Wednesday, March 7, 2012

மீண்டும் அப்துல் கலாம்!




சலாம் முலாயம்; மீண்டும் கலாம் என்றுதான் சொல்ல 
வேண்டும்!

ஆம் நண்பர்களே, 

நமது தமிழர்களின் அடையாளச் சின்னமாய்த் திகழும் 
தலைசிறந்தஅறிவியல் ஞானியும் இந்தியாவின்  முன்னாள்
குடியரசுத் தலைவருமான  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 
அவர்கள்  மீண்டும் இந்தியக் குடியரசுத்  தலைவர் ஆகப் 
போகிறார் என்பதை நாமெல்லோரும் எதிர்பார்க்கலாம்; 
ஆக வேண்டும். 

அதுதான் தமிழனுக்குப் பெருமை;இந்தியாவுக்கும் பெருமை!

உ.பி. மாநிலத்தில் மறுபடியும் முலயாம் சிங் வெற்றி பெற்று
அவரது கட்சி ஆட்சிப் பீடம் ஏறியிருப்பதில் இந்தியாவுக்கே
நல்ல காலம் பிறக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக மறுபடியும்  நமது ஞானி –
விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் 
பொதுக்கருத்தில் வருவதற்குரிய காரணங்கள் உருவாகி
உள்ளன.

டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத்  தலைவராக வருவதற்குச் சென்ற முறையே  முதல் ஆதரவு  காட்டியவர், முலயாம் சிங் 
அவர்கள்தான்.

இன்று மறுபடியும் உ.பி.யில் பெரும்பான்மை 
இஸ்லாமியர்களின் ஆதரவைப்   பெற்ற பேராதரவுதான் 
அவரது கட்சி ஆட்சிக்கு  வரக் காரணமாயிற்று.

இந்தத் தேர்தலில் இஸ்லாமியர்களின் தேசப் பற்றையும்
அவர்கள் இந்திய அரசியலில் பெற வேண்டிய முக்கியத்துவத்தையும்  சுட்டிக் காட்டி  அவர்களுக்கு உரிய தேசீயப் பங்களிப்பை  - தேசிய மரியாதையைப் பெற்றுத் தரப் பாடுபடுவதாக வாக்குறுதிகள் அளித்துத்தான் முலாயம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் குடியரசுத் தலைவர் பதவிக்கு
வலிமையான இந்தியாவைக் கனவுகாணத் தூண்டிய
டாக்டர் அப்துல் கலாம்  அவர்களையே மறுபடியும் குடியரசுத்தலைவராக்கும்  அரசியல் முக்கியத்துவத்தை 
அவர் பெற்றுள்ளார்.

அரசியல் சார்பற்ற மனிதராகத் திகழ்வதுடன் நேர்மையும்
தூய்மையும் ஒழுக்கமும் மிக்க உன்னத சிந்தனையாளருமான
நமது முன்னாள் குடியரசுத் தலைவரை  மறுபடியும் ஆதரித்து
இந்திய அரசியல் களத்தில் வலிமையான அரசியல் அதிகாரம் கொண்டவராகவும் ஊழலுக்கு எதிரானதொரு தூய்மையான
மனிதரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம்தனது கட்சியையும் இந்திய அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்தவும் முலயாம்சிங் அவர்களுக்கு இயல்பாக இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும்முலயாம் சிங்
அவர்களுடன் கைகோர்த்துச் செயல்படுவது இப்போதைய
அரசியல் சூழலின் சூட்சுமக் கயிறு என்பது போகப் போகத் தெரியும்.

அடுத்த சில மாதங்களில் வரவுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர்  தேர்தலில்  முலயாம்  சிங் முடிவு செய்யும் வேட்பாளரையே  
காங்கிரஸ்  ஒப்புக்கொண்டாக  வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அநேகமாக எல்லாமுக்கிய மாநிலங்களிலும் 
ஆட்சிச் செல்வாக்கை இழந்து விட்ட சூழ் நிலையில்,
இனி காங்கிரஸானது தன் போக்குக்கு  தனது முன்னாள்  
அடிமைகளையெல்லாம் இனி,இந்திய ஜனாதிபதி பதவிக்கு  
நிறுத்தி, அந்தப் பதவியைக்  கேவலப் படுத்த முடியாது.

அதைவிட எந்த,எளிய மனிதரை,நேர்மை தவறாத நெஞ்சரை,
தேசப்பற்றில்  எவருக்கும்இளைத்து விடாத அறிவியல்
ஞானியை,சுத்தத் தமிழரை மறுபடியும்  இந்தியக் குடியரசுத் 
தலைவராக வாராமல் தடுத்து தனது  குடும்பக் கொள்ளைக்கு
ஏதுவான எண்ணங்களுக்காக வஞ்ச நெஞ்சை வலை விரித்து
சோனியாவுடன்  திட்டமிட்டுக்  கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்த கலைஞரின் எண்ணங்கள் இனி ஈடேறாது. 

மேலும்,தமிழகத்தில்   மேடம் ஜெ  மிகுந்த பலத்துடன் ஆட்சியில் 
அமர்ந்திருப்பது டாக்டர் அப்துல் கலாம் அவர்களை  மறுபடியும்
குடியரசுத் தலைவர் ஆக்கும் வாய்ப்புக்குக் கிடைத்திருக்கும் 
இன்னொரு இருப்பது கூடுதல்  நன்மை.

கருணாநிதி ,இந்த உண்மைத் தமிழருக்கு, ஒழுக்கம் மிக்க இஸ்லாமியச் செம்மலின் தகுதியின்பால் இழைத்த வஞ்சகக் கறையை மேடம் ஜெ. அவர்கள், நீக்கி, இந்த மாசில்லாத் தமிழன்  மீண்டும் குடியசுத் தலைவர் ஆவதை ஆதரிப்பது அவருக்கும்  ‘ஆல்வா’ போன்ற விஷயம் ஆகிவிட்டது.                          

ஆக, உ.பி.யின்  முலாயம் சிங்,தமிழத்தின் மேடம் ஜெ.
இருவரும்  இணைந்து  மீண்டும்  டாக்டர் அப்துல் கலாமை 
குடியரசுத் தலைவராக்க விரும்பிவிட்டால் காங்கிரஸ் தனது
கைகளால் வாயைப்பொத்திக் கொண்டாக  வேண்டும்!

பிறகென்ன, இடதுசாரிகள் ‘சரி’ எனச் சொல்ல,  பி.ஜே.பியோ
பின்னால் நின்று கொண்டு கை தட்டித்தான் வரவேற்கும்.  
                                         
ஆக,எல்லாக் கட்சிகளும் புறக் கணிக்கமுடியாத  ‘எளிய மாமனிதர்’
டாக்டர் அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் என்றைக்குமே ‘பாரதத்
தாயின் தலைமகன்’தான். 

அன்று செய்ததைப் போலவே இனி,நாளையும் இந்தியத்  தாய் இருகரம் ஏந்தி உங்களை எடுத்துக் கொள்வாள்.

நீங்கள் மட்டும் குழந்தைபோல் அடம் பிடித்து
விட மாட்டீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

இவண்,
இந்தியத் தமிழன்.
கிருஷ்ணன்பாலா
7.3.2012

சிங்கம் கர்ஜிக்கும்;சிறு நரிகள் ஊளையிடும்!

நண்பர்களே,

இலவசமாகக் கிடைத்துள்ள இந்த சமூக வலைத்தளத்தில்  சமூகத்தின் நன்மையைக் கருத்திற்கொண்டு   தமிழ் மொழியின் தன்னேரில்லாத் தகுதிகளோடு இறுமாந்து எழுதுகின்ற வாய்ப்பும் எண்ணமும் எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

சிலர் இங்கு மானுடத்தின் மீது படிகின்ற அழுக்குகளைச் சுட்டிக் காட்டி எழுதுகின்றனர்;பலர் மானுடத்தையே அழுக்குப்படுத்தி எழுதுகின்றனர்.

சிலர் மானுடத்தை அழகுச் சிற்பமாய்ச் செதுக்குகின்றனர்;
பலர் அந்த சிற்பத்தின் மீது எச்சமிடுகின்றனர்.

//கண்ணாடியைச் செய்பவனுக்கும்
அந்தக் கண்ணாடி மீது
கல் வீசித் தாக்கி மகிழ்கின்றவனுக்கும்
அமைந்துள்ள மேடைதான்
இந்த முக நூல்(Facebook).//

என்று எழுதியிருந்தேன்
(காண்க;: சொல்லுவதெல்லாம் உண்மை -பகுதி:1 எழுத்து:7)

அப்படிக் கல்லெறிந்து காணும் இன்பத்தில் பொழுதுபோக்கி வருபவர்கள்  ஏராளமாக இருப்பினும் அவர்கள் முன்னே எனது எழுத்துக்களை- கண்ணாடியாக இல்லாமல் வைரம் என்றே வார்த்து வைக்கின்றவன் நான்.

ஆம்.
‘எழுதும் எழுத்துக்களுக்கு  நோக்கம் இருக்க வேண்டும்’
என்பதை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுதான் எழுதுகிறேன்.

’உலகம்  முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வலைத் தளங்களைத்
திறந்து தமிழ் எழுத்துக்களைக் காணும் போதெல்லாம் அவர்களின்
உள்ளமும் உணர்வும் மகிழும்படியும் நமது மொழியின் வளமான ஆளுமையை உணர்ந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்’
என்ற தமிழ் உறவின் தணியாத நேசத்தால் எழுதுகின்றேன்.

