Monday, January 16, 2012

நவில்தொறும் நூல் நயம் போலும்….







நண்பர்களே,
வணக்கம்.
இந்த முகநூலை நட்புக்குரிய வலைத்தளம் என்று புரிந்து கொண்டு எழுதி வரும் யாவரும்நட்புஎனில் யாது? என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் நீங்கள் முதலிடம் கொடுப்பவர் என்றால் இந்தக் குறிக்கோளில் இம்மி அளவும் பிசாகதிருப்பவராய் உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம்.

நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு

என வள்ளுவப் பெருந்தகை எடுத்துச் சொன்னபொருட்பாலின்’ ‘நட்புஎனும் அதிகாரத்தில் உள்ள குறள் நெறியின் இலக்கணப் பண்புடையாளாராக நீங்கள் இருக்கும்பொழுது, உங்களுடைய தொடர்பானது நயம் மிகுந்த நல்ல நூல்களைப் படித்து ஒருவன் பெறுகின்ற அறிவுப் பயன் போல், உங்களுடன் பழகுகின்ற நண்பர்களுக்குப் பண்பும் பயனும் விளையத் தக்க வகையிலும் இந்தத் தமிழ் சமுதாயத்துக்கு உரமூட்டும் வகையிலும் உங்கள் எண்ணங்களும் அவற்றின் வெளிப்பாடுகளாக  எழுத்துக்களும் இயல்பாகவே அமையும் என்பது திண்ணம்.

இன்று விதைப்பதுதான் நாளை முளைக்கும்;நாளை முளைப்பதுதான் உங்கள் எதிர்காலச் சந்ததிக்கு நீங்கள் தரப் போகும் சொத்து
இங்கேநீங்கள் எழுதுவது வெறும் பொழுது போக்குக்குத்தான்என்றில்லாமல் பண்பு சார்ந்த படைப்புக்களைத் தருவதற்கு விரும்புங்கள்.

சிலர் இங்கே எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது இந்த எண்ணத்தை இந்த முகநூல் வலைத்தள நண்பர்களிடையே பரப்புவது தேவை ஆகிறது.

இணையதளத்தைப் பயன் படுத்தத் தெரிந்தவர்களில் சிலர்  இதனைப் பெரிய அளவில் மாசுபடுத்தி வருகிறார்கள். கருத்துச் சுதந்திரம்;எழுத்துச் சுதந்திரம் என்கிற உரிமையில் ஆபாசத்தையும் அசிங்கத்தையும்  கொஞ்சமும் கூச்சமின்றியும் வெட்கமின்றியும் இங்கே எழுத்துக்களாகக் கடை விரிக்கின்றார்கள். அதிலும் சிலர்பெண்என்ற போர்வையில் காட்டும் கடைகெட்ட கழிசடை எழுத்துக்கள்,காணவும்  எண்ணிப் பார்த்தால் நாணவுமான -  சகிக்க முடியா வக்கிரங்களை வடித்துக் காட்டுகின்றன.

இவர்களின் ஆபாச எழுத்துக்கள் இங்கே மலிந்து வருவதையும் அதை ரசித்து ஒரு கூட்டம் மெலிந்து உருகுவதையும் காணும்போது.’நாம் தமிழர்களா? நமது தமிழை இப்படியெல்லாம் கீழ்த்தரமான எண்ணங்களைக் கவிதை என்றும் கட்டுரை என்றும் எழுதும் துணிவும் தூண்டலும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?’ என்று சினம் கொள்ளத் தூண்டுகின்றது.

குறிப்பாக, சில பெண்கள் வெட்கமும் விவேகமும் இன்றி விபச்சாரத்தனமாக  எழுதுகின்றனர். இவர்கள் உண்மையிலேயே பெண்கள்தானா?  இவர்களுக்குப் பெற்றவர்களும் கற்றவர்களும் உற்றவர்களாய் இல்லையா?  இவர்களின் உடன் பிறந்தாரும் இவர்களின்  பிள்ளைகளும் இந்த எழுத்துக்களைப் படித்து ரசிக்கின்றவர்களா?  என்றெல்லாம்கூட நமக்கு எண்ணம் தோன்றி நம்மைத் தலை குனியவும் வைக்கின்றது.

