Friday, September 27, 2013

யார் அடுத்த பிரதமர்?

அறிவார்ந்த நண்பர்களே,

ராகுலைக் கொச்சைப்படுத்தி, நிந்தித்து மகிழ்வதல்ல நமது நோக்கம்.

அவர் இன்னும் சராசரி இந்திய அரசியல் தலைவர்களின் பக்குவ நிலைக்கே
வராதவர்.  40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் விளையாட்டுப் பிள்ளையாகவே வலம் வருகிறவர்.

அவர் மிகப் பெரும் தியாக சீலர் அல்ல;‘மக்கள் நலம் ஒன்றே தனது வாழ்நாளின் லட்சியம்’ என்றெல்லாம் சிந்தித்துச் செயல்படும் அரசியல் பண்பாடும் கொண்டவர் அல்ல. ஆனாலும் இந்திராவின் பேரன்;ராஜிவின் புதல்வன்,சோனியாவின்  வாரிசு என்பதன் அடிப்படியில்தான்  எம்.பி ஆனர்; காங்கிரஸின் செயல் தலைவர்காவும் ஆனார்.

தலைமுறை தலைமுறையாக நேருவின் பரம்பரைக்கே இந்தியாவை அடிமை சாசனம் எழுதி வைத்து விட்டிருப்பதுபோல் இந்திரா காந்தியின் இறப்புக்குப் பின்னால் காங்கிரஸின் அடிமைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அரசியலில் எந்த அனுபவமுமே இல்லாத ராஜிவ் காந்தியைத் திடீர் சாம்பார்;திடீர் ரஸம் போல் திடீர்ப் பிரதமராக்கினார்கள்.

ராஜீவின் மரணத்துக்குப் பின்பும் அவருடைய இத்தாலிய மனைவியை , ராஜீவின் மனைவி என்ற ஒரே அந்தஸ்தை வைத்து அதே அடிமைகள் கூடித் தொழுது கட்சித் தலைவி ஆக்கினார்கள்.(சீதாராம் கேஸரி கொஞ்ச காலம் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சோனியாவை மதிக்க மறுத்து விட்ட கதை ஒரு பக்கம்)

அப்போது ராகுல்  விடலைப் பையனாக இருந்த காரணத்தாலும் காங்கிரஸுக்கு முழுமையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தாலும் மைனாரிட்டி அரசை நடத்த  நரசிம்ம ராவைக் காலத்தின் கட்டாயத்தால் பிரதமராக்கினார்கள்.

நரஸிம்மராவ் பதவிக் காலம் முழுதும் சிரிக்காமலேயே இருந்து சோனியாவைக் கலங்கடித்து விட்ட வரலாறு நாடறியும்.

கேஸரி,நரசிம்மராவ் இவர்களுக்கு முதன்மைப் பொறுப்புக் கொடுத்து கட்சியும் ஆட்சி அதிகாரப் பிடியும் தன் கையை விட்டு நழுவுவதுபோல் இருந்த சூழ்நிலையை அனுபவித்து விட்ட காரணத்தால் கட்சியிலும் ஆட்சியுலும் தன் பிடி எப்போதும் இறுக்கமாக இருக்கும் வகையில் முழுக்க முழுக்க ஜால்ரா அடிமைகளையே கட்சியின் உயர் மட்டக் கமிட்டிகளிலும் ஆட்சியில் பிரதமர் பதவி உள்ளிட்ட கேபினட் மற்றும் துணை மந்திரிகள் அத்த்னை பேரையும் வாரத்துக்கு ஒருமுறையாவது வந்து தன் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து தவறாமல் முறைவாசல் செய்யக் கூடியவர்களாகவே வைத்துக் கொள்ளத் துணிந்து விட்டவர் சோனியா.

தங்களுக்குச் சொரணையும்  வெட்கமும் வீரமும் வீவேகமும் இருப்பதாக மந்திரிகளில் ஒருவர்கூட இதுநாள் வரையிலும் நிரூபிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை நாடு பார்த்துத் தலைகுனிந்து கொண்டிருக்கிறது.

இந்த லட்சணத்தில் தனது மகன் ராகுலை எப்படியும் பிரதமராக்கத் துடித்துக் கொண்டிருக்கிற சோனியாவுக்குக் கொஞ்சம் கூட நாடு, அதன் பாரம்பரியம்,தேசத்தின் கௌரவம் என்பதில் எல்லாம் அக்கறை இல்லை.

‘கட்சியின் சார்பில் பிரதமராக இருப்பவர் அந்தப் பதவிக்கேற்ற கம்பீரத்துடனும் மனசாட்சியோடும் ஆட்சி புரிய வேண்டும்’ என்ற அடிப்படை ஞானம்கூட இந்திராவின் இத்தாலிய மருமகளுக்கு இல்லை.

இந்திரா காந்தியின் ஆளுமை அவர் ஒரு பிரதமராக இருந்து உலகை வியக்க வைத்தது போல் அதற்கு நேர் எதிர் கோணத்தில் மன் மோகன் சிங்கின் கையாலாகாத் தனம் உலகெங்கும் உணர்த்தப்பட்டு இந்தியாவின் அவமானம் வெளிச்சப்பட்டிருக்கிறது.

‘இந்த நாடு எப்படிப் போனால் என்ன? தனது கஜானா நிரம்பிக் கொண்டிருக்க வேண்டும்;தன் குடும்பம் நிரந்தரமாக இந்தியாவை அடிமைக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற சுயநல வெறி ஒன்றைத் தவிர சோனியாவுக்கு வேறு நல் எண்ணம்  இல்லை.

