இந்தியா,தனது 64 ஆவது சுதந்திர தின ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
’உலகின் உன்னதமான திரு நாட்டின் மக்கள் நாம்’ என்ற பெருமையிலும் நம் தமிழர்கள் இன்று உலகெங்கிலும் ஓங்கிய நிலை பெற்றுப் பரவி வருகிறார்கள்.
இந்தியா, உலக அரங்கில் தலைசிறந்த நாடுகளில் முன் வரிசைக்கு முந்திக் கொண்டு செல்கிறது. பொருளாதாரத்திலும் மனித வள மேம்பாட்டிலும் அறிவுச் சிந்தனகளிலும் இந்தியர்கள் பிற நாடுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதியிலும் உழைப்பிலும் உயர்ந்து வருகிறார்கள்.
‘இந்தியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளில் (பிற கட்சிகளின் ஆட்சிக் காலம் நீங்கலாக) 50 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தும் இத்தகைய முன்னேற்றத்தை இந்தியர்களாகிய நாம் சாதித்துள்ளோம்’ என்பது சாதாரணம் அல்ல.
நமது ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனில் இந்திராகாந்தியும், தகவல் தொடர்புத் துறையில் ராஜிவ் காந்தியும், சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் அடல் பிகாரி வாஜ்பேயும் பிரதமர்களாக இருந்து இந்தியாவின் வளர்ச்சிக்குத் தூண்டுதல் செய்தனர் என்பதை நாம் சொல்லத்தான் வேண்டும்.
ஆயினும் ’இவர்கள் செய்யத் தவறிய முக்கியச் செயல் திட்டங்கள்தான் அதிகம் என்று சொல்லவும்’ வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி (Single Party Rule) போய் பல கட்சிகள் ஆட்சி நிர்வாகம் (Multi Party Rule) வந்தும் கூட இந்திய சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட தீமைகளே அதிகம்.
ஊழல்,சுரண்டல்,ரவுடியிஸம் என்று வளர்க்கப்பட்ட கேடுகளுக்கு, அநேகமாக எல்லாக் கட்சிகளுமே காரணமாகி விட்டதால் இத்தகைய கேடுகளுக்கு நடுவிலும் இந்தியர்கள் சிறந்து முன்னேறி வந்திருப்பதற்கு எந்தக் கட்சியும் காரணமல்ல என்பதுதான் உண்மை.
அப்படியென்றால், ”இன்று உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள சிறப்புக்களுக்கு யாரைப் பாராட்ட வேண்டும்?” என்ற சிந்தனை நமக்குள் எழுகிறதல்லவா?
அதற்கு உண்மையான பதில்: ”இந்தியர்களாகிய நாம்தான்”
இதற்கு இந்தியப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளும் நம் முன்னோர் விதைத்திருக்கும் வாழ்க்கை நெறிகளும்தான் காரணம் என்பதை அறிவுள்ள ஒவ்வொரு இந்தியனும் எண்ணிப் பார்க்க முடியும்.
நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் ’நம் வீடு இந்தியா’ என்கிற உணர்வும்; நாம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் :”நாம் இந்தியர்கள்” என்கிற செறுக்கும்தான் இன்று உலக அரங்கில் ‘இந்தியா’ “இந்தியர்” என்கிற தனிப் பார்வையை ஒளிரச் செய்து, நம்மைப் பிற நாடுகளை எல்லாம் நிமிர்ந்து பார்க்கும்படிச் செய்துள்ளது.
இதற்கு மாறாக,”இந்தியாவின் இன்றைய பெருமைகளுக்கு நாங்கள்தான் காரணம்’ என்று இன்று ஆட்சி செய்யும் காங்கிரஸ் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அவலத்தை என்னென்று சொல்ல?
ஊழலுக்கும் கேடு கெட்ட மதம்,இனம்,மொழி வாதப் பிரிவினைகளுக்கும்தான் இன்றைய காங்கிரஸும் அதன் ஆட்சியாளர்களும் பொறுப்பேற்க வேண்டுமே ஒழிய, உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்கல்ல.
இன்று அன்ன ஹஸாரேக்களையும் பாபா ராம்தேவ்களையும் உருவாக்கிய பெருமை இந்தக் காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு என்பதைத்தான் அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும்.
ஒரு நாட்டின் சுதந்திரத்தினத்தை அச்சத்துக்கும் அச்சுறுதலுக்கும் நடுவே ஆயிரக் கணக்கான ராணுவத்தினர்,போலீசார் பாதுகாக்க, குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடி இழைக் கூண்டுக்குள் நின்று கொண்டு நமது தேசியக் கொடியை ஏற்றி வைத்து நமது பிரதமர் சுதந்திர உரையைப் (?) படித்ததை ”வேடிக்கை வினோதக் காட்சியாகத்தான், இன்று நாம் பார்க்க முடிகிறது.
 |
பாதுகாப்பான கண்ணாடிச் சிறைக்குள் நமது சுதந்திரப் பிரதமர் |
வலிமைமிக்க கறுப்புப் படைப் பாதுகாப்புப் பூனைகளுக்கு நடுவே பூனையாய்க் குரல் கொடுக்கும் நமது பிரதமர்!
சுதந்திரமற்ற சூழ் நிலையில் பிரதமரே இருக்கின்ற நிலையை வெட்கமின்றி காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த இந்த வேடிக்கைக் காட்சி பற்றி எனது முக நூல் (Facebook) பக்கத்தில் எனது கருத்தை நேற்று (15.8.2011) இரவு பதிவு செய்தேன்.