இவர்கள்,மிக மிகக் கீழ்த்தரமாக எழுதுவதை ஆராதிக்கவும் ரசிக்கவும் சிலாகித்துப் புகழவும் என்று ஒரு சிறு மதியாளர் கூட்டமும் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய போக்கினை நாம் கண்டும் காணாதவர்களாய் இருப்பது நமது எதிர் காலச் சந்ததியினரை ஆரோக்கியமற்ற விஷயங்களின் அடிமைகளாக ஆக்கவே ஊக்கப்படுத்துவதாகி விடும். உங்களைவிட உங்கள் பிள்ளைகள் இந்த கணினிகளின் கைப்பிள்ளைகளாகி,உங்களை அனாதைகளாக விட்டு விடுகின்ற அவலம் ஏற்பட்டு விடும்.

தமிழினத்தின் மாண்பை எல்லாம் வெட்டி சாய்த்து, விறகாக்கி,எரிக்கத் துடிக்கும் இந்தக் கோடரிக் காம்புகள், தங்கள் தரங்கெட்ட எழுத்துக்களுக்குக் கவிதை என்றுவேறு தம்பட்டம் அடித்துக் கொண்டுஅந்தக் கண்ணராவி எழுத்துக்களை, பிற படைப்பாளர்களுக்கும் இணைப்புக்களாக அனுப்பி வருகிறார்கள். எனக்கு வந்த அந்த அசிங்கத்தை இங்கு எடுத்துக் காட்டாது, எச்சரித்து எழுத வேண்டியது எனது கடமை.

இப்படியெல்லாம் எழுதுவதில் தவறென்ன?’ என்று எனது நண்பர்கள் சிலர்கூட என்னிடம் வாதித்ததுண்டு.

உள்ளத்தில் உள்ளதை- அது கொச்சைத் தனமான விஷயங்கள் என்றாலும்கூட அதை அப்படியே எடுத்துச் சொல்வதுதான் எழுத்துச் சுதந்திரம்என்ற எண்ணம்,வலைத்தள வசதிகளால் புது எழுத்தாளர்களாகிக் கொண்டிருக்கும் சில புதுப் பணக்காரர்களுக்கும் வந்திருக்கிறது’ என்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.

எதையும் எழுதலாம்;எண்ணப்படி வாழலாம்’  என்பதும் எதிரெதில் பழகிக் கொள்ளாமலேயே இணையதளத்தின் மூலம் இணையற்ற நண்பர்களைப் பெற்றுள்ளோம் என்பதும் இன்றைய பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல, வேலை இன்றி வெட்டிப்பொழுது கழிக்கும் வயது மூத்தவர்களுக்கும்கூட பெரும் கனவாகி விட்டதால் இவர்கள் வீண் கற்பனை வலையில் வீழ்ந்து வெந்து கொண்டிருக்கிறார்களோ? என்ற ஐயம் நமக்கு எழுந்துள்ளது.

கணவனிடமோ மனைவியிடமோ அன்பும் நட்பும் காட்டாது,பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாது, வயதான பெற்றொர்களின் வாட்டத்தில் நாட்டம் செலுத்தாது.நாம் எங்கே பயணப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தாது கணினியின் நட்பில் கவனம் செலுத்தி  புத்தியும் செயலும் கறை பிடித்து போய் விடுகின்றவாறு அவர்களை வசீகரப்படுத்தி வஞ்சிக்கக்கூடிய SLOW POISION என்னும் ஆபாசமான அசிங்கங்கள் இங்கே இலவசமாகவே அரங்கேற்றப் படுவதை எச்சரிப்பது, பண்புடையாளரின் தொடர்பினால்தான் இயலும்.

நண்பர்களே,
நாம் நமது பண்புகளில் மாறாதிருப்பதும் பண்பற்றவர்களின் நட்பை நாடாதிருப்பதும் அறிவுடையோருக்கு அழகு. அதைவிட நமது பண்புகளுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை,பதிவுகளை,அது  ‘எண்ணச் சுதந்திரம் என்ற உரிமையில் எழுதப் பட்டாலும் கண்டிப்பதும்,காறி உமிழத் துணிவதும்தான்  நாம் தமிழுக்குக் காட்டும் மரியாதை.

இதை உணர்ந்து,பிறருக்கு உணர்த்தி எழுதுங்கள்.

உங்களின் இன்றைய எழுத்துக்கள்தான் நாளை, உங்களுக்கு அணிவிக்கப்படும் மாலையில் கோர்க்கப்படும் மலர்ச் சரங்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

எனவே,உங்கள் எண்ணம் என்னும் தோட்டத்தின் மண்ணை வளம் உள்ளதாக்கி, அதில், சத்தான வித்துக்களையே விதையுங்கள், நண்பர்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
16.1.2012

2 comments:

Ramabarathi said...

நண்பரே, இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. எதை எந்த இடத்தில் எழுத வேண்டும் என தெரியாத பலரின் உளறல்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.