Thursday, August 29, 2013

இந்தச் சந்தைக் கூட்டத்தில்...

ண்பர்களே,

‘நட்பு வட்டம் அதிகமாக இருக்க வேண்டும்’ என்றோ  ‘அதிகம் இருக்கிறது’ என்றோ எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்று  கண்டதையெல்லாம் எழுதிவரும் பேர்வழிகளால்  வெட்டித்தனமான வார்த்தைகளும் விளையாட்டுத்தனமான கருத்துக்களும் முகநூலில் அதிகரித்து வருகின்றன.

’கண்ணியமாக எழுதி,கருத்துப் பரவலை உருவாக்க முகநூலில்-குறிப்பாக தமிழர்கள் பயன்படுத்தும்  முகநூலில் இயலாது என்பது’ கண்கூடான  அனுபவம்.

நாட்டுப் பிரச்சினைகளிலும் நமது வருங்கால,நிகழ்காலப் பிரச்சினைகளிலும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து எழுதி,அதை கருத்துப் பரவலாக்க  முயற்சித்தால்,முயற்சிப்பவனை முட்டாள்’ என்று ஆக்கும் கூட்டம் முனைப்புடன் செயல்படுகிறது.

அறிவு சார்ந்த வேட்கையோடும் சமூகப் பண்பாடு போற்றும் அக்கறையோடும் இங்கே தேடல் கொண்டிருப்போர் மிக மிகக் குறைவு. 

அதேசமயம்,பொழுது போக்குக்காகவும், பாலினக் கவர்ச்சி விஷயங்களுக்காகவும் மட்டுமே கூடி நிற்கும் சந்தைக் கூட்டமாகத்தான் முகநூல்  பதிவாளர்களில் 90 சதவீதம் பேர் இருக்கின்றார்கள்.

இந்தப் பெரும்பான்மையோரில் முக்கால்வாசிப்பேர்கள், இங்கே போலி முகவரிகளில் உலா வரும் ஆண்-பெண் பக்கங்களிலும், தன்னை,சாகச வார்த்தைகளில் சங்கடமின்றி வெளிப்படுத்திக் கொள்கிற ‘சரஸவாணிகளின் பக்கத்திலும் சென்று மேய்வது ஒன்றுதான் பேரின்பமென்றிருக்கின்றார்கள்.

இந்தச் சந்தைக்கூட்டத்தில், மிகச் சிறந்த பதிவுகளை நாட்டு மக்களுக்காகவும் நல்ல விஷயங்களுக்காகவும்  தருவோர் மிகக் குறுகிய எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை.

இலக்கிய ரசனையும் சமூக அக்கறையும் நம் சந்ததிகளின் சத்தான எதிர்காலச் சிந்தனையும் இல்லாத எழுத்துக்களைப் புறக்கணிப்பதுடன், கலாச்சாரச் சீர்கேட்டுச் சிந்தனைகளைக் கண்டித்துக் காறி உமிழும் சினமும் சிந்தனையும் இன்னும் நம்மவர்களுக்கு வரவில்லை.

என்னைப் பொறுத்தவரை  ‘எனது நண்பர்கள் என் எழுத்துக்களை ரசிக்க வேண்டுமென்றில்லாமல் சிந்திக்க வேண்டும்’ என்ற இலக்கில் மட்டுமே தந்து வருகிறேன்.

இது இலவசம்தான்; எனினும் இதன் நோக்கம்: தமிழ்ப் பண்பாட்டின் கவசம் எனத் திகழச் செய்வது ஒன்றுதான்.

எத்தனையோ முறை செவிட்டில் அறைந்து சொன்ன விஷயம்தான்; என்றாலும்  இங்கே மீண்டும் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது:

“திண்ணைப்பேச்சுக்கும்  ‘தில்லாலங்கடி’ திருவாளத்தான்களுக்கும் இங்கே இடமில்லை”

தமிழர்களின் ரசனை மாறிக் கொண்டிருந்தாலும் நாறிக் கொண்டிராமல் இருக்க  வீரமும் காரமு'மான’ எழுத்துக்களை நாம் இங்கே கலந்து கொண்டுதான் இருக்கிறோம்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
29.8.2013


No comments: