Friday, August 26, 2011

கவிதையின் கருவாக்கம்! (இலக்கியத் தடங்கள்:5)

நண்பர்களே,
வணக்கம்.
'காதலைப் பாடும்’ கானக் குயிலுக்கு, இந்த பாலகன் அன்பு வணக்கம். அருமையான கவிதைகள்.....,இந்தக் கவிதை மரபிலக்கண வழியில் எழுதப்பட்டதா? அப்படி எனில் எமக்கு எந்த மரபில் அமைந்தது என கூறவும்; தயை கூர்ந்து” என்று முக நூல் நண்பர் திரு,முத்து பாலகன் எனது ‘காதலைப் பாடுகிறேன்’ என்ற கவிதையையும் பிற கவிதைகளையும் படித்ததன்  பின்னூட்டமாய்க் கேட்டிருந்தார் முகநூலில்.


இது ஒரு நுட்பமான கேள்விதான்.

கவிதை என்று பலராலும் ரசிக்கப் பட்டு.ஒவ்வொருவர் மனதிலும்  பதிகின்ற ஒரு கட்டுக்கோப்பான படைப்பு எந்த மரபுக்குட்பட்டது? என்று சிந்திப்பதும்  மரபுக் கட்டுப்பாட்டுக்குள் மிகச் செறிவான கருத்துக்களைப் புகுத்தி அதைப் பிதுங்க வைப்பதும் சிக்கலான விஷயம் அல்லது சிக்கலுக்கு ஆட்படும் விஷயம் என்பது என் கணக்கு. இதற்குச்சரியான பதில் எவ்விதம் அமையும்?

இன்று பலரும் பலவகை சந்த அமைப்புக்களுடன் கவிதை எனும் பெயரில் கவிதைகள் படைக்கின்றனர்; குறிப்பாக ‘காதலையும் காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்தி ‘சைனா’சரக்குகளை போல் மெலிந்த,மெலிந்த தயாரிப்புக்களை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


நூறு வரிகளில் சொல்லுகின்ற ஒரு விஷயத்தை நறுக்குத் தெறித்தாற் போல் ஒரு வரியில் சொல்லும் திறன் படைத்தவையே. இதை எல்லோரும் அவ்வளவு எளிதாகச் சொல்லும் சிந்தனைத் திறன் பெற்றவர்களாக இருக்க முடியாது.


பலரும் கவிதைகள் எழுதுவதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதினாலும்;அவர்கள் எழுது’வதை’ அவர்களுகளுடைய நண்பர்கள் ‘ஆஹா…ஓஹோ’ என்று பின்னூட்டங்கள் அளித்து ஊக்கப் படுத்தினாலும் குதிரையும் கழுதையும் ஒன்றாகி விட முடியாது.


குதிரையையே கண்டிராதவர்கள் கழுதையைக் குதிரையாய் எண்ணிக் களிப்புறும் நிலையிலேயேதான் இவர்கள் தங்கள் கற்பனைக் கழுதைகளில் களிப்போடு ஊர்வலம் கண்டு மகிழ்வது. இதை ’விதியே’ என்று நொந்து கொள்வதை விட வேறு என்ன சொல்ல முடியும்?


கவிதை எழுதுவதற்கு முன்பு,ரசனையும் சொல்லும் பொருளும் எளிமையும் மிக்க கவிதைகளை படித்துப் படித்து பைத்தியம் கொண்டவர்களாக எவர் திரிய முடியுமோ அவர்கள் நிச்சயம் நல்ல கவிதை தருபவர்களாக இருப்பார்கள் என்பது எனது அனுபவம்.


ஆம்.முதலில் நம்மைத் தூஊண்டிவிடும் ஆற்றல் கொண்ட படைப்புக்களைப் படியுங்கள்;அவற்றின் பொருட் சுவையை அறிவார்ந்த விவாதங்களின் போதோ நண்பர்கள் மத்தியிலோ எடுத்துக் கையாளுங்கள். பிறரை அந்தக் கவிடஹி உணர்வுகளில் மூழ்க வைத்து நீங்களும் நீந்துங்கள். உங்களை அறியாமலேயே கவிதை உணர்வுகள் உங்களுக்குள்ளிருந்து பொத்துக் கொண்டு வரப் பழகி விடும்..


அத்தோடு, உங்களுக்கு இயல்பாகவே சமூக நலனிலும் மொழியைக் கையாளுவதிலும் உண்மையை நேசிப்பதிலும் அதில் உறுதி மாறாது நிலைத்திருப்பதிலும்,சிறுமைச் செயல் புரிவோர் மீது சினம் கொண்டு சீறும் குணம் கொள்வதிலும் மழலையரின் குறும்புச் செயல்,மழலை மொழி மங்கையரின் அச்சம்,,மடம்,நாணம்,பயிர்ப்பு இவற்றின்பால் தீராக் காதலும் மதிப்பும் முதியோரிடம் கருணையும் அக்கறையும்,இயற்கையின் எழில் வனப்பை எடுத்தியம்பும் சொல் வளமும் தேசப் பற்றும் உங்களுக்குள் இயபாகவே இருக்குமானால் நீங்கள் ஒரு பிறவிக் கவிஞர்தான். உங்கள் கவிதைகள் இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் தகுதுதிக்குதானாவே உயர்ந்து விடும்;நம்பலாம்.


சரி,‘எனது கவிதைகள் எப்படி,,எந்தக் கட்டுக் கோப்புள் உருவாக்கப் பட்டது?’ என்று நண்பர் திரு முத்து பாலகன் அவர்கள் கேட்ட கேள்விக்கு எனது பதிலைத் தெரிவித்து விடுகிறேன்.


நான்,மரபுகளைச் சிந்தித்துக் கொண்டு எழுதுகின்ற மரபுக்குள் என்றுமே என்னை மடித்துக் கொண்டு,அதில் என் மனதைச் செலுத்துவதில்லை. ஒருவகைத் திடீர் சாம்பார்,திடீர் ரசம் போல சிந்தனையின் வசப் பட்டு அதில் மனம் ஒன்றிப் பாடத் தோணும் சூழ்நிலையில் இயல்பாக ஓர் லயம் உருவாகும்; .அந்த லயத்தின் வழியே கவிதையின் மொழிகள் தாமாகவே உருக் கொண்டு உயிர் பெறுவதுதான் உண்மை. இது என்ன மரபு? என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.


ஆனால் அத்தைய சூழ்நிலைகளில்தான் நான் நிறையக் கவிதைகளை எழுதியிருக்கின்றேன். வாழ்க்கை,காதல்,ஆன்மீகம்,இறைத் தத்துவம்,சமூகம்,அதன் மாந்தர்கள்,இயற்கை என்று பல்வேறு பரிமானங்களில் எனது கண்களும் மனமும் இரண்டறக் கலந்து கண்ட காட்சிகளே எனது கவிதைகள்.


எனது க’விதை’கள் முளைத்தெழ, திருமந்திரம்,சங்க இலக்கியங்கள், கம்பன், இளங்கோ,வள்ளுவன்,அவ்வை,சித்தர் பாடல்கள், திருக்குறள், தேவாரம், திருவாசகம்,திருப் புகழ்,,திவ்யப் பிரபந்தம்,வள்ளலார்,தாயுமானவர்,குற்றலக் குறவஞ்சி, பாரதி,கண்ணதாசன் மற்றும் புதுமைப் பித்தன்.ஜெயகாந்தன் இவர்கள் எனக்கு ஆதார நிலம் தந்த வள்ளல்கள். இவர்கள் அளித்த நன்கொடை நிலத்தில் நான் ஆழ உழுது, அகலப் பயிர் செய்கின்றேன்.


கவிதைகள் என்னுள் உருவாகும் நிலையை கவிதை உருவத்திலேயெ ‘அடடா,அந்த நிலை..’ என்று எழுதியிருக்கின்றேன்.


கவிதையும் அதன் உணர்வுமாய்க் கலந்திருப்போர் அதைப் படித்து,உங்கள் அனுபவங்களையும் இங்கே சொல்லலாம். குறிப்பாக நண்பர் திரு முத்து பாலகன் அவர்களே.


சரிதானே நண்பர்களே?


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
--------------------------------------------------------------------
அடடா,அந்த நிலை....!

சிந்தனை லயத்தில் சிக்கிய நிலையில்
சிலிர்த் தெழுகின்றது என்மனது:
எந்த நிலையினில்இருந்தது என்பதை
எண்ணிப் பார்த்ததைச் சொல்கின்றேன்:


புகைப்படம் போல முகப்படம் ஆகிப்
புதிதாய்ப் பதிக்கும் கவிதை;நல்ல
தொகுப்பெனத் தோன்றும் படித்து பாரும்;
தூண்டும் உங்களைத் தாண்டும்!


எழுத நினைத்தேன்;எழுதுகின்றேன்:
எழுதும் நிலையைத் தழுவுகின்றேன்;
தழுவும் நிலையில் நானிருக்கும்
தனிநிலை உணர்ந்து எழுதுகின்றேன்!


எழுதுதல் எனக்கு மிக இயல்பு:
எதையும் எழுதுதல் அதில் எளிது!
பழுதில்லாமல் வார்த்தைகளைப்
படைக்கும் ஆற்றல் தினம் புதிது!


பேனா, திறந்தால் பெருங்கடலின்
பேரலை போல்எழும் சிந்தனைகள்;
ஆனால் அவற்றை ஒரு நொடியில்
அடக்கிடத் துடிக்கும் கற்பனைகள்...


கண்ணை மூடிக் கண் திறந்தால்
கவிதைச் சந்தம் பல நூறு:
விண்ணில் இருந்து விழுகின்றன;
விரைந்து என்னுள் பலவாறு!


எதுகை,மோனை என்பதெல்லாம்
என்முன் தவமாய்த் தவமிருக்க
எதை நான் எடுத்துக் கையாள?
எனக்குள் பெரிய போராட்டம்!


விதையில்லாமல் முளைக்கின்றது;
வித்தில்லாமல் விளைகின்றது;
வதையில்லாமல் வதைக்கின்றது;
வரவேற்பின்றி நுழைகின்றது!'


சாதாரணமாய்க் கடிதம்' எனச்
சற்றே எழுத நினைத்தாலும்
தோதாய் எதுகை,மோனைகளைத்
துரத்தித் துரத்தித் தருகின்றது!


உரைநடை வேகம் எங்கெங்கோ
உயரப் பறந்து கவி வானில்
வரைமுறை இன்றி உவமைகளை
வாரிக் கொண்டு பொழிகின்றது!


இயைபுத் தொடருள் என் கையோ
எனைக் கேட்காமல் நுழைகின்றது;
சுய மரியாதை என்பதெல்லாம்
சூக்கும அறிவாய் விரிகின்றது!


எழுத முனைந்ததும் இவ்வுலகம்
ஏனோ என்முன் மறைகின்றது;
முழுமனம் எங்கோ செல்கின்றது:
மூடருக் கெங்கே புரியும்இது?


எழுதும் போதொரு ராஜ சபை
என்னுள் கூடி,என் எழுத்தைத்
தொழுது போற்றி வாழ்த்துவதை
தூர நின்றே ரசிக்கின்றேன்!


அடடா,இதுதான்: கவிதை நிலை;
அதற்குள் புகுவோர் அடையும்நிலை;
எடடா,ஏடு;எடுத் தெழுது!
என்னை ஜெயிப்பார் எவர் உண்டு?


இவண்-
கிருஷ்ணன்பாலா

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.