அன்புக்குரிய நண்பர்களே,
கோவணத்தை இறுகக் கட்டிக் கொண்டு காவியுடையுடன் காட்சிதரும் ஆசனத்தில் கோவணமே இல்லாத பாவி பல்லிளித்துக் கொண்டிருக்கின்றான்.
தமிழகத்தின்
மிகத்தொன்மையான சமயம்
போற்றும் திருமடங்களில்
ஒன்று: இன்று அருணகிரி ஞான தேசிகரால்
கேலிக்கும் கேவலத்துக்குமான
கருப்பொருள் ஆக்கப்பட்டிருக்கும்
மதுரை ஆதீன மடம்.
மூன்றாந்தர அரசியல் மேடைப் பேச்சுக்காரர்களை விடவும் கீழ்த்தரமான சவாலும் சண்டாளத்
தனமுமாக முண்டாத் தட்டிக் கொண்டு முழங்குகிறார் 293 ஆவது ஆதீனம் என அறிவிக்கப் பட்டுள்ள நித்தி.
அன்பும் அறநெறியும் அருளும்
பெருநெறியும் கொண்டு திகழ்ந்த ’மதுரை ஆதீனம்’ என்ற சைவத் திருமடம் நித்தியாலும் அவர்தம் ‘அடியாள்’ தெருக்கூட்டத்தாலும் அசைவக் கிடங்கு
போல் நாறிக் கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் ‘நமசிவாய’ எனும்
பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும்
அடியார் திருக்கூட்டம் எல்லாம் ‘.சிவ,சிவ’ என்று செவியைப்
பொத்திக் கொள்ளும்வகையில் அங்கு நித்தியானந்த
நீசசெபங்கள் நடக்க, இன்று ஆன்றோரும் சான்றோரும் அவமானப்பட்டுத் தலை
குனிந்துபோய் இருக்கிறார்கள்.
”மதுரை ஆதீனத்தை மீட்கும் போராட்டக் குழுவினர் கூடிய கூட்டம் தேவையான எழுச்சியை
மதுரைத் தமிழர்களுக்கு தரவில்லையோ?”
என்ற புழுக்கத்தை,மதுரை ஆதீன மீட்புக் கூட்டத்துக்குப் போக இயலாத மக்களின் நெஞ்சில், புகுத்திவிட்டிருக்கிறது,
நித்தி விட்ட புளுகு அறிக்கைகள்.
இந்த ஆதீனத்தின் இப்போதுள்ள குருமகா சந்நிதானம் எனப்படும்
292-ஆவது பட்டம் தான் அருணகிரி ஞான தேசிகர். இனி தனது அடுத்த வாரிசென 293-ஆவது
பட்டத்துக்குரிய குருமகா சந்நிதானமாக
– நிதானமின்றி இவரால் நியமிக்கப்பட்டிருப்பவர், சர்ச்சைக்குரிய ‘யோக
வியாபாரி’ நித்யானந்தா.
’யோக வியாபாரி’ என்று சொல்வதை விட ‘போக வியாபாரி’என்று சொல்வதே பொருந்தும்.
அருளாளரும் ஆன்மநேயப் பொருளாளரும்
‘நோக’ ஆன்மீக வியாபாரியாக நேர்மை,தூய்மை.வாய்மை,எளிமை,பொறுமை,
உண்மை அனைத்தையும் துறந்து விட்டு துராக்கிரமத்தின் துணை கொண்டு வாழும் துஷ்டனாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நித்தியை,தேடிச் சென்று,சரணாகதி அடைந்து சீடனாக ஏற்றுக் கொண்டு ‘’பட்டாபிஷேகம்’ செய்திருக்கும் இந்தக் ‘குருமுட்டை’
மகாசந்நிதானத்தை நாம் என்ன என்று சொல்ல?
உண்மை அனைத்தையும் துறந்து விட்டு துராக்கிரமத்தின் துணை கொண்டு வாழும் துஷ்டனாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நித்தியை,தேடிச் சென்று,சரணாகதி அடைந்து சீடனாக ஏற்றுக் கொண்டு ‘’பட்டாபிஷேகம்’ செய்திருக்கும் இந்தக் ‘குருமுட்டை’
மகாசந்நிதானத்தை நாம் என்ன என்று சொல்ல?
இந்த முறைகெட்ட,தகுதி கெட்ட
பட்டாபிஷேகமானது நமது சமயப் பற்றாளர்களர்களை மட்டும் அல்ல; சமயம் சாராத சான்றோர்களையும்
மனம் சரியச் செய்துவிட்டிருக்கின்றது.
மரபுகளும் மாண்புமிக்க நெறிமுறைகளும்
மதுரை ஆதீனத்தில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, கும்பிடத்தக்க கோவிலெனத் திகழ்ந்த
இடம் கோட்டானைக் குடிவைத்த மடம் என மாற்றப்பட்டுள்ளது.
இதை மாற்றி, மறுபடியும் மதுரை
ஆதீனத்தின் பழம் பெருமையை மீட்க வேண்டியதும் அதை இனி வரும் காலம்தோறும் காக்க வேண்டியதும்
நம் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனின் கடமை.
இந்த உணர்வோடு,நமது சமய நெறிகள் சரிந்து போகாதிருக்கவும்; சான்றோர்களின் மனம் துன்பத்தில் விரிந்து நோகாதிருக்கவும் தமிழ்க்கடலும் சைவக் கடலுமாகிய அய்யா நெல்லைக் கண்ணன் அவர்களை முன்னிலை வகிக்கச் செய்து ‘மதுரை ஆதீன மீட்பு
மாநாடு’ ஒன்றை திருவாவடுதுறை,தருமை மற்றும் திருப்பனந்தாள் ஆதீனங்களின் நெறிகாட்டுதலின்
கீழ், மதுரை ஆதீன மீட்புக் குழுவினர் ’சமயநெறிக் காவலர்’ திரு. அர்ஜுன் சம்பத். சண்டிகேஸ்வரர்
நற்பணி மன்றச் செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர்
13.5.2012 அன்று மதுரையில் நடத்தினர்.
சைவ நெறிச் சட்டங்களையும் அதன் நீதிநெறிமுறைகளையும் பழந்தமிழ்ப் பண்பாட்டு முறையோடு
எடுத்துச் சொல்லும் முழுத்தகுதி படைத்தவர் அய்யா நெல்லைக் கண்ணன் அவர்கள்.
அவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் ஆடும் அருகதை அற்றவன் நித்தி.
ஆனால்,அனல் வாதமும் புனல் வாதமும் செய்யத் தயார் என்கிறான்.
இந்த மந்திரப் புரட்டு வித்தையை எல்லாம் அவன் பிடதியோடு வைத்திருக்க வேண்டும்
அங்குதான் ஆடுகளும் மாடுகளும்
மந்தை மந்தையாய் வளர்க்கப் படுகின்றன;மேற்கத்திய கசாப்புக் கடைகளுக்கு வேண்டுமானால்
அவை பயன்படலாமே தவிர, இங்கல்ல.
அனல் வாதமும் புனல் வாதமும் திருஞானசம்பந்தப் பெருமானால் எப்படி நடத்தப் பட்டன
என்கிற வரலாறு 293 என்று அறிவிக்கப் பட்டுள்ள இந்தப் பிடதிக்
கோட்டானுக்கும் இவனைத் தன் வாரிசென வகைப்படுத்திக் கொண்ட 292
ஆவது மதுரை ஆதீனத்துக்கும் வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்;
ஆனால் நாம் தெரிந்து கொண்டு
சிந்திக்காமல் இருக்க முடியாது.
ஏறத்தாழ 1500
ஆண்டுகளுக்கு முன்......
திருஞான சம்பந்தர் காலம் உண்மையிலேயே
வரையறுக்கப் பட்டதல்ல; ஆயினும் வற்றாத ஜீவ நதியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மை.
சொல்லப் போனால் காலத்தைக்
கடந்து,
காலத்தை வென்று நிற்பது திருஞான
சம்பந்தர்தம் தெய்வீக வாழ்வு.
சோழ நாட்டில் ,சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகவாய் வாய்த்த இக்குழந்தை,திருத்தோணியப்பர் திருக்கோவில் அருகே,பேசத்தெரியா நிலையில்,தன் மூன்றாவது அகவையில் தந்தை சிவபாத இருதயரால் தனித்து
விடப் பட்டுத் தேம்பி அழுது நிற்கிறது.
இக்குழந்தை தமிழ்க் கடவுளாகிய, முருகப்
பெருமானே ஞான சம்பந்தராய் இங்கு சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்ய, திருஅவதாரம் எடுத்து
வந்தது என்று சமய நெறி நின்றோர் சால உரைப்பார்கள்.
குழந்தையின் அழுகுரல் கேட்ட அம்மையும் அப்பனுமான பகவதியும் (பார்வதி தேவியும்)
பகவனும் (சிவபாதர் ஆகிய பரமேஸ்வரனும்) இடப
வாகனத்தில் தோன்றி, உமையாளாகிய தேவி தன் திருமுலைப்பால் தந்து தேற்ற, அவளுடைய அமுதம்
எனும் பால் அருந் அது வாயிலிருந்து ஒழுகியிருக்கும் நிலையில்,தந்தை வந்து ’யாருடைய எச்சில் பாலை அருந்தினாய்?’ என்று ஒரு குச்சியை எடுத்டு மிரட்ட‘அக்கணமே,திருஞான சம்பந்தராகி,வாய் திறந்தது, அதுவும் தேவாரத்திருப்பதிக முதல் மொழியாய்:
//தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே//
என்று,தான் கண்ட தெய்வீகக் காட்சியை, பிரபஞ்சத்தைப் படைத்து அனைத்துக்கும் முதல்
பொருள் எனத் துலங்கும் ஈசனை, அவனது இடப் பாகத்தமர்ந்துள்ள உமாதேவியுடன்,அந்த இடப வாகனத்தையும்
அப்படியே படம் பதித்து ஈசனைப்
பாடி நெகிழ்ந்தது, அந்த ஞானக்குழந்தையாகிய ஞானசம்பந்தப் பெருமான்.
அன்று முதல் அவர் ஒரு தெய்வீகத்
திரு அவதாரம் என்பதை அகிலம் உணர்ந்தது. சென்றவிடமெல்லாம் சிவன் அடியார் திருக்கூட்டம்
வண்டென மொய்த்து வணங்கிப் பணிந்தது
தமிழுக்கும் சைவத்தின் உயர்
நெறிகளுக்கும் ஊற்றுக் கண்ணாய் இருப்பது சமய குரவர்களான அப்பர்,சுந்தரர்,ஞான சம்பந்தர் ஆகியோர் படைத்த தேவாரமும் மாணிக்கவாகசப் பெருமான் அருளிய திருவாசகமும் பன்னிரு ஆழ்வார்கள் படைத்தருளிய நாலாயிரம் திவ்யப் பிரபந்தமும்தான்.
திருஞானசம்பந்தரின் அருளாற்றல்
மிக்க ’தேவாரப்
பதிகங்கள்’, மற்றும் ’திருநீற்றுப் பத்து’, சேக்கிழார் பெருமான் அருளிய ’பெரிய
புராணம்’ சுந்தரர் அருளிய திருத்தொண்டர் தொகை,
நம்பியாண்டார்
நம்பிகள் அருளிய திருத்தொண்டர் அந்தாதி, தமிழகத் திருக்கோயில் கல்வெட்டுகள் ; சிவ புராணச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து
திருஞானசம்பந்தப் பெருமானின் திருஅவதாரப் பெருமையை நாம் உணரலாம்.
தமது 16 ஆண்டுக்கால
அகவைக்குள் தம் அருள் நெறிச் சிந்தனையாலும் அகம் நெகிழ வைக்கும் தேவாரப் பதிகங்களாலும்
இந்த அகிலத்தையே கட்டிப் போட்டவர் ஞானசம்பந்தப் பெருமான்.
மாமன்னர்கள் எல்லோரும் அவர்முன் மண்டியிட்டனர்.
மக்கள் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும்
அவரைப் போற்றித் துதித்தனர்.
அவர் சென்ற திசை எல்லாம் தெய்வீகப்
பண்பாடும் தெளிந்த வாழ்வியலும் வளர்க்கப் பட்டன.
தென்னாடுடைய சிவனையும் சிவ
நெறியையும் எந் நாடும் ஏத்திப் போற்றவும் எட்டுத்திசைகளிலும் அவன் திருநாமமே ஒலிக்க
எங்கும்
சிவமயமே ஆளவும் திருவுளம்
கொண்டது இந்தத் திருஞான சம்பந்தம்.
அப்போது பாண்டிய நாட்டைக்
கோலோச்சிக் கொண்டிருந்தவன்
கூன் பாண்டியன் என்னும் பராக்கிரமப்
பாண்டிய மன்னன்.
கூன்முதுகு மட்டுமல்ல; கோணல்
மதியும் கொண்ட அவன், அப்போதைய சமணர்களின் மந்திரச் சூழ்ச்சியில் மதி மயங்கிப்போய்
சைவத்தை விட்டு சமணத்தைத் தழுவினான்.
சமணத்தைத் தழுவிய கூன் பாண்டியன்,சைவத்துக்கு
எதிரான
சமணர்களின் துர்ப்போதனைகளை
ஏற்று, தனது ராஜ்யத்தில் உள்ள
சிவாலயங்களை எல்லாம் மூடச்செய்து, நிர்ச்சமயக் கொள்கைகளையே மக்கள் கடைப் பிடித்து வர வேண்டும்’ என ஆணையிட்டிருந்தான்.
மன்னன் கூன்பாண்டியன்
சமண மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த
காரணத்தால் பாண்டிய நாடு முழுவதும்
சமண மதக் கோட்பாடுகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்தது.
சிவாலயங்களில் பூஜைகள் நடைபெறவில்லை, சிவநாமத்தைக்
கேட்டால் ‘கேட்டுமுட்டு’ என்கிற தீட்டு, சிவச்சின்னங்களைப் பார்த்தால் ‘கண்டுமுட்டு ’என்கிற தீட்டு என அறிவிக்கப்பட்டு மக்கள் திருநீறு பூசக் கூட அஞ்சி வாழ்ந்த காலம் அது.
கேட்டால் ‘கேட்டுமுட்டு’ என்கிற தீட்டு, சிவச்சின்னங்களைப் பார்த்தால் ‘கண்டுமுட்டு ’என்கிற தீட்டு என அறிவிக்கப்பட்டு மக்கள் திருநீறு பூசக் கூட அஞ்சி வாழ்ந்த காலம் அது.
'மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’
என்பது அன்றைய நிலை. மன்னனின் ஆணையை மீறி எவரும் கோவில்களுக்குச் செல்ல முடியாத நிலை.
”சிவாலயங்களில் வழிபாடு நிறுத்தப்பட்டால்,பூதங்கள்
தேசத்தில் புகுந்து மக்களையும் வாழ்வையும் நாசம்
செய்யும்;நாடு நலிவுறும்;பஞ்சமும் வறுமையும் நோயும் தாண்டவமாடும்” என சாத்திரம் எச்சரிக்கிறது.
கூன் பாண்டியனின் கொடிய ஆணைக்கு
அஞ்சி, சிவ- வைணவ ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டதால், பாண்டிய நாட்டில் இருள்
சூழத் தொடங்கி, மழை வளம் குன்றி எங்கும் பஞ்சம் தலையெடுக்கத் தொடங்கிற்று.
அந்தக் காலகட்டத்தில் தோன்றி
வாழ்ந்து, ஒப்பற்ற இளம் சமயக் குரவராகவும் எவருக்கும் முன்நின்று அருளி உய்விக்கும்
பெரியவராகவும் எல்லோராலும் ஏத்தி வணங்கப்பட்ட திருஞான சம்பந்தரின் இணையற்ற பேரருட்
பெருநெறியை உணர்ந்தனர். அன்றைய பாண்டிய நாட்டின் அரசி ’மானி’ என்ற மங்கையர்க்கரசியும்
அவளுடைய அமைச்சர் குலச் சிறையாரும்.
‘மதி கெட்டுப் போன தன் மணாளன்,மன்னன் கூன்பாண்டியனைத் திருத்தவும் அவனது அநீதியான ஆணைகளால் அடிமைப்பட்டு வருந்தும்
பாண்டிய நாட்டு மக்களைக் காக்கவும் மதுரையை நிர்ச்சமயத் துஷ்டர்களிடமிருந்து மீட்கவும்
திருஞான சம்பந்தப் பெருமான் ஒருவருக்கே சக்தி உண்டு’ என்பதைத் தெள்ளத் தெளிவறத் தீர்மானித்தாள்,பாண்டியன்
மாதேவி மங்கையர்க்கரசி.
சைவமும் தமிழும் இரண்டறக்
கலந்து காத்த சோழ மன்னர்
பரம்பரையில் விளைந்து,பாண்டியனுக்கு
வாழ்க்கைப்பட்டிருந்த
குலக்கொடி அவள்.
மன்னனுக்குத் தெரியாமலேயே
அமைச்சர் குலச்சிறையாரின் வழிகாட்டுதலோடு,அவள் திருஞான சம்பந்தரைச் சென்று சரண் அடைந்தாள்;
அவளது நோக்கம்:இருட்டிலும் குழியிலும் வீழ்ந்த
தன் மணாளனை மீட்பதும் பாண்டிய
நாட்டைக் காப்பதும்தான்.
சிவநெறி பிறழாமல் சிந்தித்துச்
செயல் பட்ட அமைச்சர்
குலச் சிறையாருக்கும் இதே மனோநிலைதான். அவர் அரசிக்கு உறுதுணையாய் நின்று செயல்பட்டார்.
குலச் சிறையாருக்கும் இதே மனோநிலைதான். அவர் அரசிக்கு உறுதுணையாய் நின்று செயல்பட்டார்.
அரசியும் அமைச்சரும்
நன்கு ஆலோசனை செய்து
, நிர்ச்சமய
நெறி நின்று, நீசனாகிக் கொண்டிருக்கும் மன்னனைத் திருத்தவும் மக்களைக் காக்கவும் மறுபடியும் சைவ நெறி தழைக்கவும் திருஞானசம்பந்தரிடம் சரணடைந்து, அவர்கள் மன்றாடினர்.
நெறி நின்று, நீசனாகிக் கொண்டிருக்கும் மன்னனைத் திருத்தவும் மக்களைக் காக்கவும் மறுபடியும் சைவ நெறி தழைக்கவும் திருஞானசம்பந்தரிடம் சரணடைந்து, அவர்கள் மன்றாடினர்.
பாண்டிய நாட்டில் மீண்டும் சமய நெறி ஓங்கி, சைவமும் தமிழும்
அதன் பாரம்பரியச் சிறப்பை
அடையவும் ஆலயங்கள் அனைத்தும்
திறக்கப் பட்டு, வைதீக வழிபாடுகள்
பரவவும் திருவுளம் கொண்ட
திருஞானசம்பந்தர், அரசி மங்கையர்கரசிக்கும்
அமைச்சர் குலச் சிறையாருக்கும் அருள்பாலித்து, அவர்களின் எண்ணத்தை ஏற்று மதுரைக்கு
வந்தார்.
மதுரைக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தப்
பெருமான் தங்கி இருக்க, அரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் ஏற்பாடு
செய்த இடம்தான் இன்றைய மதுரை ஆதீனம் உள்ள மடம்.
நிர்ச்சமய வெறி கொண்ட சமணர்கள்,திருஞான சம்பந்தரின் செல்வாக்கை மக்களிடம் இருந்தும்
அரசியிடமிருந்தும் அறவே ஒழிக்கப் பலவாறு முயன்றனர். .
அன்னை மீனாக்ஷியின் அருட்புதல்வரான
திருஞானசம்பந்தரைக் கொலை
செய்வதற்காக அவர், தங்கியிருந்த இம்மடத்திற்கு
தங்கள் மந்திர சக்தியால் தீயிட்டனர்.
ஞான சம்பந்தர் மடத்தை விட்டு வெளியில்
வந்து ஆலவாய் அண்ணலை நோக்கி
தேவாரப் பதிகப் பாடல்களால்
வேண்டினார்..
”மந்திர மாவது நீறு:வானவர் மேலது நீறு;
சுந்தர மாவது நீறு;துதிக்கப் படுவது நீறு;
தந்திர மாவது நீறு;சமயத்தி லுள்ளது நீறு;
செந்துவர் வாயுமை பங்கன், திருஆலவாயன் திருநீறே”
அவரது திருநீற்றுப் பதிகப் பாடலின்
தெய்வீக ஆற்றலால் ஞான சம்பந்தரைக் கொல்ல ஏவப்பட்ட தீயானது சமணர்களுக்குச் சரியாசனம்
அளித்துக் காத்து வந்த கூன் பாண்டியனை அடைந்து, வெப்பு நோயாக மாறி அவனை வாட்டத் தொடங்கிற்று.
மன்னன் அலறித் துடித்தான்.
‘அஞ்சாதே மன்னா’. எமது மந்திர
சக்தியால் எந்த நோயையும் குலைப்போம்; குணப் படுத்துவோம்’ என்று சவால் விட்டு,தங்களாலான அனைத்து முற்சிகளையும் செய்து பார்த்தனர் சமணர்கள்.
மன்னனுக்கு நோய் முற்றியதே
தவிர,குறையவில்லை.
அவன் சமணர்களின் வாய் ஜாலத்தைப்
புரிந்து கொண்டு கடும் எரிச்சலும் கோபமும் கொண்டான்.
அரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர்
குலச் சிறையாரும் மன்னனுக்கு எடுத்துச் சொல்லி, மன்னனைத் திருஞான சம்பந்தரைச் சரண்
அடையச் செய்தனர்.
அதன்பிறகே திருஞான சம்பந்தரும்
அவன் அரண்மனைக்கு எழுந்தருளி மன்னனின் வெப்பு நோயைத் திருநீற்றுப் பதிகம் பாடிக் குணப்படுத்தினார்.
இதன் பின்னரும் பொறாமை நீங்காத
சமணர்கள் மன்னனிடம்
வாதம் செய்து ஞானசம்பந்தப் பெருமானைத் தங்களோடு அனல் வாதம்,புனல் வாதம் என்று கடும் போட்டிகளுக்குச் சவால் விட்டனர்.
வாதம் செய்து ஞானசம்பந்தப் பெருமானைத் தங்களோடு அனல் வாதம்,புனல் வாதம் என்று கடும் போட்டிகளுக்குச் சவால் விட்டனர்.
நெருப்பிலும் நீரிலும் தாங்கள்
எழுதி இடும் கருத்துக்கள் அழியாது மீளுமாயின் அவைதாம் அனல் (நெருப்பு) புனல் (நீர்)
வாதங்கள்.
திருஞானசம்பந்தர் தாம் பாடிய
பதிகங்களை, ஓலைச் சுவடிகளாக நீரிலும் நெருப்பிலும் இட அவை நீரை எதிர்த்துக் கரை சேர்ந்தன.
நெருப்பில் எரியாது நின்றன.
சமணர்களின் கருத்துக்களோ அனலில்
எரிந்து போயின;நீரில் மூழ்கி தோல்வியைக் கண்டன.
பாண்டிய மன்னன் திருஞானசம்பந்தரின்
திருவடியில் வீழ்ந்தான்.
நம் பெருமான் கருணை மிகக்
கொண்டு அவனை ரட்சித்ததுடன், அந்தக் கூன்பாண்டியனின் கூன் முதுகுத் தன்மையையும் நீக்கினார். அதனால் கூன் பாண்டியன் என்ற பெயர் நீங்கி ”நின்றசீர் நெடுமாறன்” என்ற பெயர் தாங்கி மகிழ்ந்தான்,மன்னன்.
அந்த மகிழ்ச்சியில்
மதுரைக்கு வந்த பெரும்
இழிவுகள் யாவும் நீங்கி மதுரையும் நிமிர்ந்தது.
மன்னன் தன் சித்தாந்தக் குற்றத்தை
ஒப்புக் கொண்டு, ஞானசம்பந்தரின் அருளாணைப்படியே பாண்டிய நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களையும்
திறந்து ஆகம விதிப்படி வழிபாடுகள் செய்து வர ஆணைகள் பிறப்பித்தான்.
அன்றை நிகழ்வுகளுக்குப் பிறகே”இனி
எந்த ஆட்சியாளரும் சைவ-வைணவ ஆலயங்கள் எதிலும் அதன் முறையான வழிபாடுகளில் தலையிடக் கூடாது”
என்ற புதிய விதியை-மரபை ஏற்படுத்தி, ஆலயப் பாராமரிப்புக்கென்று தனிச் சொத்துக்களைத்
தானம் செய்து,அவற்றை இனி எதிர்வரும் காலம்தோறும்
சைவ நெறி பிறழாது பாதுகாத்து வரவும் வகை செய்தனர், ’நின்ற சீர் நெடுமாறன்’ ஆகிய கூன்
பாண்டியனும் அவனது மனைவி அரசி மங்கையர்க்கரசியும்.
அதன் எதிரொலிதான் ’மதுரை ஆதீனம்’
என்ற சுயேட்சை அதிகாரம் கொண்ட சமய பீடம் உருவாக்கப் பட்டது. ‘
மங்கையர்க்கரசியின் மன்றாடுதலாலும்
பாண்டிய மன்னனின் மனந்திருந்திய வேண்டுதலாலும் ’மதுரை ஆதீனம்’ அதன் முழுமுதல் தலைவராக
நம் திருஞான சம்பந்தப் பெருமானைப் பெற்ற பெருமையை அடைந்தது.
திருஞான சம்பந்தப் பெருமானை,
மதுரை ஆதீனத்தின் முதல் ஆதீனத் தலைவராக அமரச் செய்து, பட்டாபிஷேக விழாவை நடத்தினான் பாண்டிய மன்னன்.
இதற்காக நாடெங்கும் விழாக்
கோலம் பூணச் செய்து, பிற தேசத்து மன்னர்களையும் சமய நெறிச் சான்றோர்களையும் சாதுக்களையும்
சந்நியாசிகளையும் ஞானசம்பந்தப் பெருமானின் பட்டாபிஷேகப் பெருவிழாவுக்கு வரவழைத்து உலகோர்
முன்னிலையில் ‘சிவநாம வழிபாடு’ முழங்க,அவருக்கு அரச கிரீடத்துக்கும் மேலான தங்கமும்
வைரமும் மின்னிய விலை மதிப்பு மிக்க கிரீடத்தைச் சூட்டி ‘சாசனம்’ செய்து வைத்தான்,
பாண்டிய மன்னன்.
மதுரை ஆதீனத்தின் முதல் மடாதிபதியாய்ப்
பொறுப்பேற்று அதன் நெறிமுறைகள் யாதென வகுத்த ஞான சம்பந்தப் பெருமானின் மரபு வழி மதுரை
ஆதீனத்தின் மாண்பு இதுதான்.
ஒப்பற்ற சமய குரவராய் வாழ்ந்த
திருஞானசம்பந்தப் பெருமானுக்கு அவர்தம் 16 ஆவது வயதில் நல்லூர் (ஆச்சாள்புரம்) என்ற திருத்தலத்தில்
திருமணம் நிகழ்ந்ததென்றும் அவர் அதே திருமணநாளில் தம் மனைவி பூம்பாவை மற்றும் திருமணத்துக்கு
வந்திருந்த அடியார் திருக்கூட்டத்துடன் சிவ ஜோதியில் மறைந்தார் என்றும் படித்துள்ளோம்.
நண்பர்களே,
மூன்று வயது முதல் 16
வயதுக்குள் வாழ்ந்து, தமது
13ஆண்டுக்கால உலகியல் வாழ்வில் தேவாரப் பதிகங்களில்
அதிகத் தொகையுள்ள பாடல்களை நமக்குத் தந்து, சைவ நெறி தழைத்தோங்கும் தத்துவத்தைத் தமிழ்கூறும்
நல்லுலகிற்கு அருளிச் சென்ற தெய்வத் திருஅவதாரம் ஞான சம்பந்தப் பெருமான்.
திருஞான சம்பந்தரின் மறைவிற்குப்
பின்னர் அவர் அடிமலர் போற்றி வந்த அடியார் திருமரபில் வந்தவர்களே ஆதீனத்தின் அருள்
நெறி பிறழாது அறநெறியோடு சைவத் திரு நெறிகளைப் பின்பற்றி வந்தனர்.
ஆதீனத் தலைமைப்பொறுப்புக்கு வருபவர்கள் சமய தீட்சை, விசேஷ
தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றவர்களாகவும்
ஆன்மார்த்த சிவபூஜை செய்பவர்களாகவும், சரியை,
கிரியை, யோகம், ஞானம் என
முறையாக சைவ சித்தாந்த விஷயங்களை உணர்ந்தவர்களாகவும் அதில் பயிற்சி
பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
இளைய பட்டமாக அவர் பொறுப்புக்கு
வருவதற்கு முன் குருநாதரிடத்தில் அவரின்
வழிகாட்டுதலில் மடங்களில் தம்பிரானாக அதாவது கட்டளைத் தம்பிரான்,
பூசைத் தம்பிரான், ஒடுக்கத் தம்பிரான் எனப் பல்வேறு நிலைகளிலும் பயிற்சி பெற்றுத் தொண்டு செய்துள்ளவாராக இருக்க
வேண்டும்
இப்படிப்பட்டவர்களைத்தான்
இளைய
ஆதீனமாகத் தேர்ந்தெடுத்து அறிவித்து தற்போதுள்ள குரு
மகா சந்நிதானத்தின் சமாதி நிலை ஒடுக்கத்திற்குப்
பின் அடுத்த சந்நிதானமாக அபிஷேகம்
செய்து மரபுப்படி ஆதீனத்தை அறிவிப்பார்கள்.
ஆனால், தற்போது அவ்வாறு
மரபுகள் இங்கே எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.
இதைத் தட்டிக் கேட்க சமயநெறிச்
சான்றோருக்கு உரிமையுள்ளது. பிற ஆதீனத்தின் தலைவர்கள் சொல்லும் கருத்துக்கும் மரபு
வழி மதிப்பு உள்ளது.
இதைச் சுட்டிக் காட்டி எவராவது
பேசினால் அதற்கு எதிர்வாதம் பேசி ஏகத் திமிர் காட்டுகின்றார்கள் 292 ம் 293 ம்.
இந்த 293, ஒரு உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டும்:
ஏற்கெனவே மூன்றுபேரை வாரிசாக நியமித்துப் பின் வெளியேற்றியவர்தான். 292
இவருடைய உறுதியற்ற செயல்பாடுகளும்
அதன்உள் நோக்கமும் திட சித்தம் இன்மையும் தெளிவற்ற நிலையும் சான்றோர் சபையில் சரிந்து
போய் கோமாளிக் கூத்தாய்க் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறது.
இதுவே இன்னொரு மாற்றத்துக்கும்
வழி வகுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.
நண்பர்களே,
மதுரை ஆதீனத்தின் ஆட்சீயின்
கீழ் ஏராளமான சொத்துக்களை காலம் தோறும் சைவ நெறிகளைப் பின்பற்றும் செல்வந்தர்களும்
சிவ நேசத் தொண்டர்களும் வழங்கித் தானம் செய்தனர். அவர்களின் நோக்கம் சைவ நெறிகளின்படி
மதுரை ஆதீனத்துக்குட்பட்ட அனைத்து திருக் கோவில்களிலும்
முறைப்படி பூஜைகள் நடத்தவும் அற நெறி பிறழாது ஆலயங்கள் பராமரிக்கப்படவும் வேண்டும்
என்பதுதான்.
இதை இந்த மதுரை ஆதீனத்தின்
தலைவராய் வருபவர் சத்தியம் தவறாதவராகவும் ஒழுக்கத்தின் உயர் பண்பாளாராகவும் சைவ ஆகமங்களின்
அனைத்துப் பயிற்சியிலும் தேறியவராகவும் குறிப்பாக தேவாரப் பதிகங்களில் திக்குமுக்காடாத
ஞானம் உள்ளவராகவும் பஞ்சாட்சர மந்திரமாகிய ’சிவாய நம. என்பதைத் தவிர வேறு எதையும் உச்சரிக்காதவராகவும்
தமிழ் இலக்கணங்களில் தேர்ந்து இலக்கிய ஞானம் மிகுந்த பண்டிதர்களுடன் எப்பொழுதும் ஞான
சபைகளை நடத்தும் அக்கறையுள்ளவாராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..
291 ஆவது ஆதீனம்வரை இது பற்றிய விசாரம் நமக்கு வந்து
விடவில்லை.
இப்பொழுது வந்து விட்டது.
சாதாரணமாக இல்லை;சதா ரணமாக,
கேவலத்துடன் வந்து விட்டது.
’தட்டிக் கேட்க ஆளில்லை என்றால்
தம்பி சண்டப் பிரசண்டன்’
என்ற சொலவடைக்கு ஏற்ப, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று 292 ஆவது மதுரை ஆதீனம் தன்னிச்சையாக
நடந்து கொண்டு இந்த திருஞான சம்பந்தர் வீற்றிருந்த ஆசனத்தில் ஒரு ’திருட்டு ஞானக் களவாணி’யை
அமர்த்தி அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழர்களே, தன்மானமும் ஞானமும்
உள்ள நெறியாளர்களே,
எனினும் ஒன்றை நாம் சிந்திக்க
வேண்டும்.
மதுரை ஆதீனம் நம் பரம்பரைத்
தமிழ்ப் பண்பாட்டின் பாட்டன் சொத்து. நாமெல்லாம் பேரன் பேத்திகள்.
தமிழையும் சைவத்தையும் திருஞானசம்பந்தரின்
அருளாட்சி செழிக்க,தழைக்க மதுரைப் பாண்டிய மன்னனால் காணிக்கை செய்யப் பட்ட மாபெரிய
சொத்துத்தான் மதுரை ஆதீனமும் இப்போதுள்ள, அதனைச் சார்ந்த அனைத்து சொத்துக்களும்.
திருஞான சம்பந்தர் பெருமானை
பாண்டிய மன்னன் மட்டுமல்ல, பக்கத்துத் தேசத்து மன்னர்களும் பதாகை வீச, சைவமும் தமிழும்
வளர்க்கும் ’மதுரை ஆதீனம்’ என்னும் தன்னிகரற்ற, தன்னாட்சி
பெற்ற ’அறம் காக்கும் மடத்தின் தலைவராக அமர்த்தினர்.
இதோ, ஒழுக்கமற்ற பண்புகளையே
பக்தி மார்க்கம் எனக் கொண்டு உபதேசிக்கும் உளுத்தனைக் குருவெனத் துதித்துக் கொண்டாடும்
துன் மார்க்கர் கோஷமிட ஒரு துஷ்டப் பயலை இந்தப் பீடத்தில் ஏற்றி வைத்து பிலாக்கணம் பாடுகின்ற அருணகிரியை
நாமும் நாடும் சகித்துக் கொண்டிருப்பதே ஆன்மிக அவமானம்.
எந்த அரசும் எத்தகைய ஆட்சியாளரும்
திருஞான சம்பந்தப் பெருமான் வகுத்தளிக்கும் நெறிகளிலும் மரபுகளிலும் தலையிடக் கூடாதென
உறுதி செய்து சாசனம் செய்யப்பட்ட மடம்தான் ‘மதுரை ஆதீனம்.
ஆனால் திருஞான சம்பந்தரின்
மரபுகளும் மாண்புகளும் மீறப்படும் போது அதை இந்த அரசு சகித்துக் கொண்டிருக்குமானால் இதற்கு ஒரு மிகப் பெரும் கேடு காலம் வரப் போகிறது என்று அர்த்தம்.
திருஞான சம்பந்தர்பால் சமணர்கள்
ஏவிய மந்திரத் தீ, அவருடைய திருநீற்றுப் பதிகத்தால் சமணரை முதலில் சாடவில்லை;அவர்களை
ஆதரித்த மன்னனைத்தான் சாடியது. தெய்வ நீதி இதுதான்.
தெய்வத் திருஞானசம்பந்தர்
வகுத்தளித்த அருள் நெறித்
திரு மரபுகளின்படியே மதுரை ஆதீனமும் அதனைச் சார்ந்த சொத்துக்களும் காலங்காலமாகச் சைவமும்
தமிழும் சிவனடிச் செல்வர்களும் நமது திருக்கோவில் வழிபாடுகளும் வாழ்வாங்கு வாழ்வதற்கென்று
வழங்கப் பட்டவை.
அந்த ஆதீனதின் அதிபதியே மதுரைச்
சொக்கநாதர் - அன்னை மீனாட்சி என்பதுதான். அவர்களின் அடிமலர்ப் பாதம் பணிந்து சைவத்
தர்மம் பிசகாது அந்த ஆதீனத்தின் கர்த்தராக இருப்பவர் பண்டார சந்நிதியாகப் பரிபாலனம்
செய்து வரவேண்டும் என்று மரபு சாத்தப்பட்டதே தவிர ராஜ அலங்கார பூஜிதனாக இருந்து,அரம்பையர்
சூழ ஆட்சி செய்ய அல்ல:
பரத்தையரும்.பரம சண்டாளர்களும் பல்லக்குத் தூக்கப் பவனி வந்தவனுக்கு இந்த பரமஞான பீடத்தைப் பரிசளித்து விட்டுப் பரிதாபமாக வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் 292.
வெட்க க்கேடு!
வெட்க க்கேடு!
திருஞான சம்பந்தருக்குப் பிறகு
கால மாற்றங்களால் எத்தனையோ மன்னர்களும் ஆட்சி மாற்றங்களும் மாறிய போதும் மதுரை ஆதீனத்தின்
மரபுகளும் சைவ சித்தாந்த நெறிகளும் மாறாமல் கடை பிடிக்கப் பட்டு வந்தன.
எத்தகைய கொடிய மனம் கொண்ட
மன்னர்கள் மதுரை அரியாசனத்தைக் கைப்பற்றிய போதும் அன்னை மீனாட்சி வழிபாட்டையும் சொக்கநாதர்
சொத்தான மதுரை ஆதீனத்தின் மரபு வழி உரிமையையும் கை வைக்கவில்லை.
காரணம்: “சிவன் சொத்து குல
நாசம்” என்பதை இதுவரை வந்த அனைத்து மன்னர்களும் ஆதீன கர்த்தர்களும் அகத்திலே வைத்து
அஞ்சி அடங்கி ஒடுங்கி வாழ்ந்தார்கள். இப்போதுள்ள 292 ஆவது ஆதீன கர்த்தராகிய அருணகிரி ஞான தேசிகரைத்
தவிர.
இவர் இப்பொறுப்புக்கு வந்தது
முதலே ஆடிய ஆட்டமும் கூடிய கூத்தும் அந்த தில்லைக் கூத்தனையே திக்கு முக்காட வைத்திருக்கிறது.
அதனால்தான் இந்த அருணகிரி
ஞானதேசிகரின் குலத்தையே நாசம் செய்து கொண்ட கட்டத்தை அருளியிருக்கிறான் போலும்!
தேசமும் நாடுஞ்சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமதாகுமே நம்நந்தி ஆணையே!
என்ற திருமூலரின் மந்திரச் சொல் வெற்றுச் சொல் அல்ல நண்பர்களே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
16.5.2012
No comments:
Post a Comment