அதற்குரிய வாரிசாக ராகுலைப் பிரதமர் ஆக்க எந்த வழியையும் பின்பற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதை இங்கிருக்கிற கழிசடை அரசியல் தலைவர்களும் உணரவில்லை

இந்தியாவின் தொழில் வளம், நேர்மையான நிர்வாகம்,திறமை மிக்க ஆட்சி, ராணுவ பலம்,மக்களின் நல வாழ்வு இவற்றில் அக்கறை கொண்ட தலைவர்கள் இல்லாது போனது துரதிர்ஷ்டம் இந்தக் காங்கிரசாலும் சோனியாவின் தலைமையினாலும்தான் உண்டாகி இருக்கிறது.

பிரமிக்க வைக்கக் கூடிய சட்ட நிபுணர்கள், நெஞ்சம் நிமிர்ந்து நீதியைத் தீர்ப்பெழுதுகின்ற நீதி அரசர்கள், உயிருக்கு அஞ்சாத ராணுவம், மேலை நாடுகளையும் மிரள வைக்கின்ற அறிவியலாளர்கள்,அறிவுக் கூர்மை மிக்க பத்திரிகையாளர்கள், நடு நிலைமை தவறாத எழுத்தாளர்கள், கடின உழைப்பால் தொழில் துறையில் அந்நிய நாடுகளை அதிர வைக்கும் தொழில் சிந்தனையாளர்கள்,அரசு நிர்வாகத்தை அறநெறி தவறாமல் நடத்திச் செல்லும் உயர் IAS,IPS.IFS,IRS அதிகாரிகள்,மனசாட்சி மிகுந்த அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாவகியிலும் தலை சிறந்து நிற்கும் இந்தப் பாரதம் கேவலம் இந்தத் தேசத்தின் சத்து இன்னதென அறிகிலாத ஒரு இத்தாலியப் பெண்ணுக்கு அதுவும் கல்வி அறிவும் ஞானமும் அற்ற வெகு சாதாரண வெளிநாட்டுப் பிரஜைக்கு  அடிமையாகிப் போனதே? என்ற கவலையும் வருத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சினமாகவும் சீற்றமாகவும் மாறி.இந்த நாட்டில் பிறந்ததே ஒரு மகாப் பெரிய பாவமோ? என்று நினைந்து நினைந்து செத்த பிணம்போல் ஆகிக் கொண்டிருக்கிறோம்.

‘இனியாவது நாடு திருந்தாதா? நாட்டின் கேடுகள் ஒழிய நல்லாட்சி  மலராதா? திறமையும் தெளிவும் வீரமும் விவேகமும் கொண்ட தலைவன் இதன் பிரதமராக வர மாட்டானா?’  என்று நாடு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நீர்பூத்த நெருப்பாய் மக்கள் நெஞ்சங்களில் அனலைப் பரப்பிக் கொண்டிருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் நரேந்திர மோதி நமக்குக் கிடைத்துள்ளார்.

நல்ல சமயம் இதை நழுவ விடுவோமா?

நாட்டை எண்ணி நரேந்திர மோதியை விரும்புங்கள் நண்பர்களே,

நமக்குள் இருக்கும் நச்சு எண்ணங்களை,மதம்,இனம்,அரசியல் மாச்சர்யங்களைப் புதைத்து விட்டு நாடு சிறக்க எண்ணுங்கள்.

நாடு நலமாகவும் பலமாகவும் ஊழல் அற்ற ஆட்சியின் கீழ் இருந்தால்தான் நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

இந்தியன் என்று எந்த வெளிநாட்டில் போய்ச் சொன்னாலும் அந்நியர்கள் மரியாதையோடு  இந்தியாவை நினைக்கும்படிச் சிந்தித்து நில்லுங்கள்;செயல்படுங்கள்.

எனவே,
கழிசடை அரசியல்வாதிகளின் பின்னே சென்று ஏமாந்து போகாதீர்கள்: நீங்கள் ஏமாறத் தயாரானால்,இதோ இந்தப் படத்தில் உள்ள விளையாட்டுப் பிள்ளைதான் உங்களை அடுத்து ஆளப் போகும் பிரதம மந்திரி.

மானங்கெடப் போவது இவர் அல்ல; நீங்கள்தான்.


பின் குறிப்பு:
ராகுலின் புகைப்படங்கள் கூகுளில் இருக்கின்றன. அவற்றில் சிவற்றை நீங்கள் இங்கே பாருங்கள்.  ‘பொறுப்புள்ள பாராளும்ன்ற உறுப்பினர்;மத்தியில் ஆளும் காங்கிரஸின் துணைத்தலைவர்; நாளை பாரதப் பிரதமர்’ என்ற கனவில் நிலை நிறுத்தப்படுபவர், எப்படிப் பொது இடங்களில் நடந்து கொள்கிறார் என்பதையும் சிந்தியுங்கள்.






இவண்-
கிருஷ்ணன்பாலா
27.9.2013


மோடி: வழிமொழிந்த திருச்சி மாநாடு.


அறிவார்ந்த  நண்பர்களே,
வணக்கம்.

‘யாருமே எதிர்பார்த்திராத வகையில்  ‘இந்தியாவின் நாளைய பிரதமர் நரேந்திர மோடிதான்’ என்பதை அறிவித்ததுபோல், இன்று திருச்சியில் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்பதற்காக ‘இளம் தாமரை மாநாடு’ என்ற பெயரில் கூடி, மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்திருக்கிறது.

உண்மையில் தமிழக பி.ஜே.பி யேகூட இந்தக் கூட்டத்தை எதிர்பார்த்திருக்காது.

இந்தக் கூட்டம் நிச்சயம் பி.ஜே.பிக்காகக் கூடிய கூட்டம் அல்ல; நரேந்திர மோடிக்காகவும் கூடிய கூட்டம் அல்ல; காங்கிரஸ்மீது இளைஞர்கள் கொண்டிருக்கும்  கோபத்தின் கூட்டம் இது’ என்பதை இன்றைய திருச்சி இளம்தாமரை மாநாடு தீர்மானமாகக் காட்டி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சி மாநாடுகளுக்கு வரும் கூட்டம் பணம், பிரியாணி,இலவசப் பேருந்துப் பயணம்,உற்சாகப் பானம்’ என்பதன் பின்னணியில் கூட்டி வந்த கூட்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் மோடிக்காக ‘இளம்தாமரை மாநாடு’ என்ற பி.ஜே.பியை வலுவூட்டும் இந்த மாநாட்டுக்கு, இளைஞர்களும் இளைஞிகளும் மட்டுமல்லாது மூத்தோரும் கூடி வந்த கூட்டமாக ஆரவாரம் செய்திருப்பது தழர்களின் அரசியல் தெளிவுக்கும் மத்தியில் உறுதியான ஆட்சி மாற்றத்துக்கும் வழிமொழிந்திருக்கிறது என்று சொல்வதே வாய்மைக்கும் நேர்மைக்கும்  நாம் முன்மொழிவதாகும்.

இதைவிட ஒரு உண்மை எனக்குப் படுகிறது:
இன்றுள்ள அரசியல் ஆரவாரத்தில் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்டால் கிடைக்கும் மிகப் பெரும்  பெரும்பான்மை எம்.பிக்கள் வெற்றியானது பி.ஜே.பியின் பெயரால் ஓட்டுக் கேட்டால் நிச்சயம் சிறுத்துப்போகும்தான்.

இன்று மோடியால் பி.ஜே.பி  இந்தியாவில் மட்டுமல்ல,தமிழகத்திலும் தனது சரிந்து போன செல்வாக்கைக் கொஞ்சம் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது.

’வரும் பாராளுமன்றத் தேர்தலில்  மிகப் பெரும்பான்மை என்ற இலக்கை அது அடையுமா? அல்லது கூட்டணிப் பலத்தால் அந்தக் குறையைப் போக்கிக் கொள்ளுமா? என்பதெல்லாம் கணக்கிடக் காலம் இன்னும் நெருங்கவில்லை.

ஆனால், வெற்றிச் சிகரத்தை நோக்கி மோடி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ-
காங்கிரசின் கடை கெட்ட நிர்வாகச் சீர்கேடுகளாலும் ஊழலின் உச்சக் கட்ட உக்கிரத்தின் காரணமாகவும் Negative Wave எனப்படும் காங்கிரசுக்கு எதிரான மக்கள் அலை நரேந்திர மோடியை உச்சத்தில் உட்கார வைக்கத் தீர்மானித்து விட்டது.

இதன் விளைவாக, மோடியின் அலை வீச்சுக்கு அஞ்சி காங்கிரஸ் நடு நடுங்கிக் கொண்டிருக்கிறது.

‘தன்னை ஒரு பொம்மைப் பிரதமராகவே வைத்து நாடே காறித் துப்பும்படியான ஊழல் பெருச்சாளிகளைத்  தனக்குக் கீழ் வைத்து  மந்திரிகளாக வைத்து சொக்கட்டான் ஆடித் தனது பெயரை  சர்தார் ஜோக்குகளின் சக்கரவர்த்தியாக,உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கறை படுத்தி’விட்ட சோனியாவைப் பழிதீர்த்துக் கொள்வதற்காக, ’இனி ராகுலைப் பிரதமராகப் பார்க்க விரும்புவதாகவும் அவருக்குக் கீழ் (மானம் கெட்டுப் போய் மந்திரியாக) வேலை பார்ப்பதில் பெருமைப்படப் போவதாகவும்’ ஒரு அரசியல் அறிக்கையை விட்டார் மன்மோகன். சோனியா ஆடிப் போய் விட்டார்.

உண்மையில்  ‘தனது தலைமையினால் காங்கிரஸ் தோற்றது’ என்ற பழி வரக் கூடாது;அது ராகுலால் வருவதுதான் நியாயம் என்பது மன்மோகன் சிங்கின் மனக் கணக்கு.

‘ஊழல் தயிரைக் கடைய வைத்து அதன் வெண்ணெய் முழுவதும்  போய்ச் சேர்ந்த வீடு இத்தாலி’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார்,சிங்.

‘ராகுலைப் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துத் தேர்தல் நடத்தினால்’ மோடியின் முன்னே. பின்னங்கால் பிடரியில் பட மக்கள் ஓட ஓட விரட்டி விடுவார்கள் என்பதை ’இண்டலிஜெண்ட்’ ரிப்போர்ட் மூலம் (மந்திரிகள் மூலம் அல்ல: மந்திரிகள் எப்போது ‘இண்டலிஜெண்ட்’ ஆக இருந்தார்கள்?) அறிந்து கொண்ட சோனியா,மன்மோகன் தங்கள் குடும்பத்துக்குக்  குழி பறிக்கப் பார்க்கிறார்’ என்பதையும் புரிந்து கொண்டார்.

‘தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் யார்?’ என்பதை அறிவித்துக் கொண்டு தேர்தலில் இறங்குவது காங்கிரசின் வழக்கமில்லை’ என்று ஓர் அறிக்கையை விடச் செய்தார்.

இதிலிருந்து பிரதமர் மன் மோகன் ஒரு மண்;அவருக்கு என்ன தெரியும்? என்பதை மறைபொருளாகவும் காட்டிய சோனியா, மோடிக்கு எதிரான வேட்பாளர் ராகுல் அல்ல’ என்பதையும் சொல்லி விட்டார்.

அதாவது காங்கிரஸ் பெரும்பான்மையாக வென்றால் ராகுலைப் பிரதமர் ஆக்கலாம்’ எனக் கனவு கண்டடிருந்த சோனிய அந்த வாய்ப்பு மலை ஏறி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது என்பதால், இனி ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸ் வாக்குக் கேட்டால் மக்கள் ஜோட்டால் அடிப்பார்கள் என்பதையும் லேட்டாகத் தெரிந்து கொண்டார். அதாவது, காங்கிரசுக்கு எதிரான மகக்ள் எழுச்சி அவருக்கு உணர்த்தி இருக்கிறது!

தேர்தல் நெருங்க நெருங்க மோடியின் செல்வாக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலையும் இமயச் சிகரங்களை எட்டிப் பார்க்கப் போகின்றன.

காங்கிரஸின் கதியோ கழுதை சிறுத்துக் கட்டெறும்பாகி அதுவும் சிறுத்துச் சிற்றெம்பாகப் போகிறது.

பி.கு: உடனே யானையின் காதில் எறும்பு புகுந்து ஆட்டி விடும் என்று எவரேனும் நமது அறிவு ஜீவிகள் (?) எழுதினாலும் எழுதுவார்கள்,பாருங்கள்.

வெல்க நாடு;வெல்க பாரதம்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.9.2013

Tuesday, September 24, 2013

மோடியைத் தீர்மானிப்பது யார்?


அறிவார்ந்த இந்தியச் சகோதர்களே,

வணக்கம்.

மோடிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 187 பார்லிமெண்ட் சீட்டுக்கலுக்கு மேல் கிடைக்காதாம்;அதனால் மோடியால் பிரதமர் பதவியை அடைய முடியாதாம்?

இதை OUTLOOK வார இதழ் சொல்லிவிட்டதென்று நான் மதிக்கக் கூடிய இஸ்லாம் நண்பர் ஒருவர் முகநூலில் பதிவு செய்திருந்தார்.

பதிவு செய்திருந்ததுடன், மோடியின் தோல்வியில் ’இறைவனின் கருணை இருக்கிறது’ என்ற  கருத்தையும் சொல்லி இருந்தார்.

மோடியை எதிர்ப்பதற்கும் ஆதரிப்பதற்கும் இந்தியனாகிய எவருக்கும் உரிமை உண்டு.

ஆனால்’மோடி தோற்பது என்பது இறைவனின் கருணையினால்’ என்று மதச் சாயத்தின் அடிப்படையில்  இங்கு எழுத முனைவது  உண்மையில் மத நல்லிக்கத்தைச் சீர் குலைக்கும் செயல் என்பதை அப்படி எழுதும் நண்பர்கள் சிந்திப்பது நல்லது.

அவர்கள் எந்த நோக்கத்தில் எழுத முனைகிறார்களோ ’அந்த நோக்கம் பாழ்பட்டுப் போகும்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இறைவனை ஒரு அற்பக் காரணத்துக்காக அடகு வைத்து, சிறுபிள்ளத்தனமாக தங்கள் அறிவிற்கேற்பவே அரசியல்,மத நோக்கத்தோடு எழுதுகிறார்கள்.

மோடி தேர்தலில் மிகப் பெரும்பான்மையோடு வென்று விட்டால் அவர்கள் நம்பும் இறைவன் சிறியவனாக விடுவானா?

இறைவனின் நோக்கத்தை அற்ப மானிடரால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்தியாவில் மதக் கலவரங்களாலும் மத வெறித்தனங்களாலும் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்காக மகிழ்கின்றவன் மனிதன் அல்ல.
அதற்காக இஸ்லாமைச் சேர்ந்தவர்கள் இந்துக்களை வெறுப்பதும் துவேஷிப்பதும் மிருகப் புத்தி கொண்டவர்கள் என்பதைக் காட்டிக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.
.
அப்பாவி இந்துக்களும் எண்ணிக்கையற்ற வகையில் இங்கே காஷ்மீரிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும்  நாள்தோறும் கொல்லப்படுகிறார்கள்.

உண்மையில் இந்தியாவில் இம்மாதிரியான மதக் கலவரங்களில் கொல்லப்படும் அப்பாவி இஸ்லாம் மக்களை விட அதிக மடங்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,ஈராக், சிரியா முதலான இஸ்லாம் நாடுகளில் அப்பாவி இஸ்லாமியர்கள்  கொல்லப்படுகிறார்கள்.

இதற்கு யார் காரணம். இஸ்லாமில் உள்ள இனப் பிரிவுகளும் அடிப்படை மத வாத வெறியும்தான் காரணம்.

ஒருவேளை,இந்துக்களோ,இந்தியப் பிரஜைகளோதான் காரணம் என்று எண்ணும் குருட்டுச் சிந்தனை கொண்டோர் சொன்னாலும் சொல்வார்கள்.

இந்தியா இன்று  பொருளாதாரத்தில் மிகவும் சிதைவுற்று ஊழல் மலிந்து போய் அதன் இறையாண்மையும் நெறியாண்மையும் உலக அரங்கில் கேலிக்குரியதாகி விட்டது.

இனியும் இந்தக் காங்கிரஸால் இதன் மீட்சியைக் கொண்டு வர முடியாது என்பது இங்குள்ள மக்களில் 60 சதவீதத்தினருக்குப் புரிந்து போய், காங்கிரஸையும் அதன் கூட்டாளிகள் எவரையும் சவக் குழியில் கொண்டு போய் எரியத் தயாராகி  விட்டனர்.

காங்கிரசின் கயமைத் தனமும் கண்டறியப்பட்ட ஊழல்,கொள்ளைகளும் இந்திய மக்களை மேலும் மேலும் கேவலமாகப் பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இதற்கு மாற்றாக மன வலிமையோடும் தேசப் பக்தியோடும்  ஊழலுக்கு எதிராக  திறமை மிக்க நிர்வாகத்தைத் தரக்கூடிய  தலைவன் தேவைப் படுகிறான்.

