Sunday, March 1, 2015

அஞ்சுவது அஞ்சல்!

அறிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

'ஆணாதிக்கத்தின் அடையாளம் ' என, எனது  பதிவுகளைப் போலி பெண்ணியக்கவாதிகள் (வியாதிகள்) முத்திரை குத்தி எனது பக்கத்தில் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லை’ என கங்கணம் கட்டிக்  கொண்டு, காணாத தூரத்தே ஓடி விட்டதுண்டு.

எனது வலைத்தளம் மற்றும் இந்த முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்ற நண்பர்கள்,வாசகப் பெருமக்கள் இதனை அறிவர்.

அரைகுறை அறிவும் அதுபோலவே  ஆடையும் ஜாடையும் தரித்துக் கொண்டு பெண்ணினத்தின் பேரிகைகளாய்க் காட்டிக் கொள்ளும்  அவர்கள், உண்மையில் பெண்குலத்தை நாசம் செய்கின்ற பேரிடிகள் என்பதை நான் அறிவேன்.

வாழ்க்கையில் அன்பும் இல்லாமல் அறமும் இல்லாமல் துன்பவியலில் கண்டதை நாடும் காரிகைகளான இவர்கள் பண்புமிக்க பெண்கள் முகநூலில் பண்பாடு குறையாமல் எழுதும் நல்ல பெண்மணிகள் இருப்பதை விரும்புவதில்லை; நான் அவ்வப்போது எழுதும் மரபு போற்றும் பதிவுகளில் கருத்துரைக்கும் பெண்களைக் கூட எனக்கு எதிராகக் கரைக்கும் கயமை எண்ணங்களிலும்  அவர்கள் ஈடுபட்டதுண்டு.

ஆனால் இத்தகைய ‘வரைவின் மகளிரின்’வலைக்குள் வீழ்ந்து விடாமல், எனது உணர்வுகளின் உண்மைத் தன்மையிலும் ஒழுக்க நெறி போற்றும் ஒண்தமிழ் நடையிலும் நட்பும் அன்பும் காட்டிக், கருத்துரைக்கவும் பதிவுகளைப் படித்து விருப்பக் குறி (Like) இடவும் நற்குணவதிகள் இருக்கின்றார்கள்.

ஒருவகையில், எனது பதிவுகளைப் படித்து Like இடும் பெண்கள் பண்புமிக்க தாய்க் குலத்தின் பிரதிநிதிகளாக இங்கு அவர்கள் தங்கள் பக்கத்தில் எழுதி வருவதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அத்தகையோரின் பதிவுகளை நான்  தொடர்ந்து படித்தும் வருகின்றேன்

நான் பெண்மையைப் போற்றுகின்றவன்;அதன் பெருமையை விவரிக்கின்றவன். பெண்மையின்  பண்புகளை வளர்க்கவும் வாழ்த்தவுமான பதிவுகளை எழுதுகின்றவன்.

பெண்ணின் பெருந்தக்க பண்புகளை  வலியுறுத்தியும் போற்றியும் எழுதப்படும் எழுத்துக்கள் இன்று பெண்’ணீயம்’ பேசும் பித்தளைப் புர்ர்ரட்’சீ’’க்களுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதாக  இருக்கின்றது. 

’அவ்விதம் எழுதுவது ஆணாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு’ என்று விளம்பும் எவரையும் அஞ்சாது எதிர் கொள்பவன். 

அதேசமயம், நற்பண்பு கொண்டிங்கு பதிவுகள் இடும் எந்தப்பெண்மணியின்  உள்ளமும் உணர்வும் எனது எழுத்துக்களால் கசந்து  வருந்துமானால்  அதற்கு அஞ்சுபவன்.

”அஞ்சுவது அஞ்சாமை பேதைமை;அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்”    அன்றோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா

27.2.2015

Friday, February 27, 2015

இவர்களே,கோடாரிக் காம்புகள்!


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

'தான் ஒன்றும் இறைப்பணி செய்யவில்லை; கிறிஸ்துவ மதம் இங்கே அதிக அளவில் பரவுவதற்காகவே பணி செய்ய வந்தேன்: அதைத்தான் முழுமூச்சாகச் செய்து வருகின்றேன்’ என்பது மதர் தெரசா அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்ட உண்மை.