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு நமது பண்பாட்டின் நயத்தக்க நாகரீகம் போற்றும் உறுதிமிக்க உண்மைகளை எடுத்துரைக்கும் கருத்துக்களைச் சொல்லாமல் காலாட்டிக் கொண்டும் வாலாட்டிக் கொண்டும் வெறும் திண்ணைக் கதைகளைச் சொல்கின்றவர்களுக்கு
வேப்பங்காய்தான் எனது எழுத்துக்கள்.

கத்துக்குட்டிகளான இவர்களுக்கும் கற்றுத்தரும் விதமாக எழுதப்படும் எனது எழுத்துக்கள் இவர்களைச் சாடினாலும் அந்தச் சாடலில் ஒரு தேடலைக் காண்கின்ற அறிவை சிலர் மட்டுமே சிந்திக்கின்றார்கள்;

’சத்தும் சாரமும் இல்லாத எழுத்துக்கள் உப்பும் காரமும் இல்லாத படைப்புக்கள்’ என்பது என் எண்ணம்.

காற்றில் உமி விற்கின்ற கதையாக அவை காணாமல் போய் விடும்.
                         

எனவே,
எழுதும் திறனை நிலை நாட்டி, படிக்கின்றோர் மனதில் நிற்கும்படியான கருத்துக்களோடு எனது செய்திகளை, சீரார்ந்த தமிழின் செம்மாந்த செறுக்கோடும் கூரார்ந்த அனுபவத்தின் குலையாத முறுக்கோடும் முனைப்புடன் எழுதி வருகின்றேன்.

//இந்த வலைத் தளம்-
வெறும் பொழுது போக்குக்கான
தளம் அன்று!

வெற்றுப் பிழைப்பும்
வீண் திண்ணைப் பேச்சும்
விரும்புவோர்-

இங்கே
நுழையாதிருப்பது
அவர்களின்-
பொழுது போக்குக்கு
மிகவும் உதவும்.//

என்று -

இங்கே, எனது தோரண வாயிலில் கல்வெட்டு ஒன்றைச் செதுக்கி வைத்து விட்டுத்தான்  இங்கே எழுதி கொண்டிருக்கிறேன்.

என் எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது புரியும்.


இதில் உடன்பாடு உள்ளவர்கள் எனது கருத்துக்களைப் படிக்கலாம்;
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம்; அதற்கு எதிராகக் கருத்துக்கள் சொல்லும் திறன் உடையோர் வாதமும் செய்யலாம்.

ஆனால்-
எழுதப் பட்ட விஷயத்தையே புரிந்து கொள்ளாமல் இங்கே யாரும்
குறுக்குச்சால் ஓட்டுவதை நான் அனுமதிப்பதில்லை.

இதை என் எழுத்தில் உறுதிபடச் சொல்வதிலும் உண்மைக்கு மாறான வாதங்களை எதிர்ப்பதிலும் அவற்றைச் சுட்டி வைப்பதிலும்  வெளிப்படுகிற எழுத்தின் வேகத்தை ‘திமிர்’ என்றும்  ‘அகந்தை’ என்றும் ‘தலைக்கனம்’ என்றும் இருட்டுக்குள் ஒழிந்து கொண்டு ஒப்பாரி வைப்பவர்கள் குறித்து நான் கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.

மாறாக அவர்களுக்கு என் அனுதாபத்தைத்தான் சொல்ல முடியும்.

’அகந்தை’ ‘ஆணவம்’ ’தலைக்கனம்’ முதலான குணங்களின் ஜன்ம விரோதி’ என்று சொல்லிக் கொள்வதில் முதல் நபராகவே இருக்க விரும்புகின்றவன் நான்..

ஆனால்-
கர்வமும் செறுக்கும் சிங்கத்தின் இயல்பான குணங்கள்;
அதனைப் பேசச் சொன்னால் அது கர்ஜிக்கத்தான் செய்யும்;
சிறு நரிகளோ ஊளையிடும்!’ என்பது நரிகளுக்கு எங்கே புரியும்?

உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
7.3.2012

Tuesday, March 6, 2012

செந்தமிழின் சீற்றம்!

நண்பர்களே,

நான் இங்கு முக நூலிலும் எனது வலைத்தளங்களிலும்
தொடர்ந்து எழுதி வருவது ஒரு தொழில் போல் அமைந்து விட்டது.

ஜோதிடம் மற்றும் தொழில் சம்பந்தமான ஆலோசனைகளைப் பிறருக்கு வழங்கி வருவது எனது இப்போதைய நடைமுறை வாழ்க்கை.

எனது சிறு பிராயம் முதலே எழுத்தில் இயற்கையான ஈடுபாடு ஏற்பட்டதாலும் எழுத்தையும் எண்ணங்களையும் கொண்டுதான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலை என்னை இழுத்ததாலும் சென்னைக்கு வந்தேன் 1972களில் எனது 18,19 வயது பிராயத்தில்.

இயல்பாகவே எனக்குப் பெரிய பத்திரிகைகளில் மட்டுமல்லாது மிகப் பெரிய மனிதர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பையும் விதி எனக்கு விதைத்து விட்டது.