அந்தத் தலைவ,ன் மோடிதான் என்பது  பெரும்பான்மை இந்திய மக்களின் நம்பிக்கையாக -அந்த எண்ணம் அலையாக இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்த அலையில் இதன் தேசிய நீரோட்டத்தில் நெகிழ்ச்சியோடு இங்குள்ள தூய்மையான் இஸ்லாமியப் பெருமக்களும் கிறித்துவப் பெருமக்களும் இரண்டறக் கலந்து நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், மதவெறியோடு இந்தியாவை அழிக்க எண்ணும் தீய சக்திகளின் பின்னே சென்று இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிரான எண்ணமும் பாகிஸ்தானின் மீது பந்த பாசமும் காட்டும் ஐந்தாம் படையினருக்கு இது தெரிய வேண்டும்:

’இந்திய மண் நமது தாய் மண்’;’இந்தியா வளமோடும் வலுவோடும் இருந்தால்தான் நாமும் நமது சந்ததிகளும் பெருமையோடு வாழ முடியும்’ என்று எண்ணுபவர்கள் மத மாச்சரியங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ‘இந்தியன்’ என்ற இலக்கோடு மோடியை ஆதரிப்பது அவர்களுக்கு நல்லது.

அறிவுக்கும் உண்மைக்கும்  எதிராக,மத உணர்வைக் கொண்டும் போலிச் சமூக சிந்தனையைக் கொண்டும் மோடியை விமர்சிப்பவர்கள் நமது அனுதாபத்துக்குரியவர்கள்.

மோடியைத் தீர்மானிப்பது ஊடகங்கள் அல்ல; பொய்யான -குருட்டு வாதங்களும் அல்ல; இந்திய விரோதிகளும் அல்லர்!

மக்களின் மனச் சாட்சியே.

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.9.2013

Monday, September 23, 2013

கலைஞர்: வரலாற்றின் இருண்ட பக்கம்

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இன்று  (22.9.2013) தென்னிந்திய திரைப்படத்துறையின் காலம் நூறு
ஆண்டுகள் நிறைவெய்தியதை ஒட்டி மிகப் பிரமாண்டமான விழா, தென்னிந்திய திரைப்படத் துறையினர் சார்பாக சென்னை நேரு விளையாட்டு மைதானத்தின் உள் அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப் பட்டு, மாண்புமிகு தமிழக  முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமை ஏற்று, விழாப் பேருரையை நிகழ்த்தினார்.

அவரது உரை உலகெங்கும் தமிழ்ச் சேனல்கள் மூலம் ஒலி/ஒளி
பரப்பப் பட்டது. இதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் அநேகமாக எல்லோரும் பார்த்தார்கள்.

நண்பர்களே,
உலகத் தமிழர் இனம் படுபாதாளத்தில் வீழ்வதற்கு உரிய அத்தனை கேடுகளையும் செய்தவர் கலைஞர்தான்.

அதற்கு அவருக்குக் கையில் எளிதாகக் கிடைத்த ஆயுதம்; சினிமா.

அவருடைய தனிப்பட்ட வக்கிரங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள், குடும்ப உறவுகள், கொள்ளை அடிப்பதற்குக் கூட்டாக இருந்தவர்கள் தவிர வேறு யாரும் முன்னேறவும் உயர் நிலை அடையவும் கலைஞர் அனுமதித்ததே இல்லை.

’தமிழர்;தமிழ் இனம்’ என்றெல்லாம் அவர் வாய் கிழியப் பேசியதும் எழுதியதும் அத்தனையும் பித்தலாட்டம்;ஏமாற்றுத்தனம்.

தனது மனச்சாட்சியின் கேடு கெட்ட குணங்களைத் தனிமையில் சிந்தித்து உணர்ந்து வருந்தும் மனோ நிலையே இல்லாதவர் அவர்..

புராணங்களில் வர்ணிக்கப்பட்ட ’அரக்கர்களின் ஒட்டு மொத்தக் கலியுக அவதாரம் கலைஞர்’ என்று சொன்னால் அது மிகை அல்ல.

அவரைப் பின்பற்றும் அத்தனை பேரும் அரக்கர்களின் கலியுகப் பிறப்புக்கள்தான்; அவர்கள் தமிழ்ப்பண்பாட்டின் தலைசிறந்த கோட்பாடுகளைப் படித்தறியாப் பாதகர்கள்;அறிவிலிகள்..

அந்த அரக்கர் கூட்டத்தைத் துவம்சம் செய்ய வந்த அவதாரம் மேடம் ஜெ. என்பது எனது கணிப்பு.

மேடம் ஜெ. முன்பு கலைஞரின் எந்த சாணக்கியத் தனமும் எடுபடாது.
எம்.ஜி.ஆர் அவர்களைவிடவும் கலைஞர் மீது சினம் கொண்டு, சீறி எழுகின்ற குணம் மேடம் ஜெ. அவர்களுக்கு இருக்கிறது’ என்பதை நம்மால் உணர முடிகிறது.

அந்த உணர்வை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் இன்று ‘தென்னிந்திய திரைப் படத்துறையின் நூற்றாண்டு விழா வைபவம்’  அமைந்திருக்கிறது.

அதற்கு, இவ்விழாவில்  மாண்புமிகு தமிழக முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் தலைமை ஏற்று, நிகழ்த்திய பேருரை சான்று.

கலைஞர் முதல்வராக இருந்தபோது அவருக்கு முழு நேர ஈடுபாடே சினிமாக்காரர்களை அழைத்து வாரத்துக்கு ஒரு விழாவை நடத்தச் சொல்வதும், அதில் தனக்கு கிறு கிறுப்பை ஊட்டக் கூடிய நடிகைகளை மேடையில் தன் முன்னே தோன்றச் செய்து, ரசித்து இன்புறுவதும்தான்  மிகப் பெரிய கடமையாக இருந்தது.

அவருடைய செயலாளர்களுக்கும் இன்ன பிற IAS அதிகாரிகளுக்கும் மந்திரிமார்களுக்கும் முதல்வர் கலைஞரை மகிழ்விப்பது ஒன்றுதான் ’பெருமாள் சேவையாக’ இருந்தது.

