Tuesday, September 6, 2011

நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! (எழுதுகிறேன் தொடர்-12)

அறிவார்ந்த நண்பர்களே,


வணக்கம்.


’தூக்கைத் தூக்கில் போடுங்கள்’ என்று தூக்குத் தண்டனை முறைமைக்கு எதிராக எனது கருத்தை பதிவு செய்து அதை முக நூலில் வெளியிட்டிருந்தேன் (காண்க: நீதி இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது!; எனது NOTES பகுதி – தேதி 30.8.2011)


அந்தக் கருத்துக்கு எதிராக,அதாவது தூக்குத் தண்டனை தேவை என்பதை வலியுறுத்தி எனது நண்பர்களில் ஒருவரான திரு அத்திப்பட்டு முரளீதரன் எனது முக நூல் பதிவில் தனது கருத்தை நேற்றிரவு (5.9.2011) அனுப்பியிருந்தார்.


திரு அத்திப்பட்டு முரளீதரன் முகநூலுக்கும் முன்னதாகவே எனது நேரிடை நண்பர்களில் ஒருவர். எனது தனிப்பட்ட வாழ்க்கை,உணர்வு மற்றும் செயல்பாடுகளை நேரில் அறிந்தவர்தான்..


தூக்குத் தண்டனைக்கு எதிராக நான் எழுதியிருந்த கட்டுரையை விமர்சித்து அவர் எழுதினார் இப்படி:


//Atthippattu Srinivasan Muralitharan அறிவார்ந்த நமது நண்பர் திரு கிருஷ்ணண் பாலா அவர்கள் தூக்கை ஏன் தூக்கில் போட்டார் என புரியவில்லை. தர்மசிந்தனை உள்ளவரும், தர்ம நூல் படித்தவரும், ஆன்மீக ஜோதிடம் அறிந்தவருமான நம் நல்ல நண்பர் ஏன் திடீரென குழம்பிப் போயுள்ளார்.? ஆவும் கோவும் ஒன்று என்று இவர் அறியாததா?


(இந்த இடத்தில் ஆ என்பது ஆயர்கோன் தலைவன் அல்லது அரசன். கோ என்பது கடவுள். குழப்பம் தங்கள் கூற்றில் நிறையவே உள்ளது. சமன் செய்வேன் சீக்கிரத்தில்.//


எனது பதில் அவருக்கு இது:


@Atthippattu Srinivasan Muralitharan:;நண்பரே, நீங்கள் எனக்கு வழங்கிய பட்டங்கள்,தகுதிகள் எல்லாம் உண்மையென்று நீங்கள் நம்புவது உண்மையானால்,எனது கருத்தும் உண்மையென்று ஏற்க வேண்டும்.


ஜிலேபி கசக்குமா? அப்படிக் கசப்பதாக நீங்கள் சொன்னால் உங்கள் நாக்கை ஒரு நல்ல வைத்தியரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம்.


குழப்பம் எனக்கில்லை நண்பரே;நீங்கள்தான் தெளிவாகக் குழம்பி ஆவும் கோவும் ஒன்று என்று இவர் அறியாததா? எனக் கேட்கிறீர்கள்.


நீங்கள் வேண்டுமானால் ஆ என்றால் ஆண்டவன்; கோ என்றால் அரசன் என்று பதம் கூறிக் கொள்ளலாம். அரசனை ஆண்டவனின் பிரதி நிதி என்கிறது மனு நீதி.


எனவே என்னை பொறுத்தவரை ’ஆ’ என்றாலும் மாடுதான்; ‘கோ’ என்றாலும் மாடுதான்.


சட்டம் என்பது நீதியைக் காக்கத்தான்; நீதி என்பது சட்டத்தை நிலை நிறுத்தத்தான். அது அநீதியைச் செய்ய அல்ல..


இதுபற்றி தனி ‘நோட்ஸ்’ ஒன்றையும் பதிக்கிறேன்,உங்களைப் போன்றோர் அறிவதற்காக. படித்து விட்டு வாதம் செய்ய வாருங்கள்; பேசுவோம்.


நண்பர்களே,


அந்த ‘நோட்ஸ்’தான் இப்போது, இனி இங்கே:


நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்!
---------------------------------------------------------


திரு முரளிதரன் எனது நண்பர்;அவரைப்போல் நண்பர் அல்லாத பலரும் நாட்டில் தூக்குத் தண்டனை என்பது தேவை என்றும் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீதே கொலைக் குற்றம் சாட்டும் அளவுக்குக் கோபத்தை வெளிப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.


இது ஆரோக்கியமான,மனித நேயமுள்ள சிந்தனையன்று.


தர்மத்தையும் நீதியையும் தாங்கிப் பிடிக்க நினைப்போர், தூக்குத் தண்டனையின் துன்மார்க்க நீதியைச் சிந்திக்கத் தவறியவர்கள் ஆகின்றார்கள்.


இங்கு ’மனிதனை மனிதன் தூக்கில் இடுகின்ற நீதியை யார் வழங்கியது? என்பதை ஆதாரப் பூர்வமாகச் சொல்லுங்கள். புராண,இதகாச காலங்களில் கூட ஆயுட் சிறை,கடுஞ்சிறை,நேரில் போரில் கொல்லுதல் முதலான தண்டனைகள் தரப்பட்டிருக்கின்றனவே ஒழிய வழக்கு நடத்தித் தூக்கிலிடும் வழக்கம் வலியுறுத்தப்படவில்லையே.


அரசர்கள் ஆண்ட காலத்தில் குற்றவாளிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தப் பட்டதுதான் சிரத்தை வெட்டும் கொலைத் தண்டனை. கோவலன் வாழ்வில் இக்கொடுமைத் தீர்ப்பு எவ்விதம் கொடுமையில் முடிந்தது என்பதற்குச் சிலப்பதிகாரமே சான்று.


மனிதன் மனிதன் சட்டத்தின் பெயரால் கொல்ல முடியும் என்பது அறிவுக்கும் மனித நேயத்துக்கும் புறம்பானது. ஒருவனைச் சட்டத்தால் திருத்ததான் பார்க்க வேண்டுமே ஒழிய அவனைக் கொல்வதன் மூலம் அவனைச் சார்ந்த குடும்பத்தார், எவ்விதக் குற்றமும் செய்யாமலேயே சிறுகச் சிறுகக் கொல்லப்படுவதற்கு இதே சட்டம் காரணமாக இருக்கின்றதே? இதை யார் உணர்வது?


இன்றுள்ள தூக்குத் தண்டனைச் சட்டம் நமது அரசியல்வாதிகளுக்குத்தான் சாதகமாக இருக்கின்றதே தவிர,நீதிக்கு அல்ல’ என்பதை நாடு கண்டு கொண்டுதானே இருக்கிறது? கொலை செய்தவனை சட்ட ரீதியாகக் கொல்வது என்பது கொலை செய்யாதவர்களைத் தேவையில்லாமல் சட்டத்தின் பெயரால் மிரட்டுவதே அன்றி வேறு என்ன?


இந்தத் தூக்குதண்டனை எதிர்ப்பைப் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் என்ற தமிழர்களின் பொருட்டு நான் எதிர்க்கவில்லை;நீதி தேவதையின் கண்களை நிஜமாகவே மறைத்துக் கொண்டு, அரைகுறை ஆவணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்ற மரண தண்டனைகளில் மனித நேயம்கொல்லப் படுவதைத்தான் எதிர்க்கின்றேன்.


பேரறிவாளன்,சாந்தன்,முருகன் இந்த மூவரின் விஷயத்தில்,தூக்குத் தண்டனை ஆதரிப்போர் தெரிந்து கொண்டது என்ன?


இந்தியாவின் பிரதமராக இருந்தவரை, மறுபடியும் பிரதமராக வரப் போகிறவரை கொடூரமாகக் கொன்றவர்களுக்குத் துணை போனார்கள்;அதனால் மரண தண்டனை’ என்று வழங்கப் பட்ட தீர்ப்பின் அடிப் படையில்தானே தூக்கில் இட வேண்டும் என்று துடிக்கிறார்கள்?


இவர்கள் குற்றம் செய்தார்கள்; இவர்களால்தான் ராஜிவ் கொடூரமாகக் கொல்லப் பட்டார்’ என்பதுதானே வாதம்?


ராஜிவ் காந்தியின் மரணத்தின் பின்னணி மர்மமானது. அது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ள நிலையில் அதனை மறுபடியும் அலசிப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது..