எந்தப் பாரதி “நமக்குத் தொழில் கவிதை; நல்லவே எண்ணல்; நாட்டுக்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று இந்தத் தமிழுக்கும் தேசத்துக்குமாகச் சிந்தித்து எண்ணி எழுதினானோ, அவ்வாறு அவன் எழுதி வந்த பத்திரிகையிலும் பணியாற்றி அவனைப் போலவே எண்ணி இறுமாந்து வளர்ந்தவன் நான்,

அந்த இறுமாப்புத்தான் எனது எழுத்துக்களின் ஜீவன்;அவன்தான் 
எனது ஞான குரு.

அத்தகைய உணர்வுகள் உரமிட வளர்ந்ததே எனது எழுத்து வேட்கை; அதுவே இப்போது ’எனக்குத் தொழில் எழுத்து; என்றாகி விட்டது.

அத்தகைய எழுத்துக்கள்தான் இங்கே இலவசமாக ’இறை’க்கப் படுகின்றன. பசியுடையோர்  புசிக்கவும்; எழுத்து ருசி உடையோர் ரசிக்கவுமாக அவை இங்கே விற்பனைக்கின்றி கற்பனக்காக கடை விரிக்கப் பட்டு ‘ கண்ணுடையோர் காண; கருத்துடையோர் பேண; கடை கெட்டோர் நாண…”..என்று முரசறைவித்திருந்தேன்.

உலகெங்கிலும் இருந்து பல்லயிரக் கணக்கான தமிழ் நெஞ்சங்கள் தொடர்ந்து எனது முகநூல் பக்கங்களையும் வலைப் பூக்களிலும் பரவிப் பெருகிப் படித்து வருவதைக் காண என் நெஞ்சம் மேலும் நிமிர்கின்றது.

ஆனாலும் ஒரு சில பெட்டைகளும் பேயர்களும் என் எண்ணங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பற்றவர்களாக இருந்து கொண்டே இங்கே நுழைந்து எச்சில் துப்புகிறார்கள்.

‘இங்கே அசுத்தம் செய்யதீர்கள்’ என்று அறிவிக்கப் பட்ட இடம் என்று  அறிந்தும் அவர்களின் அரிப்பானது அவ்வாறு இங்கே எச்சிலைத் துப்பும் இழிவான காரியத்தைச் செய்யத் தூண்டுகிறது போலும்.

நேற்று முன் தினம் (4.3.2012) எனது முகநூல் பதிவில் “இது சுய விளம்பரம் அல்ல; சுய தரிசனம்’ என்ற தலைப்பில் ஓர் சிறு குறிப்பைப் பதிவு செய்திருந்தேன் :Siva Maayilsamy என்ற ’நபர் .டேய் யார்ரா இந்த ஆள்? என்று எனது பதிவில் பண்புடையோர் யாரும் விரும்பாத மொழியில் பொருத்தமில்லாத- நண்பர்கள் வருத்தம் கொள்ளும்படி எழுதியிருந்தார்.

முக நூல் நண்பர் திரு/திருமதி Jaya Rajkumar அவர்கள் அந்த நபரை கண்டித்தும் எனது எழுத்துக்களைக் கௌரவித்தும் அதிலேயே எழுதியிருந்தார்.

எனினும் நான் அந்த நபருக்கு மட்டும் இன்றி நச்சு இலக்கியத்தில் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறவர்களுக்கும் புரியும்படி
எழுத நேர்ந்தது. எழுதினேன் இப்படி:

@Jaya Rajkumar:நண்பரே அந்த நபர் தனது குணம் யாதெனக் காட்டியிருக்கிறார்;விடுங்கள். 

இதேபோல்தான் இன்னொரு நபரும் – Kangayan Kumaran என்ற பெயரில் நாய்கள் நக்கித் தின்னும் நரகல் மொழியில் எனது மரபு வழிக் கவிதைகள் குறித்து  என்னுடைய வலைப் பக்கத்துக்கே விமர்சனம் அனுப்பி இருந்தார்.  அவருக்கு நமீதா போன்றோர் ஆடும் ஆட்டத்துக்கேற்ற பாடுவாது போன்ற கவிதை எழுதாமல் பாட்டன் காலத்து ’ஸ்டைலில்’ கவிதைகள் எழுதினால் தங்கள் ஜாதிகள் அங்கே மல்லாந்துகூடப் படுக்காது என்பதாக அவருடைய வி(மர்)சனம்????

இந்த சிவா மயில்சாமியும் அந்த காங்கேயன் குமரனும் ஓரினம்;ஓரிடம் என்றுதான் எண்ண முடிகிறது.

நாம் வழியில் நடந்து போகும் போது சம்பந்தமில்லாமல் தெரு நாய்கள் குரைத்துக் கொண்டு நம்மை நோக்கி ஓடி வருவதில்லையா? அவ்வாறு எதற்குக் குரைக்கிறோம் என்று இலக்கில்லாமல் அவை ஓடி வரும்;வந்த வேகத்திலேயே நின்றும் விடும். சில நாம் கல்லை எடுத்தால் பின்னங்கால் பிடறியில் படத் தலை தெறிக்க ஓடி விடும். அவற்றுக்கும் இந்த நபர்களுக்கும் வேறுபாடே கிடையாது. ஆனால்,நாய்களோடு நாய்களாய் வாழும் இரண்டு கால்கள் கொண்ட அதிசய நாய்கள் என்று வேண்டுமானால் இவர்களைச் சொல்லலாம்.

நம்மிடம் கல் எனும் சொல் உண்டு. அது அவர்களைக் காயப் படுத்தாது; அவர்களின் குணத்தை நியாயப்படுத்தும்

நாம் எழுதிவரும் விஷயங்கள் ‘அரம்’போலும் கூர்மையாகப் படத்தான் செய்யும்,இந்த மரம் போன்ற மக்கட் பண்பு இல்லாத Siva Mayilsamy  Kangayan Kumaran முதலானவர்களுக்கு. 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்  
மக்கட்பண்பு இல்லா தவர்

என்ற வள்ளுவனின் வாய்மொழியைப் படித்தவர்களுக்கு இது புரியும்.

நண்பர்களே,

எனது எழுத்துக்கள் எவரையும் காயப் படுத்துவதற்கன்று.
தமிழன்னையைத் தரம் கெட்ட மொழியாலும் பண்பற்ற நடத்தையாலும் புன்செயல்களாலும் காயப்படுத்துவோரைக் காறி உமிழத்தான்: அவளுடைய காயங்களை ஆற்றத்தான்.

எனது எழுத்துக்களின் இலக்கியத் தரமும் எண்ணங்களின் உரமும்
இயல்பானவை; தமிழன்னை ஏந்தி இருக்கும் அட்சய பாத்திரத்திலிருந்து எடுத்து இரைக்கப்படும் அமுதென எனது தமிழ்ச் சாதியினருக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றேன்,அதை..

அஜீரணம் உள்ளோருக்கு இது மருந்து;அது
இல்லாதோருக்கு இனிய விருந்து.

இதைப் பற்றி உங்கள் மனதில் பட்டகருத்துக்களை எழுதுங்கள். வரவேற்பவன் நான்.

எதிர்த்து எழுதுவதாயினும் மறுத்து எழுதுவதாயினும் எழுதுவோரின் சிந்தனைத் தூண்டலுக்கு எனது எழுத்துக்கள் காரணமாக இருப்பதை விரும்புகிறேன்.அதுதான் படைப்பாளனின் தரமான குணமாக இருக்க முடியும்.

ஆனால் எழுதும் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து பண்பற்ற வார்த்தைகளில் தங்களை அடையாளம் காட்டுகின்றவர்களைக் கண்டு நாம் வாளாவிருப்பதில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது இங்கே.

 உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக் கணக்கில் எனது தமிழை நேசிக்கின்ற தமிழ் உள்ளங்களின் எண்ணச் செறிவுக்கு உரமிடும் எனது எழுத்துக்கள்; அது,பண்பற்ற பாதகர்களுக்குச் சூலாயுதமாகத் திரும்புவதுகூட செந்தமிழின் சீற்றம் யாதென அறிவிக்கத்தான்.

நன்றி, உங்கள் நேசத்துக்கு.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
6.3.2012

Monday, March 5, 2012

சுய விளம்பரம் அல்ல:சுய தரிசனம்!


நண்பர்களே,

நான் அறம் சார்ந்துதான் எதையும்
எழுதுகிறவன்;அணுகுகிறவன்.
அதில் உணர்ச்சிகளை அடகு வைக்க
வேண்டியிருக்கிறது.
அது ஜெயித்தால் அறமே வெல்கிறது.
தோற்றால் -
என்னால் அறம் இழிவு பெற்று விடுகிறது
என்பதை எங்கும் எவரிடத்தும்
சொல்லத் தயக்கமில்லை எனக்கு.

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.3.2012

Sunday, March 4, 2012

பொய்யரைப் புரிந்து கொள்ள...


நண்பர்களே,

உங்களுடைய நேர்மையையும் பண்பையும் அடுத்தவர் புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக நீங்கள் வருத்தம் கொள்வதாயின், பிறகு மெல்ல மெல்ல அடுத்தவர்க் கேற்ப உங்கள் நேர்மையையும் பண்பையும் நீர்த்துப் போகச் செய்யத் தயாராகி விட்டீர்கள் என்று ஆகி விடும்.

பிறர் உங்களின் உள்ளப் பாங்கினைப் புரிந்து கொள்ளாமல் எதிர் வினையாடல் செய்கின்றார் என்பதற்காக சினம் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் பிடிவாதக்காரர் என்று அர்த்தம்.

அப்போது நீங்கள் தலைக் கனம் கொண்டவர்போல் விமர்சனத்துக்கு ஆளாகத்தான் வேண்டும். அந்தப் பிடிவாதமும் சினமும் நேர்மை காக்க எடுக்கப் படும் வாள் எனக் கொண்டு நிமிருங்கள்.

அது பொய்தான் என்றாலும் ஒருவகையில் வாய்மைக்கு இவ்வுலகில் - குறிப்பாக அது இல்லாதவர்களிடமிருந்து கிடைக்கும் மதிப்பீடு என்பதையே உணருங்கள்; அத்தகைய மதிப்பீட்டை ஏற்று மகிழுங்கள்.

பொய்யர்களின் புகழ்ச்சியும் சம்மதமும் ஒருபோதும்
சந்தோஷத்தின் கரையில் நம்மைச் சேர்ப்பதில்லை.

வாய்ம்மைக்கு எதிரான பொய்யர்களின் தீர்ப்பும் புல்லர்களின் சூழ்ச்சியும் உங்களுக்குப் புரியும் எனில் நீங்கள் உண்மையிலேயே மகிழ்வோடு உறுதி குலையாமல் இருப்பீர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்வேன்.அதாவது அத்தைய சந்தர்ப்பங்களின் மூலம்தான் வாய்மையும் நேர்மையும் வலுவோடு வரைமுறை செய்யப் படுகின்றன.பொய்ம்மை என்பது வாய்ம்மையைப் பட்டை தீட்டும் ஓர் ’உரைகல்’ என கருதிக் கொள்ளுங்கள்.

நான் சினம் கொள்கின்ற சந்தர்ப்பங்களும் பிடிவாதக்காரனாகி நிற்கின்ற நேரமும் எனக்கு நிறைய நேர்ந்தததுண்டு.

”பொய்யர்களின் எதிர்வினைகள் கண்டு நீ வருத்தம் கொள்ளாது வாழ்வாயாக”  என்று வள்ளுவப் பாட்டன் வந்து எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போய் இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

”பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

என்று ஒரு குறளைத் தன் குரலால் சொல்லி விட்டுப் போயிருக்கிறான்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
4.3.2012

Saturday, March 3, 2012

சினம் என்னும் சிந்தனை!


நண்பர்களே,

’சினம் கொள்ளுதல்’ குறித்தான
சிந்தனை மீது எனக்குச் சினம்தான் வருகிறது.

‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’
என்று
’வள்ளுவன் சொல்லி விட்டானே’
என்பதற்காக
நானும் உயிர் மீது பற்றுக் கொண்டு
அதனைக் ’கொள்ளாது’ விட்டிருந்தேன்.

ஆனால் -

சிறுமைத் தனமும் சிந்திக்கின்ற அறிவும் இன்றி அரைவேக்காட்டுத்தனமான
ஆர்வக் கோளாறுகள் மட்டுமே கொண்டு
பண்பு நலம் தெரியா மூடர்களும் ஒழுக்கக் கேடர்களும்
நான் எழுதும் அறம் கண்டு சினமுற்றுச் சீண்டுகிறார்கள்.

அந்தச் சினம் -
அவர்களைக் கொல்லாது
நம்மைக் கொல்வது போல் வந்தால்,

நாம் அண்ணல் காந்தியின் அஹிம்ஸைக் கட்சியிலிருந்து விலகி நேதாஜியின் ராணுவத்தில் சேர வேண்டியதுதான்!

‘கொலை வாளினை எடடா;
கொடியோர் செயல் அறவே’
என்று உசுப்பி விட்ட பாரதிதாசனின் கவிதைச் சீற்றம்
ஏனோ சில சமயம் நம்மைக் கவ்வத்தான் செய்கின்றது!

இவண்-
கிருஷ்ணன்பாலா
3.3.2012

Friday, March 2, 2012

தமிழ்மொழி போற்றுதும்!


அன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.
 
இங்கும் சில வலைத்தளங்களிலும் ‘எழுதுகிறேன் பேர்வழி’’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு பலரும் ’தமிலில்’ ’வெலுத்து’ வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் பின்னால் ஒரு படையே அணிதிரண்டு கரவொலியும் சிரவொலியும் காட்டிப் புளகாங்கித்துக் கொண்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக பெண்கள் சிலர் கொட்டும் எழுத்தின் கவர்ச்சியும் அதைப் படித்து விட்டு, ‘எழுத்துக் கத்துக்குட்டிகள்’ பல, எட்டும் எழுச்சியும் கண்டு நாம் வாளாவிருப்பது நல்லதா?’ என்ற சிந்தனை எழுகிறது.

இதே முகநூலில் எழுதத் தெரிந்தோரும் எண்ணம் செழித்தோரும் இல்லாமல் இல்லை. அவர்கள் தரம் குன்றாத் தமிழை தலை நிமிர எழுதி வருகிறார்கள்.

ஆனால், ‘அதிகம் பெருகிவரும் தரம் கெட்ட எழுத்துக்களின் பரவலை நாம் கண்டிக்கத் தவறுவது தமிழுக்கு நாம் செய்யும் துரோகம்’ என்றே சொல்வேன்.

தமிழ் உணர்வாளர்களும் மொழி ஆர்வலர்களும் அறிஞர்களும் படைப்பாளர்களும் இதைக் கருத்திற் கொள்ளாது, தங்கள் போக்கிலேயே இருப்பதும்கூடக் கண்டிக்கத் தக்கதுதான். 

அவர்கள் தாங்கள் வாழும் சமூகத்துக்கு எதைச் சொல்ல வருகிறார்களோ அதன் நோக்கம் பாழ்பட்டுப் போக வழி தருகிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள முடியும்.

எழுத வருவோரின் எழுத்தார்வத்தை நாம் வரவேற்கின்ற அதேசமயத்தில்,
’அவர்களுக்கு மொழியின் ஆளுமை இல்லா விட்டாலும் அதன் பண்பினை உணர்ந்து எழுத வேண்டும்’ என்ற கருத்தை உணர்த்துவதற்கும் நாம் தயங்கக் கூடாது.

தமிழ் மொழியின் தரத்தையும் அதன் வரத்தையும் தெரிந்து கொண்டு எழுத முனைவதுதான் ‘அறிவுக்கும் நம்மை இவ்வுலகிற்கு ஈன்ற அன்னைத் தமிழுக்கும் நாம் செலுத்தும் காணிக்கை’ என்பதை எழுத முனைவோர் கருத்தில் கொள்ள வேண்டும்.

காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களை வெளிப்படுத்தியும் வசைபாடும் வார்த்தைகளை வரிசைப் படுத்தியும் எழுதுவோர் 'அத்தகைய எழுத்துக்கள் தங்கள் ஈன்ற தாயை இழிவு படுத்துவதற்கு ஈடானது' என்பதையும் உணர வேண்டும்.

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதி.

அவன் தமிழை மட்டும் படித்து விட்டு இதைத் தற்பெருமைக்காகச் சொல்லவில்லை; தலை சிறந்த சமற்கிருதம்,இந்தி,ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் முதலான பிற மொழிகளையும் கற்று அவற்றில் புலமை பெற்றவனாய்ச் சொன்ன வார்த்தை இது..

இது நம் கத்துக் குட்டிகளுக்குத் தெரியாதுதான் எனினும், அவர்கள் இந்த மேன்மையை உணர்ந்து கொண்டு எழுதுவதுதான் நல்லது.

பல்வேறு வலைத்தளங்களில் சென்று ‘அவற்றில் எழுதுவோரின் எண்ணங்களையும் எழுத்தின் லட்சணங்களையும்; எழுதுவோர் எவ்வாறு சிந்திக்கின்றார்கள்?’ என்பதையும் கவனிப்பது எனது வழக்கம்.

ஒரு சில வலைத்தளங்களில் வாசகர் அல்லது பார்வையாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரமாகப் பதிவாகி இருப்பதையும் பார்த்தேன். அப்படியானால் அந்த வலைப் பதிவுகளின் படைப்புக்கள் எத்தகையது? என்பதையும் கவனித்தேன்,

பிழையான வார்த்தைகளில் மட்டுமல்ல; பிழைப்புக் கெட்டக் கருத்துக்களிலும் தொடர்ந்து கைக்கிளைக் காதல் உணர்வுகளையும்
(அதாவது ஒருதலைக் காதல் ஏக்கங்கள்) அது சார்ந்த வரட்டுக் கருத்துக்களையுமே ’கவிதை’ என்று கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

குறிப்பாகப் பெண்கள் சிலர்.

அவர்களுடைய தமிழும் சரியில்லை;எழுதும் பண்பும் சரியில்லை; 

எனினும் சில வலைப் பதிவுகளில் ’கவிதை’ என்ற பெயரிலும் சமூகப் பார்வை என்ற நோக்கிலும் எழுதப்படும் பதிவுகளுக்குப் பலர் ‘உச்சுக் கொட்டுவதை’க் கண்டு தமது படைப்புக்களுக்குக் கிடைக்கின்ற வரவேற்பாகவும் அங்கீகாரமாகவும் கருதிக் கொண்டு உணர்ச்சி வேகம் கொள்கின்ற கத்துக்குட்டி எழுத்தாளர்கள் மிகுந்த வலைத்தளங்கள் தமிழின் நறுமணத்தைப் பரப்பாது, துர்நாற்றச் சிந்தனைகளையே பரப்பி வருகின்றன.

புதிதாய் எழுதவரும் இளம் படைப்பாளர்களும் இதையே முன்னுதாரணமாகக் கொண்டு இப்படி எழுதினால்தான் நம் எழுத்துக்களுக்குக் கவர்ச்சி இருக்கும்; வரவேற்பும்
கிடைக்கும்’ என்கிற தவறான அனுமானத்துக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.

இவர்களின் எழுத்தில் காதலையும் காமத்தையும் தவிர, நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை ஊட்டுகின்ற நற்கருத்துக்களைக் காண
முடிவதில்லை.

