Wednesday, August 18, 2010

தமிழா,தமிழா...!

அன்பிற்குரிய நண்பர்களே;
அறிவிற்சிறந்த தமிழர்களே!
ஒன்று உரைத்திட விழைகின்றேன்;
உண்மையைப் பகிர்ந்திட வாரீரே!


அன்றைய தமிழர் வாழ்வுச் சிறப்பினை,
அடுக்கடுக்காகச் சிந்தித் தால்,
இன்றைய நிலையில் நமக்குள் எழுவது,
இதயம் வெடிக்கும் பெருமூச்சே!


’தமிழர்நாம்' எனும் தனிப் பெருங் குணங்களில்
தரணியில் நிமிர்ந்து நின்றிருந்தோம்;
அமிழ்தினும் இனிய தமிழ் மொழி கொண்டு'
அரிமா' நாங்கள் என்றிருந்தோம்;


எல்லை விரித்து இமயம் வரைக்கும்
இணையறு வீரம் படைத் திருந்தோம்
இல்லை'என்பதை இல்லா தொழித்து
எல்லா வளமும் செழித்திருந்தோம்!


மானுட தர்மம் நிலைத்திடும் வகையில்
மண்ணில் ஆட்சியைப் பெற்றிருந்தோம்;
வான்மழை பொய்யா திருந்திடும் வண்ணம்,
வழுவா அறநெறி கற்றிருந்தோம்!


ஆழ்கடல் மூழ்கி முத்துக் குளித்து
அன்னியர் நத்திட வாழ்ந்திருந்தோம்:
ஏழ்கடல் யாவிலும் கப்பல் செலுத்தி
எங்கும் தமிழ்மணம் சூழ்ந்திருந்தோம்;


திரைகடல் ஓடியும் திரவியம் தேடி
தேசங்கள் எல்லாம் தெரிந்திருந்தோம்;
வருவதை உரைக்கும் வல்லமை திகழும்
வான சாத்திரம் அறிந்திருந்தோம்!


யாழும் முழவும் சூழும் இசையில்
யாவரும் மயங்கும் கலை படைத்தோம்;
ஊழும் ஒதுங்கும் ஆலயம் செய்து
உன்னத நுட்பச் சிலை வடித்தோம்!


"என்று பிறந்தது?' என் றுணராத
இலக் கண மரபு கொண்டிருந்தோம்;
தொன்று புகழ்நிறை தொல்காப் பியத்தால்
தூயதமிழ் நெறி கண்டிருந்தோம்!


எந்நாட்டவர்க்கும் எடுத்துரைக்கின்ற
இலக்கிய ஞானம் தெளிந்திருந்தோம்;
சன்மார்க்கத்தின் தனி ஒளி பரவிட
சமதரு மத்தில் கனிந் திருந்தோம்!


அன்று நிறைந்ததனைத்திலும் வலிமை
அடுக்கடுக்காக இழந்து விட்டோம்;
இன்று பழமையை எண்ணும் பெருமை
இருப்பதில் மட்டும் உயர்ந்து விட்டோம்!


இன்று நமக்கிது நல்வழியா?
இனி,நாம் தொடர்வதும் இதைத்தானா?
நன்று ,நற்றமிழ் நண்பர்களே...!
நாளை,நம்செயல் விதி வழியா?

என்று தொலைந்திடும்? என்று கலைந்திடும்?
எங்களின் இருட்டு வெறும் கனவு?
என்று புலர்ந்திடும்? என்று மலர்ந்திடும்?
எங்களின் உண்மைப் புத்துணர்வு?




--------கிருஷ்ணன் பாலா--------



(’தமிழர் பண்பாடு’ என்ற இதழில் 1984-ல் பிரசுரம் பெற்றது)

No comments: