Saturday, May 19, 2012

மதுரை ஆதீனம்:முதல்வருக்குச் சில கேள்விகள்

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
இன்று (19.5.2012) திருச்சிக்குச் சென்றிருந்தேன். மௌன சுவாமிகள் மடத்தின் அருகே உள்ள மாணிக்க விநாயகர் சந்நிதியில் மதுரை ஆதீன மீட்புக் குழுவின் உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்தேன். எனது கட்டுரைகளைப் படித்து வரும் அவர்கள் கொதிப்படைந்த நிலையில் என்னுடன் உரையாடினர்: அவர்களின் எண்ண ஓட்டத்தை எதிரொலிக்கும் கட்டுரை இது:


தமிழக முதல்வரும் மதுரை ஆதீனமும்
----------------------------------------------------------------------------
மிழ் நாட்டின் மிகப் பெரும் பண்பாட்டுச் சொத்தும் தமிழர்களின் சமய நெறிப் பீடமுமான ‘மதுரை ஆதீனத்தை, ஆன்றோரும் சான்றோரும் மனம் பதற இப்’போதை’ய 292 ஆவது ஆதீனமான அருணகிரி சாமிகள், பிடதியில் இருந்து ‘போக வியாபாரத்தை, ’யோக வியாபாரம்’ என்ற பெயரில் செய்து வரும் நித்திக்குக் கை மாற்றி விட்டதைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.

மதுரை ஆதீனம் என்பது என்ன? அதன் பூர்வீகம் என்ன? ஆதீனகர்த்தர் என்பவர் யார்? அவருடைய செயல்பாடுகளும் நெறிமுறைகளும் எவ்வாறு இருக்கும்? அதற்கும் தமிழர்களுக்கும் உள்ள மரபுவழி உரிமை என்ன? இதன் நெறிமுறைகளுக்கும் நித்திக்கும் என்ன சம்பந்தம்? என்பது இங்குள்ள மக்களில் முக்கால்வாசிப் பேர்களுக்குத் தெரியாது.

நம் பாட்டன் பாட்டிகளுக்கு முன் வாழ்ந்த முப்பாட்டன் முப்பாட்டிகளின் பெயர்களையே தெரிய முடியாத நாம், 1500 வருடங்களாகத் தொடரும் மதுரை ஆதீனத்தின் நெறி முறைகள்,
அதன் சிறப்புக்கள், அதன்பால் நமக்குள்ள பாரம்பரிய உரிமைகள் 
பற்றி எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?


அதனால்தான் மதுரை ஆதீனம் நித்தியின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னும் நாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற விபரீத நிலை தொடர்கிறது.


‘மதுரை ஆதீனம் மீட்புக் குழு’ என்று ஆன்றோரும் சான்றோரும் சமய நெறி நின்றோரும் ஒன்று கூடி 293 என்ற பட்டத்தைப் பிடுங்கி, நித்தியை அகற்றி, மதுரை ஆதீனமாகத் தன் சுவாதீனத்தில் இல்லாத அருணகிரியைத் தெளிய வைக்கும் முயற்சிகளை எடுத்துள்ள நிலையில் வெளியாகும் நித்தியின் கோமாளித் தனமான பேட்டிகளையும் குத்தாட்டங்களையும் மக்களாகிய நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதில் நாம் அடைந்துள்ள மிகப் பெரும் வருத்தமும் வேதனையும் என்னவென்றால், தமிழகத்தின் சமயப் பண்பாட்டின் சின்னமும் மரபுவழிச் சொத்துமான மதுரை ஆதீனத்தை நித்திக்கு ஒப்படைத்துள்ளதை, தமிழக முதல்வர் மேடம் ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே’ என்பதுதான்.

தமிழ்நாட்டின் மதிப்புக்கும் சிறப்புக்கும் உரிய பிற ஆதீனங்களும் சமய நெறியாளர்களும் ஒன்று சேர்ந்து நித்தியின் நியமனத்தை வெளிப்படையாக எதிர்த்த பின்னும். மதுரை ஆதீன மீட்புப் போராட்டக் குழுவை அமைத்த பின்பும் தமிழக முதல்வர் அமைதி காப்பது ஒட்டு மொத்த தமிழர்களிடையே வருத்ததையும் பல்வேறு சந்தேகங்களையும் விதைத்துள்ளது.

இந்த நிலையில் கிரிமினல் நித்தி தமிழக முதல்வரைப் ‘போற்றியோ போற்றி’ என்று புகழ்பாடிக் கொண்டு அறிக்கைகள் விட்டு வருவதை முதல்வர் மேடம் ஜெயலலிதா அவர்கள் ரசிக்கின்றாரா? என்று அறிவார்ந்த உணர்வுடையோர் வினவுகிறார்கள்.

இன்னும் ஒருபடிமேலேபோய் நித்தி விட்ட அறிக்கை சான்றோர்களின் நெஞ்சத்தில் நெருப்பைக் கொட்டியுள்ளது.

நித்தி சொல்கிறான்,“முதல்வர் ஜெயலலிதா ஆதரவுடன்தான் மதுரை ஆதீனத்தின் பொறுப்பை ஏற்றேன்” என்று.(இது18.5.2012 அன்று வெளியான செய்தி)

தமிழர்களின் உணர்வுகளில் உஷ்ணப் பெருங்காற்று வீசிக் கொண்டிருக்கும் நேரம் இது; அதை அனலாக்கி ஊதுகிறான் இந்தக் கிரிமினல்.

அதை மவுனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர்?
என்ன இது?

உண்மையிலேயே நித்திக்கும் முதல்வர் மேடம் ஜெயலலிதா அவர்களுக்கும் மதுரை ஆதீனத்தைக் கூறு போட்டுக் கொள்ளும்
ரகசியத் திட்டம் உள்ளதா? என்ற சந்தேகத்தை சைவப் பெருமக்களுக்குக்கிடையே எழுப்பி விட்டதே.

ஒரு கிரிமினல் -ஜாமீனில் வெளியில் இருக்கும் சமயநெறிக் குற்றவாளியான ஒருவன்,தமிழக முதல்வரின் பெயரைப் பகிரங்கமாகச் சொல்லி, ’293 ஆவது ஆதீனமாக ஆகிவிட்ட தன்னை எதிர்ப்போரின் பலத்தையும் போராட்டத்தையும் தன்னால் அரசின் ஆதரவோடு ஒடுக்க முடியும்’ என்று சொல்லாமல் சொல்கின்றான்.


இதில்.முதல்வர் அலுவலகம் மவுனம் சாதிக்கின்றது மறுக்கவுமில்லை;நடவடிக்கை எடுக்கவுமில்லை..


இந்தப் பதற வைக்கும் பேட்டி குறித்து முதல்வர் எப்படி அமைதி காக்கின்றார்?அனுமதிக்கிறார்?

நித்தியின் கருத்து உண்மையா?


அது பொய் என்றால் முதல்வரின் பெயரைச் சொல்லி மிரட்டும் நித்தியை ஏன் காவல்துறை கைது செய்ய வில்லை?

13.5.2012 அன்று நித்தியின் ஆட்கள் போலீசார்மீது செருப்புக்களை வீசி எறிந்த போது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

செருப்பு வீசிய சிலரை காவல்துறை பிடித்து வேனில் ஏற்றிய பின்பு நித்தியின் அடியாட்கள் போலீசாரைத் தள்ளி விட்டு வேனுக்குள் இருந்த குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் மீட்டுக் கொண்டு சென்றதைத் தடுத்து அவர்களை மீண்டும் கைது செய்யாதது ஏன்?


போலீசார் கைது செய்து வேனுக்குள் ஏற்றிய குற்றவாளிகளை அடாவடித் திமிரோடு போலீசாரைத் தள்ளி விட்டு,மீட்டுச் சென்ற ரவுடிகளையும் கைது செய்யாதது ஏன்?

நித்தி சொன்னதுபோல் இதன் பின்புலத்தில் முதல்வரே இருப்பது உண்மை என்ற காரணத்தாலா?

”காவல்துறைக்கு சுயஅதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைச் சரியாக நிலை நாட்டுவோம்” என்று சட்டமன்றத்தில் முழக்கமிட்ட தமிழக முதல்வர் இது குறித்து என்ன சொல்கிறார்?


உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கேட்கிறார்கள்.

இவண்,
கிருஷ்ணன்பாலா
19.5.2012

1 comment:

Sathyaraj Aruchamy said...

அய்யாவின் குரலுக்கு பின்னால் அனைத்து தமிழர்களின் குரலும் ஒலிக்கும் என்பது உறுதி....