அந்தப் பதிவு வருமாறு:
”குண்டுகள் துளைக்காத;மிகவும் பாதுகாப்பான கண்ணாடி இழைச் சிறைக்குள் இருந்து கொண்டு,பாரதப் பிரதமர் புது டில்லி செங்கோட்டையில் இன்று (15.8.2011) இந்தியாவின் 64 ஆவது சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்தார்” -இது இந்தியாவின் அனைத்துச் செய்தி ஊடகங்களிலும் வெளியான செய்தி”
ஆஹா! இந்த சுதந்திரம் வேண்டி நின்றார் பின் வேறொன்றை வேண்டுவரோ, என் பாரதி?
இந்திய சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியை என்னென்பது?
இந்தப் பதிவை நான் இட்டதும் என்மீது தனி அன்பும் நட்பும் காட்டி வரும் முக நூல் நண்பர் ஒருவர் உடனே கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அவர் கேட்டது நமது பொது ஜனங்கள் பலருக்கும் தோன்றக் கூடிய கேள்வி என்பதால்,’,இதையே ‘கமண்ட்’ பகுதியில் கேட்டால் நான் சொல்கிற பதில் முக நூல் நண்பர்களுக்கும் விளங்குமே? என்று கேட்டேன்.
ஏனோ மறுத்தவர் ‘இல்லை அண்ணா இங்கேயே கேட்கின்றேன்;எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார்.
சொன்னேன்.
இறுதியாக, அந்த நண்பர் சம்மதித்தவாறே அவருடைய பெயரைத் தவிர்த்து விட்டு எங்கள் உரையாடலை இங்கு அனைத்து வாசக நண்பர்களுக்கும் சொல்வது இன்று பலருக்கும் விளங்கியிராத ஒரு கருத்தை வெளிச்சம் இட்டுக் காட்டுவதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
முக நூல் நண்பர்:
அண்ணா! “ குண்டுகள் துளைக்காத;மிகவும் பாதுகாப்பான கண்ணாடி இழைச் சிறைக்குள் இருந்து கொண்டு,பாரதப் பிரதமர் புது டில்லி செங்கோட்டையில் இன்று (15.8.2011) இந்தியாவின் 64 ஆவது சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்தார்”.. Intha seithiyil, emakku oru karuththu undu.. kooralaamaa?!.. (இந்த செய்தியில் எமக்கு ஒரு கருத்து உண்டு..கூறலாமா?..).
கூறுங்கள். ஆனால் முகநூல் பக்கத்தில் சொன்னால் அனைவருக்கும் புரியுமே;கமெண்டாகப் பதிவு செய்யலாமே..
முக நூல் நண்பர்:
ingeye koorugiren annaa.. (இங்கேயே கூறுகிறேன்,அண்ணா…) குண்டுகள் துளைக்காத சிறை தற்காப்பா? அல்லது சுதந்திரம் இன்மையா?
Krishnan Balaa:
அரசியல்வாதிகளுக்கு-குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான சிறை; வசதி மிக்க சிறை.
முக நூல் நண்பர்:
பிரிவினை கருத்துக் கொண்ட அண்டையர் உள்ளவரை அது அவசியம் தானே! அவ்விதம் கருதினால், ராணுவமும் கூட அவசியம் தானே?!அண்ணா, சுதந்திரம் உள்ளது என்பதற்காக ராணுவம் தரும் பாதுகாப்பு வேண்டியதில்லையா?!தயவு செய்து விளக்கவும்!Kelviyil pilai aethum iruppin mannikkavum Annaa....(கேள்வியில் பிழை ஏதும் இருப்பின் மன்னிக்கவும்,அண்ணா…)
Krishnan Balaa:
இத்தகைய எதிரிகள் செயற்கையாகத்தான் உருவாக்கப் பட்டிருகிறார்கள். அதிகாரத்தை எப்படியெல்லாம் சகல மரியாதைகளுடன் அனுபவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, தாங்கள் செய்யும் அயோக்கியத்தனமான ஊழல்களை, தெருவில் யாரும் கல்லெறிந்து காட்டிக் கொடுத்தும் காயப் படுத்தியும் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவும் தன் பிள்ளை, பேரன்களுக்கு போலீஸ்,ராணுவ மரியாதைகள் எல்லாம் தொடர்ந்து கிடைத்து வரவும் நமது அதிகார அரசியல்வாதிகள் செயற்கையாக ஏற்படுத்திய பகைவர்கள்.
நாளடைவில் அதைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதற்காக எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இதே மாதிரியான பாதுகாப்பு மரியாதைகள் கிடைக்கும்படிச் செய்து தங்களுடைய பாதுகாப்பை நிரந்தரப் படுத்திக் கொண்டார்கள் இந்த பதவி சுகம் கண்ட பாதகர்கள்.
முக நூல் நண்பர்:
.ஆமாம் அண்ணா...
Krishnan Balaa:
இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?..
முக நூல் நண்பர்:
தீர்ந்தது அண்ணா மிக்க நன்றி!..
Krishnan Balaa:
இதை இப்படியே உங்கள் பெயரைச் சொல்லாமல் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யப் போகிறேன்,தம்பி.சரியா?..
முக நூல் நண்பர்:
செய்யுங்கள் அண்ணா...
குறிப்பு:
இந்தக் கேள்வியைக் கேட்ட நண்பருக்கு, இந்தியா சுதந்திரத்தின் பெருமையை எந்த வகையிலும் குறை சொல்லக் கூடாது’ என்கிற தேசிய உணர்வு பொங்கி இருந்திருக்கிறது.
ஆனால் இன்றைய இந்தியாவின் பாதுகாப்பற்ற நிலைக்கு ”என்ன காரணம்;யார் காரணம்” என்பதை விளக்கிய பிறகு அவருக்கு உண்மை விளங்கி விட்டது’ என்பது அவருடைய சம்மதம் மூலம் தெரிந்து கொண்டேன்.
இதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?