Sunday, August 17, 2014

கைலாஷ் நாதரின் கைலசாத் தோற்றம்!

அன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.
உலக அதிசயங்களில்  ஒப்பற்ற தெய்வீகத் திருக்காட்சியாக, உலகம் யாவையும் தாமுளவாக்கி,இந்தப்பிரபஞ்சம் முழுதும் தன்னை வியாபித்துக் கொண்டு ஆனந்த தரிசனம் தந்து கொண்டிருக்கும் திருப்பதியாகத் திகழும் இமாலயத்தின் கைலாசத்தைக் கண்டு இன்புறும் பேறு நம்முள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? கிடைக்கும்?

நமது ரிஷிகளும் முனிகளும் மாமன்னர்களும்  தரிசித்துப் பேறு பெற்ற அந்தக் கைலாசத்தைக் காண நமக்குப் பணம் இருந்தால் மட்டும் போதாது;பாக்கியமும் இருக்க வேண்டும்.

ஈசனின் கருணையும் நாம் செய்த புண்ணியங்களின் பலனும் கை கூடி  இருந்தால் ஒழிய அவன் குடி கொண்டிருக்கும் திருவிடத்தைத் தேடிச் சென்று தெய்வீகக் காட்சியாகக் காணும் பேறு நமக்குக் கிடைக்கவே கிடைக்காது.

அப்படியெல்லாம் இல்லாமல் இந்தப் புகைப்படங்களின் மூலம் அந்தக் கைலாஷ்பதி குடி கொண்டிருக்கும் அருள் தோற்றத்தை கூகுள் சாட்டிலைட் சானல் மூலம் Vidya Subramaniam  என்கிற திருமதி உஷா (Facebook நண்பர்) அவர்கள் தரிசித்திருக்கிறார்.

தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகெல்லாம் பெற்று நெகிழ வேண்டும் என்பதற்காக கூகுள் மூலம் தான் மட்டுமே பெற்ற கைலாஷ் நாதரின் தோற்றத்தை புகைப்படமாக முகநூலில் ஆன்மீக விருந்து படைத்துள்ளார்.

நம்புவோர் நம்புங்கள்.;

மயன் என்னும் தேவசிற்பி செதுக்கிய முகம்போல் கைலாச முகடுகளுக்கு நடுவே ஓர் முகடை சிவபெருமானின் திருமுகமாக வடித்ததுபோல் தோன்றும் கைலாஷ் பதியின் காட்சி, நம்புவோரை மெய்சிலிர்க்க வைக்கும்.

அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

உங்களுக்கு?

பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை அரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.உங்கள் கருத்துக்களை அவருக்கு முகநூல் மூலமே  அனுப்புவுவேன்.

படங்களுடன் திருமதி உஷா சுப்பிரமணீயம் அவர்கள் ( முகநூலில்: Vidya Subramaniam)  எழுதிய குறிப்பு இது:

// Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென என் முன் தெரிந்தது. கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிக அழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள் , புன்னகைக்கும் அதரங்கள் ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம் தெரிந்ததும் அதிர்ந்து போனேன் ஒரு வினாடி. என் தேகம் சிலிர்த்தது. இக்காட்சி இதுவரை நான் காணாதது. மிக வித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ கட்சியை நீங்களும் காணவேண்டும்  என விரும்புகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

-Vidya Subramaniam @ Facebook on 16.8.2014 //

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா                                                             









  

Thursday, August 14, 2014

தேசீய நீதி!



அறிவார்ந்த நண்பர்களே,

"தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! ”

என்று நம் நாட்டின் தேசியக் கொடியைப்ற்றி உணர்ச்சி பொங்கிட வெகுஅற்புதமாகப் பாடினார் மகாகவி பாரதி.

இந்தியா விடுதலை பெறும்  முன்னரே பாடிப் பரவசப்பட்டவன் அந்தப் பாட்டன்.

அவன் பாடிப் புகழ்ந்த இந்தக் கொடிக்கு ஜாதி,இனம்,மதம் மற்றும் மொழி என்ற வர்ண பேதம் இல்லை, ஆரஞ்சு,வெள்ளை,பச்சை என்ற மூன்று வர்ணங்களைத் தவிர.

இந்த மூன்று வர்ணங்களைக் கூட, எனது நண்பர்,ஆடிட்டர் திரு விஜயக்குமார் அவர்கள் வியக்கத்தகும் ஒப்புவமையாகக் கூறியதை இங்கே வாசக நண்பர்களுக்கும் பகிர்வது  மிகப் பொருத்தமாக இருக்கும்:

//இக்கொடியின் மூன்று வர்ணங்களில் ஆரஞ்ச் நிறத்தை காவிக் கொடியைப் போற்றும் இந்து மக்களின் எண்ணமாகவும் நடுவில் உள்ள  வெள்ளை நிறத்தைத் தூய்மையான கிறிஸ்துவர்களின் சின்னமாகவும் பச்சை நிறத்தை இஸ்லாம் மக்களின் இதயம் கவர்ந்த  எண்ணமாகவும் கருத  வேண்டும்//.

அடடா....
நமது தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களும்  நமது தேசத்தின் முப்பெரும் மதங்களின் தோற்றத்தைத்தான் நமக்கு உரைக்கின்றன என்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்து கொள்வதுதான் சரியான தேசப்பற்றின் சான்று என்பதைப் பெருமையாக எண்ணுகிறேன்.

நண்பர்களே,

நித்தமும் நினைத்துப் பணிந்து,புகழ்ந்து போற்றப்பட வேண்டியது இந்த மூவர்ணக் கொடி.

என்றாலும் ’குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு  முறையாவது இந்தக் கொடியின் பெருமையை உணர்ந்து  இந்திய தேசியத்தின் அருமையைக் கட்டிக் காக்கும் குடிப் பெருமை பெற்றவர்களாக இந்தியக் குடிமக்கள் இருக்க வேண்டும்’ என்பதற்குத்தான் இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் நாளை கொண்டாடுகின்றோம்.

இவ்வழக்கம் அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட  நெறிமுறை.

இந்த மூவர்ணக் கொடியின் மகத்தான சிறப்புக்களை,அதன் பின்னணியில் இருக்கும் நம் முன்னோர் செய்த அளப்பரிய தியாகங்களின் உன்னத மதிப்பை  நற்பண்புடையோரும் நற்குடிப்பிறந்தோரும் உணர்ந்து போற்றுவார்கள்.

எப்படி வேண்டுமானாலும் இந்தியத் தேசியக் கொடியைப் பற்றி  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது  அறிவார்ந்த மக்களின் இயல்பாகாது.

