Monday, August 19, 2013

தேசபக்தி என்பது.....
றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இன்றைய இந்தியச் சுதந்திரக் காலச் சிந்தனையாக  ‘ பிறந்த மண்ணின் மீதுள்ள பற்றில் நம்முள் பல்வேறு முரண்பட்ட எண்ணங்கள் புற்றுக்களாக நமக்குள் விரவிக் கிடக்கின்றன’

இந்திய சுதந்திரத்தில்  பலருக்கும் வெறுப்பும் கசப்பும் கோபமும் குற்றச் சாட்டுக்களும் உருவாகி இருக்கின்றன. 
அவற்றில் நியாயமும் காயமும் இல்லாமல் இல்லை.

ஆனாலும்,
நாம் அவற்றை விதிவிலக்காகக் கொள்ளாமல் விநயத்தோடு சிந்திக்க வேண்டும்.

நமது சுதந்திரத்தின் மீது  நமது சகோதர மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூன்று வகையாகப் பிரித்துணர வேண்டும்:

  1. நம் இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை முழுமையாகத் தெரியாதவர்கள். சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்தவர்களப் பெற்றோராகக் கொண்டிருப்பவர்களாகத்தான் அவர்களில் 90 சதம் இருக்க முடியும்.அவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை; ‘அந்த அக்கறையை ஊட்டி வளர்த்தவர்களாக அந்தப் பெற்றோர்கள் இருக்கவில்லை’ என்ற உண்மையையும் இது சார்ந்திருக்கிறது. 
  2. ஆரம்பம் முதலே இந்திய தேசிய காங்கிரஸை எதிர்த்து வந்த குடும்பங்களிலிருந்தும் சுதேசியத்துக்கு எதிரான கொள்கையாளர்களின் குடும்பங்களிலிருந்தும் பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பவர்கள்.
  3.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாடு போய்க் கொண்டிருக்கிற நிலைமையின் மீதும் இதன் கேடு கெட்ட ஆட்சியாளர்கள் மீதும் அந்த கேடு கெட்டவர்களின் பின்னே சென்று ஓட்டுப் போடும் மெஜாரிட்டியான ஆட்டு மந்தைகள் மீதும் அந்த ஆட்டு மந்தைகளைக் குழு குழுவாகப் பிரித்து மேய்த்துக் கொண்டிருக்கிற அரசியல் மே()ய்ப்பவர்கள் மீதும் கோபமும் வருத்தமும் கொண்டிருப்பவர்கள்.
இந்த மூன்று வகைக் குடிமக்களில், மூன்றாம் ரகத்தைச் சேர்ந்தவன் நான்.

‘என்னைப் போன்றோரின் வெறுப்பு என்பது, இந்தியச் சுதந்திரத்தின் மேன்மையான விழிப்புணர்வைக் கொழுந்து விட்டு எறியச் செய்யும் எழுத்து நெய்யாகத்தான் இங்கே வடிக்கப்பட்டு வருகிறது.

எனினும்
எங்கே சுதந்திரம்;இதுவா சுதந்திரம்?” என்ற கோபத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களையும் இந்த சமூக வலைத்தளங்களில் பார்க்கின்றேன்.

நண்பர்களே,
நாம் தேடிக் கொண்டிருப்பதும் தேடும்போது சலிப்புக் கொள்வதும் தேடிய பின்பு அதைத் திட்டித் தீர்ப்பதும் யாவும் ஒன்றுதான். அதன் பேர்: சுதந்திரம்.

உலகில், இந்தியா மிக மோசமான நிலைக்குக்குச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணமே நாம் பெற்ற வரையற்ற சுதந்திரம்தான்.
எனக்கு இந்தியாவை ஆளுகின்றவர்களின் மீது எல்லையற்ற கோபமும் குற்றச்சாட்டுக்களும் உண்டு. ஆனால் இந்தியாவின் மீதல்ல.

இந்தியா எனது தாய் மண். அதில் பல வர்ணங்கள், சாதி,மதம், இனம்.மொழி,கலாச்சாரம் என்று இருப்பதைப் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலையைப் போல் காண்கின்றேன்.

அந்தச் சோலையுள் நான் சுதந்திரமாக நடை பயில்கின்றேன்.

எனவே -
எனக்கு வரையற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ள
இந்த நந்தவனத்தை என் சொந்தவனமாக நேசிக்கின்றேன்;பூசிக்கின்றேன்.

அருமைப் பெற்றோர்களே,கற்றோர்களே,
உங்களுக்குத் தெரியாததல்ல,: ‘நான் சொல்லித்தான் நம் சுதந்திரத்தின் பெருமை விளங்கும்’என்பது.

எனினும் சொல்கிறேன்: உங்களுக்கு அல்ல; உங்களின் வாரிசுகளுக்காக!

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின்
வாராது போல்வந்த மாமணி நம் சுதந்திரம்!

செந்நீரும் கண்ணீரும் சிந்தி
நம் பாட்டனும் பூட்டனும்
சேவித்த சித்திரம்  நம் சுதந்திரம்!

எந்தையும் தாயும் தங்கள்
இன்னுயிர் ஈந்து பெற்றுத் தந்தது: இச் சுதந்திரம்!

ஆயிரம் பேதங்கள் உண்டு நமக்குள்;
எனினும்
அந்நியர் வந்து நம்மை
ஆளக் கூடாத தேசியச் சொத்து இது.

‘இந்தச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றோம்?
என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்த-

அருமைப் பெற்றோர்களே,
‘கப்பலோட்டிய’ தமிழன்’
திரைப்படத்தையாவது
குறைந்த பட்சம்
உங்கள் வீட்டில் போட்டுக் காட்டுங்கள்.

நம் பெற்றோர்ளையெல்லாம்  பெற்றுத் தந்து
நம்மையெல்லாம் ஈன்றெடுத்த
பாரத மாதாவைக்
காங்கிரஸின் கைப் பொம்மைபோல் காணாதீர்கள்!
 
பாரத நாடு பழம் பெரும் பூமி;
நீரதன் புதல்வர்;இந்நினை வகற்றாதீர்!”

என்ற மகாகவி பாரதி பூசித்த அந்தப் பாரத அன்னையை,
நாம் நமது பெற்ற தாயையும் பெற்றெடுத்த அன்னைத் தெய்வமாய்
நமது  நெஞ்சக் கோவிலில் நித்தமும் கண்டு பூசிப்போம்;நேசிப்போம்!

//முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.//


என்று -

நம் பாரதி பாட்டன், சென்ற இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 
எழுதிய கவிதையின் பொருள் இன்று மூன்றரை மடங்காகப் பெருகி நிற்கின்றன.அமரகவியின், ஜீவ வரிகள் அல்லவா,இவை?

ஆம்.
நண்பர்களே,
தேசப்பக்தி என்பது எந்த அரசியல் சூழ்நிலைகளிலும் குன்றிப் போவதல்ல;

குன்றின் மேலிட்ட விளக்காக காலம்தோறும் தன் ஒளியைக் கூட்டி ஒளிரும்;மிளிரும்.

“பாரத நாடு;பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர்;இந்நினைகற்றாதீர்”  

என்று -
பாட்டன் பாரதி சொன்னதை
பாரத மைந்தர்களே மறவாதீர்.

இந்த சுதந்திரத்தத்தைத் ‘தந்திரமாக’ அல்ல: 
நிரந்தரமாகவே நேசிப்போம்!

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
15.8.2013

Post a Comment