Sunday, May 13, 2012

எழுத்தும் நானும்


நண்பர்களே,

சமுதாயச் சிந்தனைகளை ஊக்குவிக்காத எந்த ஊடகமும்
 
நாட்டுக்குத் தேவையில்லாதது.

ஆனால் நாம் இதனை எண்ணிப் பார்க்கின்றோமா?

வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மையமாகக் கொண்ட ஊடகங்களுக்கு இன்று மக்கள் அடிமையாகிக் கொண்டுள்ளனர்.

சினிமா,கவர்ச்சி,ஆபாசம்,கேளிக்கைகள்,காதல் கூத்துக்கள் இவற்றை மையமாக்கியே
ஊடகங்கள், சூதாட்டங்களைப் போல் செய்திகளையும் சித்திரங்களையும் காட்டி,மக்களைச் சொக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் சமூகக் கேடுகள் எச்சரிக்கப் படுவதற்குப் பதிலாக, தூண்டப்படுகின்றன என்பதே உண்மை.

இப்போது ’சமூக வலைத்தளம்’ என நமக்குக் கிடைத்துள்ள இந்த முகநூல் போன்ற இணையதள வசதிகள், மலிந்துபோய்க் கொண்டிருக்கின்ற
இந்த சமூகக் கேடர்களுக்கும் கேடயமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆபாசத்தையும் அருவறுப்பையும் அசிங்கத்தையும் உமிழ்கின்ற கருத்துக்களைப் பலரும் போகிற போக்கில் பதித்து, படிப்பவர்களில் பெரும்பாலானோரையும் கிறங்க வைத்துத் தங்கள் அரிப்பையும் சொறிந்து கொண்டு வருகிறார்கள்.

உள்மனதின் வக்கிரங்களுக்கும் ஆழ்மனதின் ஆசைகளுக்கும் இந்த ஊடகத்தைக் கவசமாக்கிக் கொண்டு, அதன் மூலமாக தங்கள் வருங்காலச் சந்ததியினரை கொளுந்திலேயே கருகச் செய்யும் குற்றங்களைக் குறைவில்லாது கையாள்கின்றவர்களை இங்கே எச்சரிக்கை செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கின்றது..

எதிர்கால சந்ததியினர் நம் மொழியின் உயர் பண்பாடு யாதெனத் தெரிந்து கொள்ளாமல் போகவும், அதில் தாழ்வுற்று, தலை குனிந்து பாழ்பட்டுப் சாகவும் சத்தில்லாத சந்ததியினரக ஆகவும் வித்திடும் இவர்களின் மூன்றந்தர. நாலாந்தர எழுத்துக்களால், செம்மார்ந்த தமிழ் மொழியின் செறிவார்ந்த சின்னம் சிதைக்கப்படுகின்றது.

இதை நாம் கண்டுணராமல் இருந்தாலும் அல்லது ‘கண்டுகொள்ளாமல் இருக்க ஆலோசனை’ வழங்கப்பட்டாலும் அது ‘நம் பண்பாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களான அறம், நீதி,ஒழுக்கம், அறிவியல், கலை,இலக்கியச் சிந்தனை முதலானவற்றின் வலுவான தொடர்புகளை பலவீனப்படுத்திட, நம்மை  நாமே அறியாமல் அனுமதித்துக் கொண்டு வருகிறோம்’ என்றுதான் அர்த்தம் ஆகின்றது..

இன்னும் ஒருதலைமுறைக்குப் பிறகு. இதன் பாதிப்பு மிகக் கடுமையானதாகத்தான் இருக்கும்; இப்போது தெரியாது.


இதை, ‘நமக்கு நாமே கொள்ளி வைத்துக் கொண்டு குழியில் வீழும் குருட்டுத்தனம்’ என்றுதான் கூறுவேன்.

‘இப்பழியில் இருந்து மீள வேண்டும்’ எனில்,எழுதுகின்ற யாவரும் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து  எழுத வேண்டும். படிக்கின்றவர்களும் நம் சமூகப் பண்புக்கு எதிரான பதிவுகளை எழுத்துக்களைக் கண்டிக்கும் துணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்

ஆனால்-
படித்தவர்களும்,அறிவார்ந்த விஷயங்களை வெளிப்படுத்தக் கூடியவர்களும், திறமையுள்ள சிந்தனைவாதிகளும்,ஏன் சில பெண்மணிகளுமேகூட சில சமயம் இந்த சாக்கடை எழுத்துக்களுக்குள் புதையுண்டு தடுமாறுவதை நான் இங்கே காண்கின்றேன்.

அந்தத் தடுமாற்றத்தில்,தாங்கள் எழுதிவரும் சாக்கடைக் கருத்துக்களின் துர்நாற்றம் எத்தகையது என்பது சாக்கடைக்குள்ளிருந்து கொண்டு சந்தி சிரிக்க எழுதுபவர்களுக்குத் தெரியாதுதான். ஒருவேளை,அந்த எழுத்துக்கள் அவர்களுடைய உள்மனதின் உத்வேகமிக்க அடையாளமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

ரசனை என்பது, விபச்சாரத்தனமான விஷயங்களுக்கு
 
அதிகம் என்பதால் அதில் விருப்பம் கொண்டு எழுதுபவன்
 
சமூகச் சிந்தனையாளனோ இலக்கியப் படைப்பாளனோ
 
ஆக முடியாது; தான் சார்ந்துள்ள சமூகத்துக்கு அவனே ’உயிர்க் கொல்லி’ ஆகி ‘கொள்ளி’ வைக்கின்றவன் ஆகின்றான்.


அவனுடைய எழுத்துக்களை ரசிப்பவனோ,வக்காலத்து வாங்குபவனோ கொல்லி வைப்பவனுக்குக் கூடாரம் அமைத்துத் தருகின்றவன் ஆகின்றான்.

நமது பண்பாட்டை மழுங்கச் செய்யும் இத்தகைய விபச்சாரத்தனங்களுக்கு ஜனநாயக முறையில் வேண்டுமானால் ‘மெஜாரிட்டி’ என்பது தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கலாம்; ஆனால் இலக்கியச் சிந்தனைகளில் அது எடுபடாது; இங்கே மைனாரிட்டியே தீர்ப்பெழுதும் திறமையைக் கொண்டுள்ளது.
  
இந்தப் பார்வையை அடிப்படையாகக் கொண்டுதான் எனது எழுத்துக்களை இங்கே வெளிப்படுத்தி வருகின்றேன்.

என் எழுத்துக்களை நான்,ஒருபோதும்  தனி நபர் விமர்சனம் சார்ந்தோ 
தனி ஒரு சித்தாந்தம் சார்ந்தோ இருக்க அனுமதிப்பது இல்லை.

எனது எழுத்துக்கள் குறித்துப் பல தரப்பட்ட நண்பர்களும் அவ்வப்போது 
நேரிலும் தனி அஞ்சல் மூலமும்  தொலை பேசி வாயிலாகவும்
முக நூலிலும் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.

பலர் வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு ரசிக்கிறார்கள். 
சிலர் இங்கு நேரிடையாகச் சொல்லத் தயங்கி, தங்கள் பக்கங்களில் எழுதும்போது பட்டும்படாமலும் தங்கள் பதிவுகளுக்குள் காரத்தையும்  
உப்பையும் கலந்து கொள்கிறார்கள்.

தெளிவான சிந்தனைகொண்ட நண்பர் ஒருவர் என்னிடம் 
கேட்டார்,  “இப்படி எல்லாம் நீங்கள் எழுதுவது இது மாதிரி 
ஃபேஸ் புக் வழியாகவும் உலகத் தமிழர் மையம்’ வழியாகவும் 
எத்தனை பேரிடம் போய்ச் சேர வாய்ப்புகள் இருக்கிறது? என்று.

சரியான கேள்வியைத்தான் அவர் எழுப்பியிருந்தார். 

அவருக்குச் சொல்லும் பதிலையே நான் இங்கு இதன் மூலம் அனைவருக்கும் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன்.

நண்பர்களே,
  
‘ஃபேஸ்புக்’ என்பதும்  ‘உலகத் தமிழர் மையம்’ என்பதும் எனக்குக் 
கிடைத்துள்ள மேடை.

அதில் எழுதுகிறேன்.

எனது எண்ணங்களையும்  கருத்துக்களையும்வெறும்
பொழுதுபோக்குக்கு’ என்று இல்லாமல் இந்தியப் பண்பு சார்ந்த,
குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த, அர்த்தமுள்ள விஷயங்களை ஆழமாக உணர்ந்து, அதனைப் பல்வேறு நிலைகளில் மையப்படுத்தி  எழுதுகின்றேன்.

‘இது குப்பைக்குப் போகிறதோ இல்லை, கூர்த்த மதியுள்ளவர்களின்
மூளைக்கு போகிறதோ என்று கணக்குப் பார்ப்பது எழுதுபவனின் 
வேலையாக இருக்க முடியாது.

‘ஒரு Print Mediaவில் நாம் என்ன சொல்கிறோம்? அது 
எத்தனை பேரைச் சென்று, சிந்திக்க வைக்கிறது?’ என்பதைச் 
சிந்தனையுள்ளோர் ஏற்கின்ற விஷயம்.

இது சுயநல நோக்கம் இன்றிச் செய்கின்ற பணி. 
இதே Facebook எகிப்திய புரட்சிக்கும் காரணமாக இருந்தது;
இங்கே, பல உதவாக்கரைகளின் உல்லாசப் பொழுது
போக்குகளுக்கும் ஊறிப்போன திமிர்வாதங்களுக்கும் 
காரணமாக இருக்கின்றது.

அது,படிக்கின்றவர்களின் தகுதியையும் இதனைப் பயன் படுத்துகிறவர்களின் பண்பாட்டையும்  பொறுத்து மாறுபடுகிறது.

இல்லையா, நண்பர்களே?.

இவண்,
கிருஷ்ணன்பாலா
13.5.2012

No comments: