Tuesday, August 30, 2011

சிந்தியுங்கள், சிறுமதியாளர்களே! (எழுதுகிறேன் தொடர்:10)

அறிவார்ந்த நண்பர்களே,


"தூக்குத் தண்டனை பற்றி உங்கள் மன நிலை என்ன?” எனறு முக நூல் நண்பர் திரு ஜெய் கணேஷ் நாடார் (@JaiGanesh Nadar) என்று நேற்று முன்தினம் தன் முக நூல் பக்கத்தில் கேட்டிருந்தார்.


நான் எனது கருத்தை இவ்வாறு சொல்லியிருந்தேன்:
"அதைத் தூக்கில் போடுங்கள். இறைவன் கொடுக்கும் தண்டனையை  மனிதன் கொடுக்க அதிகாரம் இல்லை. (மனிதன் மூலம் இறைவன் அதைத் தருகிறான் என்பதை ஏற்க இயலாது;அப்படி ஏற்பதானால் அதற்கு ஏற்படும் எதிர்ப்பையும் ஏற்கத்தான் வேண்டும்)”

நண்பர்களே,


நம் தமிழர் மூவரை வரும் செப்டம்பர் 9 ஆம் நாளன்று தூக்கில் இடுவதற்கு நமது சென்னை உயர் நீதி மன்றம் இன்று (30.8.2011) தடை விதித்து விட்டது.


நீதி இன்னமும் உயிருடன்தான் இருக்கிறது, நண்பர்களே!

கொல்லப் பட்டது நம் மதிப்புக்குரிய ராஜிவ் காந்தி. அவர் கொல்லப் பட்டதற்கான காரணம் உண்மையிலேயே யாருக்கும் தெரியவில்லை;அதே போல் கொன்றவர்கள் யார் என்பதும் உண்மையிலேயே யாருக்கும் தெரியவில்லை. கொன்றவர்கள் ‘இவர்கள்தான்’


என்பதை நமது புலன் திறமை (?) மிக்க காவல்துறை நிபுணர்கள் பல ஆண்டுகளாக, பல கோடிகளைச் செலவிட்டு அனுபவித்துக் கண்டு (?) சொன்ன உண்மையின் (?) பேரில் குற்றத்தில் நேரிடையாகத் தொடர்பறற அப்பாவிகளைத் தூக்கில் இடுவது என்பது சரியென்றால்.... இதுவரை நாட்டில் வெவ்வேறு ஆயிரக்கணக்கான கொலைக் குற்றங்களில் 'நேரிடைத் தொடர்புக்கான காரணங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை’ என்று சொல்லி,’சந்தேகத்தின் பலனைத் தந்து விடுதலை செய்யப்பட்ட ஆயிரக் கணக்கான உயர் நீதி மன்ற,உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்களை என்ன சொல்வது?


’ராஜிவ் காந்தி கொல்லப் பாட்டார்’என்பதற்காக அவர்மீது வைத்திருக்கும் அறிவற்ற அபிமானத்துக்காக, ‘அப்பாவிகளைத் தூக்கிலிடுவது கூடாது’என்று குரல் கொடுப்பவர்கள் மீது அக்கினி அம்புகளை ஏவுவது அதைவிட அறிவற்ற செயல்.


‘ராஜிவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்று துடித்தவர்களை விட ’அவர் உயிருடன் இருந்தால் நாம் அதிகாரத்தை அடிய முடியாது‘ என்று புழுங்கிக் கொண்டிருந்தோர் அவரைப் பிறர் நெருங்க முடியாதபடிச் சுற்றி இருந்தவர்கள்தானே? அவர் சாவில் யார் யார் எல்லாம் அதிகாரத்தை அடைந்து எண்ணற்ற கோடி ஊழல் பணத்தைச் சுருட்டி ‘இன்று உழன்று கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஏன் அவர் மரணத்துக்கு மறைவில் இருந்து இயங்கி இருக்க முடியாது? அரசியலில் இவ்வாறு நடப்பது சரித்திரக் காலம் முதல் தொடரும் சதிச் செயல்தானே?


இனியாவது சிந்தியுங்கள், சிறுமதியாளர்களே!.


இவண்-
கிருஷ்ணன் பாலா.
30.8.2011

No comments: