Thursday, July 5, 2012

நித்தி:சிரிப்பதற்கல்ல; சிந்திப்பதற்கு.






நண்பர்களே,
வணக்கம்.

World record of tamil people  என்று ஒரு Page முகநூலில்.
அதில் நித்தியின் போலிக் காவி வேடம் பற்றி ஓர் நையாண்டிப் பதிவு.
கற்பனைதான் எனினும் உண்மையை உரித்துக் காட்டும் நையாண்டிக்
கருத்துப்  பதிவு.

நான் நித்தியைப் பற்றி  ஆரம்பம் முதலே கடும் சாடல்களுடன்
இங்கே எனது பதிவுகளை உங்கள் முன் வைத்தவன் என்பதால்,

இந்த நையாண்டிப் பதிவு எனது கூரான எழுத்துக்களின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றவகையில் இருந்தது. அதை வெகுவாக ரசித்தேன்.ரசித்ததோடு அப்படியே உங்கள் சிந்தனைக்கும்
வைக்கின்றேன்.

இது சிரிப்பதற்கல்ல; சிந்திப்பதற்கு.
நன்றி..
இவண்,
கிருஷ்ணன்பாலா
5.7.2012

 -----------------------------------------------------------------------

பராசக்தி – பாணியில் ஓர் நையாண்டி 
இது சிரிப்பதற்கல்ல; சிந்திப்பதற்கு.

நித்தியின் வாக்குமூலம்
(இது ஒரு கற்பனைதான்;ஆனாலும் சிந்திக்க).
-------------------------------------------------------------------------------

நான் சரண் அடைந்து மதிக்கும் கனம் கோர்ட்டார் அவர்களே,

இந்த நீதிமன்றம்… விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது..

புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..

ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல…

வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..

வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்
பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..

‘கதவைத்திற காற்று வரட்டும் ’ என்றேன்..

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படிக் கூறினேன்..

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்.....

இப்படியெல்லாம்..
‘நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்
போகின்றேன் ’ என்று…
இல்லை ; நிச்சயமாக இல்லை…

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்???

மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை..

மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

‘கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..??’

காற்று வரவேண்டுமென்பதற்காகவா? இல்லை..

’அந்த நடிகை ஈசியாக ரூமுக்குள் வரவேண்டும்’ என்பதற்காக…

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்???


எனக்கு கால் வலி என்பதனாலேயா?….இல்லை
அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் 
அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக….

'உனக்கேன் இவ்வளவு அக்கறை?, உலகத்தில் யாருக்கும்
இல்லாத அக்கறை?' என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,

எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது,

என்னைக் குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையைச்
சற்று திரும்பி ப் பார்த்தீர்களானால் அது உங்களுக்குப் புரியும்.

நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை,

உதைகள் எத்தனை என்று கணக்குப் பார்க்க இயலும்…

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்
புத்தகங்கள் படித்திருக்கிறேன்..

நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு
உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை, என்னை அடித்துத்  துவைப்பதற்கு முன்
தயவு செய்து கேளுங்கள்..

இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் ;
பிழைக்க ஒரு ஊர்,

போலிச்சாமியார்களின் தலை எழுத்துக்கு நான் மட்டும்
என்ன விதி விலக்கா???

தமிழ்நாட்டில்  பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம்
ஓடோடி வந்தேன்,

ஜாதகம் என்னை நீயொரு மதபோதகன் என்றது…

என் பெயரோ நித்தியானந்தா,

கேட்டாலே உதைக்கத்  தோன்றும் பெயர்.

ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத
ஏமாளிகளே கிடையாது

நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல்
இருந்திருக்கலாம்,

ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,

கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி
இருக்கலாம்.
ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்தப் பரந்த உலகம்?

நடிகையின் மேட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்….
ஓடினேன்…

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்…....
ஓடினேன்
நேற்று வந்த சின்னப் பொடியன் என் ஜல்சா வீடியோவை
யூ டியூப்பில் போட்டான்……

ஓடினேன்....ஓடினேன்... ஓடினேன்….
கேரளாவுக்கு ஓடினேன்
கர்னாடகாவுக்கு ஓடினேன்
பெங்களூருக்கும் ஓடினேன்...

ஓடினேன் ஓடினேன்…… இந்தியாவின் அனைத்து
ஊர்களுக்கும் ஓடினேன்…

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல்
திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,

வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும்,

என்னை தப்பியோட கதவைத் திறந்துவிட்டிருக்க வேண்டும்

இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா

இந்த நித்தியானந்தாவை, என்னை , சாமி என்று நம்பி
ஏமாந்தது யார் குற்றம்??

எனது குற்றமா?  என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி க் கதவைத்திறந்து வைத்தது
யார் குற்றம்? ’கதவைத்திற காற்றுவரட்டும் ’
என்று சொன்ன எனது குற்றமா?

கேனத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத் திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,

காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா?

இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து
விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்,
என்னைப் போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும்
போலிகளாகத்தான் உருவாகிக் கொண்டிருப்பார்கள்.
-----------------------------------------------------------------------------------

Courtesy: World record of tamil people மற்றும் இதை மறு பதிவு செய்ய
உதவிய திரு சிவக்குமார் வெள்ளியங்கிரி. (முகநூல் நண்பர்)

Monday, July 2, 2012

நித்தியும் ஜீவன் முத்தியும்!




அறிவார்ந்த நண்பர்களே,


“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

என்பது திருமூலர் வாக்கு.


அவரது வாக்கையே எனக்கு வழங்கப்பட்ட அதிகாரமாய்க் 
கொண்டு நான் தமிழை,அதன் உயர் நெறிகள் ஓங்கியிருக்க 
உயிர்ப்புடன்  செய்து தமிழன்னைக்கு அணிகலன் ஆக்கி 
வருகின்றேன்.


ஆனால்,அக்கிரமத்தையும் அயோக்கியத்தனங்களையும் தனது
அணிகலன்களாகக் கொண்டு, கடந்த நான்கு மாதங்களாக ஆர்ப்பரித்தும் 
அடங்காது திமிரியும் வந்தவன், இன்று அடிபட்ட பாம்பென ஓடி ஓடி
ஒளிகின்றான்;அடைக்கலம் தேடித் தேடி அலைகின்றான்,
பார்த்தீர்களா?.

உள்ளொன்றும் புறம் ஒன்றும் பேசித் திரிந்தவன்; ஊத்தைச் சரீர மயக்கத்தில்  உப்பித் திரிந்தவன் இன்று தப்பிக்க வழியின்றித் தடுமாறுகின்றான்.

“தானே கடவுள்;தன்னிடம் சரண் அடைகின்றவர்களே ‘ஜீவன் முக்தி’யை அடைகின்றார்கள் என்ற ஒரு சண்டாளத் தத்துவம் பேசி வந்தவன் போலீசாரிடமும் வழக்கு மன்றங்களிடமும் சரண் அடைந்து கெஞ்சுகின்றான்.

இவனுடைய கால் அழுக்குகளைக் கழுவிக் குடித்த கபோதிப் பக்தர்கள் பலர் இன்று,தங்களுடைய பாத்ரூம்களில் அவ்வாறு குடித்ததை எண்ணிக் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்கள் தலையை வெளியில் காட்ட முடியாமல்
முக்காடு போட்டு முனகிக் கொண்டு சபிக்கின்றார்கள்,தங்கள் மாஜிக் கடவுளை.

நண்பர்களே.
இத்தகைய இழிநிலை கொண்ட ஒருவன் யாரென உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கடந்த வார ‘ஜூனியர் விகடன்’ இதழைப் படித்தவர்களுக்கு இவன் யாரெனத் தெரிந்திருக்கும்;இவனுடைய சண்டாளத்தனத்தின் பெண்டாளும் பேய்த் தனம் புரிந்திருக்கும்

என்னுடைய கட்டுரைகளை இங்கு கடந்த நான்கு மாதங்களாகப் படித்து வருபவர்களுக்கு எனது உண்மைத் தமிழின் உறுதிமிக்க சாடல்களின்  இலக்கு முற்றிலும் விளங்கி இருக்கும்.

நண்பர்களே,

’ஜீவன் முக்தி’என்பது பக்குவப்பட்ட ஆன்மாவின் இறுதி நிலை.
சித்தரும் முத்தரும் மகரிஷிகளும் தேடி நின்ற உயர் கலை.

அதைக் கண்டவர் விண்டதில்லை;விண்டவர் கண்டதில்லை.

ஜீவன் முக்தியை அடைவதற்கான வழிகளைத் தேடிச் சென்ற முத்தர்கள் உணர்ந்தவை வேதங்கள்;மொழிந்தவை உபநிஷதங்கள்.

இதிகாசங்களும் புராணங்களும்தான் அவற்றின் விரிவுரைகளும் விளக்கவுரைகளும்.

இந்த மண்ணில் இனி எவனும் புதிய புத்தனாகிக் போதிக்கத் தேவை இல்லை; இருக்கின்ற வேத,உபநிஷத, சித்தர் பாடல்களைச் சேவித்து வந்தாலே போதும். ஜீவன் முக்திக்கு உகந்த நெறி யாதென விளங்கும்.

ஆனால் இந்தக் கயவன்;கபட வேடதாரி நித்தி,காவிச் சட்டையையும்  உத்திராட்சக் கொட்டையையும் அணிந்து கொண்டு, புத்தனின் போதனைகளையும் ‘ஓஷோ’வின் உண்மைகளையும் துணிந்து கலந்து தன்னிஷ்டம் போல் உளறுகிறான். அவனது உளறல்கள் தங்களின் ’ஜீவன் முக்தி’க்கான ஜீவனமாய்க் கொண்டு செயல்படும் ஐந்தறிவு ஜென்மங்களாய்ப் பிறப்புற்றுப் போயினர் இவன் மூடப் பக்தர்கள்.

நமது முன்னோர் காட்டிச் சென்ற இறைநெறித் தத்துவங்களையும்
சித்தாந்த மரபுகளையும் தேடத் தெரியாத முட்டாள்களும்
அவற்றில் நுனிப் புல் மேய்ந்தவர்களும், நொதிந்துபோன இச்சையில் சாய்ந்தவர்களும்,காமக் கற்பனைகளில் வீழ்ந்தவர்களும், சில தேடல் ஞானம் கொண்டு வாழ்ந்தவர்களும் சரண் அடைகின்ற இடம்தான் இந்தப் போலிக் குருமார்களின் புண்பட்டுப் புரையோடிப் போன பாதங்கள்.

”என்ன ஸ்வாமி,தங்கள் தூய மலர்ப் பாதத்தில் புண்ணும் புழுக்களும்?” என்று கேட்கும் பக்தைகளிடமும் பக்தர்களிடமும்,“அவை,
தன்னிடம் சரண் அடைந்த மகரிஷிகள்” என்று நித்தி சொன்னால்கூட, அதில்  ஆனந்தப் பரவசம் அடைந்து ’ஆகா,தங்கள் பாக்கியமே பாக்கியம்’ என்று பஜனை பாடும் அளவுக்கு அவர்களை ஆயிரக் கணக்கில் ஆக்கிக் கொண்டவன்தான் இவன்.

உலகிலேயே உன்னதமான இறை நெறி கொண்ட தேசமும்,இத்தகைய இழிநெறி கொண்டவர்களையே தங்களின் முக்திக்கு வழி காட்டும் குரு என்று கொண்டாடும் மூடர்கள் மிகுந்த தேசமும் இதுதான்.

இந்த தேசத்தில் ’மத நம்பிக்கை என்பது மக்களின் தனிப் பட்ட சுதந்திரம்’ அதில் சட்டம் நுழைய அனுமதி இல்லை என்பது அடிப்படை உரிமை என்பதால்.அதைப் பயன் படுத்திக் கொண்டு,மக்களை ஏமாற்றும் சண்டாளர்கள் பெருகி விட்டனர்.

இவர்களுக்கு மக்களின் மூடச் சித்தாந்தங்களே பெரும் மூலதனம்.
முதல் இல்லாமல் மூளைச் சலவை செய்து அவர்களைத் தங்கள் அடிமைகள் ஆக்கிக் கொண்டு அரச வாழ்க்கை நடத்தும் சாமியார்களை இந்த நாடு கண்டு வருகிறது.

ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் கிரிமினல் குற்றங்களை
விளக்கவும் விளங்கிக் கொள்ளவும் சட்டத்தினால் முடியாது’ என்பதாலும் ‘மக்களின் மத நம்பிக்கை என்பது தனி நபர் சுதந்திரத்தின் சூக்குமச் சொத்து’ என்பதாலும்தான் நித்தியைப் போன்ற நிஜப் போலிகள் நிமிர்ந்து நின்று இங்கே கடை விரிக்க முடிகின்றது.


நித்திக்குக் கிடைத்துள்ள இத்தகைய சட்டத்தின் குருட்டுப் 
பார்வையின் துணையால், அவன் தனது அழுக்குப் புண்களின் 
காய்ந்துபோன தோல்களைக்  கஷாயம் ஆக்கித் தன் மூடப் பக்தர்,
பக்தைகளுக்கு ‘அமுதநீர்’  என்று தருகிறான்.

மூடப் பக்தர்களோ அதைத் தங்கள் ’ஜீவன் முக்தியின் தாகம் போக்கும் தத்துவ நீரென’க் குடித்து ஆனந்த நடனம் புரிகின்றார்கள்.

அந்த ஆனந்தத்துக்குப் “பேரானந்த நிலை’ என்று சொல்லிச் சிரிக்கின்றான் இந்தப் பித்தன் நித்தி.

அதையே கடவுளின் ‘மந்தகாசச் சிரிப்பு’ என்று புதிய அகராதி எழுதிப் பூரிக்கின்றார்கள் நித்தியின் ’அந்த’ அழுக்கு நீரை பருகிய பக்தப் புழுக்கள்.

என்னே கொடுமை?

நண்பர்களே,

இந்த நித்தியின் புண் நிறைந்த பாதத்தில் நித்தம் உழலும் புழுக்கள் யார்? அவர்கள் எத்தகையவர்கள்? அவர்களின் ஏட்டைத் திருப்பிப் பாருங்கள்; தெளிவாகப் புரியும்:

கட்டிய கணவனிடம் கருத்து வேறுபாடு; கரம் பிடித்த மனைவியிடம் சுகம் காணாமை; குறுக்கு வழியில் பெற்ற செல்வநிலை; பாவங்களில் தேடிய சொத்து; பலரை ஏமாற்றிப் பெற்ற அந்தஸ்து;பதவி; பெற்றோரைத் தவிக்க வீட்டுப் பிற உறவுகளில் பெற்ற குடும்ப வாழ்வு;வீட்டுக்கு அடங்காமல் வெளியில் திரிந்து பெற்ற விரக்தி; போலி இறைக் கொள்கையில் பெற்ற பக்தி; செய்த பாவங்களால் பெற்ற நோய்,உடன் பிறந்தாருக்கு உரிய பங்கைத் தராது நேர்ந்த வம்பு வழக்குகளில் வழுக்கி விழும் நிலை;குடும்பச் சண்டை;குழப்பங்கள்…….

இவற்றில் சிக்கியவர்கள்தானே இவனுடைய பக்தர்கள்?

அத்தகையவர்கள் ஆனந்த நடனம் புரியும் இடம் பிடதி ஆசிரமம் என்றாகி,அதில் ‘ஜீவன் முக்தி’ எப்படியெல்லாம் விலை கூறப்படுகிறது பார்த்தீர்களா?

நித்தியின் இந்தப் பாவத் திருவிளையாடல்களுக்கும் காமக்  களியாட்டங்களுக்கும் சேர்ந்துள்ள பணமும் தங்கமும் எங்கிருந்து வந்தது? என்பதை ஆராய்ந்தால் அதில் ஆன்மீக விரோதச் செயல்களும் தேசவிரோதச் சித்தாந்தங்களும் தெய்வீகத்தின் பெயரால் செய்த திருட்டுத் தனங்களுமே பல்லிளித்து நிற்கும், இந்தப் பரதேசி நித்தியைப் போலவே.

கேட்டால் ‘தான் நடத்தி வரும் தொழில் நிறுவனத்தின் மூலம்’ என்கிறான்.

என்ன தொழில் என்பது இப்போது புரிகின்றதா?

மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியின் பிரசித்தி பெற்ற தொழிலின் மேம்பட்ட தொழில் நுட்பம் இங்கே சித்தாந்தம் ஆக்கப்பட்டு,அதன் வியாபாரம் இந்தப் பிடதியில் அபாரமாக நடந்து வந்திருக்கின்றது’ என்பதை இப்போது உலகம் அறிந்திருக்கிறது.

இவ்விடத்தில்தான் இந்திய சமுதாயத்தின் இறையாண்மை எச்சில் ஆக்கப் பட்டுக் காறி உமிழப்பட்டிருக்கிறது.

இதைத்தான் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ஜூனியர் விகடன்.

ஆனால்-
‘ஜீவன் முக்தி தரும் செய்வினைகள் ’என்று இவன் சொல்லிக் கொண்டு பிடதி ஆசிரமத்தில்,பெண்களைச் சீரழித்து எப்படியெல்லாம் பிய்த்துப் பெண்டாளுகிறான் இந்தச் சண்டாளன் என்பதை அதில் சிக்குண்டு சீரழிந்த பெண்ணே மன உறுதியுடன் உண்மைகளைச் சொன்ன பிறகும், இங்குள்ள மகளிர் சங்கங்கள் மவுனம் காக்கின்றன.

மாதவம் செய்த மங்கையர்களின் மகுடமாக இன்று தமிழகத்தின் தலைமைப் பதவியில் வீற்றிருக்கும் மேடம் ஜெ அவர்களின் அரசு தன் இரும்புக் கரத்தைத் தொலைத்துவிட்டுக் கரும்புக் கரத்தைக் காட்டி நிற்கிறது.

நண்பர்களே,
அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ.வின் காம நடத்தைக்கு,அந்தப் பகுதி மக்கள் வெகுண்டெழுந்து கொடுத்த ‘வெகுமானம்’ பற்றி நினைத்தால், இந்தக் காமக் கொடூர வியாபாரி நித்திக்கும் அவனைக் கடவுள் என்றே கொண்டாடும் முட்டாள்களுக்கும் அவனுடைய அடியாட்களுக்கும் ஒருநாள் மக்கள் சக்தி நடத்தப் போகும் மண்டகப்படி எப்படி இருக்கும்?

எண்ணிப் பார்க்கின்றேன்.

நித்தியும் அவனுடைய அடிப்பொடி அருணகிரியும் சட்டத்துக்கு அப்பாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே.

அதை இறைவன் அளிப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான்.

இறைவன் தீர்ப்பு நாளைத் தடுக்கவோ, தள்ளி வைக்கவோ இங்கே எந்தச் சக்தியாலும் ‘வாய்தா‘க் கேட்டு வழக்காட முடியாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.7.2012
இடம்: அன்னூர்த் தோட்டம்

Sunday, July 1, 2012

அநீதிக்குத் தண்டனை!



அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
இன்றைய அஸ்ஸாம் எம்.எல்.ஏக்களில் ஒருவர் பெண்.
கணவர் இருக்க இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு அந்த நபருடன் காதல் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்.

அவரும் அவருடைய புதிய முக நூல் காதலரும் ஒருவருக்கொருவர் அன்பு கலந்து இந்த நிலையை எய்திட முகநூல் நட்புப் பாலம் (?) அமைத்துத் தந்துள்ளது.

இந்தப் பெண் எம்.எல்.ஏ.வின் நடத்தையில் சினமுற்றவர்கள் நேற்று (30.6.2012) அந்த எம்.எல்.ஏ.வும் அவருக்கு இரண்டாவது கணவராகப் பதவி ஏற்றுக் கொண்டவரும் Chatting செய்து கொண்டிருந்த ஓட்டல் அறையில் புகுந்து, அவர்கள் இருவரையும் அடித்து உதைத்துத் துவம்சம் செய்திருக்கிறார்கள். இதை எல்லோரும் தொலைக்காட்சி செய்திகள் வாயிலாகப் பார்த்தோம் இன்று.

பொதுமக்கள் ‘தங்கள் தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினரின் ஒழுக்கம் கெட்ட செயலுக்கு வழங்கிய தீர்ப்பு இது’வெனத்தான் நாம் கருத முடிகிறது.

சட்டம் இருக்கத் தண்டனையை, சட்டத்துக்கு அப்பால் தர முனைவது சட்டப் படி தவறுதான்.

ஆனால் அந்த சட்டத்தை இயற்றும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒழுக்கக்கேடான நடத்தைக்கு அடிக்கோல் நாட்டி, முன் நின்று செயல் படும் எம்.எல்.ஏவை இதுவரை அந்த சட்டம் என்ன செய்து கொண்டிருந்தது?

அந்தப் பெண் எம்.எல்.ஏ சார்ந்துள்ள ஆளும் கட்சியும் அவர்களுடைய சட்டம்,நீதி அதிகாரமும் அந்த எம்.எல்.ஏவுக்குப் பாதுகாப்பு அல்லவா கொடுத்து வந்திருக்கிறது?

அடிபட்ட பின் மீட்கப் பட்ட அப் பெண் எம்.எல்.ஏ. ‘இது தன் தனிப்பட்ட விஷயம்’ என்றும் ‘அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை’என்றும் பேட்டி கொடுக்கின்றார்.

மக்கள் பிரதி நிதியான அவர்,முதலில் செய்திருக்க வேண்டியது விவாக ரத்து;பிறகு சட்டப்படியான இரண்டாவது திருமணம்.

அதைவிட அவர் செய்திருக்க வேண்டியது ‘சொந்தக் காரணத்தைச் சொல்லி  ‘எம்.எல்.ஏ.பதவி விலகல்’.

ஆனால்,மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு அவர் செய்த கேடு கெட்ட செயலுக்கு அதே சட்டம் வேடிக்கை பார்த்ததே தவிர வேறு என்ன செய்தது?

ஓட்டுப் போட்ட மக்கள் இதை அனுமதிக்கவில்லை என்பதும் அவர்களின் உண்மையான பிரதிநிதிகள் அதற்கு உரிய எதிர்ப்பைச் சரியாகக் காட்டியிருக்கிறார்கள் என்றுதான்எடுத்துக் கொள்ள வேண்டும்.

சட்டம் தன் கடமையை நேர்மையுடன் செய்யாவிட்டால் அதை மக்கள் சக்தி திரண்டு செய்யும் என்பது இப்போது அடி எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வன்முறை தண்டனைக்குரியதுதான்.
அதைவிட வன்முறையைச் செய்வதற்குத் தூண்டும் செயல்கள் சட்டத்துக்கு அப்பாலும் தண்டனைக்குரியது..

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது தேர்தலுக்கு மட்டுமட்டல்ல;தேர்தலுக்குப் பிறகு,தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும்தான்.

அரச நீதியை விட ஆண்டவன் நீதி தப்புவதில்லை.

இவண்,
கிருஷ்ணன்பாலா
1.7.2012

Tuesday, June 19, 2012

‘நான்’ இனி,நீங்கள்’!


‘நான்’எனும் அகந்தை கொண்டு
நான்சொலும் செய்தி யாவும்
தேன் பொழித் தமிழின் வீரம்
தெளிவுறக் காட்டு தற்கே!

‘ஆணவம்’ என்று இதனை
அளப்பவர் யாரும் எழுத்தின்
மாணவர் என்றே சொல்வேன்
மற்றவர் எனது தோழர்!

யாரெது சொன்ன போதும்
எதிர்ப்பிலும் நிமிர்ந்து நின்று
நேர்பட உரைத்தல்;உண்மை
நிலைத்திடச் செய்யத் தானே?


நாட்டிடைத் தீயோர் தலைமை
நாசத்தைச் செய்யும் போது
கேட்டிட யாரும் இல்லாக்
கேவலம் நிலைக்க லாமோ?

ஆட்சியைப் பிடிப் பதற்கே
அரசியல் செய்வோ ருடைய
சூழ்ச்சியை எதிர்க்கும் சக்தி
'சொல்’எனும் எழுத்துக் குண்டு!

தமிழர்தம் வாழ்வும் தூய
தரம்மிகும் பண்பும் இன்று
நமைமிக வருந்த வைக்க
நலங்கெட எழுத லாமோ?

நாட்டிலே லஞ்சம்;மக்கள்
நம்பிக்கைத் துரோ கங்கள்
வாட்டிட வளைந்து நின்று
வரைவது எழுத்தா,என்ன?

பேய்களே ஆட்சி செய்தால்
பிணந் தின்னும் சாத்திரங்கள்;
நாய்களே வாழும் என்றால்
நரகல்தான் நமது வாழ்வு!

கொஞ்சமும் இரக்க மின்றி
கொடுங்கோ லாட்சி இங்கு
வஞ்சகம் புரியும்போது
வாய்பொத்தி நிற்க லாமோ?

ஓய்விலாக் கவலை; நாட்டின்
உறக்கத்தைக் கெடுக்கும் போது;
ஓய்வாகப் படுத்துக் கொண்டு
உறங்குவோன் தமிழன் அல்ல!

