Friday, February 24, 2012

மேடம் ஜெ.அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


மதிப்பிற்குரிய அம்மையீர்,வணக்கம்.
இது அரசியலைக் கடந்த  அன்பான வாழ்த்து!

கடந்த கால அரசியல் நடைமுறைகளிலிருந்து உங்களை
நீங்களே மீட்டுக் கொண்டு,நாட்டு நலன் விரும்பிகளிடத்தில் ஓர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முதல்வாராக இந்த ஆண்டு உங்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

துணிவுக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர் உதாரணமான பெண்மணி
என்பதிலும் தேசபக்தியிலும் தெளிவான  தேர்ந்த அரசியலிலும் மாறாத பிடிப்பு மிக்கவர் என்பதிலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நீங்கள் நேர்மைக்கும் நீதிக்கும்தான் இனி உங்கள் ஆட்சியில் முதலிடம் என்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும். தற்பொழுது உள்ள வழக்குகளை எவ்வித  முறைகேடுகளாலும் உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளாமல் வழக்காடவும் உண்மையான நீதிமான்களின் மனதில் நற்பெயரோடு நின்று ஒருவேளை, உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தாலும் அதை நேர்மையோடு எதிர் கொண்டு அறநெறிச் செயல்கள் மூலம் உங்கள் மீதான களங்கத்தை நீங்கச் செய்யும் வகையில் செயல் படும் அறிவும் ஆற்றலும் பெறவும் அதன் மூலம்  இந்திய அரசியலில் நீங்கள் புதிய பிரவேசம் பெற்றவராய்த் திகழ்ந்து,உங்கள் கட்சிக்காரர்களும் நலம் விரும்பிகளும்,ஏன் நீங்களுமே விரும்புவது போல் இந்தியப் பிரதமராக வரவும் இந் நாளில் வாழ்த்துகிறேன்.

குறைந்த பட்சம் மத்திய அரசைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் நீங்கள் பெற வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால்  உங்களுக்கென்ற சொந்தக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் மாமன் மைத்துனர்களுக்கும் மத்தியில்  அமைச்சர் பதவிகளை வாங்கிக் கொண்டு நிச்சயம் தமிழனை அடமானம் வைத்து மானங்கெட்ட  அரசியலை நடத்த மாட்டீர்கள் என்பதால் உங்கள் தலைமை வலுப்பெற வேண்டும் என்றுதான் உண்மைத்தமிழன் விரும்புவான்.

கடந்த காலங்களில் உங்கள் காலைச் சுற்றிக் கொண்டு கழுத்தைப் பிடித்த சனியன்களையெல்லாம் களை எடுத்துக் கூண்டோடு தூக்கி எறிந்த துணிவு இந்திய அரசியலில் உங்களைத்  தவிர யாருக்கும் கிடையாது.

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எவருமே இந்தியத் திரு நாட்டின் மேன்மையைக் கௌரவப் படுத்தி திறமை மிக்க ஆட்சியைத் தரும் தகுதி படைத்தவர்களாக இல்லை; அவர்களில் நீங்கள் எவ்வளவோ மேல் என்றுதான் எமது  மனம் எண்ணுகிறது.

போலி ஜனநாயகம் பேசாது; போலி மத உணர்வும் காட்டாது ஆட்சி நிர்வாகத்தையும் கட்சி நிர்வாகத்தையும் துணிச்சலாக நடத்தும் ஒரே
பெண்மணி நீங்கள்தான் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது.

போலிகளைக் கண்டு ஏமாந்து போகும் இந்தப் பாமர ஜனங்களுக்கு நீங்கள் ஓர் அசல்தான்; களங்கம் மிக்க அரசியலுக்குள் நீங்கள் இருந்த போதும்.

நல்ல தலைவர்களும் நாணயமும் இல்லாத இந்திய அரசியலில் உள்ள வெற்றிடம் உங்களாலாவது நிரப்பப் பட்டால் நாங்கள் நிம்மதி அடைவோம்.

இத்தாலி, இந்த நாட்டை ஆண்டு அனுபவிப்பதை விட,திருவரங்கத்துக்
காவிரி நீர் டெல்லி செங்கோட்டையில் தெளிக்கப் படுவதில் தமிழன் பூரித்துப் போவான்;ஏன் இந்தியனே பெருமைப்படலாம்.

உங்கள் பிறந்த நாளில் எங்களின் வாழ்த்து இதுதான் ;ஏற்பீர்களாக!

இந்திய அரசியல் கண்டு வெறுத்துப் போன தமிழர்கள் சார்பில்,
வாழ்த்தும்,

கிருஷ்ணன்பாலா
24.02.2012

2 comments:

sammatti said...

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே!
வழக்குகள் உங்களை என்ன செய்யும்?
வரலாறு உங்களை விடுதலை செய்யும்...!
அன்புடன்
தி.அரப்பா ..மதுரையிலிருந்து...

Anonymous said...

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே!

வழக்குகள் உங்களை என்ன செய்யும்?
வரலாறு உங்களை விடுதலை செய்யும்...!

அன்புடன்
தி.அரப்பா ..மதுரையிலிருந்து...