ஆகவே, இந்திய விடுதலையின் அறுபத்தெட்டாவது ஆண்டில் அடிவைக்கும் இத்தினத்தில் அதன் மகத்தான உணர்வுகளைப் பரப்புவதையே தாய் நாட்டுக்கு நாம் தரும் தனிப்பெரும் மரியாதை என்று உணர வேண்டும்.

ஒரு நாட்டின் தேசியக் கொடியை எரிப்பதும் அவமானப்படுத்துவதும் வீரமல்ல; விடுதலைக் கோஷமும் அல்ல. அது, மதி கெட்டவர்களின் மடமைக்கும் மூர்க்கக் குணத்துக்குமான அடையாளம்.

மூர்க்கக் குணம் உள்ள மிருகங்கள் தண்டிக்கப்படுவதே பண்பட்ட சமூகத்தை ஊக்குவிக்கும் தேசீய நீதி..

வாழ்க,இந்திய சுதந்திரம்;வளர்க அதன் தேசீயப் பண்பாடு!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.8.2014

Sunday, July 20, 2014

நாளைய சந்ததிக்கு...




அறிவார்ந்த நண்பர்களே,

தமிழுக்கென்று தனிச் சிறப்பும் அதன் மொழிவழிப்பண்பாடும் உண்டு.

உலக மொழிகளியேயே மூத்த இனமாக மட்டுமின்றி பண்பாட்டிலும் பக்குவத்திலும் முன் நிற்கும் சமுதாயமாகவும் தமிம் இனம் மதிக்கப்படுகிறது.

அறிவிலும்  நீதி நெறி சான்ற அரசியல் முறைமைகளிலும் பிற சமுதாயங்களை வழிப்படுத்துவதிலும் தமிழுக்குள்ள இலக்கியச் செழுமையும் இலக்கண மரபும் தொன்றுதொட்டுத் துலங்கியிருந்து, ஈடு இணையற்ற தவச் சான்றோர்களைப் பெற்றிருப்பது தமிழர் மரபு மட்டுமே.

காலம் தோறும் தமிழ் வளர்கிறது. தமிழை அழிக்கவும் அலங்கோலப்படுத்தவும்  அவ்வபோது அறிவிலிகள்கூட்டமும் அரைகுறைகள் கூட்டமும் ஆரவாரம் செய்தபோதும் தமிழன்னை, தனது தொன்மையாலும் தொடர்பு மாறா இலக்கணச் சிறப்பினாலும்  அறிஞர்கள் நெஞ்சிலும் கவிஞர்கள் நாவிலும் சான்றோர் மரபிலும் அருகெனத் தழைத்து ஆல்போல் வேரூன்றி  அரியாசனம் கொண்டிருக்கிறாள்.

உலக இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் மூத்த,முதல் நின்ற அவளது இலக்கியச் சீர்மையையும் இணையற்ற பண்பாட்டுச் செழுமையையும் கடந்த 40-45 ஆண்டுகளாக இம்மண்ணில் சிறுத்துப்போகச் செய்த திராவிடப் பதர்களாலேயே அழிக்க முடியாத அவளுடைய   ஆளுமையை இன்றுள்ள கவிஞர்களும் அறிஞர்களும் தமிழ் மரபு போற்றும் தகைசான்ற  சீலர்களும் புரிந்து கொண்டு தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்குச் சிந்தை கொண்டிருத்தலே நாம் நம் தமிழ் அன்னைக்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும்.

முதலில் இம்முகநூலில் எது தமிழ்ப் பண்பாடு? என்பதை இங்கே எழுதுகின்ற ஒவ்வொருவரும் எண்ணிப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத முற்படுதுவது அவசியம்.

ஒழுக்கத்துக்கும் உயர் நெறிகளுக்கும் ஊறு செய்யும் வகையில் பதிவுகள் செய்வோரையும் படங்களைப் பதிப்போரையும் கண்டிக்காமல், எதிர்க்காமல்,எதிர்க் குரல் கொடுக்காமல், இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள்   ‘சங்கம்  அமைக்கிறோம்;சபை கூட்டுகிறோம்’ என்றெல்லாம் தத்தமது பக்கங்களில் எழுதுவதெல்லாம் வீண்;வெற்று வேலை.

நமது பண்பாட்டைச் சீர்குலைக்கும் சிந்தனைப் பரவல் இம்முகநூலில்
ஒரு நோய் போல் தொடர்கிறது.முதலில் இது குறித்த கவலைகளும் அதைப் போக்குகின்ற அக்கறையும் துணிவும் இல்லாமல் ’தமிழ்’ தமிழ்’   என்று பேசுவதாலும் குழுக்கள் அமைத்துக் கூடிக் கலந்துரையாடுவதாலும் என்ன மாதிரியான பயன் விளைந்து விடும்’ என்று நம்புகிறீர்கள்?

சினிமா, போலி அரசியல் சிந்தாந்த வாதங்கள், கவர்ச்சி உரையாடல்கள், வெட்கமற்ற விரசப் பதிவுகள், மஞ்சள்தனமான விமர்சனங்கள்,’இவள் அவனுடன் கூத்தடிக்கின்றாள்; இவன் அவளுடன் ஆட்டம் போடுகின்றான்; நான் இப்படித்தான்” என்றெல்லாம் நரம்பில்லாமல் பேசும் நாக்கையும் வரம்பில்லாமல் எழுதும் எழுத்தையும் வெத்துப் பிழைப்பாகக் கொண்டுள்ள வீணர்களின் பின்னே மந்தைகள்போல் திரியும் கூட்டத்தைக் கண்டிக்கவும் திருத்தவும் வழி உண்டா?

அதையெல்லாம் சிந்திக்காமல் சாலையோரக் கடை திறப்பதுபோல்
ஆளாளுக்கு குழுக்களை அமைப்பதும் நான் இத்தனை குழுக்களில் இணைந்துள்ளேன் என்று பெருமை பேசுவதும் ஒவ்வொருவரும் தாங்கள் உளறுவதையெல்லாம் நாட்டின் புரட்சிகர மாறுதலுக்கான எழுத்துப் புரட்சி’என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதையும் தவிர இம் முகநூலில் எம் மாதிரியான முன்னேற்றம் கண்டு வருகிறோம்?

கண்டவர்கள் விளக்குவார்களாக!

நீங்கள் இன்றைய தலைமுறையின் பிரதிநிதிகள் என்பது மட்டுமல்ல; நாளைய சந்ததியின்  வித்துக்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

வித்து ஒன்றை நட்டுவித்தால் விதை வேறாக முளைக்காது நண்பர்களே.

அந்த வித்து சத்தான வித்தாக,சாரம் குன்றாதிருக்க உங்களை முதலில் நன்கு தீட்டிக் கொள்ளுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.7.2014

Saturday, July 19, 2014

தீவிர வாதத்தின் திசை!



                    


அறிவார்ந்த நண்பர்களே,

ரஷ்யா-உக்ரைன் எல்லைப் பகுதியில் வான் வழியில் பறந்த மலேஷியன் பயணிகள் விமானம் MH 17  சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கிறது.

சர்வதேச விமான சேவையில் மலேஷியன் விமானங்களுக்கு இது இரண்டாவது பெரிய அடி;இடி.

இதன்மூலம் ‘விமானப் பயணம்’ என்பது  ‘உயிருக்கு உத்தரவாதமில்லாதது’ என்னும் அச்சம் விமானப்பயணிகளிடையே  வேரூன்றத் தொடங்கி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இதே மலேஷிய நாட்டு MH 17 ரகப் பயணிகள் விமானம், சீனக் கடல் பகுதி அருகே ஆழ்கடலில் வீழ்ந்து எந்த அறிவியல் முயற்சியாலும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும் அவலம் நீடித்திருக்கும் நிலையில், இப்போது மறுபடியும் உலகத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் உக்ரைன்-ரஷ்ய எல்லையில் இதே மலேஷிய நாட்டு இன்னொரு  விமானம் பயணிகளுடன் ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

உலகில் தீவிரவாதத்தின் எல்லைகளும் உத்திகளும் வளர்ந்து வருவதற்கும் அதன் பலம் கூடி வருவதற்கும் இந் நிகழ்வுகள்  ஆதாரம்.

இதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்ற போது பல்வேறு ஊகங்கள் சிறகடிக்கத் தொடங்கி உள்ளன.

அவற்றில் மூன்று முக்கிய ஊகங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. மலேஷிய நாட்டுக்குள் தீவிரவாத இயக்கத்தின் வேர் பற்றி இருப்பது.அதை வெளி உலகம் அறியாதவாறு மலேஷியாவே மறைக்கின்றதோ என்னும் `யூகம்.

2.பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்வதற்கான ’வான் வழித் தாக்குதல் ஒன்றே தங்களுக்கு எளிதானது என்பதைச் செயல் படுத்திட, இந்தியாவுக்கு எதிரான  தீவிரவாதிகளின் சதித்திட்ட திட்டத்தின் முன் வரைகளோ இம்மாதிரியான வான்வழித் தாக்குதல்?’என்ற ஐயப்பாடு.

3. சர்வதேச அளவில் பலம் பெற்று வரும் அல்கொய்தாவின் ஆயுத பலத்துக்கு எடுத்துக் காட்டாக  இம்மாதிரியான பயணிகள் விமானங்களை வீழ்த்தி சர்வதேசம் சமுதாயத்தை அச்சுறுத்தும்  வேலைகளை அந்தத் தீவிரவாதிகள் இயக்கம் தொடங்கி உள்ளது’ என்ற செய்திகளின் உண்மைத் தன்மை.

இம்மாதிரியான தீவிரவாதச் செயலானது வளர்ந்து வரும் அறிவியல் உலகத்துக்கு அபாயகரமான எதிர் விளைவுகளின் வித்துக்களாய் வீறு கொண்டெழுந்துள்ளன என்பதையும் தீவிரவாதத்துகென்று ஒரு புதிய திசை வீசத் தொடங்கி இருக்கிறதென்பதையும் நாம் உதாசீனப்படுத்தி விட முடியாது,

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014

Friday, July 18, 2014

ஒழிந்தது ஈனப்பிரச்சினை!

அறிவார்ந்த நண்பர்களே,

’’ஈழப் பிரச்சினையை ஈனப்பிரச்சினை ஆக்காதீர்’” என்று முன்பு நான் எழுதி இருந்தேன்.

இதோ அந்த ஈனப்பிரச்சினைக்கு முடிவு கட்டியாகி விட்டது.

“ஈழம் தேவையில்லை’ நாங்கள் .ஒருங்கிணைந்த இலங்கையை ஆதரித்து இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலக்கிறோம்’’  என்று இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று  அறிவித்து விட்டது.

இலங்கை நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவே கொடுத்துள்ள இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்தக் கொள்கை முடிவானது உலகின் அனைத்து நாடுகளாலும் குறிப்பாக இந்திய மக்களால் சொல்லப்போனால் இலங்கைவாழ் தமிழர்தம் இன்னல் என்றுதீரும் என்று கவலை கொண்ட தமிழருக்கெல்லாம் தித்திப்பூட்டும் செய்தி.

இதுதான் இலங்கைத் தமிழர்களின் அமைதியான வாழ்வுக்கும் அவர்களுடைய அறிவுத் திறன் மேம்பாட்டுக்கும் சரியான அரசியல் நிலை.

’தனி ஈழம்’ தனி ஈழம்’ என்று நம் செவிகள் கிழிய கத்திக் கொண்டிருந்த வெத்து வேட்டுக் காகிதப்புலிகள் இனி தங்கள் உதார்களைக் காட்டிக் கொண்டு ஏமாளித் தமிழர்களை மிரட்ட முடியாது.

’நாயர் பிடித்த புலிவாலாய், ஈழப்பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பேந்தப்பேந்த முழித்துக் கொண்டிருந்த அரசியல் வியாபாரிகள் அப்படா இனியாவது நாம் தப்பித்துக் கொள்ள வழி ஏற்பட்டு விட்டதே” என்று உள்ளுக்குள் பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கிறார்கள்.

இதுவரை ஈழப்பிரச்சினையைக் காட்டி,இலங்கைத் தமிழர்களைத் தேசியப் பயங்கரவாதிகளாய்ச் சித்தரித்து  இலங்கையின் ஆளும் கட்சி மகிந்தா ராஜ பக்‌ஷேவின் தலைமையில் நடத்தி வந்த காட்டுத் தர்பார் உலக அரங்கில் இனி எடுபடாது போய் விடும்.

தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்குச் சிங்களவர்களுக்குச் சமமான ஜனநாயக உரிமைகளையும் சட்டச் சலுகைளையும்  இலங்கை அரசு இலங்கைவாழ் தமிழர்களுக்கு அதன் அரசு தந்தே ஆக வேண்டிய நிலை உருவாகி விட்டது.

இதுவரை இலங்கைத் தமிழர்களை தங்கள் கைப்பாவைகளாகக் கொண்டு ஆட்டிப்படைத்த  பிரிவினை வாதப்பேய்களான தமிழ் நாட்டு அயோக்கிய அரசியல் எத்தர்களின் கொட்டம் அடங்கியாக வேண்டிய சூழ்நிலையை நரேந்திர மோதியின் ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கைத் தமிழ் மக்களின்  ஒரு தலைமுறையினரின்  வாழ்க்கையையே சீரழித்து,அடுத்த தலைமுறையை அகதிகளாக்கி, வரும் தலைமுறையினரை அடிமைகளாகவே ஆக்கிக் கொண்டிருந்த இந்த’ ஈழப்பிரச்சினை- ஒரு ஈனப்பிரச்சினை’ என்பதை இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொண்டு துணிச்சலாக  அதைக் கைவிட்டதன் மூலம் இங்குள்ள ஈனர்களின் அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதில் அளவற்ற பூரிப்புக் கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவு காலம் இப்படியாக  நரேந்திர மோதியின்வெற்றிக்குப் பிறகு  வந்து விட்டது என்பதில் தமிழ் இனம் வாழ எண்ணும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டுகிறது நண்பர்களே.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.7.2014

Thursday, July 3, 2014

‘மாஸ்டர் யோகா’வின் ’மாஸ்டர்’

அறிவார்ந்த நண்பர்களே, 
இன்றைய நவீன உலகின் வாழ்க்கையில் மனிதனின் தேவை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அவனது தேவைக்கேற்ப அறிவியல் கண்டுபிடிப்புக்களும் பெருகி வருகின்றன.

ஆனால்,பண்டைய மனிதனின் வாழ்வியல் முறைகளும் அவனது பழக்க வழக்கங்களும் இன்றைய மனிதனின் வாழ்வியல் முறைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் முற்றிலும் மாறுபட்டதான வாழ்க்கைமுறையாக அமைந்து, முன்பில்லாத நோய்களும் பிரச்சினைகளும் புதிது புதிதாக உருவாகி, ஆரோக்கியம் என்பது மனித குலத்துக்கே சவாலாகி வருகின்றது.

மனிதன் அன்றும் பிறந்தான்; இறந்தான்.
இன்றும் அதே நிலைதான்

எனினும், அன்றைய மனிதன் ஆனந்தமாக வாழ்ந்தான்.

அன்று மெய்ஞ்ஞானம் தேடும் மேலான எண்ணங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தான் அவன்.

’மனம் செழுமையுற்றிந்தால் நோய்களும் கவலைகளும் தன்னை அண்டுவதில்லை’ என்ற உண்மை அவனுக்குத் தெரிந்திருந்தது.

இன்றைய மனிதன் கவலைகளும் சோர்வுமாகத் தன் வாழ்நாளைத் தூக்கத்தில் பாதியாகவும் நோய் கொண்டலைந்து நொந்து வாழும் துக்கத்தில் மீதியாகவும்தான் ஆயுளைத் தள்ளிக் கொண்டு நடக்கின்றான்.

காரணம்,
இன்றைய மனிதனின் வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள் பெருகிவிட்டிருப்பது.

விஞ்ஞானம் வளர வளர மனிதனுக்குத் தேவைகளும் அதைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான போராட்டமும் பற்றாக் குறையும் அவனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருப்பதால் அதன் ‘By-Product களாய் (அதாவது பக்க விளைவுகளாக) சோர்வுகளும் நோய்களும் உடலையும் உணர்வையும் வருத்திக் கொண்டிருக்கின்றன.

இன்றைய மனிதர்களுக்கு ஏதோ ஒருவகையில் ஏதாவது ஒரு நோய் அல்லது மனக்கவலை பற்றிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இன்றைய கால கட்டத்தில், மருத்துவர்களைத் தேடிச் சென்று பணத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற அவல நிலை மனித குலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று பல ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவ மனைகளும்  ஊர்தோறும் பெருகி விட்டபோதிலும் மனிதர்களுக்கு  ஏற்படும் நோய்களை முற்றாகக் குணப்படுத்துவதாக அவை இல்லை.

பணத்தைச் செல்விட்டுக் கொண்டே இருந்தாலும் நோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும்  நோயைக் கண்டுபிடிப்பதிலும் அதன் காரணத்தை அறிவதிலும் இன்றைய மருத்துவத்தால் இயலாத நிலைதான் தொடர்கிறது.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், எவ்வளவுதான் மருந்துகள்தான் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை எல்லாம் மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

இருந்தபோதும் இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர் நவீன மருத்துவத்தையே நம்புகிறார்கள். நோய்களை வளரச் செய்யும் சூழ்நிலையை அவர்களே வளர்த்துக் கொள்கிறார்களே தவிர இயற்கையாகவே ஆரோக்கியமாக உடலையும் மனதையும் வைத்துக் கொள்ள்ள வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் வாய்த்திருக்கவில்லை.

இன்றைய யுகம் ’கணினி யுகம்’ என்று அறியப்பட்டபோதும் நோய்களும் அமைதியின்மையும் பீடித்திருக்கும் காலமாகவே பரவி நிற்கிறது; மனிதனுக்குப் பணமும் வசதிகளும் பெருகி விட்டபோதிலும் அற்றொடு பெருகி நிற்கும் கவலையைப் போக்கி, மனித குலத்தைச் செழிக்கவைக்கும் மருந்தை மட்டும் எவராலும் புதிதாகக் கண்டு பிடிக்க முடியவில்லை.

அதற்கு மாற்றாகத்தான், எளிய முறையில் இயற்கையோடு இயைந்து வாழும் ஆனந்த நிலையைக் கற்பிக்கின்ற யோகாப் பயிற்சி முறைகள் இருக்கின்றன.

நம் முன்னோர் நமக்குப் புராதனச் சொத்தாக அதைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த அற்புதமான அறிவு ஞானத்தை நாம் உணர்வோமானால் அதுதான் நம்மை வளமும் நலமும் மிகுந்த மானுடர்களாக இம்மண்ணில் வாழ வைக்கும்; நம் சந்ததியினரையும் பெருமைபடப் பிறக்க வைக்கும்.

நமது இந்தியப்பாரம்பரியத்தின் முன்னோடிகளான ரிஷிகள், இம்மாதிரியான பிற்கால மனிதர்களின் பிசகான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டுதான் உலகில் வேறு எந்த நாட்டிலும் சொல்லப்படாத இந்த ’சூக்கும ஞானக் யோகக் கலை’யை அறிவுள்ள மாந்தர் கடைப்பிடித்து உய்யும் வகையில் உரைத்துச் சென்றிருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தையும் வென்று அதனைச் சரண் அடையவைக்கும்  மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை மையமாகக் கொண்டிருக்கும் ’யோகா அறிவு’ என்பது உலகின் அறிவு சான்ற மக்கள் யாவரும் வியக்கும் நமது இந்தியப் பாரம்பரியத்தின் இணையற்ற சொத்து.

வேதகாலம் தொட்டு ஈடிலா இறைஞான சக்தியை மனிதருக்குள் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த ‘யோகாப் பயிற்சி முறை’ என்பதை இந்த உலகிற்கு எடுத்துரைத்து நிரூபித்தவர்கள் நம்நாட்டு ரிஷிகளும் சித்தர்களும்தான்.

’யோகா சக்தி’ மூலமே அவர்கள் ’சாகாக் கலை’என்னும் காயசித்தியை அடைந்திருந்தனர்.

அதைக் கொண்டேதான்,’இறைவன், ஆன்மா (மனம்), உடல் மூன்றையும் ஒருமைப்படுத்திய ஒப்பரிய தெய்வீக ஆற்றலைப் பெற்றனர்.

’தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்ற பரந்த அன்பினோடு அவர்கள் ’யோக சித்தியின் மெய்ஞ்ஞானப் பயன்களை உலக மாந்தர்க்கு எடுத்துரைத்து,தூய்மையும் ஆரோக்கியமும் வலிமையும் கொண்ட மனிதர்களால் இம்மண்ணுலகை நிரப்ப முயன்றனர்.

அத்தகைய ரிஷிகள் காட்டிச் சென்ற ’முறையான யோகாப் பயிற்சிகளை’க் கற்று, அதைத் தெய்வீக ஞான ஈடுபாட்டோடு பிறருக்குக் கற்றுத்தரும் தெள்ளறிவு மிக்க யோகா மாஸ்டர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.

அப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் யோகா மாஸ்டர்களில் எளிமையும் நேர்மையும் ஞானமும் கொண்ட தனிச் சிறப்புக்களோடு இன்று முறையான யோகாப் பயிற்சியைக் கற்றுத் தருகின்றவராகவும் மருந்தில்லாமலே சில அற்புதமான யோகா முறைகளை நோயாளிகளைச் செய்யவைத்து நோய் தீர்க்கும் ‘யோகா தெரபிஸ்ட்’டாகவும் எனது உற்ற நண்பராகவும் திகழ்கிறார் ஒருவர்.
 
வெளிநாட்டுப் பெண்மணிகள் மாஸ்டர் லாராவிடம் யோகா கற்கும் காட்சி
நான் பெற்றுள்ள நட்பை இதைப் படிக்கின்ற நண்பர்களும் பெற்று பயனுறு வாழவேண்டும் என்பது என் நோக்கம்.

நண்பர் லாரா அபிஷேக்.
தமிழ் நாட்டுக்குக் கிடைத்துள்ள ஓர் அரிய பொக்கிஷம்.
மாஸ்டர் யோகாவின் மாஸ்டர்
  லாரா அபிஷேக்
வியக்கத்தக்க யோகாக்கலை அறிவைப் பிறவியிலே பெற்றவராகி, அதைத் தனது சொந்த அறிவினால் விருத்தி செய்து கொண்டவர்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உயர் கல்வியைக் கற்கும் வசதி இன்றி அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றவர் கற்ற கல்விக்கும் மேலான வருவாயைத் தந்த வேலையில் சேர்ந்த போதும் இரவு பகலாக அவருக்குள் யோகாக் கலை அறிவு’ பற்றிய  உணர்வு மானசீகமாகத் தோன்றிக் கொண்டே இருந்தது.

பிழைப்புக்காக வாழும் சூழ்நிலையைக் கைவிட்டுத்  தாய் நாட்டுக்கே போய் உண்மையான யோகா ரகசியங்களை உரிய முறையில் தெரிந்து கொண்டு உலகத்தார்க்கு யோகாக்கலையின் உன்னதமான பயிற்சியாளர்களை உருவாக்கவும் தன்னை நாடிவருவோரின் நோய்களை யோகாப் பயிற்சிகள் மூலம் மருந்தில்லாமல் குணப்படுத்தும் மாஸ்டராக உயரவும் அந்த  ‘மானசீக உணர்வு தூண்டித் தூண்டி,’மாஸ்டர்யோகாவின் மாஸ்டராகும் ’காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; புறப்படு புறப்படு’ என்ற வலியுறுத்தலை உள்ளுணர்வு கட்டளையாக இட்டுக் கொண்டே இருந்தது.

அதன் அழுத்தம் அதிகமாகவே ஒருநாள் அரேபியாவில் கிடைத்திருந்த நல்ல வருமானம் தந்துவந்த வேலையை தோளில் போட்டிருக்கும் துண்டுபோல் உதறித் துணிவோடு தமிழ் நாட்டுக்கே வந்தார்.

சென்னைக்கு வந்த லாரா, இந்தியாவில் பிரசித்தி பெற்றிருந்த யாக்ஞவல்கியர் பாரம்பரிய யோகாப் பயிற்சி மையத்தை நடத்தும் மிகப் பிரபலமானவரிடம் சென்று தனது விசேஷமான யோகாப் பயிற்சி முத்திரைகளின் படத் தொகுப்பைக் காட்டினார்.

அதுவரை வேறு எவரும் செய்து காட்டியிராத அற்புதமான யோகா முத்திரைகளை லாராஅபிஷேக்கிடம் உருவாகி இருப்பதைக் கண்டு வியந்த அவர், இவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் அங்கு யோகாப் பயிற்சியாளராக இருந்த லாராவுக்கு அக்கலையின் வியக்கத்தக்க அறிவும் ஆராச்சியும்  கைகூடிக்கொண்டே வந்தன.

நண்பர்கள் பெருகினர்; நம்பிக்கையும் பெருகிற்று.

பிறரிடம் பணியில் இருந்து கொண்டு யோகாக் கலைஞானத்தை அடகு வைத்து வாழும் நிலையைத் துறந்தார்.

இறைஅருளால் தனக்குள் வாய்த்திருக்கும் யோகாக் கலையை உலக மாந்தர்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அக்கலையினால் மனிதர்களுக்கு ஆரோக்கியமும் ஆனந்தமும் பெருக வேண்டும்; நோயற்ற உலகில்  மனிதர்கள் நடக்கப் பாதை அமைக்கும் பணியில் பங்கு கொள்ள வேண்டும்’ என்ற லட்சியத்தை வலுப்படுத்திக் கொண்டுவிட்டார்.

இதன் காரணமாகத் தனது யோகாப் பயிற்சிகளைப் போதிப்பதற்கென்று ஒரு யோகா மையத்தை இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்.

’விநியோகா ஹீலிங் சென்டர்’ (Vinie Yoga Healing Center) என்பது இவரது யோகாமையத்தின் பெயர். சென்னையில் பெசன்ட் நகரில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

யோகாவின் ஆழமான நேர்த்தியான,எளிமையான பயிற்சி முறைகளை தன்னிடம் பயில வருகின்றவர்களுக்குக் கற்றுத்தருவது இவருடைய தனிச் சிறப்பு.

இம்மையத்தின் மூலம் ஒருவருடைய உடல் மற்றும் மன நிலைக்கேற்ப ஆசனப் பயிற்சி, பிராணயாமப் பயிற்சி, பிராணக் கிரியாப் பயிற்சி, தியானப் பயிற்சி முதலானவற்றைப் போதிக்கிறார்.

