Thursday, August 22, 2013

இது சேரன் எழுதாத கதை- Part:2

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

நண்பர்  ஒருவர் ‘கூகுள் ப்ளஸில்’  எனது ‘சேரன் எழுதாத கதை’ என்ற பதிவு பற்றி, இப்படி எழுதியிருந்தார்.

//திரு கிருஷ்ணன் பாலாவின் பதிவுகளை மிகவும் விரும்பி படிப்பவன்  நான்.

ஆனால், இது ஒரு குரூரமான சிந்தனையின் விளைவு -  இந்த பதிவு.

ஏன் தாமினி கெட்டுப் போனவள் என்று சொல்ல வேண்டும்? உங்களுக்கு தெரியுமா? அவள் கெட்டுப்போனாள் என்று?

எந்த ஒரு பெண்ணுக்குமே தனக்கு இவன் கணவனாக வாய்க்க மாட்டானா என்று ஆர்வம், ஏதோ ஒரு சில தகுதிகளை மட்டுமே வைத்து, அது தகுதிகள் அல்ல என்பது வேறு விஷயம், காதல் வயப்படலாம். எந்த ஒரு பெண்ணு,மே அந்த ஒரு அனுபவத்தைக் கடந்தே வந்திருப்பாள்.

இன்றைய நாகரீக உலகில் அது வெளிப்படையாக தெரிகிறது. தாமினியின் விவகாரத்தில் அதுதான் நடந்து விட்டது.

யாரும் இங்கே ராமன் இல்லை.
யாரும் இங்கே சீதையும் இல்லை.

மனச்சாட்சி இருந்தால் இதனை ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் ஒப்புக் கொண்டே ஆவார்கள்.

தாமினியை கெட்டுப்போனவள் அல்லது ஓடிப்போனவள் என்று சொல்வது ஒரு பயங்கரமான குற்றச்சாட்டும். தவறு செய்ய இருந்தவள் தவறை உணர்ந்து திரும்பி வந்திருக்கிறாள் என்று சொல்லுங்கள்.

பாவம் சேரனை அவமானப்படுத்தியது போதும். தாமினியின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம். //

அதற்கு நான் எழுதிய பதில் இதுதான்.

இது,தமிழ்ப் பண்பாடு தலை நிமிர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதி வரும் என்னை ஏதோ ஒரு வக்கிரம் அல்லது குரூரப் பார்வை’கொண்டவனாக எண்ணித் தங்களுக்குள்ளேயே தகித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்குமாகச் சேர்த்து இருக்கட்டும் என்று கருதி எழுதுகிறேன்:

நண்பரே திரு...................
எனது பதிவுகளை  எல்லாம் படித்திருந்தால் என்னை நீங்கள் ஒரு குரூரமானவனாகக் காட்டி, குரூரப்பார்வை கொண்டிருக்க மாட்டீர்கள்.

பெண்ணின், குறிப்பாகத் தமிழ்ப் பெண்ணின் கற்பின் மாண்பு எந்த அளவுக்குக் காப்பாற்ற பட்டிருக்க வேண்டும்? காக்கப் பட்டிருக்க வேண்டும்’ என்பதை அடிப்படையாகச் சிந்திப்பவர்க்கும் தமிழச்சிகளின் கற்பு நெறி பற்றி உணர்ந்தவர்களுக்கும்தான் எனது வருத்தமும் கோபமும் விளங்கும்.

சினிமாக்காரர்கள் தூண்டி விட்ட சிற்றின்பக் கதைகளில் வரும் ஆட்டமும் கூத்தும்தான் நமது தமிழப்பண்பாட்டின் ஆணிவேரையே அரித்துத் தின்றதில் அதிகம்.

நாட்டு நடப்பில் உள்ள கேடு கெட்ட காதலைச் சினிமாவாகச் சித்தரித்துக் காசும் பணமும் புகழும் சேர்த்த சேரன் அவர்களுக்கு,இன்று 'நாய் விற்ற காசு குரைக்கிறது’

சேரனை நாமா அவமானப் படுத்தினோம்?
அவர் மகள் அல்லவா அதை உலகறியப் படுத்தியது?

தாமினி வாழ்வதிலும் வாழாதிருப்பதிலும் நமக்கென்ன பங்கு இருக்கிறது?. அவர் தந்தையிடம் உள்ள பணமும்  பாசமும் அவரை, வாழ வைத்தால் சரி.

‘நன்றி கெட்ட மகனை (ளை) விட நாய்கள் மேலடா” என்று கவியரசு பாடியதை வாழ்விலும் காண்கிறவன் நான்.

//யாரும் இங்கே ராமன் இல்லை;
யாரும் இங்கே சீதையும் இல்லை.//

என்று  கூறிக்கொள்ளும் நீங்கள் சினிமாவில் சீரழிந்து போன எண்ணங்களில் வாழ்பவராகத்தான்  இருக்க வேண்டும்.

இல்லையென்றால், 'எல்லோருமே ஒழுக்கங்கெட்டவர்கள்தான்’ என்று வாய் கூசாமல்  உங்களால் ஒப்புத்தல் வாக்குமூலம்  தரமுடியுமா? அது     ‘வாலறுந்துபோன நரிகளின் நாட்டாமைத் தீர்ப்பு’ என்பேன்!

என்னைப்பொறுத்தவரை-
நான் காதலுக்கு எதிரி அல்ல; கற்புடைய காதலை ’காலமெல்லாம் வாழ்க’ என்பவன் நான்.

கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு ஓடிக் குதிப்போரின்   காமக் களியாட்டத்தைக் கட்டாயம் சாடுவேன்.

நீங்கள் ஒழுக்கத்தையும் பண்பபையும் ஆதரிக்கத் தயாராக இல்லை’எனில் பின் உங்கள் சந்ததி உங்கள் முன்னேயே சரிந்து போகக் காண்பீர்கள்.

உங்களை வருத்தப்படுத்துவதற்காக நான் இதை எழுதவில்லை; எனது வருத்தத்தை இப்படித்தான் என்னால் எழுத முடிகிறது.


இவண்-
கிருஷ்ணன்பாலா
22.08.2013
Post a Comment