Monday, September 26, 2011

நமது விருந்தோம்பல் பண்பு! (எழுதுகிறேன்-தொடர்:14)


கார்த்தி-ரத்தினப் பிரியா-நகுலவர்ஷன்
“ மாமா,நலமா? உங்கள் முகநூல் கருத்துக்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றேன்; எக்கச் சக்கமான நண்பர்களும் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்..மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது? நீங்கள் சென்னையில் இருந்தால் கட்டாயம் என் வீட்டுக்கு வரவேண்டும்”


என்று முகநூல் ‘சாட்டில்’ அழைத்தார் கார்த்தி தங்கராஜ்.


திரு கார்த்தி என்னுடைய உறவினர்; நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லாதிருந்து இப்போது முகநூல் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நேற்று (23.09.2011) தொடர்புக்கு வந்தார்.


கணினிப் பொறியியல் படித்து விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த திரு.கார்த்தி தங்கராஜ்.தனது வேலைபற்றிய எதிர் கால ஆலோசனைக்கும் தனது திருமண வாய்ப்புக் குறித்தும் கேட்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு -அப்போது மயிலாப்பூரில் இருந்த - எனது இருப்பிடத்துக்கு வந்திருந்தார்.


ஜோதிட அறிவியல் மூலம் அவரது வேலை மற்றும் திருமண நிகழ்வு குறித்து சில விஷயங்களைக் கணித்துச் சொன்னபோது, ‘ஆம்,மாமா நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன்;என் தூரத்து உறவுதான்.ஆனால் அது நிறைவேறுவதில் எங்கள் இருவரின் வீட்டிலும் சில தயக்கங்கள் இருக்கின்றன’ என்றார்.


“திருமணம் நிகழும்; உனக்கு விருப்பமான அந்தப் பெண் நல்ல குணமும் பண்பும் நிறைந்தவள்;அவளுடைய ஜாதகம் சொல்கிறது. எந்த வகையிலும் நீ அவளை ‘டார்ச்சர்’ செய்யாமல் இருந்தால் நல்லது” என்றேன் உரிமையுடன்.


“ நிச்சயமாக மாமா;அவளை என் உயிரினும் மேலாக நினைக்கிறேன். திருமணம் நிகழ்வதில் உள்ள சங்கடங்களை நீக்க வழி சொல்லுங்கள்’ என்றார் கார்த்தி அப்போது..


சொன்னேன். அதன்படி திரு கார்த்தியும் அவர் குடும்பத்தாரும் நடந்து கொள்ள, திருமணம் இனிதே நடந்து,இப்போது அழகான ஆண் குழந்தையுடன் அந்தத் தம்பதி ’வாழ்வதை நேற்று முன்தினம்தான் தெரிந்து கொண்டேன்.


தவிர்க்க முடியாத காரணத்தால் கார்த்தியின் திருமணத்துக்கு செல்ல முடியவில்லை.எனவே இப்போது அவர் கூப்பிட்டதும்.’சரி,கார்த்தி நாளை அல்லது நாளை மறுநாள் உனது வீட்டுக்கு வருகிறேன்’ என்று சொன்னேன்.


கார்த்திக்கு மகிழ்ச்சி.


நேற்று (ஞாயிறு 25.09.2011) காலை 9:00 மணிக்கு திரு கார்த்தி மொபைலில் கூப்பிட்டார்:


“மாமா இன்று நீங்கள் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்;காத்திருக்கிறோம்”


நான் சொன்னபடி செல்வது என்று முடிவெடுத்து விட்டாலும் எனது நண்பர் திரு.தங்கச்சாமியை விட்டுச் செல்வதில் விருப்பம் இல்லை.நான் அவருடன் கடந்த இரண்டு மாதங்களாகத் தங்கி இருக்கின்றேன். அவரும் நானும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரும் பந்தம்-நட்பு இறுகி விட்டது. தவிர பெரும்பாலும் ஓட்டல்களில் சாப்பிடுவதே நிர்பந்தமாகிப் போனது எங்கள் நிலைமை. வீட்டுச் சாப்பாட்டுக்கு நான் மட்டும் செல்வது என்பது………


விருந்து புறத்ததால் தாணுண்டல்; சாகா
மருந்தெனினும் வேண்டற் பாலன்று”


என்பதை வள்ளுவனார் நெஞ்சில் ’உறைக்’கச் செய்து விட்டாரே!


‘கார்த்தி என்னோடு என் நண்பரையும் கூட்டி வருவேன்’ என்று சொல்லி முடிக்கும் முன் “,மாமா,கூட்டிக் கொண்டு வாருங்கள்;என்ன மாதிரி உணவு முறை அவருக்குப் பிடிக்கும் சொல்லுங்கள்” என்று கொங்கு மண்ணுக்கே உரிய பண்போடு அவரையும் அழைத்தார்.


நானும் நண்பரும் பகல் 2 மணிக்கு திரு கார்த்தியின் வீட்டுக்குச் சென்றோம்.


‘கார்த்தி சரி;நம்மை நன்கு அறிந்த உறவினர்; அவர் மனைவி என்ன நினைப்பாரோ;ஞாயிற்றுக் கிழமையில் விருந்தாளிகளாக வந்து ‘தனது மகிழ்வைக் கெடுத்தவர் போல்’ நம்மை நினைத்துவிட்டால்…’


இப்படி ஒரு சிறு எண்ணமும் சேர அவர்கள் வீட்டைச் சேர்ந்தோம். கார்த்தி வெளியில் வாசல் வரை வந்து என்னையும் நண்பரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.


போனதும் அவர் மனைவி உடனே வந்து எங்களைக் கூப்பிடவில்லை. 9 மாதம் நிறைந்த அழகான குழந்தை நகுல்வர்ஷன் எங்களைப் பார்த்து மிரண்ட பார்வையில் பார்த்தான்; நான் அவனுக்கு வாங்கிச் சென்ற சாக்கலேட்டைப் பிரித்துக் கொடுத்து ’காக்கா’ பிடித்தேன். வந்து ஒட்டிக் கொண்டான்.


ஊகும்… அப்போதும் கார்த்தியின் மனைவி வெளியில் வரக் காணோம்.


பொதுவாக ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றால் கணவன் மனைவி இருவருமே விருந்தினரை முக மலர்ந்து அழைப்பதுதான் நமது பண்பாடு.


சரி இந்தப் பெண் என்ன நினைக்கிறாளோ?


‘கைக் குழந்தையோடும் கணவனோடும் சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நாம் உண்மையிலேயே கெடுத்துத்தான் விட்டோம்’ என்று மனதுள் ஒரு வகை இறுக்கதோடு அங்கே அமர்ந்து கொண்டேன்.


சிறிது நேரம் கழித்து அருந்துவதற்கு குடிநீர் கொண்டு வந்தார். திருமதி ரத்தினப் பிரியா கார்த்தி. முகத்தில் மலர்ச்சியும் மரியாதையும் மிளிர.


’வாங்க மாமா...வாங்க சார்’ எனக்கும் எனது நண்பருக்கும் முகமன் கூறினார் பிரியா.


பிறகு அவசரம் அவசரமாக சமையல் அறைக்குள் சென்றவர் மறுபடியும் அடுப்பில் சில வேலைகளைச் செய்துவிட்டு இரண்டாவது முறையாக ‘ஜூஸ்’ கொண்டு வந்து கொடுத்தார்.


அடுத்து வாழை இலை போட்டு அயிட்டங்களைக் கொண்டு வந்து குவித்தார்.


புரிந்து விட்டது…


‘நாம் ஒன்றும் அவர் மனதை வருந்தச் செய்யவில்லை. இந்தக் கார்த்திதான் தன் மனைவிக்கு ஏகப் பட்ட ’டார்ச்சர்’ கொடுத்து இருக்கிறார்’ என்பது.


வகை வகையாக அயிட்டங்கள். செய்வதற்கே 4 மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்க வேண்டுமே. அதற்கான வேலைகளில் முழு ஈடுபாட்டோடு இருக்க வேண்டிய சூழ் நிலையில் எங்களை ‘வாங்க’ என்றுகூட அழைக்கும் சிந்தனை இல்லாமல் உணவுஅயிட்டங்களை மிகுந்த கவனத்துடன் தயாரிப்பதில் அவர் மனைவி திருமதி ரத்தினப் பிரியா
இருந்தார் என்பதை அறிந்து கொண்டேன்.


உணவு பரிமாறும் போது.அருகிருந்து இலையில் உணவையும் அயிட்டங்களையும் குவிப்பதிலே குறியாக இருந்தனர் கணவனும் மனைவியும்.


அவர்கள் தந்த அன்பு ’டார்ச்சரை’ நண்பரின் பக்கம் நைஸாகத் தள்ளி விட்டு, நான் எனது தேவைக்குரியவற்றை மட்டும் உண்டேன்.


எப்பொழுதும் நான் ஒரு POOR EATER தான்! எனினும் சுவை மிகுந்த கொங்கு நாட்டுப் பாணி சமையல்; அருமையான சுவை; பக்குவமான தயாரிப்பு.


சாப்பிட்டு முடிந்ததும் வாழ்க்கையின் ஓட்டங்களில் எங்கள் உரையாடல் நீண்டு முடிந்தது.


புறப்படத் தயாரனோம்.


நாங்கள் இருவரும் பெரிதும் ஓட்டல் உணவுகளையே ஏற்றுக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்ட கார்த்தியும் அவருடைய மனைவியும் “ நீங்கள் சனி.ஞாயிற்றுக் கிழமைகளில் நம் வீட்டுக்கு வந்தால் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.கட்டாயம் வாங்க மாமா;நீங்களும் தான் ஸார்” என்று எனக்கும் எனது நண்பருக்கும் அவர்கள் உதட்டிலிருந்து அல்லாமல் உள்ளத்திலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.


‘அட..அவர்களுடைய இந்த ஞாயிற்றுக் கிழமையை வீணாக்கி விட்டதாக நான் நினைத்தேன்; இவர்களோ எல்லா ஞாயிற்றுக் கிழமைகளையும் எங்களுக்காக என்றல்லவா அழைக்கிறார்கள்?’


அடடா…இது நம்ம கொங்கு நாட்டுப் பண்பல்லவா?


சென்னையில் அந்தக் கொங்கு நாட்டை என் நண்பர் தங்கச்சாமி கண்டு நெகிழ்ந்து விட்டார்.


“கார்த்தி! நான்கு வருடங்களுக்கு முன்உனது மனைவியைப் பார்க்காமலேயே அவரது பண்புகளை விவரித்தேன் அல்லவா? இப்போது நேரில் கண்டு கொண்டேன்;நீ கொடுத்து வைத்தவன்; அன்பும் அறனோடும் இந்த இல்வாழ்வைக் கண்டு பண்பும் பயனோடும் வாழ்க’ என்று கார்த்தியைத் தனியே அழைத்து வாழ்த்தி விட்டுத் திரும்பினேன்,நண்பருடன்.


’செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருப்பான்;
நல்விருந்து வானத் தவர்க்கு’


என்று வள்ளுவப் பெருமான் கண் சிமிட்டினார் என்னுள்ளே.


இவண்-
கிருஷ்ணன்பாலா
26.09.2001.

No comments: