Friday, November 16, 2012

வாயுள்ள ‘பிள்ளை’!




நண்பர்களே,

ம.தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து கட்சியை வளர்க்கும் கொள்கைப் பிரச்சாரத்தை விட தன்னை வளர்த்துக் கொண்டு,கூர் தீட்டிய மரத்தையே குத்திப் பார்த்துக் கொண்ட கூர் மதியாளர் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள்.

’சரசர’வென்று வைகோவின் வழியில் வெகு வேகமாக வளர்ந்தவர்,இன்று சராசரி அரசியல்வாதியின் ஆசைகளையும் அவலங்களையும் தன் உள்ளிருப்பெனெ உணர்த்தி நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் சர்க்கஸ் காட்டி மகிழ்வித்து வருபவர்.

இப்போது –
’எந்தக் கட்சியில் இடம் பெறுவது,எந்தக் கட்சி தனக்கு ஏணியாக இருக்கும்’எந்தக் கட்சிக்குச் சென்றால் தனது வாழ்க்கையை இன்னும் வளப்படுத்திக் கொள்ளலாம்’ என்ற பலவகைச் சிந்தனை ஓட்டத்தைக் கொண்டுள்ள ம.தி.மு.கவின் முன்னாள் கொ.ப.செ. இப்போது திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்.

தி.மு.க.;அ.தி.மு.க.; தே.மு.தி.க என்பன அவருடைய அடுத்த மேடைகளாய் இருப்பதாக வதந்திகள் வலம் வருகின்றன. அதுகுறித்து முடிவாக விரைவில் ‘தந்தி’ வரும் என்று நம்புகிறோம்.

‘வாயுள்ள ‘பிள்ளை’ பிழைத்துக் கொள்ளும்’ என்பது நாஞ்சில் சம்பத்துக்காகச் சொல்லப் பட்ட சொலவடை. வாய் என்பது நாக்கு என்று இங்கு பொருள் கொள்ள வேண்டும்;நாவரசு அவர்.

அதை வாள் போல் சுழற்றி சுழற்றிச் சுற்றிவரும் பகையை முடிப்பவர். பல நாக்குகளை-மன்னிக்கவும் -வாட்களைக் கொண்டவர்.

எப்படி வேண்டுமானாலும் சுழற்றி,பகைவரை நண்பராக்கி அவர்களிடம் சரணாகதியடையும் சாமர்த்தியம்  இவருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டதில் புளகாங்கிதம் கொள்கிறோம்!

“நெஞ்சில் உரமுமின்றி;
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை செய்வாரடி;கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி!”

என்றான் நம் மகாகவி பாரதி.

வாய்ச் சொல் வீரர்களின் சபைக்கு இந்த நாவரசரைத் தலைமை தாங்க முன் மொழிவோம் நண்பர்களே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
16.11.2012


No comments: