Monday, April 16, 2012

பெண்மை போற்றுதும்!

அறிவார்ந்த நண்பர்களே,

//தொலை தூரத்தில் இருந்தாலும்
என்னை அலைபேசியில்
பத்திரப்படுத்தி விடுகின்றார் அம்மா,
'பத்திரம் பத்திரம்'
என்று சொல்லியே//

என்று-

முகநூல் முற்றத்தில் 
திருமதி கோகிலா கன்னியப்பன் அவர்கள்
எழுதி, தன் தாயின் அனிச்சைச் செயலின் நன்மை குறித்து நவின்றிருந்தார்.

தாயின் அறிவுறுத்தலை இன்றைய பெண்களில் பலரும்
ஓர் நச்சுறுத்தல்என்று தன் தோழிகளிடம் சொல்லி நகைச்சுவையாடிக் கொள்வதுதான் கண்கூடு.

இன்றைய  I.T ( Intimated Triangle நட்பு)  உலகின் சகஜ நிலை இதுதான்..

எந்தத் தாயும் தன் மகளைக் குறித்து அக்கறையோடும்
அன்போடும் அறிவுறுத்துகின்றதன் நோக்கம், அந்தத்தாய்,’பெண்மையின் உயரிய பண்புகளைப் பேணிக் காக்கும் பெட்டகமாய்இருப்பதுதான்.

மகள் தன்னுடனே  இருந்தாலும்,தன்னை விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும் ஒரு தாயின் எண்ணம் தன் மகளின் பொற்புடைய கற்பு நெறி பூவுலகில் நிலைத்திருக்க வேண்டும்என்ற சலிக்காத நினைவுகளோடு, அவளைச் சுற்றிச் சுற்றித்தான் சுழன்றிருக்கும்;உழன்றிருக்கும்.

நம்நாட்டுப் பெண்களின் பரம்பரைக் குணம் இதுதான்.

அச்சம்,மடம் நாணம்,பயிர்ப்பு என்ற நான்கும் ஒரு பெண்ணின்
மிகப் பெரிய சொத்து.

அந்தச் சொத்து பத்திரமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்
என்பதே ஒரு தாயின் அறிவுறுத்தலின் அகப் பொருள் விளக்கம்.

பெண்மையின் பெரிய சொத்து இந்த நான்கும்தான்என்பது
இன்று நம் பெண்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

நான் சொல்வது -
ஒரு உத்தமத் தாயின் அக்கறை பற்றியும்
ஒழுக்கம் தவறாத பெண்கள் பற்றியும்தான்!

இன்றைய சமுதாயத்தில், ‘பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்என்ற எச்சரிக்கையை விட, ‘ஆண்கள் பத்திரமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்என்று எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை தலை கீழாகிக் கொண்டிருக்கிறது.

நாகரீகம் என்ற சாக்கில் அநாகரீகம் தலை எடுத்துக் கொண்டிருக்கிறது.

அணங்குகள் அணியும் ஆடையும் அவர்களின் பேச்சு வாடையும் விழி ஜாடையும்  பெண்களை ஒரு போகப் பொருளாகப் பார்க்கின்ற புல்லறிவாண்மையைப் போர்த்திக் கொண்டு திரிகிற ஆண் வர்க்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆடவர் தங்களப் பார்ப்பதும் பல்லிளிப்பதும் பழகத் துடிப்பதும் தங்கள் பெண்மைக்குக் கிடைக்கின்ற பெரும்பேறென எண்ணிக் கொண்டு,இன்றைய நவ நாகரிக நாரிமணிகளும் மறைக்க வேண்டியவற்றை மறைக்காமல், திறக்கக் கூடாதவற்றைத் திறந்து காட்டிக் கொண்டு திறந்தவெளிக் கலையரங்கமாகத் திகழ்வதில் கர்வம் கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில்தான் அவர்கள் ஆணுக்கு நிகராய் ஆரோகணித்துக் கொண்டிருக்கிறர்கள்.அங்கே அச்சமும் நாணமும் அவிந்து போய், ’மடத்தனமான எண்ணம் மட்டுமே பயிராகிக் கொண்டிருக்கிறது.

அடக்கமாக நடக்கவும் அமைதியாகப் பேசவும் உடைகளை அணிவதில் கவனம் வைக்கவும், ஆடவர்களோடுபழகுகிற எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் பெண்களுக்குப் பாடம் சொல்லித்தரப் பள்ளிக் கூடங்களைத் தமிழர் ஏற்படுத்திக் கொண்டதில்லை.

காரணம், நமது பெண்களுக்கான இந்தப் பண்பாட்டுக் கல்வியைத் தனது முலைப்பால் வாயிலாகவும் தனது செயல்பாடுகள் மூலமாகவும் புகட்டி வளர்க்கும் பேராற்றலைத்தாய்எனும் பல்கலைக் கழகமே தத்தெடுத்துக் கொண்டதுதான்.

அப்படி உயர்ந்த நிலைப் பல்கலைக் கழகமாக ஒரு தாய் இருந்து விட்டால், அவள் ஈன்றெடுக்கும் அத்தனை பெண்களும் தன்னிகரில்லாத தமிழ்ப் பண்பாட்டின் தலைமையைக் கட்டிக் காக்கின்ற தாய்மைப் பயிர்களாக, நமது பண்பாட்டு வயலில்  நடப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலைஎன்ற தத்துவச் சொலவடை நமது தமிழ் இலக்கியப் பண்பின் தலையாய அணிகலன்,இல்லையா?

நாம் அத்தகு பெண்மையை இறைவனுக்கு நிகராய் ஏற்றித் தொழுவோம்.


இவண்,
கிருஷ்ணன்பாலா
16.4.2012

No comments: