Monday, December 19, 2011

இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்!


நண்பர்களே,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வன்முறையைத் தூண்டும் கருத்துக்களைப் பலரும் எழுதி வருகிறார்கள்.முதலில் இதற்கு அணை போடுங்கள்.
  
கேரள அரசியல்வாதிகள் பற்ற வைத்த வன்முறைக் கொழுப்பு மிகுந்த விவகாரம் இது. இதற்குப் பதிலடி தரவில்ல என்றால் 'நமக்கு அரசியல் வாழ்வு இல்லை' என்பதாகக்  கற்பனை செய்து கொண்டு இதைத் தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் அரசியல் முகவரிக்கான மிகப் பெரும் வாய்ப்பாக்கிக் கொண்டு விட்டனர் முகவரியற்ற நமது ஊர் அரசியல்வாதிகள்.

விளைவு:  ‘அறிக்கைக்குப் பதில் அறிக்கை’ என்றில்லாமல் இங்குள்ள அப்பாவி மலையாளிகளை அடித்து நொறுக்கினால் அங்குள்ள ’பாவி மலையாளிகளுக்குக்  கொடுத்த அடியாக மாறும்’ என்னும் கொடிய வன்முறையை,மனித நேயமற்ற அரசியல் விளையாட்டைக் கையில் எடுத்துள்ளனர் இவர்கள்.

இதை மாநில அரசுகளும் மைய அரசும் வேடிக்கைதான் பார்க்கின்றனவே தவிர, உடனடியாக அமைதியான தீர்வுக்கான  எந்த நடவடிக்கையையும்  இதுவரை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கையை ஒத்திப் போடுவதை ஒரு ராஜ தந்திரமாகக் காட்டிக் கொள்வதில் கை தேர்ந்த, கையாலாகாத பிரதமரையும் அவரைத் திரை மறைவில் ஆட்டி படைக்கும் அரசியல் சக்தியாக ஆளும் கட்சியின் அந்நியத் தலைவியையும் கொண்ட மக்களாய் நாம் வாழாவிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை பற்றிய உண்மை நிலவரங்கள் வேறு;அது நீதித் துறையின் தீர்ப்பில் இருக்கிறது. ஆனால், அதற்குள் இருதரப்புப் போராட்டங்களைத் தூண்டி வருவோரும் அரசியல்வாதிகளும் வேறு தீர்ப்பை எழுதி தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் முன் எப்போதும் இல்லாத இனப் பகைமையை வளர்க்கத் தொடங்கி விட்டனர்.

இதில்,உண்மையிலேயே தமிழர் நலன் காக்க விழைவோர் கருத்தில் கொள்ளத் தவறும் விஷயம்:மனித நேயம் - தமிழருக்கே உரிய பண்பாடு.

ஆண்டாண்டுக் கலமாக இங்கே வாழ்ந்திருந்து தமிழர்களோடு ஒன்றிப் போய் டீக் கடைகளும் பேக்கரிகளும் உணவு விடுதிகளும் நடத்தி வரும் மலையாளிகளின் கடைகளை,நேற்றுவரை அவர்களின் கடைகளில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி, நட்புப் பாராட்டிக் கொண்டு,கடன் வைத்து  சமூசாவும் பிஸ்கட்டும் தே நீரும் காபியும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழன்,இன்று அதே மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கி அவனது உடமைகளை நாசம் செய்கின்றான்; மலையாளிகளைத் தெருவில் கண்டால்  உதைக்கின்றான்.

இது நீதியா? தமிழனின் பண்பாடா?

இதே வன்முறையாளர்களின் தலைவர்கள் சொல்கிறார்கள்:” கேரளாவில் 
தமிழர்களை,மலையாளிகள் அடித்து விரட்டுகிறார்கள்”

மனிதர்களைக் கடிக்கும் நாய்களைத் திருப்பிக் கடிக்கச் செய்யும் மனிதனாகத் தூண்டும் இந்தக் கேடு கெட்ட செயலைத் தமிழன் செய்யலாமா? 

நண்பர்களே,தமிழர்களே, 

பதிலுக்குப் பதில் வன்முறை செய்வதன் மூலமும் அதைத்தூண்டி எழுதுவதன் மூலமும்  முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முற்றுப் பெற்று விடும்’ என்கிற மூடமைதான் நமது கொள்கையா?

கேரள மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப் படும் செய்திகளை வெகு ஆக்ரோஷப் படுத்திப் பலர் எழுதி வருகிறார்கள். நமது தலைக் காட்சிகளில் இது பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. 

கூட்டமகச் சென்று மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்குவதையும் ஆக்ரோஷத்தோடு பெரும் கூட்டமாக மலையாளிகளைத் தாக்கவும் ஒழிக்கவும் கோஷமிடுவதையும் பிரதானப் படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதையும் கண்டு நல்ல உணர்வுடையோர் மனம் நொறுங்கி கொண்டிருக்கிறது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறையயும் தூண்டும் அக்கறையானது, கேரளாவில் தமிழர்கள் தாக்கப் படுவதால் எழும் அக்கறை என்பதையோ இன உணர்வு என்பதையோ ஏற்க முடியாது. அவ்வாறு எழுதுவதன் மூலமும் செய்திகளைப் பரப்புவதன் மூலமும்  இங்குள்ள மலையாளச் சகோதரர்கள் அதிகம் தாக்கப் படுவதும் அதன் மூலம் தமிழர்கள் என்றாலே அவர்கள் எங்கிருந்தாலும் மலையாளச் சகோதரர்கள் தமிழர்களைப் பார்த்து வன்மம் கொள்ளச் செய்யத் தூண்டுவதையும் தவிர இவர்களின் கைங்கர்யம் இதற்கு மேல் எந்த நன்மையையும் செய்து விட முடியாது. 

ஒரு வன்முறை இன்னொரு வன்முறையைத்தான் செய்யத் தூண்டுமே தவிர, எவ்வித நன்முறைக்கும் வித்தாகாது.

எந்தச் சூழ் நிலையிலும் நாம் மனிதர்களாய் நடந்து கொள்ளும் நாகரிகத்தை வளர்க்கத் தவறி விடுவோமானால்,நமது எதிர்காலச் சந்ததியினரிடம் அதைக் காணவே முடியாது போய் விடும்.

சென்னையிலும் கோவையிலும் மதுரையிலும் டீக் கடைகளும் பேக்கரிகளும் உணவு விடுதிகளும் வைத்து பிழைப்பு நடத்தி வரும் மலையாளச் சகோதரர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கச் சொன்னவர்களா?

அவர்களைத் தாக்குபவர்களே தமிழர்களின் பண்பாட்டு எதிரிகள்.

எழுதத் தெரிந்த யாவரும் கண்ணியத்தையும் மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு எழுதுங்கள்.பிறரையும் அவ்வாறு எழுதத் தூண்டுங்கள்.


“ வன்முறையைத் தூண்டும் எழுத்துக்கள் தமிழனின் எழுத்துக்கள் அல்ல” என்பதைப் பிரகடனப் படுத்துங்கள்.

மனித நேயம் வேண்டி,
கிருஷ்ணன்பாலா
19.12.2011

Tuesday, December 13, 2011

உணர்ந்து எழுதுக!




முகநூல் மற்றும் வலைத்தளம் என்று
முனைந்து எழுதிடும் நண்பர்க்கெல்லாம்,
அகம்எழும் உணர்வில் தமிழ் நலன்கருதி
அன்புடன் எழுதும் பண்புரைக் கடிதம்:

சமூகத் தளமென இதனைத் தந்தார்;
சமுத்திரம் போலே சங்கமம் ஆகி
சுமூகமாக ஒருவருக் கொருவர்
சொற்களைப்  பகிர்ந்து எழுதிடுகின்றோம்!

எழுதிடும்போது எல்லைகள் வகுத்து;
’இனியவை;புதுமை;இலக்கியச் செய்திகள்
பழுதில்லாமல் படைக்கும் கவிதைகள்;
படங்கள் மற்றும் தகவல்கள் எல்லாம்

படைக்கும் திறத்தோர் படைக்கின்றவாறும்
படிப்போர் உணர்ந்து மகிழ்கின்றவாறும்
கிடைக்கும் தளம்’ என இதனைச் செய்து
கேண்மை கொள்வதே தமிழர் மேன்மை!


அண்ணன்-தங்கை ஆயினும்,கூட
அதீத அன்பைக் காட்டுதல் குறைத்து
பண்புடன் எழுதும் பக்குவம் நிறைத்து
படிப்பவர் மதிக்க,எழுதிடல் வேண்டும்!

ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற
உண்மைக் காதல் உள்ளே இருப்பின்
பருவக் காமம் அதனைக் கவியாய்;
படிப்பவர்க் கெல்லாம் எடுத்துரைக்காதீர்!

தமிழுக்கென்று தனிச் சிறப்புண்டு;
தயவும் பணிவும் தகைசால் பண்பும்
அமைந்த மொழி என அகிலம் சொல்லும்
அதனை உணர்ந்து எழுதுதல் நம் கடன்!

பண்டை இலக்கியம் பழந்தமிழ் நெறிகள்
பக்குவம் நிறைந்த காதல் கவிதைகள்
கண்டு,மகிழ்ந்து எழுதுவ தெல்லாம்
காண்போருக்கும் கற்பித்தல் பொருட்டே!

இலைமறை காயென எழுதிடும் செய்திகள்
எச்சில் இலைபோல் காற்றில் பறக்க
தலைமுறை இதனைக் கெடுக்கும் விதத்தில்
தமிழைக் கெடுத்து எழுதாதிருப்பீர்!

உங்களின் எழுத்தை உங்கள் வீட்டு
உற்றார்,பெற்றார்,உறவினர் எல்லாம்
தங்களின் உணர்வாய்த் தாங்கி மகிழத்
தரமாய் எழுதி உரமாய்த் திகழ்வீர்!

நல்ல சந்ததி இன்றைய தலைமுறை
நாளை அவர்தாம் ஆளும் குடிகள்
நல்லவர்,வல்லவர் என்றவர் இருந்து
நாடும் வீடும் காத்திடச் செய்வீர்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.12.2011

Sunday, December 11, 2011

இன்று- பாரதிதோன்றிய நாள்!





பாரதி பிறந்த நாள்!
--------------------------------------------
இந்தியர் நெஞ்சில் எல்லாம்
இமயமாய்த் தமிழை ஏற்றி
சுந்தரக் கவிதை செய்து
சுதந்திர முழக்கம் செய்த
மந்திரக் கவிஞன்;எங்கள்
மாகவி பாரதி;உலகம்
வந்தநாள் இன்று;அவனை
வணங்குதல் செய்வோ நாமே!



பாரதி போற்றி! பாரதி போற்றி!
---------------------------------------------------

பொய்யும் புளுகும் புனைந்தது உலகு
புரட்டும் திருட்டும் கலந்தது உறவு;
வையம் முழுவதும் தேடியலைந்தும்;
வாழ்வில் நேர்மை உள்ளோர் குறைவு!

கவிஞன் என்றால் பாரதிமட்டும்
கருத்தில் நிற்கக் காணு கின்றோம்;
புவியில் அவன்சொல் திறனறிந்து
பூட்டி,மனதில் பேணு கின்றோம்!

செவியில் அறைந்து அவன் உரைத்த
சிந்தனை யாவும் கொண்டிடு வோம்!
அவையில் ஒன்று;மறைவில் ஒன்று
அறியார் நாமெனக் கண்டிடு வோம்!

பாரதி தன்னைப் படித்தோர்;நமது
பாரில் பைந் தமிழ்ச் சொந்தம்;
வாரீர்,அந்தப் பாரதி உணர்வை
வாழ்த் திடுவோமே, நாம் இன்று!


இவண்-
கிருஷ்ணன் பாலா
11.12.2011



Monday, December 5, 2011

POKE என்பது.......























நண்பர்களே,

‘POKE' என்று  முக நூலில்  (Facebook) ஒரு  ‘சொடுக்கி’ இருக்கிறது.
அதன் பொருள் என்ன என்பதை  முகநூலில்  அநேக நண்பர்கள் புரியாமலேயே அதைச் ‘சொடுக்கி’    வருகிறார்களோ?’ என்று  நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில்,
நண்பர்கள் சிலர் எனது Face Book பக்கத்தை POKE
செய்தபோது அதற்குப் பதிலாக மரியாதைக்கு நானும்
ஒரு முறை Poke செய்தால்  மறுபடியும்
அவர்கள் அதையே திரும்ப Poke செய்கின்றார்கள்.

எனவே -
‘முகநூலில்  'Poke' என்ற சொடுக்கி இருப்பதன்
பயன் என்ன என்பதை நண்பர்கள் அறிந்து கொள்ள
வேண்டும்’ என்பதற்காக  என் விளக்கத்தை இங்கே
சொல்லி வைக்கின்றேன்:

நண்பர்களும் இதைப் புரிந்து கொள்வார்களாக!:

முதன் முதலில் ஒருவர் இன்னொருவர்பால் POKE
செய்தால்:
அது,
அவருடைய பதிவுகளைப் பார்த்து
அவரைச்  செல்லமாகக் கிள்ளும் நிலைக்குச் சமம்.

அவருடைய பதிவுகளுக்குத் தனது பார்வை
பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டிக் 
கொள்வதாகவும் இந்த Poke பொருள் சொல்லும்.

முதன் முதலாக உங்களை ஒருவர் Poke
செய்து,பதிலுக்கு நீங்கள் Poke செய்தால்
அது:
அவருக்கு நீங்கள் ‘உங்கள் அன்பைப் புரிந்து
கொண்டேன்’  என்று பதில் உணர்த்துவதாகும்.

ஆனால் -
அதற்குப் பிறகு Pokeக்கு Poke என்று
தொடரும்போது -
Pokeக்கு அர்த்தங்கள் அவரவர்
போக்குக்கேற்ப மாறுபடுகின்றன.

அவை எவ்வாறு எனப் புரிந்து
கொள்ள இதோ:

Poke என்றால்:
சிந்தனையில் நுழைவோரைக் ‘சுட்டுதல்’;
செறுக்கோடு எழுதுவோரை ‘தட்டுதல்’
மந்தமாயிருப்போரைக் ‘குட்டுதல்’;
மனதுக்கினியோரைக்  ‘கட்டுதல்’

அன்புக்குரியோரை ‘ஒட்டுதல்’
அழைப்புக்குப் பதிலாக ’எட்டுதல்’
வம்புத்தனமாக ‘முட்டுதல்’
வரைமுறை இல்லாமல் ‘கொட்டுதல்’

என்று-

எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம்.
அது அவரவர் மனோ நிலையைப் பொறுத்த விஷயம்.

எனினும்,
Poke என்பதன்  போக்கைப் புரிந்து நீங்கள் கொண்டால் சரி.

இப்படிக்கு,
பொழுது Pokeஉடன்--
கிருஷ்ணன் பாலா
5.12.2011