அந்த உண்மையின் அடிப்படையில் “ இந்தியப் பாரம்பரியக் கலாச்சாரத்தை அழித்து, மதம் மாற்றும் வேலைகளைச்   செய்தவர் மதர் தெரஸா;அதனால் அவரை நாம் ’புனிதர்’  என்று ஏற்றுக் கொள்ள முடியாது; அவர் செய்தது இந்திய இறையாண்மைக்கு எதிரான சேவையைத்தான்’ என்ற பேருண்மையை,   ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக்’ அமைப்பின் இன்றைய  தலைவர் திரு மோகன் பகவத் அவர்கள் குறிப்பிட்டு, “ மதர் தெரஸா அவர்கள் இந்தியாவில் செய்து வந்த தொண்டுகள் அனைத்தும் இந்தியாவின் ஒட்டு மொத்தக் கலாசாரப் பண்புக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் எதிரான ‘மத மாற்றத் தொண்டே தவிர அறப்பணி அல்ல’.என்பதையும் தீரத்தோடும் தெளிவோடும் உணர்த்தி இருக்கிறார்.

இந்தக் கருத்தில் தேச நலன் பேணுகின்றவர்கள் யாரும் மாறுபாடு
கொள்ள முடியாது.

மக்களின் பசியையும்  நோயையும் வறுமையையும் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களை மிக எளிதில் கிறித்துவத்தைத் தழுவச் செய்யலாம்’ என்ற  வாடிகனின் திட்டமானது நிச்சயம் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தைச் சீர் குலைத்து,அழித்து அதன் மக்களுக்குப் பணம்,பதவிகளைக் காட்டி அவர்களைத் தங்கள் சொந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைக்கும் குரூரத் திட்டமே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

மதம் மாற்றத்துக்காகச் செலவிடப்படும் பணமும் நடத்தப்படும் வழிபாட்டு முறைகளும் அளிக்கப்படும் சலுகைகளும் போகப் போக ஒரு தேசத்துக்கு எதிரான விளைவுகளைத்தான் தரும்.

எனவேதான், இந்தியாவில் ’மத மாற்றத்துக்கு எதிரான சட்டம் தேவை என்பது தேச நலன் பேணுவோரின் விருப்பமாக  இருக்கிறது..

நாட்டின் ஒட்டு மொத்த நலன் கருதி எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக,இங்கே மைனாரிட்டிகளின் ஓட்டுப் பிச்சைக்காகத் திருவோடு ஏந்தித் திரிகின்ற கட்சித் தலைவர்களும் நடுநிலையாளர்கள் என்று காட்டிக் கொண்டு இந்த மண்ணுக்கு எப்போதுமே கெடுநிலையாளர்களாக இருப்பவர்களும் கருத்துச் சுதந்திரம் என்ற  பெயரில் கண்டிப்பதும் விவாதம் என்ற பெயரில் மீடியாக்களில் வாந்தி எடுப்பதும் தங்கள் கடமை எனக் காட்டிக் கொண்டுள்ளனர்.

மதர் தெரஸா ஒரு மதப் பிரசங்கிதான்!
ஆனால் -
அவரைப் ’புனிதர்’ என்றும் ’விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்’ என்றும் பொங்கி எழுவோர் யாராயினும் அவர்கள் அதிகப்பிரசங்கிகள்.

அவர் செய்தது மதத்தைப் பரப்பும் தொண்டுகளைத்தான்.
அதற்காக அவருக்கு நோபல் பரிசும் புனிதர் என்ற போற்றுதலும் அளிப்பதெல்லாம் மதத் தொண்டினை ஊக்கும்விக்கும் ’ COMMERCIAL CONTRIBUTION' எனப்படும் ’வணிகநோக்க  வெகுமதி  ஊக்கு’விப்பே தவிர, உண்மையான மக்கள் தொண்டுக்கு அளித்ததாகாது.

உண்மையை உற்று நோக்காது மோகன் பகவத் சொன்னார் என்பதற்காகவே மதச் சாயம் பூசி அதற்கு உள் நோக்கம் கற்பிக்கின்றவர்களும் மதர் தெரஸாவின் உண்மையான நிலைக்கு மாறாகப்  பொய்யான புகழுரை வாசிப்போரும் கருத்துக் குருடர்கள் மட்டுமின்றி ,இந்தியப் பாரம்பரியத்தின் அழிவுக்கு ஆலாபணை செய்பவர்களும்தான்!.

இன்னும் சொல்லப்போனால் கோடாரிக் காம்புகள்.

அதாவது ஒரு மரத்தின் கிளையிலிருந்து செய்யப்பட்ட கோடரியானது அதன் தாயாகிய மரத்தையே  வெட்டுவதற்குப் பயன் ஆகிறதல்லவா?
அந்தக் கோடாரிக் காம்புகள்.

பிறந்த தாய் நாட்டின் பெருமையைச் சீர்குலைக்கின்றவர்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.2.2015

Tuesday, February 24, 2015

அல்லவை தேயட்டும்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

கூர்த்த மதி, பட்டறிவு, நேர்த்தியான எண்ணங்கள், அதிர்ஷ்டம் நிறைந்த 
வாழ்க்கை  .... இவை அமையப் பெற்ற ஒருவர் இந்திய அரசியலில் இருக்கிறார்என்றால் அவர் மேடம் ஜெ.ஜெயலலிதா தான்.

‘என்ன பேசுகிறாரோ அதை நிறைவேற்றும் துணிவு கொண்டவராகவும் 
துணிவான கருத்துக்களை துச்சமாகப் பேசும் திறன் கொண்டவராகவும் உள்ள ஒருவர்’  என்று நாடு அடையாளம் கண்ட இவருக்கு  இன்று பிறந்த நாள்.

 67 ஆண்டுகள் நிறைவு  பெற்றிருக்கிறார்.

மேடம்  ஜெ.அவர்கள் மேலும் பல்லாண்டுகள் உடல் நலத்தோடும் 
மன வளத்தோடும் வாழ்ந்திருக்க வாழ்த்துகின்றேன்.

இன்றைய  அரசியலில்  இவர்  ஒரு  மிகப் பெரும் சக்தியாகத்  திகழ்வது இறைவன் இவருக்கு அளித்திருக்கும் கொடை.

அந்தக் கொடையைக்  களங்கப்படுத்தி விடாமல் கண்ணியமும் நேர்மையும் மனத் தூய்மையும் கொண்டு ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை
உருவாக்கும் வல்லமை இருந்தபோதும் இவர் அதை நிலை நாட்டாது,
வெற்றுப் புகழுரைகளுக்குள் புதைந்துபோய், துதிபாடும் அரசியல் கலாச்சாரத்துக்குக் கால்கோள் நாட்டிவிட்டதானது, இவரது அரசியல் வாழ்வுக்கு ஏற்பட்டிருக்கும் கறைபட்ட நிலையும் களங்கமும்  நிறைந்த அவலநிலைதான்’ என்பதையே அறிவுடையோர் காண்கின்றனர்.

யானை தன் தலையில் தானே மண்ணைவாரித் தூற்றிக் கொண்ட கதை
ஏனோ நம் நினைவுக்கு வருகிறது.

இதை இவர் தவிர்த்திருந்தால், இன்று ஆட்சிக்கட்டிலிலிருந்து  நீதித் தேவதையால் நீக்கப்பட்டிருக்கும் நிந்தனை ஏற்பட்டிருக்காது.

’டான்ஸி  வழக்கில் பட்ட அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தவறியதுடன் இரு மடங்கு வீரியத்துடன் இவர் அரசியல் காரியமாற்றத்
தொடங்கி விட்டது ஏன்?’  என்பது நமக்கெல்லாம் புரியாத புதிர்தான்...

அது ஒரு Million Dollar Question!

’அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்’ என்பதை, இளங்கோ அடிகள் எச்சரித்துக் காப்பியம் எழுதியிருக்கும் வரலாறு அதைப் படித்தோருக்குத் தெரியும்.

‘மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’ என்பதை நிரூபிக்கின்ற மந்திரிகள் இவரிடத்தில் இல்லாது போனது துரதிர்ஷ்டம்.

‘வரும் பொருள் உரைத்தல் என்பது வருமானத்தை உரைப்பதுதான்’ என்பதாகவே இவரது மந்திரிமார்கள் அமைக்கப் பெற்று அதனால் சட்ட ரீதியான அவமானத்தையும் அறநிலை துறந்த நிலையையும்தான் இவர் பெருக்கிக் கொண்டிருக்கிறார்’ என்பதால், அது, மேடம் அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்தையெல்லாம் பின்னுக்குத்
தள்ளி விட்டு விட்டதே’  என்று வருந்துகின்றவன் நான்.

அந்த வருத்தப்பட்ட நெஞ்சோடு வாழ்த்துக்கின்ற அன்பையும் நேசத்தையும் இங்கே காட்டி, மேடம் அவர்கள், தனது அரசியல்பிழைகளை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும்  உறுதியைத் துணிவுடன் காட்டி, அதற்கான வலிவும் பொலிவும் பெற்று நீண்ட நாள் வாழ வாழ்த்துவோம்.

“அல்லவை தேய அறம்பெருகும்; நல்லவை
நாடி இனிய சொலின்”

என்ற வள்ளுவத்தின் இனிய சொல்லினால் வாழ்த்துவோமாக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.2.2015

Friday, November 14, 2014

தேசமே தேடுகின்றோம்!


இன்று சுதந்திர இந்தியாவின் முதல்    பிரதமாராக சுமார் 14 ஆண்டுகள் கோலோச்சி  மறைந்த பண்டித  நேருவின்  பிறந்த தினம். நேருவின் பெருமையை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ளவே  இக் கவிதை.
-----------------------------------------------------------------
பாரதம் என்னும் எந்தன்
பழம்பெரும் நாடே,உன்னைக்
கூரிய அறிவும்;நல்ல
கொள்கையும் கொண்டு நாளும் 
சீரிய முறையில் ஆண்டு
செகத்திலே தனிப்பேர் பெற்ற 
நேருவின் பெருமை தன்னை
நினைத்து நீ,பார்க்கின்றாயா? 
                                                                            
மோதிலால் செல்வக் கடலில்
முகிழ்த்தவன்;எனினும் வாழ்வைப்
பாதிநாள் சிறையில் ஏற்று
பாரத உரிமைக் காக
மோதினான், வெள்ளை யரோடு;
முடிவிலே வெற்றி சங்கை 
ஊதினான்;உனது வாழ்வின் 
உரிமைக்கே வேலி யானன்!

மண்ணிலே வெற்றுக் கோஷம்
மறுத்தவன்;வறுமை தன்னை
திண்மையோ டெதிர்த்து; நல்ல
திட்டங்கள் தீட்டி நித்தம்
உண்மையாய் உழைத்த சீலன்;
உள்ளத்தே அவன் பேர் தன்னை
எண்ணினால் அதுவே;உந்தன்
இந்தியப் பெருமை யாகும்!

அண்ணலாம் காந்தி நெஞ்சின்
அன்பினுக் குரிய சீடன்;
தொண்டருள் தொண்டர்; தேசத்
தொண்டிலே தலைமை சேரக்
கண்டவர்;கற்று நாளும்
கல்வியில் உயர்ந்து நின்ற
பண்டிதர்; பரம ரசிகர்;
பாலர்தம் இதய ரோஜா!

அன்னவன் ஆட்சி நாளில்
அரசியல் ஊழல் இல்லை;
தன்னலப் பேய்கள்;அன்று
தலையை நீட்டியதும் இல்லை
மன்னவன் மறைந்த பின்னே
மாண்புகள்;வீண்புகழ் ஆக
உன்னரும் மண்ணில்;எங்கும்
உளுத்தரே ஆள்கின் றாரே!

தவறெலாம் தத்துவ மாக்கும்
தலைவர்கள் தோன்றி;இன்று
சவக்குழி வெட்டி;அதிலுன்
ஜன நாயகத்தை மூடும்
அவநில கண்டு நாங்கள்
அழுகிறோம்; தாயே, எமக்கு
ஜவஹரை மீண்டும் மண்ணில்
ஜனிக்க வைப்பாயா,சொல்லு?

நாசமும் நலிவும் நீக்க
நாடுகள் தோறும் சென்று
பாசமும்நட்பும் கூட்டி
பஞ்ச சீலத்தைத் தந்து
ஆசிய ஜோதி என்று
ஆனஉன் மைந்தன் போலே
தேசமே, இன்னோர் மனித
தேவனைத் தேடு கின்றோம்!

-------கிருஷ்ணன் பாலா---------

Friday, October 24, 2014

பொய்யுரை வேண்டேன்!



வானத் தா ரகைகள் போல்                 
வரிசைகட்டி வாழ்ந் திருக் கும்  
கேனத்  தமிழ்க் கவி தைக்
கிறுக் கர்கள் கூட்டத் தில்
நானு மொரு கவிஞ னென
நத்து கின்ற  பெயரெ டுத்து
ஈனப் புகழ் சுவைக் கும்
எண்ணம் எனக் கில்லை!

அங்கொன் றும்இங் கொன் றும்
அவர் உரைத்த பாட் டென்றும்
பங்கிட் டுமெடுத் துரைத் தும்
பலவீட் டுச்சோ றுண் டும்
தங்கு  தடை  இல் லாமல்
தமிழ் வாந்தி  எடுத் திங்கு
சங்கப் புலவன்  என்று  
சாதிக்க  ஆசை இல்லை!

ஆலை யில்லா ஊ ருக்கு
இலுப் பைப்பூ, சர்க்க ரைதான்;
வேலை யில்லா  வெட்டிகட்கு
வீண்பொழுது  பெருஞ் சுகந் தான்;
வேலி  இல்லாப் பயிர் கட்கு
வெள்ளா டே எஜ மானன்;
காலி களின் கூட்டத் தில்
கைத் தடிகள் கவிஞ ரடா?

குயிலி சையின் ராகத் தை
கூட்டுகின்ற தமிழ்ச் சுவை யை;
மயிலா டும்பே ரழ கை
மறக்கவைக் கும்அதன் நடை யை
உயிர்ப் போடு பிணைத்திந்த
உலகிற்கு எடுத் துரைக் கும்
நயமா னசிந் தனை யை
நாட்டுவதே கவிதை யடா!

சொல்ல  வரும் கருத்தி னிடை
சொக்க வைக்கும் சுவை கூட்டி
வெல்ல வரும் கருத்துக் கள்
வீழ்ந்தொழியும்  தமிழு ரைத்து
வெள்ளைத்  தா மரை மீது
வீற்றிருக் கும் அன்னை யவள்
’செல்லப் பிள் ளை’ எனச்
சேதி சொலக் காத்திருப்பேன்!

கூகை களின் கூவல் களைக்
குறிப் பாகக் கண்டு ணர்ந்து
ஏக லைவன் வில் வித்தை
இன்ன தெனும் காலம் வரும்!
ஆகை யினால் நண்பர் களே,
அதுவ ரையில் எனை யிங்கு
நோக வைக்கும் பொய் யுரையில்
நுடங் கவைக்கப் பார்க் காதீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
23.10.2014

Saturday, October 18, 2014

இந்தப் பென்சில் ஓவியம்….!

பென்சில் ஓவியத்தில்  நான்
ஓவியம் :Bhahavath Kumar
நண்பர்களே,

எனது உள்ளுணர்வின் எதிர்பார்ப்புத் தோற்றம் ’இனி இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற உணர்வைத் தூண்டும்படி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி என்னை பென்சில் ஓவியமாக்கி அதைத் தனது பக்கத்தில் கமுக்கமாகப் பதித்துக் கொண்டிருக்கிறார் நண்பர்,திரு.Bahavath Kumar அவர்கள். 

அது எனது  கண்களுக்கு Feed ஆனதும் என்னுடைய பதிவுதான் அந்தப்படத்தில் முதலில் பட்டது;பிறகு படம். அது எனது தலை முடியை கரும்பென்சிலால் தீட்டப்பட்டிருந்ததால் பக்க வாட்டில் முடி நீண்டுள்ளதுபோன்ற தோற்றம் அமைந்து (அழகாக,சொல்லப்போனால் அழகைக் கூட்டித்தான்) கிட்டத்தட்ட 1980களின் ஜெயகாந்தன் அவர்களை நினைவு படுத்தி விட்டது.

என்னுடைய மதிப்பிற்கும் நட்புக்கும் உரிய இலக்கிய ஆசான் களில் ஒருவர் அவர். 

1977களில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை TTK சாலையில் உள்ள அவருடைய ஞானச் சபையில் அவருடையை இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் தொடர் தொடர்பாக அநேகமாக தினசரி சந்தித்துக் கொள்கின்ற வாய்ப்புப் பெற்றவன் நான். 

இப்போது-முடி சூடா மன்னன் எனத் திகழும் நான் அவ்வாறு முடியைச் சிலுப்பிக் கொள்ள என் செய்வேன்?

இருந்தாலும் நண்பர் திரு பஹவத் குமார் அவர்கள் தீட்டிய இந்த (சதி :-) ) ஓவியத்தைப் போன்றே  எனது தலையின் பக்கவாட்டில் இருக்கின்ற தலைமுடி நீண்டு தவழ்ந்திருக்க இன்று முதல் முயற்சி எடுப்பது’ என்ற தீர்மானத்தை முன் மொழிகின்றேன், இன்று.

வழி மொழிபவர்கள்  மொழியலாம்! :-)

இவண்-
கிருஷ்ணன்பாலா

18.10.2014

Friday, October 17, 2014

நீதியின் நிபந்தனை!

அறிவார்ந்த நண்பர்களே!

மேடம் ஜெ.அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் நிபந்தனை
ஜாமீனும் அதற்கான கட்டளைகளும் நீதி தேவதையின் நேர்மைமிக்க தீர்ப்பு.

அரசியல் விருப்பு வெறுப்பின்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஊன்றிக் கவனிப்போர் ‘இந்தியா நீதி முறைமையில் நேர்கொண்ட துணிவோடு நிமிர்ந்து நிற்கின்றது’ என்று பெருமை கொள்கின்றார்கள்.

பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை; நிபந்தனையோடு இடைக்காலத்துக்கு, அதாவது இரண்டு மாத காலத்துக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

இந்த இடைக்கால ஜாமீன் தீர்ப்பின் சாராம்சங்கள் சுருக்கமாக:
  • வரும் 18.12.2014 க்குள் இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (அவை 30,000, 40,000 பக்கங்களாக இருப்பினும்) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேடம் ஜே அவர்களின் தரப்பு சமர்ப்பித்தாக வேண்டும்.
  • எந்தக் காரணத்தையாவது காட்டி அதற்கு ஒருநாள் தாமதம் செய்தாலும் அதை இந்த உச்ச நீதி மன்றம் ஏற்காது. ஜாமீனை   அன்றே ரத்து செய்யும்.
   ·    கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நடைபெறவிருக்கும் மேல் 
      முறையீட்டு வழக்கைத் தாமதமின்றி நடத்தி முடிக்க ஜாமீன்
      மனுதாரர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். கர்நாடக உயர்
      நீதி மன்றம் இந்த மேல் முறையீட்டு வழக்கை மூன்று 
      மாதத்துக்குள் நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.

  •  இனி,நீதித் துறையை அவமதிக்கும் வகையில் நீதிபதி மைக்கேல்  குன்ஹா மற்றும் உயர்நீதிமன்ற நீதி அரசர்  சந்திரசேகரா  ஆகியோருக்கு எதிராகக் காட்டு மிராண்டித்தனமாக விமர்சனங்கள்  எழுப்பப் பட்டாலோ சுவரொட்டிகள் வைக்கப்பட்டாலோ ஜாமீனை      ரத்து செய்வதற்கான ஆதாரமாக உச்ச நீதிமன்றம் கருதும்.
  •  இனியும் அதுபோன்ற நிகழ்வுகள் இருக்காதென ஜெ.  அவர்களின் உத்திவாதத்துடன் அவரது வழக்கறிஞர் ஃபாலி நாரிமன்  உறுதி அளித்துள்ளதை ஃபாலி நரிமன் அவர்களின் தனிப்பட்ட    உயர்மதிப்பின் அடிப்படையில் மட்டுமே ஏற்று. இந்த ஜாமீன்  வழங்கப் படுகிறது.
  •  இந்த ஜாமீன் மனுவை எதிர்த்து வாதிட்ட சுப்பிரமணியம்சுவாமியை  எவராவது அவமானப்படுத்த முயன்றாலோ,அச்சுறுத்தினாலோ  தாக்கினாலோ சுப்பிரமணியம் சுவாமி இது குறித்து மனு அளித்தால்  அன்றைக்கே ஜாமீனை ரத்து செய்ய இந்த உச்ச நீதி மன்றம்  தயங்காது.
மேற்கண்ட அம்சங்களின் அடிப்படையில் ஜெ, அவர்கள் பெற்றுள்ள இடைக்கால ஜாமீன் மிகக் கடுமையான நெருக்கடிகளை  ஜெ அவர்களுக்குத் தந்திருக்கிறது.

இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.  குறிப்பாக, மேடம் ஜெ. அவர்களும் அவரது கட்சியினரும்.

இன்று (17.10.2014) உச்ச நீதிமன்றத்தில் ’மேடம் ஜெ. அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்மனுதாரராக வாதிட்டவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி.

அவரது வாதத்தை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற போதும் சுவாமி அவர்களின் வாதத்தின் மையக் கருத்தின் அடிப்படையிலேயே  இடைக்கால ஜாமீனின் நிபந்தனைகளாக விதித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஜெ. அவர்களின் ஜாமீனுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் அவர்களுக்கு உச்ச நீதி மன்றம் தந்திருக்கும் அதே உயர் மரியாதையை டாக்டர் சுப்பிரமண்யம் சுவாமி அவர்களுக்கும் தந்திருக்கிறது.

அதாவது, ஜாமீனில் வெளியில் இருக்கும் கால அவகாசத்துக்குள் (18.10.2014) மேல் முறையீட்டுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா உயர் நீதி மன்றத்தில் அளிக்க வேண்டும்; அந்த வழக்கு இடைவெளியின்றி நடத்தப்பட்டு மூன்று மாததங்களுக்குள்  உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வகையில் ஜெ.தரப்பு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். இதில் சுப்பிரமணிய சுவாமி அவர்களின் பாதுகாப்புக்கும் முழு உத்தரவாதம் தரப்பட வேண்டும்.

அவருக்கு அச்சுறுத்தலோ மிரட்டலோ, அவமானம் தரும்வகையிலான எந்தச் செயல்களோ நிகழ்த்தப்படுமானால் அது குறித்து சுவாமி, உச்சநீதி மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக மனு அளிக்கும் பட்சத்தில் ஜாமீனை ரத்து செய்யத் தயங்க மாட்டோம்’ என்று எச்சரித்துள்ளது.

இதன் மூலம் அருவறுக்கத்தக்க ஆர்ப்பாட்டங்கள் மூலமோ தாக்குதல்கள் மூலமோ சுப்பிரமண்யம்  சுவாமியை எவரும் தாக்க முடியாது. இதையும் மீறி சுவாமியைத் தாக்க முயல்வோர் உண்மையில் மேடம் ஜே அவர்களின் விசுவாசிகளாக இருக்க முடியாது. அவரை உண்மையிலே சிக்கலில் வைக்க விரும்பும் சதிகாரர்களின் கைப்பாவைகளாகவே இருக்க முடியும்.

இவற்றை  ஜெ. அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கவனத்தில் 
கொண்டு, நேர்மையான பார்வையோடு சிந்தித்து, சட்டம் வழங்கி இருக்கும் தார்மீக உரிமையைப் பயன் படுத்தி, சிறப்பு நீதி மன்றம் வழங்கி இருக்கும் குற்றத் தண்டனையில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்வதற்குத் தடை ஏதும் இல்லை.

ஆனால்,ஜாமீனில் வெளிவந்திருப்பதைக் காட்டி ’ஜெ.குற்றவாளியே இல்லை’ என்பதாகக் குதூகலித்துக் கொண்டு அவரது கட்சியினர் ஆரவாரிப்பதும் போஸ்டர்கள் போடுவதும் பிரச்சாரம் செய்வதும் ரசிக்கத் தக்கதாக இல்லை

மிகவும் அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் மேடம் அவர்களின் ஜாமீன் வாய்ப்பைக்  கட்சியினர் கொண்டாடுவதே கவுரவமானது.

மேடம் ஜெ. அவர்களின் வழக்கு ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் மற்றும் அவருடைய எதிர் விமர்சிகர்களுக்கும் இடையிலான அரசியல் போர் அல்ல.

நீதிமன்றம் கையில் எடுத்திருக்கும் வழக்கு

நீதித்துறை வகுத்துத் தந்திருக்கும் சட்ட நெறிகளின் வழியேதான் அதனை எதிர் கொண்டு வாதிட வேண்டும் என்ற ஞானம் கட்சித் தொண்டர்களுக்கு இல்லாது போகலாம்; ஆனால்,இந்த வழக்கை நடத்தும் வக்கீல்களுக்குமா அது இல்லாது போகும்?

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.10.2014