Sunday, August 21, 2011

இது கானல் அல்ல; அறிவாயுதம்! (எழுதுகிறேன் - தொடர் 9)

நண்பர்களே,
வணக்கம்.

”நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவாக உள்ளது அய்யா ... நெறைய பேருக்கு விரிவுபடுத்துங்கள்....”

என்று-

என்னை முகநூல் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.
நான் அவருக்குச் சொன்னேன்:

“நண்பரே,

உங்கள் மனதைக் கவரும் அல்லது மனதில் பதியக்கூடிய பதிவுகளை எல்லாம் படித்து அதற்குரிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து அதன் மூலம் நண்பர்களைப் பெருக்கிக் கொள்வதுதான் சிறந்தது. ‘ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்க’ என்று பரிந்துரை செய்வதற்கு, ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். தவிர, முக நூல் என்பது பலருக்கும் ஒரு பொழுது போக்கு சாதனம். இதில் மீன் பிடிப்பதாக எண்ணி நட்பு வட்டத்தைப் பெரிதாக்கி கொள்வதால் என்ன பயன்? அது கானலில் மீன்பிடித்துக் கறி சமைத்து உண்கிற நிலைதான். நான் அந்த விளையாட்டில் எல்லாம் கலந்து கொள்வதில்லை“

அறிவார்ந்த நண்பர்களே,நாட்டு நலனைக் கருத்திற் கொள்வோரே,
நல்லோரே!


‘முகநூலில் ’ நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்வது’ என்பதை ஏதோ ஒரு மிகப் பெரிய கவுரவம் என்பதாகக் கற்பனை கொண்டு இதில் எந்த நேரமும் மனதைப் புதைத்துக் கொண்டு தங்கள் உண்மையான பாதையை மறந்து போகின்ற பலரையும் காண்கின்றேன்.


முக நூல் என்பது பலரும் தங்கள் கருத்துக்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்து கொண்டு ஒரு சமூக நல்லிணக்கத்தைக் கொள்ளப் பயன்படுவது; எனினும் அது அவ்வாறு ’இங்கே பயன் படுத்தப் படுகிறதா?’ என்றால் ’இல்லை’ என்றுதான் வருத்ததோடு நான் சொல்லுவேன்.


சமீபத்தில், “எகிப்தில் நடந்த ‘சரித்திரத்தை மாற்றிய சமூகப் புரட்சி’யின் பெருந் தீயானது, முகநூல் பயனாளர் ஒருவரின் துணிவு மிக்க பதிவின் மூலம்தான் பற்ற வைக்கப் பட்டது” என்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கவில்லை.


அசைக்க முடியாதிருந்த அந்த நாட்டுச் சர்வாதிகார ஆட்சியின் 32 ஆண்டுக்கால முகத்திரையை, முக நூலின் ஒரு ’சிறு நெருப்புப் பதிவு’ பெருந்தீயாய் மாறி, எரித்துச் சாம்பலாக்கி விட்டது.

அது போன்று நம் நாட்டிலும் இன்று உத்தர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் ஊழலின் முடை நாற்ற நிர்வாகச் சீர் கேடுகளை, கொஞ்சமும் வெட்கம் கெட்ட அரசியல்வாதிகளின் அக்கிரமச் செயல்களைக்,கண்டுகொள்ளாமல்,‘இராமன் ஆண்டால் என்ன?;இராவணன் ஆண்டால் என்ன?’ என்று இழிமாந்து கிடக்கும் நம் பாமர மக்களின் இருட்டு நெஞ்சங்களை எரிக்கும் நெருப்பை ‘எரிதழல் எடுத்து எரித்திட முடியாதா?’ என்று ஏங்குகின்ற நட்பை நாடும் உணர்வு கொள்ளுங்கள்.


ஒரு வகையில் நாம் ஆறுதல் கொள்கின்றவாறு, இன்று கூட,ஊழலுக்கு எதிராக ‘அன்ன ஹஸாரே’வின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து வருகிறது; அதற்கு இந்த முக நூல் போன்ற சாதனங்களும் முக்கியக் காரணியாகத் திகழ்கிறது என்பதில் நமக்கு மகிழ்ச்சியாக இருந்த போதும்,உலகமே வியக்கும் நமது பாரதத்தின் உண்மையான எழுச்சியும் வளர்ச்சியும் தகுதியும் அதன் முழுப் பரிமாணத்தை அடைவது எப்போது? என்ற கவலையும் வாட்டுகிறதே?

இதற்கு என்ன வழி?


நமக்கு எளிதாகக் கிடைத்துள்ள மிகப் பெரும் மீடியாவான இந்த முக நூலை நீங்கள் ஒவ்வொருவரும் புனிதமும் வலிமையும் மிக்க அறிவாயுதமாகப் பயன் படுத்துங்கள்;அது ஒன்றே போதும்.


ஒன்று பலவாகி, நூறு ஆயிரங்களாய்,லட்சங்களாய்,கோடிகளாய்ப் பெருகி கோடானு கோடி உள்ளங்களில் எழுச்சி ஒளியை ஏற்றி வைத்து விடும்.


அதுவே’அறிவுப் புரட்சி’. நிச்சயமாகக் கத்தியின்றி,ரத்தமின்றி,ஓர் மவுனப் புரட்சியை உருவாக்க வல்ல இத்தகைய அறிவு சாதனத்தை, இழிவானதாக்கி விடாதீர்கள்’ என்பதே எனது வேண்டுகோள்.

இங்கே,எழுத்தின் பலனை எடுத்துச் சொல்வதற்கு உதாரணம் ஒன்று உண்டு;அதைத் தற்பெருமை’என்று நீங்கள் கருதி விடலாகாது:


’மக்களுக்கு மலிவாக்குக!’ என்று 29.5.2011 அன்று இரவு 11:44 க்கு ஒருகட்டுரையை நமது தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கு எழுதியிருந்தேன் இங்கு.


பல நூறு கோடிகளை,மக்கள் வரிப் பணத்தை வாரி இரைத்து அன்றைய முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் சென்னை அரசினர் தோட்டத்தில் மிகப் பிரமாண்டமான கட்டிட வளாகத்தை அவசரம் அவசரமாகக் கட்டச்செய்து, அது முற்றாக முழுமை பெறும் முன்பே, ‘ பால் காய்ச்சி’சாத்திரத்துக்குக் குடி போய் விட்ட சாகசத்தைச் செய்து காட்டி, ‘.இனி,அதுதான் தமிழ் நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கின்ற தலைமைச் செயலகம்’ என்றும் அறிவித்து விட்டார்.
அவரது எண்ணத்தில் மக்கள் மண்ணைப் போட்டு விட்டனர். அவர் முற்றாகத் தேர்தலில் மூழ்கடிக்கப் பட்டுவிட்டார்.


மேடம் ஜெ. மிகப் பெரும் ஜெயத்தில் ஆட்சி பீடம் ஏறினார். முன்னாள் முதல்வர் கட்டிய அந்த மாபெரும் வளாகம் மாபெரும் குப்பை மேடாகப் போகிறது’என்று பெரும்பாலோர் எண்ணிப் பதறினர். அந்தப் பதற்றம் எனக்கும் வந்தது.


நான் என்ன, மேடம் ஜெ அவர்களின் அருகில் ஆலோசனை சொல்லும் அணுக்கத்தில் இருப்பவனா?


எடுத்தேன் எனது கணினியை;எழுதினேன் எனது மன நிலையை. பல நூறு கோடிகளை விழுங்கிய அந்தக் கோட்டம் ’உங்களுக்கு ஆட்சி செய்யும் அரண்மனையாய் இருக்க வேண்டாம்;ஆனால் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் பயன்படும் வகையில் உரிய முறையில் அதனை ‘மக்களுக்கு மலிவாக்குக’ என்று எழுதினேன். அதில் ‘அது, எந்த எந்த வகையில் பயன் பாட்டுக்கு உரியதாக இருக்க முடியும்’ என்பதற்கு ஒரு சிறு பட்டியலிட்டு, இறுதியில், ‘சிந்திப்பாரா மேடம் ஜெ.?’ என முடித்திருந்தேன்.


ஏறத்தாழ இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அவ்வளாகத்தைத் தமிழகத்தின் ஒப்பற்ற மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையாக மாற்ற,சட்ட மன்றத்தில் ஆணையிட்டு அறிவித்து விட்டார்.


நான் எழுதிய யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதில் நான் கர்வம் கொள்ளவில்லை. ஏனெனில், அந்த யோசனை அவருக்கும் அவரைச் சார்ந்த ஆலோசகர்களுக்கும் இருந்திருக்கும்; இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய நிலையில் மேடம் ஜெ. அவர்களிடம், ‘இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்’என்று எடுத்துச் சொல்ல ‘எவருக்கேனும் துணிவு வந்திருக்குமா?’என்பதில் நிச்சயம் என்னால் ஐயம் கொள்ள முடியும்.


பொதுவில் ஒரு கருத்தைப் பலரும் அறியத் தரும்போது அது ஆட்சியாளருக்கு ஒரு வகையில் கருத்து உருவாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பலரும் அதை ‘ நல்ல யோசனை ஆயிற்றே’ எனச் சிந்திக்கத் தொடங்கி, அதனால் அது ஆட்சியாளருக்கு ஒரு வகையில் செயல்படத் தூண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை அல்லவா?


எனவே, நீங்களும் இங்கே எழுதுங்கள். இந்த நாட்டுக்கும் நமது வீட்டுக்கும் எது நன்மை பயக்குமோ அதை எழுதுங்கள்; உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு எது ஏற்புடையதோ அதை நாடி எழுதுங்கள். ஒருவருக்கொருவர் உயர்ந்த லட்சியங்களைப் பகிர்ந்து கொண்டு நட்பைப் பகிர்ந்து விரித்துக் கொள்ளுங்கள்.


உங்கள் கருத்துக்களுக்கு இங்கே எவராலும் தடை போட முடியாது;தடுமாறும் கருத்துக்களை நீங்கள் எழுத்தாதிருக்கும்வரை..


இதற்கு மாறாக,இங்கே பலர் .இம்முக நூலை வெறும் வேடிக்கைக்காகவும் வினோதக் கருத்துக்களுக்காகவும் பண்பாட்டுச் சீரழிவுக்காகவும் சிறு பிள்ளைத்தனமான சினிமாக் காட்சிகளின் சீர்கெட்ட கருத்துக்களைப் பரஸ்பரம் பாராட்டிக் கொள்ளவும் பயன் படுத்திக் கொண்டாடி வருவதை என்ன சொல்ல?


அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது, ‘நீங்கள் முக நூலின் உண்மைப் பயன்பாடு கருதாமல்,வேடிக்கைச் சாதனமாய்ப் பயன் படுத்தும்வரையில் அது ஒரு கானல் நீராய்ப் போவதைத்தான் காண்பீர்கள்!


இது பற்றி முன்பே நான் ஒரு பதிவைக் கவிதையாக இங்கே பதித்திருக்கின்றேன்.அதை மீண்டும் இங்கே எடுத்துக் கூறுவது எனது கடமை என்றே கருதுகின்றேன். படியுங்கள்.


அனைவருடைய கருத்துக்களும் அங்கே இடம் உண்டு.


நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
21.8.2011


இந்தக் கானல் நீரில்...

முகவரியின்றியும் முழுமையின்றியும்
முகத்தை மூடி எழுதிக் கொண்டிருக்கும்
முகநூல் நண்பர் அனைவரும் அறிய
முகமன் கூறி எழுதுவ தாவது:


பலருக்கும் இதுவோர் எழுத்துப் பலகை;
பலவிதம் எழுதிப் பழகிக் கொள்கிறார்;
சிலருக்கு இதுவே சிந்தனை மன்றம்;
சிறிது ஞானம் தேர்ந்து கொள்கிறார்!


அரைகுறையாகப் படித்தோர்;மற்றும்
அறிவிலியாக இருப்போ ரெல்லாம்
தரக் குறைவாக எழுதித் தள்ளித்
தறுதலைக் கூட்டம் வளர்க்கின் றார்கள்!


கவிதை என்ற பெயரில் கிறுக்கி
கண்டதைச் சிலபேர் எழுதிக் காட்ட
செவிடன் சபையில் சிரிப்பதைப் போல
சிலபேர் அதனை ரசிக்கின் றார்கள்;


பண்டிதம் மிகுந்த படைப்பைச் சிலபேர்
பக்குவமாக எழுதிடும் போது
கண்டு ரசித்த குருடர்கள் போல
கருத்தினைச் சொல்லிப் புளகாங் கிப்பதும்;


சமூக மாற்றம்; சரித்திர உண்மை
சாதிப்பதுபோல் சில பேர் எழுத
சமர்புரிவதுபோல் வெகுண்டு சிலபேர்
சங்கம் முழங்கி அடங்கி விடுவதும்;


அறிஞர் சிலபேர் அறிவியல் கருத்தை
அவையில் வைத்து அலங்கரிப் பதுவும்;
குறிக்கோள் இன்றிச் சிலபேர் எழுதி
குமைந்து நெஞ்சம் வருந்து கின்றதும்;


ஆண், பெண் பேதம்; அவை மரியாதை
அடக்கம் மீறி நட்பினை நாடி
நாணம் இழந்து எழுதிக் கொள்வதும்
நான் பார்க்கின்ற நாடகம் இங்கு:


சுய நலத்தோடு எழுதி இங்கு
சொல்லும் பொருளும் பேசிடுவோரும்
பயனுள வகையில் பதிவுகள் செய்து
பலருடன் நட்பைப் பகிர்ந் திடுவோரும்;


காலை, மாலை வணக்கம் சொல்லி
‘காமெடி’ பேசி மகிழ்ந் திடுவோரும்
‘வேலை’ முகநூல் எழுதுவ‘தென்றே
வெட்டிப் பொழுதைக் ‘களித்’திடுவோரும்


முக நூல் சந்தைக் கூட்டம்’ என்றே
முழுதாய் உணர்ந்தவன்; மனதின் பதிவில்
இகழ்வோர்;புகழ்வோர் யாரும் நிஜமாய்
இல்லாதிருப்பது உண்மையு மாகும்!

இந் நூல் நமது நிஜவாழ் வல்ல;
இதுநம் பாதையின் இலக்கும் அல்ல;
இந் நூல் என்பது ‘கானல் நீர்’தான்;
இதுநம் தாகம் தீர்ப்பதும் அல்ல!


எனினும்,படிப்போர் எவரும் இங்கு
என்னை உணர எழுதுதல் என் கடன்;
தனியொரு வழியில்;தமிழ் நெறிகாட்டித்
தவறுகள் களைந்திட எழுதுகிறேன்,நான்!


நேர்மையோ டிருத்தல்;நாளும்
நிமிர்வுடன் நடத்தல்;புத்திக்
கூர்மையோ டெழுதி உண்மை
கூறுவ தெனது கொள்கை!


யாரும் எனக்குப் பகைவர் இல்லை;
யாருக்கும் தீங்கு செய்திட இயலேன்!
காரணம் இன்றி என்பால்,இங்கு
காய்பவர் நண்பர் ஆவதும் இல்லை!

நிரந்தரம் என்று என்னை,நானே
நினைத்துக் கொள்வது இல்லை;எனினும்
நிரந் தரமான எழுத்தாய் இருக்க
நினைத்தே, எழுதிப் பதிவு செய்கிறேன்!

இந்தக்கானலில் எழுதுவ தென்பது
எழுத்து மீனை வளர்ப்பது போல!
முந்தி வருவோர் முயன்று பார்க்க;
முடிந்தால் அவர்களும் மீனை வளர்க்க!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
21.8.2011

1 comment:

V.Rajalakshmi said...

இந் நூல் நமது நிஜவாழ் வல்ல;
இதுநம் பாதையின் இலக்கும் அல்ல;
இந் நூல் என்பது ‘கானல் நீர்’தான்;
இதுநம் தாகம் தீர்ப்பதும் அல்ல!
மிக மிக உண்மை!!!!