மனதினைத் தூய்மைப்படுத்தி உடலையும் உணர்வுகளையும் ஒன்றிணைத்து உற்சாகமுறச் செய்யும் அற்புதத்தை உருவாக்குவதில் இவர் ஒரு ’மாஸ்டர் ’என்பதை அனுபவத்தின் மூலம் எவரும் உணர முடியும்.

தன்னிடம் இயற்கையாகவே குடிகொண்டு வளர்ந்து வரும் யோகா ஞானத்தைக் கொண்டு உடலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நோய்களை எல்லாம் மருந்தே இல்லாமல் டாக்டர்களே வியக்கும்படி முழுமையாகத் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு சிறப்பு என்னவென்றால் நோய் தீர்க்கும் யோகா தெரபி முறையில் நோயாளிகள் எல்லோருக்கும் பொதுவான யோகா முறைகளைச் செய்ய வைக்காமல் ஒவ்வொருடைய உடல் அமைப்புக்கு ஏற்றவகையிலான யோகா உத்திகளை இவராக அனுமானித்துத் தருகின்ற பயிற்சிகள்தான் நோயாளிகளின் நோய் விரைவில் குணமாகக் காரணமாகின்றது.

இந்த முறையில் டாக்டர்களால் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராமல் நோயாளிகளின் தன்னம்பிக்கையைச் சிதைத்து வந்த நோய்கள், இவருடைய யோகாப் பயிற்சி முறையால் வியக்கத்தக்கவாறு ஓரிரு நாட்களில் கட்டுப்படுத்தப்பட்டு இரண்டு மூன்று மாதங்களில் முழுமையாகக் குணமாகி விடுவதுதான்.

குறிப்பாக முதுகுவலி, இடுப்பு வலி, ஜவ்வு விலகி இருத்தல், சியாட்டிகா (நரம்பு அழுத்தம்) கழுத்து வலி, தலைச் சுற்றல், தோள் பட்டை வலி, கை,கால் மரத்துப்போதல், ஆஸ்துமா,சைனஸ், உயர் ரத்த அழுத்தம்,தூக்கமின்மை,மன அழுத்தம்,குதிகால் வலி,ஒற்றைத் தலைவலி மற்றும் உடல் பருமன்,பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினகள் என்று பலவிதமான உடல் மற்றும் மனப் பாதிப்புக்களைத் தனது யோகாப் பயிற்சி முறைகள் மூலம் மிக எளிதில் தீர்த்து வைத்து அவர்களுக்குக் கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

உலகிலேயே வேறு எவரும் சொல்லாத முறையில் நவீன உத்திகள் மூலம் இவர் கற்றுத் தரும் யோகாப் பயிற்சிகள் வியப்பான ஆற்றல் கொண்டவை. தொடுவர்மக் கலையும் பாரம்பரிய யோகா முறைகளும் இணைந்த பயிற்சி முறையை இவராகவே கண்டுணர்ந்து போதித்து வருகிறார்; டாக்டர்களால் குணமாக்க முடியாத நோய்களை எல்லாம் குணமாக்கிச் சாதித்து வருகிறார்.

மாஸ்டர் லாரா அபிஷேக் அவர்கள் மற்ற யோகா மாஸ்டர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட யோகாக் கலை வித்தகர்; ’மாஸ்டர் யோகா’வின் மாஸ்டர்தான்..

அன்பும் எளிமையும் ஆடம்பரமற்ற நட்பும் கொட்டிப் பழகும் பண்பாளர்.

இக்கலை மூலம் மனிதர்களுக்கு நோயற்ற வாழ்வில் தலை நிமிர்ந்து வாழும் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் தனது நோக்கம் என்கிறார்.

யோகாப் பயிற்சியை உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கற்றுத்தந்து,அவர்களையும்  யோகாப் பயிற்சியாளர்களாக உருவாக்கும்  பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஐரோப்பா, ஆஸ்திரேலியா,மலேஷிய, சிங்கப்பூர் மற்றும் துபாய் முதலான அரபு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற் கொண்டு வருகிறார்.

விரைவில் பல நாடுகளிலும் தனது ‘விநியோகா ஹீலிங் சென்டரின்’ கிளைகளைத் தொடங்கும் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

டாக்டர்களாலும் தீர்க்க முடியாத உடல் பாதிப்புக்கள் கொண்டோரும் இவரிடம் யோகாக் ககலையைக் கற்க விரும்புவோரும் தொடர்பு கொண்டு, திரு லாரா அபிஷேக் அவர்களை நேரில் சந்திக்கலாம்.

தொடர்புக்கு:
----------------------- 
Lara Abhisheik
Vinie Yoga Healing Centre
(Centre For Higher Learning in Yoga and Yoga Therapy)
No.7, 25th Street, Besant Nagar
CHENNAI-600 090

mail: vhcyogatherapy@yahoo.in
   &  vhcyogatherapy@gmail.com

பயன் பெறுங்கள் நண்பர்களே! 

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
3.7.2014

Monday, June 30, 2014

மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி!



அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான்.

பிரிட்டிஷ் ராஜ்யம் உலகின் பரந்த பகுதிகளை எல்லாம் கைப்பற்றிய பின்னர்தான் அந்தந்த நாடுகளின் பழமையும் பூர்வ வரலாறுகளும் ஆராயப்பட்டன.

மேலை நாட்டு அறிவியலாளர்கள் ஒருங்கிணைத்த நவீன கல்வி முறையும் அறிவியல் சாதனங்களும் பண்டைய உலகின் மானுடவியலையும் பூர்வீக வரலாற்று உண்மைகளையும் ஆராய்ந்து வெளிக் கொணர வழி வகுத்தன.

பிரிட்டிஷ் பேரரசு உலகெங்கும் விரிவடைந்த போதே அந்தப் பேரரசின் மதக் கோட்பாடான கிறிஸ்துவமும் தனது ஆதிக்கத்தை அந்தந்த நாடுகளில் வேரூன்றத் தொடங்கி விட்டது.

‘கிறிஸ்துவ மார்க்கம் வலிமையாகப் பரவ வேண்டும்’ என்றால்  ’அந்தந்த நாடுகளில் உள்ள  கலாச்சாரப்பெருமைகள் மழுங்கடிக்கப்பட வேண்டும்’ என்ற சூத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர் பிரிட்டீஷ் ஆட்சியினர்.

அதன் மூலம் மக்கள் தங்களுடைய  கலாச்சாரச் சுதந்திரத்துக்காகப் பிரிட்டீஷ் அரசை எதிர்க்காமல் இருக்கவும் தங்கள் மதச் சின்னங்களைக் காட்டிப் புரட்சி செய்யாதிருக்கவும் பார்த்துக் கொண்டனர்.

மாறாக, பிரமாண்டமான சர்ச்சுகளையும் கல்விச் சாலைகளையும் எழுப்பினர்.

இதன் மூலம் பர்மா,சயாம் என்கின்ற தாய்லாந்து, கம்போடியா மற்றும் கொரியப் பகுதிகள்  தனித்தனி நாடுகளாகப் பாவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்குரிய மொழியும் வழிபாட்டு முறையும் அரசின் ஆதரவின்றி அனாதைகளாக்கப் பட்டன.

இப்படித்தான் காலப்போக்கில் இந்தியப் பரந்த கண்டத்தின் செழுமையும் கலாசாரப் பழமையும் சிதைந்து போய் முழுக்க முழுக்க பிரிட்டீஷாரின் சட்டமும் சம்பிரதாயங்களும்  ஆளுமை பெற்றன.

நமது சொந்தப் பூமியின் சொத்துக்கள் சுரண்டப்பட்டு வறுமையும் வாழ்வியல் தேவைகளும் மிஞ்சிப்போய்ப் பாழ்பட்டு நின்ற பாரத தேசத்தின் பரந்து பட்ட பெருமைகளும்  வரலாற்று உண்மைகளும் சிறுத்துப்போயின.

அப்படிச் சிறுத்து போன உண்மைகளின் சின்னமாக, மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சியாக இருப்பதுதான் இன்றைய கம்போடியாவில்  உள்ள ‘அங்கோர்வாட்’ ஆலயம்.

அதன் பிரமாண்டத் தோற்றத்தைத்தான் இங்கே மேலே புகைப்படமாகக் காண்கிறீர்கள்.

முழுக்க முழுக்க இந்திய வழிபாட்டு முறையின் இறைமைச் சின்னமாகப் பண்டைய நாளில் அமைக்கப்பட்டதுதான் இந்த ’அங்கோர் வாட்’ ஆலயம்.

முன்பொருகாலத்தில் ’ஆசியா முழுமைக்கும் இந்தியப் பண்பாடும் கலாசாரமும்தான் பரவி இருந்தன’ என்பதற்குச் சான்று:  இந்த அங்கோர்வாட் ஆலயம்.

‘தொடர்பே இல்லாத ஒரு தேசத்தில் இந்தியப் பாரம்பரியத்தின் பிரமாண்டக் கோவில் பிரசித்தி பெற்றிருந்தது என்பது சரித்திரத்தின் சங்கிலித் தொடர்களை எல்லாம் நாம் அறுத்தெறிந்து வாழ்கின்றோம்’ என்பதற்கு மிகப்பெரும் சான்றல்லவா?

யுனெஸ்கோ ( UNESCO) வின் பார்வை பட்டு உலகத்தாரின் உணர்வுகளை ஈர்க்கின்ற இப்பழம் பெரும் ஆலயத்தைப் பற்றிய உண்மைகள் 90 சதம்கூட வெளித் தெரியவில்லை.

வெறும் பழமையின் பொக்கிஷமாக மட்டுமே இக்கோவில் யுனெஸ்கோவுக்குத் தெரிந்திருக்கிறதே தவிர, அதன் முழு ஆராய்ச்சியும் அதுபற்றிய அறிவும் அவர்களுக்குத் தெரியவே இல்லை.

இந்த அங்கோர்வாட் கோவிலைப்பற்றி வெளியான தகவல்களின் சுருக்கம் இது:

// உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் ’‎கம்போடியா‬’ நாட்டில் உள்ள “‪‎அங்கோர்‬ ‪‎வாட்‬” ஆகும்.  உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். 

இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. 


ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன், இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்தப் பிரம்மாண்ட கோயிலை இங்கு  எழுப்பினான். 

இந்த கோயிலிலை உருவாக்கும்  ஆரம்பக்கட்டப் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கின.  இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தன.

சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள  இந்தக் கோவில் சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது.  இதை ஒரு கலைப் பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடிக்கபட்டுள்ளன. இந்த கோயிலின் ஒரு பக்கச் சுற்று சுவரே  ‘3.6 கிலோமீட்டர்கள் ‘என்றால் அதன் பிரமாண்டத்தை  யூகித்துக் கொள்ளலாம்.

சூரியவர்மன் இறந்தபின், ஆட்சிக்கு வந்த ஆறாம் ஜெயவர்மன் காலத்தில்   “புத்த” கோயிலாக மாறிய, இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐப் பொறித்துள்ளது. 

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால்  மக்களால் புறக்கணிக்கப்பட்டுச் சிதிலமடைந்த நிலையில்  ,1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, 

அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து இக்கோவிலைப் பற்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பேசவும் எழுதவும் தொடங்கினர்.


Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்தகத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

இன்றைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 25 ஆண்டுகளில்  இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.. 


இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. //

இத் தகவல்கள் ’உலக தமிழர்கள் ஒன்று சேருவோம்’ என்ற முகநூல் பக்கத்தை ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை.

நண்பர்களே,

‘இந்தியாவில் உள்ள ஆலயங்களை விட மிகப்பெரியது இது’ எனது உண்மையல்ல;  நமது திருவரங்கம்  கோவிலின் பரப்பளவைப் போன்றது எனக் கூறலாம்.

இன்றைய கம்போடியாதான் புராண காலத்து காம்போஜம்’ என்று கருதப்படுகிறது.

நமது புராண காலத்து தேசங்கள் 56 ல் இக்கோவில்  காம்போஜம் என்ற தேசத்துக்கு உரியதா அல்லது அங்கம் என்ற தேசத்துக்கு உரியதா?  என்பதை வரலாற்று ஆசிரியர்கள் கணிக்க முடியாது. யுக வரலாறுகள் மாறிப்போனபின், சரித்திரத்துக்குச் சான்று பகர யாரால்  முடியும்?

கால,வர்த்தமான உண்மைகளை ஒப்பிட்டு உணர்ந்து சொல்ல மகான்களால்தான் முடியும்.

எப்படி இருந்தாலும் அன்றைய அங்க தேசத்தின் கோவில் இது’ என்பதும் இங்குதான் கர்ணன் வழிபாடு செய்தான்   என்பதும் நமது  யூகத்தால் உணர முடியும்.(கர்ணனை த் துரியோதனன் அங்க தேசத்தின் மன்னனாக முடி சூட்டினான் என்கிறது மகாபாரதக் கதை) இப்போது கம்போடியா தேசத்தின் சொத்தாக இது மாறி இருக்கலாம்.

இந்த அங்கோர்வாட் ஆலயத்தைப் பற்றிய அரைகுறைத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு அரசன் சூர்ய வர்மன் கட்டியதாகவும் 25 ஆண்டுகள் தொடர்ந்து இதன் கட்டிடப் பணிகள் நடந்து முடிந்ததாகவும் செய்திகள் பரவுகின்றன.

உண்மையில் மேலே உள்ள தகவலின்படி,சூர்ய வர்மன்,ஜெய வர்மன் என்ற பெயர்கள் எல்லாம் இங்கு தமிழ் நாட்டு சேர சோழ,பாண்டிய அரசர்களின் பெயர்களாக இல்லை; குறிப்பாகப் புகழ் பெற்ற மன்னர்களின் வரிசையில் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை விடவும் பெரிதான அங்கோர்வாட் கோவில் இந்து கலாசாரத்தின் சின்னமான போதிலும் இந்துக் கலாசாரமே அற்றுப்போன இன்றைய கம்போடியாவில் இருப்பது, உலகின் எந்த
ஆராச்சியாளர்களுக்கும் ஓர் புதிர்தான்.

வரலாறுகள் மறைக்கப்பட்டதற்கும் தவறான வரலாறுகள் புகுத்தப்பட்டதற்கும் வரலாற்றையே உணராதிருப்பதற்கும் இந்த அங்கோர்வாட் உதாரணம்.

புராண காலத்தில் குறிப்பிட்டப்பட்ட அங்கம்,அவந்தி,கூர்ஜரம்,
காந்தாரம் முதலான 56 தேசங்கள் பற்றிய ஆய்வுகளை யாரும் எந்த மானுடவியலாரும் அக்கறையோடு செய்து  உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பழைய ஏற்பாட்டுக் காலத்து உலக வரைபடத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. ஆனால் பண்டைய உலகின் மொழியியலையும் கலாசாரம் மற்றும் சமூகவியலையும் அது முழுமையாகப் பிரசுரிக்கவில்லை. காரணம்,கிறித்துவத்தைப் பரப்பவும் அதன் பெருமைகளைப் போற்றவுமான  உத்திகளை  மட்டுமே இலக்காகக் கொண்டு  பிரிட்டீஷ் அரசு தன், குறுகிய ஆய்வுகள் மூலம் உண்மைகளைச் சொல்லாமல் இருப்பதுதான்.

மகாபாரத காலம் என்பது இன்றைய  சரித்திர காலத்துக்குச் சற்றே முந்தியது என்பதை வரலாறும் மானுடவியலும் அறிந்தோர்   புரிவார்கள்.

யுனெஸ்கோ இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வுகள் நடத்தி,
இந்திய இதிகாசச்  செய்திகளின் உண்மைகளை வெளிக் கொணர்ந்தால்
அங்கோர்வாட் போன்ற வேறு தேசங்களிலும் இந்திய வழிப்பாட்டு முறைகள் எப்படி ஆட்சி கொண்டிருந்தன?’ என்ற உண்மைகளை உலகம் அறியும்.

அதற்கு அடிப்படையாகப் புராணம் கூறும் பழைய 56 தேசங்கள் எவை? அவற்றின் இன்றைய தேசப் பெயர்கள் எவை? என்பது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.

இதை நமது இன்றைய நவீன உலகம் கண்டு பிடிக்குமானால்,நிச்சயம்”
உலகின் மூத்த கலாச்சாரமும் இந்தியாவினுடையதுதான். மூத்த பண்பட்ட குடிகளும் இந்தியர்தாம்” என்பதை உலகம் உணரும்.

உணர்ந்தால் இந்தியா மிகப்பெரும் போற்றுதலுக்குரிய நாடாக மதிக்கப்படும்.

உலகோர் தங்கள் பூர்வ குடிப் பெருமையில் பூரித்துப் போவார்கள்!

அதற்கு உத்தரவாதம் தரும்  சாட்சியாகத்தான்  இந்த மறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சியாக  இந்த ’அங்கோர்வாட்’ ஆலயம் திகழ்கிறது!


இவண்-
கிருஷ்ணன்பாலா
30.6.2014


Thursday, June 26, 2014

கவிதையின் கண்கள்!



நண்பர்களே,

கருத்து ஒன்றை மையமாக வைத்து அதை உரைநடையில் நேராகச் சொல்லாமல் வரிகளை  ஒடித்தும் மடித்தும் எழுதி கவிதை என்று அதற்குப் பட்டம் கட்டிப் பறக்க விடும் உத்தியை இன்றைய அச்சு ஊடகங்கள் கையாண்டு வருகின்றன.

இன்று ஊடகங்களில் அரைகுறைகளே  ஆசிரியர் குழாமில் அங்கம் வகிக்கும் அவலம் மிகுந்துள்ளதே அதற்குக் காரணம். ஊடகத்துக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர் உட்பட அவர்களின் கீழ் பணிபுரியும் எவருக்கும் மொழி ஆற்றல் என்பதும் மொழியின் இலக்கணம் என்ன என்பதும் அறவே தெரிந்திருக்கவில்லை. இத்தகையோரால்தான் எழுதப்படும் கவிதைகள் தரச் சான்று பெற்றுப் பிரசுரம் அடைகின்ற துர்ப்பாக்கிய நிலை வளர்ந்து வருகிறது.

இதன் மூலம் கவிதை என்பதன் அடிப்படைக் கட்டுப்பாடுகளும் அவற்றின் ஆளுமையும் தகர்க்கப்பட்டு  இன்றைய தலை முறையினருக்குக் கவிதை என்றால் என்ன?’ என்பதே தெரியாமல் போய் விட்டது.

எதுகை மோனைகளோடும் இலக்கணச் சுத்திகளோடும் ஓசை நயங்களோடும் தட்டித்தட்டி,சிற்பிகள் வடிமைக்கும் சந்தங்களோடும் கவிதை படைக்கின்றவர்களை அந்நிய தேசத்து  ஆட்களைப்போல்  இந்தக் கத்துக்குட்டிகள் பார்க்கின்ற வினோதத்தை, வளர்த்து விட்ட அறியாமைதான் இன்றைய ஊடகங்களின் அறிவுச் சொத்துக்களாக சந்தையில் விலை போகின்றன.

இதைச்சுட்டிக் காட்டி எழுதினால் ’எழுத முயற்சிக்கின்றவர்களின் எண்ணச் சிறகை ஒடிக்க முயலாதீர்கள்’ என்று  ஒப்பாரிக் குரல்கள்தான் ஒலிக்கின்றன.

ஞானச் செருக்கும் நவில் மொழிச் சிறப்பும் கவிதையின் கண்கள்; அதைக் குருடாக்கிக் கொண்டு கவிதையை விதைக்கின்றோம்’ என்று  கச்சேரி நடத்தும் கூட்டத்திலிருந்து தமிழ் அன்னை கண் காணாத தூரத்தில் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாள்.

இன்றைய தமிழ் அறிஞர்கள் இதைப்பற்றி வாயே திறக்காமல் வடைக்கும் பாயாசத்துக்கும் போட்டி போட்டுக் கொண்டு பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருப்பதுதான் வேடிக்கை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
26.06.2014