சத்தியம் நேர்மை வீரம்
சாற்றிடும் பண்பு யாவும்
செத்ததேன்? என்று இங்கு
சிந்தித்தால் தூக்க மில்லை!

திருடர்கள் கூட்டம் இங்கு
தெருத் தெருவாக நின்று
பெருமைகள் பேசு கின்றார்;
பிறகு நாம் என்ன செய்ய?

சாட்டையை எடுத்து இங்கு
சாடியே கயவர் கூட்டம்
ஓட்டவே செய்யும் எழுத்தின்
உறுதியைக் காட்ட வேண்டும்!

எழுத்திலே வீரம் கெட்டால்
எறும்புக்கும் அஞ்ச வேண்டும்;
கருத்திலே உண்மை நின்றால்
கயவரும் அஞ்ச வேண்டும்;

எழுதுவோர் எல்லாம் இந்த
இலக்கணம் அறிந்து, நமது
பழுதிலா வாழ்வு காக்கப்
படைத்தலே அறிவு என்பேன்!

தேங்கிடும் தேசப் பற்றில்
தெளிவுடன் பார்வை கொண்டு
ஓங்கிடும் உறுதி யோடு
உரைப்பதென் நோக்கம்;அறிக!

மிடுக்குடன் மிளிரும் எழுத்தில்
மிதந்திடும் செறுக்கை நீங்கள்
வெடுக்கெனப் புரிவீ ராயின்;
விளம்புவேன்: ‘நான்,’இனி நீங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.6.2012

Monday, June 18, 2012

நட்டம் அவருக்கில்லை;நாட்டுக்குத்தான்!


நண்பர்களே,

“இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மறுபடியும் நான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் அமர விரும்பவில்லை” என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் 2012 குடியரசுத்தலைவர் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியரால்
விரும்பப்பட்டவருமான டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் அறிவித்து விட்டார் என்ற செய்தி
நம் அனைவரையும் வாடச் செய்துள்ளது.

சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் நாம் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் காண விழைந்தோம்.

ஒரு உண்மையான தமிழனைத் தங்கள் தலைக்குமேல் வைத்து அழகு பார்க்க கலைஞரும் விரும்பவில்லை; மேடம் ஜெ,அவர்களும் விரும்பவில்லை.

ஊழலின் ஒட்டு மொத்தக் குத்தகைதாரர்களாய் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை,முறைமாற்றிக் கொள்ளும் இவர்களுக்கு அந்தக் குத்தகைச் சட்டத்தையே ரத்து செய்யத் துடிக்கும் ‘லோக்பால் மசோதாவும் இந்த டாக்டர் கலாம் அவர்களும் ஒன்றுதானே?

எப்போதும் எங்கும் கலைஞர் அவர்களுக்கு எதிரான முடிவுகளையே
எடுக்கும் மேடம் ஜெ.அவர்கள், நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் கொண்டு வரும் விஷயத்தில் திரைமறைவில் ஒன்று கூடி, கூட்டணி வைத்து, கலாம் அவர்களுக்கு ஆதரவான தனிக் கட்சியைத் தோற்கடித்து விட்டனர்.

இதனால், கலாம் அவர்களுக்கு நட்டம் இல்லை;நமக்குத்தான்;இந்த நாட்டுக்குத்தான்.

கலாம் அவர்களின் அறிக்கையின் நுட்பமான வரிகளைக் கவனியுங்கள்;
நல்லோருக்குக் கண்ணீர் வரும்.

அதில் நீந்தித்தான் நாம் கரை ஏறமுடியும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.6.2012
---------------------------------------------------------------------------------------




APJ Abdul Kalam
OFFICIAL STATEMENT
--------------------------------

My dear friends,

You are aware of the developments in the run up to the Presidential election. 
Though I have never aspired to serve another term or shown interest in contesting 
the election, TMC Chief Mamata Banerjee, other political parties wanted me to be their
candidate. Many, many citizens have also expressed the same wish. It only reflects their
 love and affection for me and the aspiration of the people. I am really overwhelmed by 
this support. This being their wish, I respect it. I want to thank them for the trust they 
have in me.

I have considered the totality of the matter and the present political situation, and decided not to contest the presidential election 2012.

APJ Abdul Kalam
18th June, 2012