Sunday, January 15, 2012

பொங்குக பொங்கல்!




‘எல்லோரும் எல்லாமும் பெறுதல்’ என்ற
இலக்கணத்தை எடுத்துரைத்து;இந்த மண்ணில்
எல்லார்க்கும் உயிர்வாழ இறைவன் தந்த
ஈகைக்கு நன்றி சொலும் திருநாள் என்று
முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த நாளாய்
முன்னேர்ப் பிடித்து,இந்தத் தரணி தன்னில்
தன்னேர் இல்லாத தமிழர் பண்பின்
தலைசிறந்த பண்டிகையாய்க் கண்டோம் நாமே!


மஞ்சளொடு வாழை,நெல்,கரும்பு என்று
மண்பானைப் பொங்கலிட்டு,உழவைப் போற்றி,
வஞ்சியரின் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள
வளைய வரும் வாலிபர்தம்வீரம் காட்ட
காளைகளை அடக்குகின்ற காளைகளாய்க்
காணுமொரு பொங்கலெனப் போற்றி,இந்த
நாளைநம் தலைமுறைகள்தோறும் கண்டு
நலமார்ந்த பண்டிகையாய்க் கொண்டோ மன்றோ?

எப்பெரிய பண்டிகையும் பொங்கல் முன்பு
எதிர் நிற்க முடியாது;உலகில் மூத்த
எப்பெரிய இனத்தாரும் தமிழர்க் கீடு
இல்லை;அதை உணர்வீர்,என் சுற்றத்தீரே!
எங்கிருந்த போதும்;இதை மறவாதீர்கள்;
எல்லோர்க்கும் எடுத்திதையே ஓதி நின்று
சங்கம்வளர்த்த தமிழ்ப் பண்பை உங்கள்
சந்ததியர் அறிந்துணரப் பொங்குவீரே!

வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன்பாலா
15.1.2012

2 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

V.Rajalakshmi said...

//சங்கம்வளர்த்த தமிழ்ப் பண்பை உங்கள்
சந்ததியர் அறிந்துணரப் பொங்குவீரே!//
அனைத்து தமிழரும் செய்ய வேண்டியது செய்வாராகளா என்பது கேள்விக்குறியே!!