மிக அதிக அளவு பாதுக்காப்பு வளையம் கொண்டராஜிவ் காந்தியை மிக அருகில் நெருங்கி ஒரு மனித வெடிகுண்டு மாலையிடும்போது வெடித்ததில் அவர் கொடூரமாகச் சிதறிப் போனார் என்பது உண்மை.


அந்த உண்மையின் உண்மையான பின்னணிக் காரணங்கள் எல்லாம் ராஜிவ் காந்தியை நேரில் நின்று கொன்றவர்கள் சிதறிச் செத்துப் போனதுடன் செத்துப் போய் விட்டன என்பதும் ஜீரணித்துக் கொண்டாகவேண்டிய உண்மை.


கொலைக் குற்றத்துக்கு இவர்கள்தான் உடந்தை என்று கண்டு பிடித்து விட்டதாய்க் காட்டப் பட்ட ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் அனுமானத்தின் அடிப்படையில் நம்பி வழங்கப் பட்ட மரண தண்டனை என்பதால்,அத்தகைய தண்டனையை மறு பரி சீலனை செய்யவும் விசாரணையின் சரியான போக்கை ஆராயவும் எவருக்கும் அருகதை இல்லாது போயிற்று.


நீதி மன்றம் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதா?


இதையெல்லாம் இவர்கள் - இந்த நீதியின் மைந்தர்கள் உணரவில்லை.


எனவே, இம்மூவருக்காக மட்டும் ”தூக்கை தூக்கில் போடுங்கள் என்று நாம் வலியுறுத்துவதை விடவும் நீதி நெறி, அறவழி, இறை நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நம்பிக்கை கொண்டோர் யாவரும் முற்றும் உணர வேண்டிய தர்ம நெறி: “மனிதனை மனிதன் தூக்கில் இடக் கூடாது” என்பதையே நாம் முனைப்புடன் வலியுறுத்த வேண்டும்.


தூக்கில் இடும் தகுதி மனிதனுக்குக் கிடையாது; ஒரு நாட்டின் மேலான சட்ட உரிமையாகவும் அதை ஏற்க இயலாது.. கொலைக் குற்றவாளி’ என்று ஒருவர் நிரூபிக்கப்பட்டபின் தூக்குத் தண்டனை அளிப்பதுதான் சட்டம்’ என்றால் அந்தச் சட்டத்தைப் பராமரிக்கின்ற ஆட்சியாளர்களாகிய அரசியல்வாதிகள் நாட்டையே சுரண்டி, அதே சட்டத்தின் பாதுகாப்பில் வாழ்கிறார்களே அவர்களை ஏன் அத்தகைய சட்டம் ஒன்றும் செய்வதில்லை?.


’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பது ஒரு சொலவடையாகத்தான் இருக்கிறதே தவிர,உண்மையில் அப்படியா சட்டம் பராமரிக்கப் படுகிறது.?


நீதிமான்களே, நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்?


கொலைக் குற்றத்தைவிடவும் கொடிய ஊழல்களைச் செய்வோர் நாட்டின் தலைவர்கள்; அவர்கள் சட்டத்தின் பாதுக்காப்பில் சகல் வசதிகளையும் பெற்று ஆள்வதற்கு ஆலபனை செய்து கொண்டு, அறிந்தும் அறியாமலோ உணர்வுகளின் அடிப்படையிலோ காரண காரியமாகவோ கொலை செய்கிறவர்களைத் தூக்கில் இட்டுக் கொல்ல வேண்டும் என்று கூக்குரல் இடுவது அறியாமையின் கொடுமை.அதுவும் அனுமானத்தின் அடிப்படையில் கொலைகாரர்கள் என்று தீர்மானிப்பது கொடுமையிலும் கொடுமை.


நீதியைக் கொன்று விட்டு ஒரு அரசாங்கமே கொலை செய்வதை அறிவுடையோர் ஏற்க முடையாது; அவ்வாறு ஏற்பவர் அறிவுடையோர் அல்ல.


சட்டத்தின் வன்முறையைச் சத்தியம் ஒருபோதும் அனுமதிக்காது
.
நீதியுடனும் நியாயத்துடனும்-
கிருஷ்ணன் பாலா
6.9.2011

No comments: