Thursday, June 26, 2014

கவிதையின் கண்கள்!



ண்பர்களே,

கருத்து ஒன்றை மையமாக வைத்து அதை உரைநடையில் நேராகச் சொல்லாமல் வரிகளை  ஒடித்தும் மடித்தும் எழுதி கவிதை என்று அதற்குப் பட்டம் கட்டிப் பறக்க விடும் உத்தியை இன்றைய அச்சு ஊடகங்கள் கையாண்டு வருகின்றன.

இன்று ஊடகங்களில் அரைகுறைகளே  ஆசிரியர் குழாமில் அங்கம் வகிக்கும் அவலம் மிகுந்துள்ளதே அதற்குக் காரணம். ஊடகத்துக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர் உட்பட அவர்களின் கீழ் பணிபுரியும் எவருக்கும் மொழி ஆற்றல் என்பதும் மொழியின் இலக்கணம் என்ன என்பதும் அறவே தெரிந்திருக்கவில்லை. இத்தகையோரால்தான் எழுதப்படும் கவிதைகள் தரச் சான்று பெற்றுப் பிரசுரம் அடைகின்ற துர்ப்பாக்கிய நிலை வளர்ந்து வருகிறது.

இதன் மூலம் கவிதை என்பதன் அடிப்படைக் கட்டுப்பாடுகளும் அவற்றின் ஆளுமையும் தகர்க்கப்பட்டு  இன்றைய தலை முறையினருக்குக் கவிதை என்றால் என்ன?’ என்பதே தெரியாமல் போய் விட்டது.

எதுகை மோனைகளோடும் இலக்கணச் சுத்திகளோடும் ஓசை நயங்களோடும் தட்டித்தட்டி,சிற்பிகள் வடிமைக்கும் சந்தங்களோடும் கவிதை படைக்கின்றவர்களை அந்நிய தேசத்து  ஆட்களைப்போல்  இந்தக் கத்துக்குட்டிகள் பார்க்கின்ற வினோதத்தை, வளர்த்து விட்ட அறியாமைதான் இன்றைய ஊடகங்களின் அறிவுச் சொத்துக்களாக சந்தையில் விலை போகின்றன.

இதைச்சுட்டிக் காட்டி எழுதினால்எழுத முயற்சிக்கின்றவர்களின் எண்ணச் சிறகை ஒடிக்க முயலாதீர்கள்என்று  ஒப்பாரிக் குரல்கள்தான் ஒலிக்கின்றன.

ஞானச் செருக்கும் நவில் மொழிச் சிறப்பும் கவிதையின் கண்கள்; அதைக் குருடாக்கிக் கொண்டு கவிதையை விதைக்கின்றோம்என்று  கச்சேரி நடத்தும் கூட்டத்திலிருந்து தமிழ் அன்னை கண் காணாத தூரத்தில் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாள்.

இன்றைய தமிழ் அறிஞர்கள் இதைப்பற்றி வாயே திறக்காமல் வடைக்கும் பாயாசத்துக்கும் போட்டி போட்டுக் கொண்டு பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
26.06.2014


No comments: