1982களில்கோயம்புத்தூர் ரத்தினபுரியில் குடியிருந்த போது செப்டம்பர்-11.அவன் நினைவு நாள். அதற்கு முன்தினம், நான் என் மூத்த மகள் ரம்ய பாரதியோடு (ஆம்,அவள் பெயர் அப்போது இதுதான்!) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவளுக்கு ஒன்றரை வயது.
அந்தப் பாரதி பாட்டனின் ஆவி என்னுள் புகுந்து கொண்டது. எனக்கு என் மகள் ரம்யபாரதி, தங்கம்மா பாரதியானாள். வழக்கமாகக் கதை கேட்டு நச்சரிக்கும் அவள்,அன்று என் கவிதையைத் தன் மழலைக் குரலில் ‘உம்’ போட்டுக் கேட்கத் தொடங்கினாள்.
ஒருஅரை மணி நேரமாக விடாது பெய்த கவிதை மழை இது. இக்கவிதை மழை கொட்டி முடிந்தபோது,”அய்யோ, எழுந்திருங்க… எழுந்திருங்க” என்று அலறினாள், மனையாட்டி. அப்போது,என் வீட்டில் நிஜமாகவே வெள்ளம் புகுந்து,பாய் படுக்கையையெல்லாம் தண்ணீரில் நனைத்திருந்தது.வெளியில் நல்ல மழை. ஓட்டு வீடு…. ஓட்டைகள் ஆங்காங்கே….வெள்ளம் வெளியில் மட்டுமா?
“அந்தோ...என் பாப்பா எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?” என்று பேராசை கொண்ட மனதின் கற்பனைகள குறித்து இன்று ,எனக்கு நானே கழிவிரக்கம் கொள்கின்றேன். படியுங்கள் கீழே.கொஞ்சம் புரியும்!
பாப்பா, கவிதை கேட்பாய்!
--------------------------------------------------
சிந்தும் மழலை மொழிப் பாப்பா!-நான்
செப்பும் ஒரு கவிதை கேட்பாய்!
எந்தநிலை வந்த போதும்-உன்
இதயம் அமைதி கொளல் வேண்டும்!
அஞ்சி நடப்பதொரு தாழ்வு-பொய்
அஞ்சி வாழ்வதுதான் வாழ்வு!
மிஞ்சி நடப்பதுவும் தீது-அதில்
மேன்மை விளைவதில்லை கேளு!
வஞ்ச மனிதர்களைக் கண்டு-நீ
வாய் மவுனம் காட்டுவது நன்று;
நஞ்சு மிகவுடைய நாகம்-அதை
நல்லபாம்பு எனல் தீங்கு!
அன்னை,தந்தை,குரு என்று-நீ
அடங்கி வணங்குவது நன்று!
உன்னை உயர்த்த வரும் தெய்வம்-இந்த
உண்மை உணர்ந்து தரும் செல்வம்!
பொய்யாய்க் கூட ஒரு பொய்யை-நீ
புகல முனைதல் தீச் செய்கை;
பொய்யைக் கூட ஒரு மெய்யை-நீ
புகல மறுத்தல் தீக் கொள்கை!
உத்தமரை நோக விடல் பாவம்-ஒரு
உண்மையைச் சாக விடல் பாவம்;
சத்தியம் தவறுபவர் பக்கம்-தலை
சாய்த்து நடப்பதுவும் பாவம்!
கனிவு காட்டுவது லாபம்;உன்
கடமையை ஆற்றுவது லாபம்!
இனியமொழி உரைத்தல் லாபம்-இவை
என்றும் தொடருவது லாபம்!
நோய்க்கு இடம் கொடுக்க வேண்டாம்-பிறர்
நோயில் கண் மறைக்க வேண்டாம்;
வாய்க்கு ருசி மிகுத்தல் வேண்டாம்-பிறர்
வாயை அடக்குவதும் வேண்டாம்!
பணிவு காட்டுவது வேண்டும்-பொய்ப்
பணிவை மறுப்பதுவும் வேண்டும்;
துணிவு காட்டுவதும் வேண்டும்; பிறர்
துன்பம் நீக்குவதும் வேண்டும்!
தீமைதனை எதிர்த்தல் வீரம்-பிறர்
திறமை மறைத்தல் அகங்காரம்;
ஆமை நிகர்த்த மனப்பான்மை-தனில்
அடங்கி வாழ்தல் தரும் மேன்மை!
கற்றுத் தெளிந்தவர்கள் நட்பை-நீ
கருதி பிடித்து விடு பாப்பா;
குற்றம் கடிந்துரைத்த போதும்-அதில்
கோபம் தவிர்த்து விடு பாப்பா
கொடுத்து வாழ்தல் ஒரு தானம்-பிறர்
குறையை நினைத்தல் அஞ்ஞானம்;
எடுத்து வாழ்தல் அவ மானம்-பிறர்
இரக்கம் மறுத்தல் உயர்மானம்!
ஏட்டுப் படிப்பதையே எண்ணி-நீ
ஏமாந்து போகாதே பாப்பா;
நாட்டு நடப்புக்களில் உண்மை-நீ
நன்கு உணர்ந்திடடி பாப்பா!
சஞ்சலம்கொள் மனதைக் கொல்லு-ஓம்
சக்தி சக்தி சக்தி என்று சொல்லு;
தஞ்சம் அளிப்பள்பரா சக்தி-அந்தத்
தாயை நினைத்துவளர் பக்தி!
பூமிதனில் உந்தன் பிறப்பு-பிறர்
போற்ற வளர்வதுதான் சிறப்பு;
சாமி துணை இருக்கும் போது-உனைச்
சாடும் துயரம் இங்கு ஏது?
இவண்,
கிருஷ்ணன்பாலா
குறிப்பு:
கோவை வானொலி நிலயத்தில் கவிதை படிக்க எனக்கு அழைப்பு 1982களில். நான் தயாரித்து வைத்திருந்த கவிதைகள் தவிர இன்னும் கொஞ்சம் தேவை இருப்பது போல் எனக்குள் ஓர் எண்ணம். மறுநாள் வானொலி நிலயம் செல்ல வேண்டும்.அதற்கு முன் தினம் மாலையில் இந்தக் கவிதையை என் மூத்த மகள் ஒன்றரை வயது ஆன நிலையில் அவளுக்கு மெல்ல மெல்லச் சொல்ல எண்ணி,பிறகு எழுதி எழுதிச் சொல்லலானேன். இதே கவிதை மறுநாள்
கோவை வாசிக்கபட்டது,
அன்று என் மகளுக்காக எழுதிய இந்தக் கவிதையின் எதிர் பார்ப்பை அவள் வளர்ந்து ஆளாகிப் புறக்கணித்துப் பொய்யாக்கி விட்டாள்.எனினும், லட்சக் கணக்கான நம் தமிழ்க் குடும்பங்களின் மழலையர்க்கு விதைத்த கவிதையாய் இது இருக்கும் என நம்புகிறேன்..
-கிருஷ்ணன் பாலா
2 comments:
மிக அருமையான வரிகள் சார்!
‘சண்டாளத் தனத்தோடு
சமாதானம் ஆவதில்லை’
என்பதை-
சத்தியம் செய்து கொண்டு
வடுக்களை வரலாறு
ஆக்கிக் கொண்டது.
எனக்கு...
நிரந்தர முகவரி இல்லை;
என்ற போதும்-
எனது எழுத்துக்கள்
என்னைக்
காட்டிக் கொடுத்து விடும்!
-------கம்பீரம் கவிதை முழுவதும் ராணுவ உடையில் மிடுக்காக வலம் வருகிறது!
வாழ்த்துக்கள்! ...
வளைந்து போக முடியாததும் குணமே! கொள்கையே! மதிக்கப்படவேண்டியதே!
நன்றி சார்!
-நடராஜன் மாரியப்பன்
//உத்தமரை நோக விடல் பாவம்-ஒரு
உண்மையைச் சாக விடல் பாவம்;
சத்தியம் தவறுபவர் பக்கம்-தலை
சாய்த்து நடப்பதுவும் பாவம்!//
உண்மைக்காக ஒரு மனிதனை சாகவிடுவது புண்ணியமா?
Post a Comment