Tuesday, November 1, 2011

எனது இருபத்தைந்து!

நினைத்துப் பார்க்கின்றேன்.

என்னுடைய 25 வயதில் ஒரு பெரிய
பத்திரிகை நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தேன்.

எனது 25 வயதுப் பருவத்தில் நான் கசந்த உலகியல் வெறுப்புக்களைப் போல் நூறு மடங்கு அடுத்த 30 ஆண்டுகளில் அனுபவித்தும் எனது இயல்பு மாறுவதற்குப் பதில் ஏறி நின்றதைத்தான் உணர முடிகின்றது.,இப்போது.

அந்த இருபத்தைந்து வயதில் அட்சயப் பாத்திரம் போன்ற வேலையை விட்டெறிந்து வெளியேறிய அவன்தான் என்னுடன் இமைப் பொழுதும் நீங்காமல் என் மனச் சான்றாய் எனக்குத் துணையிருப்பவன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கின்றதென் நெஞ்சம்.

எனது இருபத்தைந்து என அப்போது எழுதிய ராஜினாமாக் கவிதைக் கடிதம் இப்போது எனது வரலாற்றுக் குறிப்புத்தான்!


படியுங்கள்: *எனது இருபத்தைந்து!
-------------------------------------------------------------
ஏழ்மையில் பிறந்து;நல்ல
எளிமையில் வளர்ந்து;தூய
வாழ்வினில் வந்த தெல்லாம்
வரவினில் வைத்து;இந்த்ச்
சூழ்நிலை தன்னில் தோன்றும்
சுவைஎலாம் கவிதை யாக;
ஆழ்மனம் எண்ணி அந்த
அனுபவம் விளையப் பாடும்
பாழ்படும் உலகில் என்றன்
பருவமோ இருபத்  தைந்து!

விதித்ததை விதித்து என்றன்
வினையினில் நின்ற தெய்வம்;
உதித்தபின் உறவென் றாகி
உணர்வினில் நின்ற பெற்றோர்;
பதித்தைப் பதித்து நெஞ்சில்
படிப்பெனத் தந்த ஆசான்;
எதிர்த்திடும் வினையை வெல்ல
எனக் கிவர் தோன்றி இன்று
கொதித்தெழும் இருபத் தைந்தில்
கூடவே நிற்கின் றார்கள்!

பார்புகழ் மைந்தன் ஆகப்
பார்’ என அன்னை சொல்ல;
நேர்மையில் நடக்கச் சொல்லி
நினைவினில் தந்தை நின்றார்;
கூர்கொண்டு நிமிர்ந்து நிற்கக்
குருமொழி ஆணை செய்ய;
மார்புக்குள் ஆடும் வாணி;
மாசிலாக் கருணை செய்தாள்!
சேர்கின்ற இடம் யாதென்று
சிந்திக்கும் இருபத் தைந்து!

பண்பினை இழந்து பாழும்;
பணத்தையே நினைந்து;அறிவுக்
கண்களை மூடி அகத்தின்
கருத்தினை மாற்றி;அழுக்குப்
புண்களை வளர்த்து;அதிலே
புணுகினைத் தடவி;உலகின்
தொண்டரைப் போலும் ;போலித்
துரைத்தனம் செய்வோர்;என்றன்
நண்பரும் இல்லை ;உண்மை!
நமக்கதில் உறவும் இல்லை!

எவரெவர் எதைச் செய்தாலும்
எனக்கதில் ஆசை இல்லை;
அவரவர் செய்யும் உழவே
அறுவடை ஆகும் அளவு;
தவறெவர்  செய்தா லும்மே
தண்டனை அளிக்குந் தெய்வம்;
கவலைகள் மறப்பாய் என்றே
கனிவுடன் வார்த்தை சொல்லி
தவமுடன் நின்ற நெஞ்சின்
தடமது இருபத் தைந்து!

இதையெலாம் நெஞ்சில் வைத்து
இன்றுநான் நிமிர்ந்து கொண்டேன்;
எதைஎலாம் கொள்கை என்று
என் வழி நடக்கின்றேனோ
அதைஎலாம் இழந்து யார்க்கும்
அடைக்கலம் ஆகி; என்றன்
சதையுடல் வளர்க்க மாட்டேன்;
சத்தியம் அறிக;இதற்கு
வதைஎலாம் வரினும் தாங்கும்
வயதது இருபத் தைந்து!

இதுவரை வந்த வாழ்வின்
இலக்கணம் கற்ற தாலே
இதுவரை வந்த தெல்லாம்
இலக்கியம் ஆக்கி விட்டேன்:
இதுவரை வந்த பாதை;
இருபத் தைந்தாண்டுக் காலம்;
இது இனிச் செல்லும் தூரம்
எதுவென அறியேன்;எனினும்
இதுவரை வந்த தெய்வம்;
இனி, கைவிடுமா என்ன?

இவண்-

கிருஷ்ணன்பாலா
29.10.2011

------------------------------------------------------------------------------------
*1975-ல் நான் எழுதிய ராஜினாமாக் கடிதம் இது.

Post a Comment