எத்தகைய விமர்சனங்கள் எழுந்தபோதும். கொஞ்சமும் வெட்கப்படாமல், மக்கள் நலத் திட்டச் சிந்தனைகள் ஏதுமின்றி பொழுது விடிந்தால் ’நாளைய சினிமா நிகழ்ச்சி அல்லது தனது பெருமைகளைப் பேசுகின்ற விதூஷகர்களின் விழா என்று திட்டமிட்டுச் செயல்படுவதே’ தனது ’அமைச்சர் அவையின் முக்கியப் பங்கு’ என முதல்வர் பதவியை முழுக்க முழுக்கத் தன் சுய இன்பத்துக்கென்றே அனுபவித்தவர் அவர்.

அதிகாரத்தின் மமதையால் திரை உலகத்தைத் தன் காலடியில் கிடத்தி
அவர்களை நாயினும் கீழாக நடத்தி, நச்சுச் சுகம் கண்டவர் கலைஞர்,

இன்று அதே திரை உலகம் அவரை இருட்டடிப்புச் செய்து, அவரைக் கௌரவிக்க மறுத்து விட்டதன் மூலம்  அவருடைய திரை உலக வாழ்வை எட்டி உதைத்திருக்கிறது.

இதைவிட வேறு ஒரு  அவமானம் கலைஞருக்கு வழங்கப்பட முடியாது.

திரை உலகமே,தன் பின்னால் அணிதிரண்டு ,தன்னைப் புகழ்ந்து பெருமை கொள்வதாக அளவுக்கு மிஞ்சிய  கற்பனையில் மிதந்து கொண்டிருந்தவரின் இன்றைய நிலை மிகவும் இழிவானதாக, வெட்கக் கேடானதாக மாறி விட்டது பார்த்தீர்களா?

திரை உலகில் ஒருவர் கூடச் சீண்டாதவராக, தீண்டத் தகாதவராக  உதாசீனப்பட்டு இன்று உளறிக் கொண்டிருக்கிறார்.

இதை ஆளுகின்ற அதிமுக அரசு செயல்பட்டு ஏதோ திட்டமிட்டு,’கலைஞரை இருட்டடிப்புச் செய்திருக்கிறது’ என்று எவரேனும் சொல்வார்களானால் அவர்களுக்கு நமது அனுதாபங்களைச் சொல்லிக் கொள்வோம்.


அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கு அடிபணிந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் நன்றியுள்ள நாய்தான் திரைப்பட உலகம்.

அது, ’தன் நன்றியை ஒழுங்காகச் செய்திருக்கிறது’ என்றுதான் சொல்வேன்.

அதன் செயல்பாடுகள், மேடம் ஜெ. அவர்களை மகிழ்விக்கச் செய்திருக்கிறது அவ்வளவுதான்.

எனினும்-

என்னைப் பொறுத்தவரை, கலைஞர் திரைப்படத்துறையில் இருண்ட வரலாற்றுக்குரியவர்.

அவர் உண்மையான தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான அனாச்சாரக் கருத்துக்களைத்தான் திரைக்கதைகளாகவும்  வசனங்களாகவும் எழுதி, கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தக் காரணமாக இருந்தாரே ஒழிய, தமிழரின் உண்மையான பண்பாட்டுக்கும் மேன்மைக்குமான எந்தச் சிந்தனையையும் அவர் சினிமாவில் புகுத்தவில்லை.

அது அவருக்குத் தெரியாத ஒன்று.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?.

தமிழர்களைக் கேடு கெட்ட பாதையில் திருப்பும் அடுக்கு மொழி மற்றும் ஆரவார வசனங்களால் மயக்கி, தன்னையும் தனது கூட்டத்தையும் வளர்த்துக் கொண்டாரே தவிர , தமிழரை வளர்க்கவில்லை.

வரலாறு மன்னிக்க முடியாத மாபெரும் சுயநலவாதிதான் அவர்.
இந்த உண்மையைத் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கவியரசு எழுதிய ’வனவாசம்’ மற்றும்’ மனவாசம்’ நூல்களைப் படிக்க வேண்டும்.

இன்றைய வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் பேருரை நிகழ்த்திய தமிழக முதல்வர் மேடம் ஜெ. அவர்கள்  இதைத்தான் தெள்ளத் தெளிவாக தேர்ச்சி மிக்க உபகதை மூலம்  கலைஞரின் சுய உருவத்தை நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
திரை உலகில் அதிகம் பங்கு கொண்டு பிரபல கதாநாயகியாகத் திகழ்ந்த மேடம் ஜெ. அவர்கள்,  நம்மை எல்லாம் விட கலைஞரை அதிகம் தெரிந்தவர்.

பொய்யுரை செய்யத் தெரியாத புகழுக்குரியவர்.

தனக்குச் சரி என்று உணர்வதைத் தலை நிமிர்ந்து சொல்லவும் செயல்படுத்தவும்  தயங்காதவர்.

தமிழ், தமிழர் இனம் என்ற கோஷங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தமிழ்ப் பற்றையும் பாசத்தையும் ஒட்டு மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்போல், திரை உலகத்தைத் தன் அடிவருடும் கருவியாக்கிக் கொண்டு, தாண்டவமாடிய கலைஞருக்கு அதே திரை உலகம் இன்று அவரை இருட்டடிப்புச் செய்து கொண்டதன்மூலம் அவருக்குத் தக்க வெகுமதி அளித்திருக்கிறது.

மறுபடியும் ஆட்சிக்கு வந்து திரை உலகத்தினரைப் பழிவாங்கும் வாய்ப்பே இல்லாதவரான நிலையில் புலம்புவதைத் தவிர, அவருக்கும் வேறு மார்க்கம் இல்லை.

இதற்கேற்ப,தமிழக முதல்வரின் தென்னிந்திய திரைப்பட நூற்றாண்டு விழாப் பேருரை,கலைஞரின் பங்கீட்டையும் அவரை நெருங்கி நின்றவர்களையும் பெயரில்கூட இருட்டடிப்புச் செய்துள்ளது.

’அதற்குத் தான் காரணமல்ல’என்பதை வெகு சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்; ‘திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது’ என்று அடிக்கோடிட்டு உரை நிகழ்த்தியிருப்பதே அதன் விளக்கம்.

சுயநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு,’பிறர் வாழாமல் தான் மட்டுமே வாழ வேண்டும்’என்று வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவன் கிணற்றில் வீழ்ந்த கதையைச் சொல்லி அவன் மேலே வரமுடியாது மறுபடியும் கிணற்றுக்குளேயே வீழ்ந்து ஒழிந்ததைக் குறிப்பிடும் உண்மை அர்த்தம் பொதிந்த அவரது உரையைக் கேட்டவர்கள் ‘பாவத்தின் சம்பளம் யாதெ’னத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

எனினும் –

நம்மைப் பொருத்தவரை,கலைஞரை  எந்த வகையிலேனும் திரை உலகமோ,,தமிழக முதல்வரோ கைவிட்டு விட்டிருக்கக் கூடாது.

தமிழகத்தை இன்று கட்டி ஆளும் மேடம் ஜெ. அவர்கள் இது குறித்துக் கொஞ்சம்  கவனம் செலுத்தி, திரைப்படத்துறையில் கலைஞர் மற்றும் அவர் தொடர்பான கலைஞர்களைக் கௌரவித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் அவர்தன் கையால் கலைஞருக்கு ஏதேனும் ஒரு விருதை வழங்கி கலைஞர் அவர்களைக் கௌரவித்திருந்தால் மேடம் ஜெ. அவர்களின் பெருமையும் தகுதியும் பல மடங்கு உலகத் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் உயர்ந்திருக்கும்.

அந்த வாய்ப்பு ஏனோ தவிர்க்கப்பட்டு விட்டது; நமக்குச் சற்று வருத்தம்தான்.

எனினும் ஒன்று சொல்வேன்:
வரலாற்றின் இருண்ட பக்கங்களை இருட்டடிப்புச் செய்த போதிலும்,அதுவே ஒரு வரலாறாகி,அதுவும் பேசப்படும்தான்..

வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் புறக்கணித்தத் துணிவுகூட
வரலாற்றின் பக்கங்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
22.9.2013

Sunday, September 22, 2013

சினிமாத் தாயே! (1987களில்)


அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
தென்னிந்தியத் திரைப்படத் துறை தனது 100 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில், நான் 1987களில் எழுதிய ‘இந்த ராஜபாட்டையில்….’என்ற எனது நூலில் எழுதப்பட்ட ‘சினிமாத் தாயே!” என்ற உரைநடைக் கவிதையை இங்கே வாசக நண்பர்களின் ரசனைக்காக பதிவு செய்வது 
மிகப் பொருத்தம் உடையதென நம்புகிறேன்.:

நட்புடன் -
கிருஷ்ணன்பாலா
22.9.2013


சினிமாத் தாயே!
( 1987 களில்)

எங்கள்
இந்தியர்களின்
இதயங்களை
வசியப்படுத்தி –

அவர்களுக்கு
அத்தியா வசியப்
பொருளாகிவிட்ட
சினிமாத் தாயே!
நமஸ்காரம்.

எங்கள் நாட்டின்
கலாச்சாரப் பெருமைக்கும்
சிறுமைக்கும்
நீதான் அச்சாரம்.

உன்
வாழ்க்கையில்
நான் 
சம்பந்தப்பட்டவன் அல்லன்;
ஆயினும்
நீ
என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு
எனது
சிந்தனைகளைக்
கலைத்தாய்!

ஆகவே -
கலைத் தாயே,

இங்கே
உன்னைச்
சந்திக்கின்றேன்;

கருத்தில்
வைத்துச்
சிந்திக்கின்றேன்!

எங்கள்
இந்தியனை
நல்ல குடிமகன்
ஆக்குவதும்;
கெட்ட ‘குடி’மகன் ஆக்குவதும்
உனது மகிமைதான்!

எங்கள்
மகாத்மாக்களைச்
சினிமாக்கள் ஆக்கி
மாக்களாக
இருந்தவர்களை
மக்கள் ஆக்கிய
வித்தையை
மேற்கில்
ஹட்டன்பரோக்கள்
வென்றிருப்பதும்
உனது
பெருமைதான்……

உன்னையே
வாழ்க்கையாக்கிய
எங்களில் பலர்-

படாதிபதிகளாக
ஆனதும் உண்டு;
மடாதிபதிகளாகப்
போனதும் உண்டு!

உன்னை
விநியோகம் செய்து
யோகம்
பெற்றவர்களும் உண்டு;
சோகம்
உற்றவர்களும் உண்டு!

எங்கள்
மக்களுக்குச்
சோறு கிடைக்கிறதோ
இல்லையோ?

உன்னால்
சுகம் கிடைக்கிறது!.....

வாழ்வின்
கோரப் பிடியிலிருந்து
கொஞ்ச நேரம்
அவர்கள் விலகியிருந்து,

தங்கள்
வசந்தக் கனவுகளைக்
காண
உனது முகம் இருக்கிறது;

ஆம்!
அவர்கள் காணும்
ஏக்கக் கனவு
அவர்களின் நித்திரையில் அல்ல;
உனது முத்திரையில்…!

தாயே,
உனது சாம்ராஜ்யத்தில்
அரைகுறைகளே
ஆதிக்கம்
செலுத்துகின்றன;
ஆடையிலும் சரி;
அறிவிலும் சரி!

எங்கள் ராஜ்யத்திலும்
அரைகுறை
வாழ்க்கைதான்
ஆட்சி செய்கின்றது;
பணத்திலும் சரி;
குணத்திலும் சரி!

அதனால்தான்,
எங்கள்
சத்யஜித் ரேக்களின்
காமிராக்களுக்குச்
சேரிகளும்
’பாண்டிச்’ சேரிகளும்

சிறந்த விருந்தாகி
மே’னாடுகளுக்கு
இந்தியா
ஒரு
‘கீழ்’ நாடாகவே
தெரிகிறது!

ஒரு
காலத்தில்
ஸ்டுடியோக்கள்
உன்னை
ஆட்டி வைத்தன;

இன்று
ஸ்டுடியோக்கள்
உன்னால்
ஆட்டம் கண்டு விட்டன.

சவமாகிக் கொண்டிருந்த
உனது முடிவு
எங்கள்
பாலு மகேந்திராக்களின்
கா’மிராக்களால்’
உயிர்பெற்று
உற்சவமாய்
ஊர்வலம் பெற்றது.

உன்னுடைய
வெறும்
கைகள்கூட
எங்கள்
பாலச்சந்திரர்களால்
தார’கைகளாய்
ஜொலித்தன.

உன்னால்
ஆச்சாரம் கெட்டதாய்
அழுதுகொண்டிருந்தவர்கள்

இன்று
உனக்கு
அச்சாரம் செலுத்தித்
தொழுது கொண்டிருக்கிறார்கள்;

ஆயினும் –
உன்னால்
அரியாசனங்கள்
மாறியதையும்
அறியா’சனங்கள்
ஏ’மாறியதையும்
நாங்கள்
மறுப்பதற்கில்லை!

இருட்டிலிருந்து
வெளிச்சத்துக்கு
வரும்
நீ-
வெளிச்சத்தில்
இருப்பவர்களை
எல்லாம்
இருட்டுக்குள்
அல்லவா
உட்கார வைத்து விடுகின்றாய்?

உன்னிடம்
மயங்கி
விட்டில் பூச்சிகளாய்
விழுந்தவர்களின்
எண்ணிக்கை
வானத்து
நட்சத்திரங்கள் போல்;

உன்னை வைத்து
மயக்கி
மின்மினிப் பூச்சிகளாய்
மேலே
எழுந்தவர்களின்
ஜொலிப்பும்
வானளாவிய
நட்சத்திரங்கள் போல்!

கிழவிகள்கூட
குமரிகளாய்ச்
சித்தரிக்கப்பட்ட
உனது கதைகள்
தாரளமாய் இருப்பதால்-

எங்கள் வீட்டுப்
பிஞ்சுகள் கூட
பழுத்துப்போய்
சித்திரவதைப்பட்ட்
கதைகள்
ஏராளமாய் இருக்கின்றன.

உனது
படங்கள் எல்லாம்
தரம் கெட்டவை
என்பதை மறுக்கிறேன்:

எப்படியெல்லாம்
எடுக்கக் கூடாது
என்பதைக் காட்ட
புத்திசாலிகளுக்கு
உனது படங்கள்
பாடங்களே……

எப்படி வேண்டுமானாலும்
எடுக்கலாம்
என்று
இறங்கி விட்ட
புத்திகாலிகளுக்கு
புத்தி புகட்டுவதும்
உனது படங்களே!

‘உன்னைவிடச்
சிறந்த சாதனம்

வேறு இல்லை’
என்பது
இன்று பொய்யாகி விட்டது;

ஏனெனில்-
உன்னைவிட்டு விட்டு
அரசியலில்
தங்கள்
திறமைகளைக் காட்டிவரும்
நடிகர்களின்  எண்ணிக்கை
பெருகி விட்டது.

உன்
மேடைகளில்
நடிப்பவர்கள்
லட்சக் கணக்கில்
சம்பாதிக்கிறார்கள்;

ஆனால்
அரசியல் மேடிகளில்
நடிப்பவர்களோ
’கோடிக் கணக்கில்’ எனக்
கூறிகொள்கிறார்கள்!

உனது
சினிமாக்கள்
எங்கள்
கல்லூரிகளின்
நாகரிகத்தைக்
கற்று வளர்கின்றன.

எங்கள்
கல்லூரிகளோ
உனது
சினிமாக்களின்
கவர்ச்சியைக்
கற்றுத் தேய்கின்றன.

எப்படியாயினும்-
உனது சந்தையில்
வியாபாரம்
அபாரம்
என்பதால்-

உனது
முரண்பாடுகள்கூட
இந்தியப் பொருளாதாரத்துக்கு
உடன்பாடாகி விட்டது!

மக்களை
மாக்களாக்கிய
பல
சினிமாக்கள்
இருந்தபோதும்-

மாக்களுக்கு
சில சினிமாக்கள்
‘எனிமா’வாக
இருப்பதால்

உனது
குப்பைகளைக் கூட

எங்கள்
கலாச்சாரப் பயிர்களுக்கு
உரமாகக் கொடுக்கவும்;

உனது
குப்பைகளுக்குள்கூட
மாணிக்கங்களைத் தேடி
எடுக்கவும்

நாங்கள்
நம்பிக்கை கொண்டுவிட்டோம்.

ஆகவே-
உன்னை நம்பிக்,’கைகொடுத்து’

நீ

எங்களுக்கு
‘எனிமி’என்ற
கருத்தைக் காட்டிலும்

உனது
பெருமையின் இனிமையை
நாங்கள்
அங்கீகரிக்கவே
செய்கிறோம்!

தாயே,
எமது தேசத்தின்
சத்தான பெருமை
உன்னால்
கௌரவம்
பெற வேண்டும்’
என்றே
கரங்களைக் குவிப்பேன்!

அதனால்-

உனக்கொன்று உரைப்பேன்:
பண்பட்ட சிந்தனையாளர்களே
சினிமாக் கலைஞர்களாகச்
செம்மைப் படட்டும்:
அவர்களை
நீ-
அங்கீகரிக்காததுகூட

அவர்களுக்குக்
கௌரவம் தரும்

விஷயம்தான்;

ஆனால்-

அவர்களை
அங்கீகரித்து
அணைத்துக் கொள்வதன்மூலமே

நீ
உயர்ந்த கௌரவம்
பெறுகிறாய்’

என்பதை
உனக்குச் சொல்லி வைப்பேன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா

(1987களில் வெளியான ‘‘இந்த ராஜ பாட்டையில்…...'' நூலிருந்து)