இவர்கள், குறிப்பாகப் பெண்கள், தங்களது காதல் உணர்ச்சிகளைத் தங்கள் கண்ணறாவித் தமிழ் நடையில் எழுதுவதன் மூலம் சந்தனக் காடெனத் திகழும் இலக்கிய மணத்தினூடே சாக்கடை நாற்றம் வீசச் செய்கின்றார்கள்.

எழுத்துச் சுதந்திரம்; எண்ணச் சுதந்திரம் என்ற போர்வையில் காதலையும் கண்ணறாவிக் கருத்துக்களையும் தங்கள் மனம்போன போக்கில் ஒரு சிலர் எழுத, அவ்வாறு எழுதப்படும் விஷயங்கள் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் முன் உதாரணமாகி. பின் அதுவே நம் இளைஞர்களின் எழுத்துக் கலாச்சாரமாகி விடுகின்றது.

இதன் விளைவாக, எழுதும் ஆர்வம் மிக்க இளைஞர்களும் இளம் பெண்களும் அனுபவமும் அறிவும் இல்லாத ஆர்வத்தினால், பண்பும் பயனும் அற்ற படைப்புக்களை இந்த வலைத்தளங்களில் பெருக்கி, நம் தமிழ் மொழியின் செம்மாந்த சீர்மையைச் சிதைத்து வருகின்றார்கள். 

இவர்களின் எழுத்துக்கள், அவர்களைப் பெற்ற தாயும் தந்தையும் பார்த்து
வெட்கித் தலைகுனிந்து போகும் வகையில்தான் இருக்கின்றன.

நான் தலை குனிகிறேன், இத்தகையோரின் எழுத்துக்களைக் கண்டு.

‘இவர்களுக்கு இருக்கும் எழுத்து வேட்கை வரவேற்கத் தக்கதாய் இருப்பினும், அது வடிகட்டத்தக்கது’ என்பதை எச்சரிப்பது, தமிழை ஆராதிப்போரின் கடமை;‘ நம் தமிழ்ச் சாதி தரம் மிக்கது’ என்று இறுமாந்திருப்போரின் உரிமை.

ஆம்,நண்பர்களே,

இவர்களின் எழுத்துக்களைக் காணும் போதெல்லாம் கண்டிக்கத் தலைப் படுங்கள்; தரம்கெட்ட சிந்தனைகளைப் படைப்போரை உங்களின் தண்டமிழால் தண்டிக்கவும் தயங்காதீர்.

அவர்கள் ’தமிழ் என்னும் புனித நதியில் சாக்கடைகளைக்  கலக்காமல் இருப்பது கூட அவர்கள்  தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டுதான்’ என்பதை உணர்த்துங்கள். 

தமிழ்மொழி போற்றுதும்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.3.2102.

Thursday, March 1, 2012

இரண்டு விஷயங்கள்,இன்று!

நாம் மண்டூகங்கள்தான்!
-------------------------------------------------
(மண்டூகம் என்றால் தவளை)




கடவுளை நம்புகிறவன் விதியை முன்னிலைப் படுத்துகிறான்; கடவுளை நம்பாதவன் மதியை முன்னிலைப் படுத்துகிறான்.


நம்புவதும் நம்பாமல் இருப்பதும் இரண்டுமே அறிவுதான்.


அந்த விதியோ,மதியோ எல்லாம் ஒரு நீர்ச் சுழற்சியில் தோன்றி மறைகின்ற நீர்த் திவலைகள்தாம்.


உண்மையில்-


நாம் அந்த நீரில் வாழுகின்ற 
மண்டூகங்களே அன்றி வேறில்லை.


நாம், நம் போக்கில் கத்திக் கொண்டிருக்கின்றோம்;அவ்வளவுதான்.


இவண்-
கிருஷ்ணன்பாலா
1.3.2012






யார் காரணம்?
-------------------------
நீங்கள் இறை நம்பிக்கையும்
தன் நம்பிக்கையும் உள்ளவரா?

‘இறைவனே உங்களை வழி நடத்துகின்றான்’ என்று நீங்கள் நம்புவது உண்மையானால்.உங்கள் தவறுகளுக்கும் அதனால் விளையும் துன்பங்களுக்கும் பிறர் மீது பழியைப் போடாதீர்கள்.


’உங்கள் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளுக்குப் பிறர்தான் காரணம்’
என்பதை முதலில் உறுதியாக ஒதுக்கித் தள்ளுங்கள்.


பிறர் மீது பழி போடும் இழிச் சொற்கள், இழிவான ஒருவனின் உதட்டில் இருந்துதான் பிறக்க முடியும்..

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”

என்கிறது வள்ளுவ வேதம்.
(குறள் எண்; 505 / அதிகாரம்; தெரிந்து தெளிதல் / பிரிவு: பொருட்பால்)

இவண் -
கிருஷ்ணன்பாலா
01.03.2012