அன்பிற் குரிய நண்பர்கள்: நல்ல
அறிவு செழித்த வாசகர்; முன்பின்
என்னை அறியா நண்பர்கள் மற்றும்
அறிவு செழித்த வாசகர்; முன்பின்
என்னை அறியா நண்பர்கள் மற்றும்
இதனைப் படிக்கும் யாவரும்,அறிக:
எழுத்து என்பதைப் புனிதத்தோடு
எழுதும் எண்ணம் கொண்டவ ரிடையே
அழுத்தம் கொண்டு நிற்பவன் நான்;என்
அகத்தில், எழுத்தில் பொய் இல்லாதவன்!
எதை ’நான்’ ’எனது’ இலட்சியம் என்று
எடுத்துச் சபையில் ஓதுகின்றேனோ;
அதையென் வாழ்வில் நடைமுறையாக்கி
அகச்சான் றோடு வாழு கின்றவன்!.
’நான்’ ‘நான்’ என்று எழுதி வருவதை
’நன்றாய் இல்லை’ என்று, சிலபேர்
தான்சொல்கின்றார்; அவருக்குச் சொல்வேன்::
‘தமிழின் எழுத்துக் கர்வம் அது’தான்!
சின்னஞ் சிறிய வயது முதலே
செழுந் தமிழென்றன் சிந்தை புகுந்தது;
தன்னந் தனியே வளர்ந்தேன்;எனக்குத்
தமிழைத் தந்தனள்;அன்னை வாணி!
அவளே எனக்குக் குருவாய்,அறிவாய்
அனைத்தும் ஆனவள்;என் குருநாதன்
தவப்பொருள் யாதென உணர்த்தினன்;ஆங்கு
‘தரமாய் எழுதும் தனித் திறன்’ வாய்த்தது!
பழம்புத் தகங்கள்; ‘பார்பர்’ கடைகளில்
படித்திடும் இதழ்கள்; பள்ளிக்குநிகராய்த்
தொழும்நூ லகங்கள் துணையாய் இருக்கத்
தொடர்ந்து பயின்றேன்;உலகியல் வாழ்வை!
இளமைக் காலம் வறுமையில் இருந்தது:
இனிவரும் காலம் அறிவினில் இருப்பது:
வளமை என்பது பணத்தினில் இல்லை;
வளையா நெறிமுறை தான்உயர் வாழ்வு!
கற்றதன் வழியில் நிற்கும் முயற்சி;
கசடற வாழ எடுக்கும் பயிற்சி:
அற்றது நீக்கி உற்றது நோக்கி
அடிவைப் பவன்நான்; அவையோர் அறிக!
என்எழுத் தைத்தான் எழுதி வைக்கிறேன்;
எடுப்போர்;புரிவோர் படித்து மகிழ்க!:
பொன்னெழுத் திதுவெனச் சொன்னா லதனைப்
புழுங்கிக் கொள்வோர்;விலகிக் கொள்க!
எவர்பொருட் டும்என் எழுத்துக்க ளில்லை;
எதிரிகள் எனக்கு எவரும் இல்லை;
தவறுகள் களைந்திடத் தானென்எழுத்து; ;
தமிழறிந் தோர்க்கே இதுசொல் லாயுதம்!
இளம்சமு தாயம் எதிர் காலத்தில்
இருந்திடும் முறைமை யாதெனக் கருதி
உளம்உணர் வோடு எழுதும் என்னை
உற்றவர்,பெற்றவர் படித்துக் கொள்வர்!
கற்றவர் யாரும் கருத்துரைத் திடவும்
கல்லா மாந்தர் கற்றுக் கொள்ளவும்;
மற்றவர் எல்லாம் விலகி இருக்கவும்
மனம்திறந் துரைத்தேன்;அறிக யாவரும்!
நட்புடன் –
கிருஷ்ணன்பாலா
நட்புடன் –
கிருஷ்ணன்பாலா
30.9.2011
3 comments:
வளமை என்பது பணத்தில் இல்லை;
வளையா நெறிமுறைதான் நல்வாழ்க்கை!
நல்ல கவிதை.
நன்றி ஐயா.
thangal valaipoo karuthukkal azhamanavai tamil thennil thoithu eduthavai manithani pakkuva paduthubavai -- valarga um paani
gnana. kuppuswamy
//அற்றது நீக்கி உற்றது நோக்கி
அடிவைப்பவன் நான்,அவையோர் அறிக//
அனைவரும் அறியும் காலம் வரும்.அன்று உன் எழுத்தின் கருத்து எளிதில் விளங்கும் பாலா!!!
Post a Comment