Thursday, September 2, 2010

கண்ண பிரானே!

குருவே சிவம்


இன்று(1.9.2010-புதன் கிழமை) ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி.பரப் பிரும்மம் ஆன
கண்ணனின் கருணையை மனம் நாடி விரிகின்றது.இந்த குவலய வாழ்வில் ‘லயம்’கொண்டுள்ள ‘நான்’என்ற ஆத்மனின் உள்ளரங்க ஓசைகளை உள்ளுணர்ந்தே ஒலிக்கிறது மனம்.ஓசையின்றிக் கேட்கின்றான் கண்ணன்:

கண்ண பிரானே!
---------------------------
நினைத்ததை நிஜமாய்ச் செய்து,
நிஜத்தையே நினைக்கச் செய்வாய்!  
தனத்தினால் தர்மம் செய்ய,
தருமத்தைத் தனமாய்த் தருவாய்!
சினத்தினைச் சிதறச் செய்து,
சிந்தனை செழிக்க வைப்பாய்!
அனைத்தையும் அழிக்கும் ஆக்கும்
அரங்கனே,கண்ண பிரானே!

ஓதிடும் உன்முன் யாவும்
ஒளிபெறக் காட்டி;எந்தன்
தீதினை ஒழித்து,ஞானத்
தெளிவினை அருள்வாய்,இன்றே!
ஆதவன் ஒளியாய்,எங்கும்
ஆண்டிடும் பரம்பொருள் உந்தன்
பாதமே கதியென நின்றேன்;
பரமனே, கண்ண பிரானே!

ஆதவன் ஒளிபட்டொழியும்
அந்தக இருட்டைப் போல
மாதவா,உன்அருள் பட்டால்
மலைகளும் சமதரை யாகும்;
சோதனை,எனைச் செய்யாதே
சொல்கிறேன்,கேளாய்,எந்தன்
பாதையில் நீமுன் செல்க;
பார்த்த்தனே,கண்ண பிரானே!



துறவா தெதையும் துறந்தாற் போல்
தொடரும் இந்தப் பொய்யேனை
மறவா தணைத்துன் மடிமீது
மகிழும் ஞானக் குரு பரனே
உறவாய் எதுவும் இல்லாமல்
உலகில் எத்தனை நாள் வைத்தாய்?;
இறவா உந்தன் பரமபதம்
எண்ணி அழைத்தேன் ஏற்பாயே!

பற்றற் றிருந்து பர ஞானம்;
பற்றும் பற்றே பற்றென்று
கற்றும் பற்றைப் பற்றாமல்
கலங்கும் இவனைக் காண்பாயா?
முற்றும் தடுத்துன் திருநிழலில்
முகிழ்க்கும் நாளும் எந்நாளோ?
குற்றம் பெருக்கும் இவ் வாழ்வைக்
குலைப்பாய் நீயே,பரமாத்மா!

நோயென்று வீழ்ந்தால்;என்னை
நோக்குவார் இல்லை;நானே
நாயென்று கிடந் துழன்று
நலம் பெற வேண்டும்;பிறரைப்
போயொன்று கேட்டுப் பெற்றுப்
பொறுக்கிடும் நோக்கம் இல்லை!
தாயென்று உன்னை யன்றித்
தாங்குவோர்,உண்டோ,கண்ணா?

ஒன்றை நீ உணரக் காட்டி,
உணர்ந்ததை நடத்தச் செய்து,
நன்றுநான் செய்த போதும்
நடுநின்று கெடுக் கின்றாயே?
ஒன்று: எனை ஊமையாக்கி
உணர்விலாப் பித்தன் ஆக்கு:
அன்றெனில் ‘மலை போல் நிறுத்தி’
அரங்கனே ஆளச் செய்வாய்!

No comments: