இன்று (30.12.2011) நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் அதன் பொதுச் செயலாளரும்,தமிழக
முதல்வருமான மேடம் ஜெ. அவர்களின் பேச்சுத்தான் இன்றைய (31.12.2011) செய்திகளின் தலைப்பு.
மிகவும் மாறுபட்ட தெம்பும் தெளிவோடும் மேடம் ஜெ. சற்றும் குழப்பம் இன்றி ஆற்றிய உரை முன்
எப்போதும் இல்லாத உறுதியுடன் வெளிப்பட்டிருப்பது
குறிப்பிடத் தக்கது.
அண்மையில் கட்சியில் அவர் எடுத்த களை எடுப்பில் அவர் காட்டி
நிற்கும் வேகமும் அதன் காரணங்களின்மீது கொண்டிருக்கும் கோபமும் மாறாதது;அது நிலையானது;நிஜமானது
என்பதை பகிரங்கப் படுத்தியிருக்கிறார்.பாராட்டுவோம்.
"கட்சியிலிருந்து
நீக்கப் பட்டவர்கள், வேறு கட்சிகளுக்குச் சென்று அரசியலைத் தொடர்வதில் தவறில்லை;அது
ஏற்றுக் கொள்ளப் படக் கூடியதுதான்.ஆனால் நீக்கப் பட்டவர்கள் அதே கட்சிக்காரர்களிடம்,’தாங்கள்
மீண்டும் கட்சிக்குள் வந்து கட்சியைக் கைப்பற்றி இப்போது தங்களுக்கு ஆதரவாக நடந்து
கொள்ளாதவர்களைப் பழிவாங்குவோம்’ என்று பிரச்சாரம் செய்து வருவதை மன்னிக்கவே முடியாது” என்றும் ”அவர்களுக்கும்
அவர்கள் பேச்சைக் கேட்கும் கட்சிக்காரர்களையும் மன்னிக்கவே முடியாது” என்றும் மேடம்
ஜெ.அவர்கள் மிகக் கடுமையான குரலில் பேசியிருப்பதன் மூலம் கட்சியை விட்டும் போயஸ் தோட்டத்தில்
இருந்தும் களை எடுக்கப் பட்டவர்களின் கபட நாடகங்களுக்கும் சதி ஆடல்களுக்கும் சாவு மணி
அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரது பேச்சும் கருத்துக்களின் கோர்வையும் கடுமையான விமர்சகர்களும்
குறைகாண முடியாதவாறும் பாராட்டக் கூடிய வகையிலும் அமைந்திருக்கிறது என்பது உண்மை. இது
மேடம் ஜெ.அவர்களுக்கு நல்ல ஆட்சியைத் தருவதற்கேற்ற
ஆலோசனைகளை வழங்கும் மதிப்புக்குரிய ஆலோசகர்கள் இப்போது பின்புலத்தில் வந்திருப்பது
தெரிகிறது.
இது இனி தமிழ் நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்கும் ஆரோக்கியமான
அரசியல் அணுகுமுறைகளுக்கும் நல்ல திருப்பத்தைத் தரும் என்று நாம் எதிர்பார்க்கும் அதே
தருணத்தில்,கடந்த கால ஊழல், அதற்குக் காரணமானவர்கள்,சட்டத்தை ஏமாற்றி நடத்திய அத்தனை
குற்றங்களும் வெளிக் கொணரப் பட வேண்டும்; அவர்களை வெளியேற்றி விட்டதுடன் நின்று விடாமல்,
ஏமாற்றப் பட்டவர்களின் நிலை,இழப்பு, கொள்ளையடித்த சொத்துக்கள்,இவற்றை ஈடு கட்டும் செயல்முறை,உடந்தையாக
இருந்த அதிகாரிகள், அவர்கள் மீதான நடவடிக்கை மற்றும் அதற்கான சட்டப்படியான தண்டனை யாவும்
உரிய முறையில் இருக்க வேண்டும்.
தவறு யார் செய்திருந்தாலும் அதைத் தீவிரமாக சட்டத்தின் முன்பு
விசாரித்து,நேர்மையான அரசு நிர்வாகம் அமைய சம்பந்தப் பட்டவர்கள் முன் வரவேண்டும்.
குற்றம் செய்தவர்களின் பின்பலம் கருதி அவர்கள் தப்பிவிடுவதோ,
தப்ப விடுவதோ கூடாது. அப்படி விட்டு விட்டால் இப்போதைய நடவடிக்கைகள் எல்லாம் எதையோ
காப்பாற்றிக் கொள்ள எதற்கோ ஆடிய நாடகமாய் முடிந்து இன்னொரு அரசியல் கேலிக் கூத்தின்
ராஜ ரகசியத்தைக் காப்பாற்றும் சதியாகவே ஆகிவிடும்.
இது இன்றைய அறிவார்ந்த ஆலோசகர்களுக்குப் புரியாததல்ல:
மேடம் ஜெ.அவர்கள் புரிந்து கொள்வாரா?
உண்மையுடன்,
கிருஷ்ணன்பாலா
31.12.2011
No comments:
Post a Comment