிறைவேறியதாக இல்லை.


எனவே கொலையுண்டவனுக்குப் பதில் நீதி மன்றத்தின் மூலம் அரசாங்கம் கொலை செய்கிறது என்பதுதான் இதன் உண்மைப் பொருள்.


தீவிரவாதம் தலை எடுக்காதிருக்க இத்தகைய இத்தகைய மரண தண்டனைகள் அவசியம்தானே? என்று திருமதி கீதா ராமஸ்வாமி அவர்கள் கேட்டிருந்தார்.


’தீவிரவாதத்தை ஒழிக்க கடும் தண்டனைகள் தேவை’ என்பதைவிட கடும் நடவடிக்கைகள் தேவை’என்ற கருத்தில் தீவிரவாதம் செய்பவன் நான்.


இன்று இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் தீவிர வாதச் செயல்கள் மிகுந்து விட்டது. தூக்குத் தண்டனைச் சட்டம் புதிதாக ஒன்றும் நேற்றுக் கொண்டுவரப் படவில்லை. அப்படித் தூக்குத் தண்டனைச் சட்டம் காலம் காலமாக இருந்தும் இந்தத் தீவிர வாதம் ஏன் பெருகிற்று? இத்தகைய தூக்குத் தண்டனைகளால் அந்தத் தீவிர வாதிகளை வளர்க்கத்தான் முடிந்ததே தவிர அதைத் தலை தூக்காமல் செய்ய முடியவில்லை என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

உண்மையிலேயே வன் கொடுமையாளருக்கு வழங்கப் படும் நீதி அவர்கள் வாழ்நாள் முழுதும் கொடுஞ் சிறையில் கடும் தண்டனைகளை ஏற்று, தான் செய்த பாவத்தைக் கசிந்து கசிந்து அழுது அழுது கழுவிக் கொள்வதுதான். ஒருவேளை அவர்கள் அவ்வாறு உணர்ந்து மஹான்களாகவும் மாறி,பிறருக்கு உபதேசம் செய்து மரித்துப் போகவும் வாய்ப்பைத் தருவது ’ஆயுட்காலத்துக்கும் கடுஞ் சிரை’ என்கிற மரணதண்டனையே தவிர.தூக்குத் தண்டனை அல்ல.

அஹிம்சை என்னும் அற நெறியால் அனைவரையும் கவர்ந்த மஹாத்மா .இன்று உயிருடன் இருந்தால் இதை நிச்சயம் விரும்ப மாட்டார்.

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
7.9.2011
Post a Comment