Thursday, March 8, 2012

மகளிர் தினம்- பெண் வடிவில் வந்த தாய்!

மனிதரின் வாழ்வில் இரண்டு அடிப்படைக் காரணிகள்;

ஒன்று தந்தை;இன்னொன்று தாய்.

ஆணும் பெண்ணும் இன்றி இந்த உலகம் படைக்கப் படவில்லை;

இதில் பாதி மகளிர் என்னும் பெண் இனத்தின் உரிமை. அந்தப் பெண் இனத்தின் பெரு மதிப்பாய்த் திகழ்பவள் தாய், இது மகளிர் தினம் என்று வருடத்தின் ஒரு நாளைத் தீர்மானித்துக் கொண்டு சிறப்பிப்பது 
இயந்திரத்  தனம்.

நாம் ஒவ்வொரு நாளும் நினைவகலாமல் தாயைப் போற்றி மதிப்போம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல;மிருகங்களுக்கும் பிற உயிர்களுக்கும் தாய்தான்.

என்னை பொறுத்தவரை
நமது பண்பாட்டின் வித்தே தாயிடமிருந்து அன்பையும் தந்தையிடமிருந்து அறிவையும்தான் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் உடல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் பெற்று வளர்கின்றன என்பதுதான்.

அன்பு இருந்தால் அடங்கி வாழலாம் அறிவு இருந்தால் அடக்கி வாழலாம்;

அதனால்தான் பெண்கள் இயற்கையிலேயே அடக்கம் நிறைந்த பண்புகளுடன் இருப்பதை நமது பண்பாடு விளக்குகிறது.

இதில் விதி விலக்குகளாக இருப்பவர்களைப் பற்றி நாம் விசனம் கொள்ளாது,உண்மையிலேயே தமிழ்ப் பண்பாடு செழித்த பெண்மையை  நாம் நம் தாயின் வடிவில் போற்றுவோம்.

எனது தாய்க்கு நான் படைத்த கவிதை இங்கு உங்கள் எல்லோருக்குமாக:

இவண்-
கிருஷ்ணன்பாலா
8.3.2012
தாய்



தாய்’ என்றெண்ணித் தினம் நான் மகிழத்
தகுந்தவள்’ என் தாய்நீயே
ஓய்வும் துயிலும் துறந்தாய்;நாளும்
உன்மகன் பொருட்டே உழைத்தாய்!

பத்தாய் மாதம் சுமந்தாய்; என்னைப்
படைத்தாய் இந்தப் பாரில்;
சொத்தாய் பிள்ளைப் பித்தாய்;அன்பு
சொரிந்தாய்; சொந்தம் புரிந்தாய்!

குழந்தாய்என்றெனைக் குழைந்தாய்; முத்தம்
கொடுத்தே சித்தம் குளிர்ந்தாய்!;
இழந்தாய் உன்றன் சுகம் அத்தனையும்
என்விழி துயில விழித்தாய்!

பாய் என்னுடலை வதை செயும்என்றே
பஞ்சாய் மேனி அளித்தாய்;ஒரு
நோய் என்மீது வந்தால்; நீயோ
நூலாய்  மேனி இளைத்தாய்!

முத்தாய் முல்லைக் கொத்தாய் என்னை
மொழிந்தாய்;உவமை பொழிந்தாய்:
இத்தாய்க் கிணை இங்கெத்தாய்?என்று
எவரும் எள்ள, நிறைந்தாய்!

எழுதாய் மகனேஎன விழைந்தாய்;என்
எழுத்தினைக் கண்டே மகிழ்ந்தாய்;
பழுதாய் நானோர் பிழை செய்தாலோ
பதைத்திட உள்ளம் அழுதாய்!

தொழுதாய் தெய்வம்;என்பொருட் டே,நீ
தொண்டுகள் செய்து நெகிழ்ந்தாய்;
விழுதாய் நெஞ்சில் படர்ந்தாய்;என்னுள்
வேர்போல் ஊன்றி விளைந்தாய்!


’அப்பா;என்றே அழைத்தாய் ;என்னை
அணைத்தே அமுது கொடுத்தாய்:
முப்பால்;வெல்லும்;அப்பால்;அந்த
அமுதம் உந்தன் முலைப்பால்!

ஒருநாளேனும் உன்பசியை  நீ
உரைத்தாய் இல்லை;பொறுத்தாயே!
ஒருநாளேனும் உண்ணாமல்;நான்
உறங்கும் நிலையைத் தடுத்தாயே!

எனதாய் எதையும் அடைந்தாய் இல்லை!
எனினும் எனையே  கனிந்தாய்;
உனதாய் ஒன்றே சொந்தம் என்று
உலகில் எனையே  நினைந்தாய்!

பெண் எனவந்த பேய்கூட; உன்
பெருங் குணத்தால்தான் வாழ்ந்ததென
புண்குணம் கொண்டோர் அறியாமல்
போய் மறைந் தாயே,என் தாயே!

மரணம்வரையிலும் எனை நினைத்தாய்;
மண்ணில் விதையாய்ப் புதைந்தாயே!
கருணையின் மறுஉரு உனை,எங்கு
காண்பேன்? அம்மா, பிரிந் தாயே!

கண்ணில் ஒளியைக் காணாமல்;நான்
கருத்தில் வைத்தே தொழுகின்றேன்;
மண்ணில் நான்உன் மகவாய்;நாளும்
மனதால் எண்ணி அழுகின்றேன்!

என்னை விட்டு,ஏன்அகன்றாய்நீ
என்றே நாளும் கனக்கின்றேன்:
உன்னை மீண்டும் பெற்றே;இந்த
உலகில் பிறந்திடத் துடிக்கின்றேன்

என்னைச் சுமந்து பெண் வடிவில்
இருந்தாய் எனது முன் வாழ்வில்;
என்னை விட்டு மறைந்தாலும்
இன்னும் சுமக்கும் புவி நீதான்!

என்னைச் சுமந்தாய்;உனை நாளும்
இதயம் வைத்துச் சுமக்கின்றேன்;
உன்னைக் கருத்தில் சமைக்கின்றேன்;
உலகில் அதைத்தான் படைக்கின்றேன்!

இப்படிக்கு,
அழுது தொழும் உன் மகவு

No comments: