Sunday, September 5, 2010

எனது வாழ்க்கைப் பாதை!

எனது வாழ்க்கை பாதை!

நண்பர்களே,
‘உதயன் சத்தியானந்தன்!(Uthayan Sathiyananthan as in "Face Book")
எங்கிருந்து வந்தார்,இவர்?
எனது வாழ்க்கை பற்றி
“வாக்கு மூலம்...” என்று
இரண்டு வரிகளில், சிறுகுறிப்பாகத்தான்
எழுதி யிருந்தேன்.


ஆயிரக்கணக்கானோர்
கண்ணில் அகப்படும்
அந்தக் குறிபபு-
இவரின்‘அகக்’குறிப்பாய்...
இவர் கருத்தில் பட்டு விட்டது.


என் வாழ்க்கை நிலையை,
‘குறிப்பால் உணர்ந்து’ துணை நின்றார்ப் போன்று,
எனது-
உள் மனக் காயங்களுக்கு மருந்திடும்
உத்தம நண்பராய்க்
கவிதை எழுத்தில் எழுதி இருந்தார்.


அவர் எழுதினார் இப்படி:
Uthayan Sathiyananthan:தோழர்களே!
பெற்றோர் உறவு பிரிந்து போனாலும்
உற்றார் உறவினர் உனைவிட் டகன்றாலும்
கற்றாயே நற்றமிழ் காவலாய் நின்று
காக்கும் தோழா என்றென் றும்மே!
...நன்றியுடன்
ச.உதயன்

(காண்க:Faccebook,நாள்:5.9.2010,ஞாயிற்றுக் கிழமை)


இதுவரை-


எழுத்துலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்
தெரிந்திராத உண்மைகளைச்
சுருங்க விரித்துக் கூறும்
வாய்ப்போ,மன நிலையோ
எனக்கு இல்லாதிருந்தது!


நண்பர் உதயன் சத்தியானந்தன்
இன்று,அதை இப்போது
உணர்வெனும் ’கட்டளை’யால்
எழுதிடப் பணித்து விட்டார்.

இதோ எனது வாக்கு மூலம்:

பெற்றோர் பிரிவு இயற்கையானது;
பிழையில்லாத பாசம் கொண்டது;
உற்ற உறவாம் உடன்பிறந்தோரும்
ஊரார் மற்றும் உறவினர் யாரும்-


உலக வழக்கில் உள்ளதுபோன்றே
உணர்வொடு கலந்த உறவில் உள்ளனர்;
நலங்கெட வாழ்ந்தாள் ’நாறி’ என் மனையாள்;
நல்லறம் அற்றது:இல்லறம் கெட்டது!


வறுமையிற் செம்மை;வாழ்ந்து காட்டினேன்!
வந்தவர் மனதில் அன்பை நாட்டினேன்;
அறிவோடிருக்க அகத்திருந் தோர்க்கு
அடிக்கடி,பாடம் கடிந்து நடத்தினேன்!


பெற்ற பிள்ளைகள் மூவர்;அவரைப்
பெரிதாய் வளர்த்திடக் குறியாய் இருந்தேன்;
கற்றனர்,தாயின் வழியில் நின்றனர்;
கயமையை நெஞ்சம் ஏற்க மறுத்தது.


‘அருள் வழி நின்று பொருள் வழி தேடல்’
அதுதான் எனது உடல் பொருள் ஆவி;
‘பொருள்’வழி நின்று அருள் வழி மறந்து
புண்படச் செய்தனள்;‘பெண்’டெனும் பாவி!


மனத்தால் வெறுத்தேன்;பணத்தால் பிரிந்தனர்!
‘மானம் ஒன்றே மலை’என நிமிர
இனத்தால் இருக்கும் ‘வெறி’யையும் விட்டு
எண்ணம் செழித்தே தனித்து வாழ்கிறேன்!


இதுதான் எனது வாழ்க்கையின் காதை;
இதைஇன்றெழுதிட, வகுத்தனை பாதை;
உதயன்,உனக்கென் உளமார்,நன்றி!
உணர்வுகள் கொதித்து அடங்கின,இன்று!


-கிருஷ்ணன் பாலா
05-09-2010,ஞாயிறு,பகல்:12:30

1 comment:

V.Rajalakshmi said...

மனதை அழுத்தும் கதை!
சொல்ல சொல் ஏதும் இல்லை!!