Friday, June 14, 2013

நானும் எனது கவிதைகளும்...



நண்பர்களே,

1970கள் முதலே-கவிதைகள் எனது கை ,வசப்படத் தொடங்கின. 1972 களில்,முதன் முதலாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் எனது கவிதை ஒன்றைத் தனது ’கண்ணதாசன்’ மாத இதழில் பிரசுரித்தார். ”வண்ண மயிலே....’’ என்ற என்னுடைய கவிதைதான் முதல் பிரசுரம்;தொடர்ந்து கல்கியில் ’ஏழாம் படை வீடு...’’ என்ற கவிதை. அதன் பிறகு பல்வேறு இதழ்களில் வானொலியில், பத்திரிகைகளில் என்று பிரசுரம் ஆயின.

உண்மையில் நான் இலக்கணம் ஏதும் கற்றிராதவன். இலக்கணத்தின் வழி நின்று சிந்தித்து எழுதும் வழக்கமும் இல்லாதவன்.
பாரதியும் கண்ணதாசனுமே எனது கவிதைச் சிந்தனையின் ஊற்றைத் திறந்து விட்டவர்கள் என்பேன்.

சின்ன வயதில் ஆறாம் வகுப்பு படித்த காலத்தில் அவ்வையின் மூதுரையும் ஆத்திச் சூடியும் தனிப்பாடல் திரட்டும் விவேக சிந்தாமணியும் எனது சிந்தைக்கு விருந்தாக அமைந்து அப்பொழுதே சிந்திக்கத் தூண்டியவை.

எனினும்-
எனது கவிதைகளில் சில சமயம் தளை தட்டும்தான்.

ஆனால்-
சொல்லவரும் கருத்தில் எவ்விதப் பிழையும் இருக்காது. இலக்கணம் மாறாக் கருத்துக்களில் அது தன் கம்பீரத்தை இழப்பதில்லை என்பதில் கர்வம் கொள்கிறவன் நான்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.6.2013

மனமே நீ.......






















கம்பனைப் பாடி கொம்பனாகலாம்;
காளமேகம்போல் கவிதை கொட்டலாம்;
நம்பிக்கை ஊட்டும் வார்த்தைமலர்களில்
நாடே புகழும் பெயரை எட்டலாம்!

கண்ணதாசனின் காதல் கவிதையில்
கதை கதையாக  உவமை கூறலாம்;
எண்ணம் முழுவதும் அவன்பேர் வடித்து
இரவும் பகலும் வணக்கம் கூறலாம்!

அவ்வை,வள்ளுவன்,இளங்கோ,பாரதி
அடுக்கடுக்காக ஆயிரம் புலவரை
கவ்விடும் கருத்தில் வடித்து வைத்து
கருத்துப் பதிவுகள் வெளுத்து வாங்கலாம்!


அறிஞர் சபையில் ஆரா வாரங்கள்
அணங்குகள் இடையில் வரவேற்புரைகள்;
திறமை மிக்கதோர் தமிழுணர்வோடு
திசைகள் எட்டிலும் தேர்ந்து நிற்கலாம்!

கவிஞன்;புலவன்;அறிஞன் என்று
கணக்கில்லாமல் பேர் நீ, வாங்கினும்
புவியில் ’மனிதன்’ எனும் பெயர்  ஒன்றை
பூண மறந்தால் பொய் நீ,மனமே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.6.2013

தனி மரம் தோப்பாகாது!



அறிவார்ந்த நண்பர்களே,

இலவச சாப்பாட்டுப் பந்தல்,இலவச நீர்மோர்ப் பந்தல்.இலவசத் தண்ணீர்ப் பந்தல் என்பதுபோல,இது இலவச சமூக வலைத்தளம். பொதுவாக இலவசப் பந்தல் என்பது இறைநெறி நோக்கில் அறப்பணி செய்யவே நம் முன்னோர் இம்மாதிரி உணவு,நீர்மோர்,பானகம், தண்ணீர் என்று மக்களுக்குத் தேவைப் படும் அத்தியாவசியப் பண்டங்களை மிகுந்த சிரத்தையோடும் மனச் சான்றோடும் பயபக்தியோடும் முக்கியமான தெய்வத் திருவிழாக்களில் பொது ஜனங்களுக்கு வழங்கி வந்தனர்.

பொதுமக்களுக்காகச் செய்யும் எந்தவொரு நற்பணியும் - கோவில் கட்டுவதாகட்டும்;அன்ன சத்திரங்கள் கட்டுவதாகட்டும் அதில் தெய்வக் குற்றம் இல்லாதபடி இருக்க வேண்டும் என்பதை மிகப் பெரும் சமூக நீதியாகக் கருதி அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டாக, தம் இறுதி நாட்களில் பாவங்கள் அற்ற நிம்மதியும் பேரும் புகழும் கிடைக்கச் செய்யும் அறமாக நம் முன்னோர் கடைப்பிடித்து வந்தனர்.
 
இன்று நமக்குக் கிடைத்துள்ள இந்த சமூகவலைத்தளம் கூட எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் எழுதி வைத்து விட்டுப் போககக் கிடைத்துள்ள இலவச அறப்பண்பாட்டுச் சித்தாந்தத் தளம்தான்.

இதில் நாம் பதிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் தகுதியை, தரத்தை, அறிவுக் கூர்மையை உங்கள் வருங்காலச் சந்ததிக்கு இலவசமாக வார்த்தெடுத்துத் தரும் வரலாற்றுப் படிமம்தான்.

நம் முன்னோர் வாழ்ந்து காட்டிய பாதையின் வழியே வந்த நாம், அவர்களின் எச்சங்களாக இன்று இருக்க வேண்டாமா?

இதை உணராது நாம் வீணே வாழ்ந்திடல் கூடாது;வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக்கி, தலைமுறைதோறும் தர்மமும் நீதியும் தாழ்ந்துவிடாமல் இருக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் மானுடக் கடமை.
ஆனால் நம்மில் இதை எத்தனை பேர் உணர்ந்து வாழ்கிறோம்? மனச் சான்றோடு எண்ணிப் பாருங்கள்.
 
ஊரில் கோவில் திருவிழா. ஊரில் உள்ள அத்தனை பேரும் தங்கள் பங்குக்கு ஒருபடி பசும்பாலைக் கோவில் விசேடத்துக்குக் கொண்டு வந்து ஊற்றவேண்டும் என்று கோவில் கமிட்டியினரால் சொல்லப்பட்ட பின்பு அந்த ஊரில் இருந்த ஒவ்வொரு குடும்பத்தாரும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஆள் உயர அண்டாவில் தத்தம் பங்காக ஒருபடி அளவு பாலை ஊற்றிவிட்டுச் சென்றார்கள்.
 
அந்த ஊரில் இருந்த செட்டியார் ஒருவர், பெரும் கஞ்சன். எதிலும் காசு பார்க்கும் கருமியான அவருக்கு இப்படியோர் எண்ணம் உதித்தது:

“எல்லோரும் பாலை ஊற்றுவார்கள்.அதில் நாம் தண்ணீரை ஊற்றி நமது கணக்கைக் காட்டினால் போச்சு. நாம் கொட்டும் தண்ணீர் அந்தப் பாலில் தனியாகவா தெரிந்து நம்மைக் காட்டி கொடுத்து விடும்?”

 
இப்படி எண்ணம் உதித்ததும் அந்தச் செட்டியார் அப்படியே ஒரு படி தண்ணீரை அந்தப் பால் அண்டாவில் கொட்டிவிட்டுச் சென்றார்.
 
அங்கிருந்த கணக்குப் பிள்ளை ’ஊரில் உள்ள அனைவரும் வந்து பாலைக் கொட்டி விட்டனர்’ என்று கணக்கு முடித்ததும் கோவில் கமிட்டியார் கூடி அந்த அண்டாவிலிருந்த பாலை பூஜைக்காக எடுத்துப் பார்த்தனர்.
அந்தோ... அண்டா முழுதும் பாலுக்குப் பதிலாகப் பச்சைத் தண்ணீரே நிரம்பி இருந்தது.

கோவில் கமிட்டியார் வெட்கித் தலை குனிந்தனர்.
 
செட்டியாரைப் போன்றே இன்றுள்ள மக்கள் ஒவ்வொருவரும் ‘பொது வாழ்வில் நாம் மட்டும் ஒழுங்கீனமாக இருந்து விட்டால் இந்த சமூகத்துக்குக் கேடு ஒன்றும் விளைந்து விடப்போவதில்லையே’ என்று எண்னி ஒவ்வொருவருவருமே தவறு செய்கின்றவர்களாகி விட்ட நிலை உருவாகி விட்டது.

”யார் தவறு செய்தால் என்ன? நாம் தவறு செய்யக் கூடாது’ என்று ஒவ்வொருவரும் சிந்திப்பது ஒன்றே உயர்தரச் சமூகத்தின் கட்டுக் கோப்புக்காக நாம் செய்யும் ஒழுக்கச் சிந்தனை.


அதுவே ஒவ்வொருவரின் நல்லொழுக்கம்;நற்பண்பு;சமூக ஞானம்.
தனி மரம் தோப்பாகாது, ஊர் கூடி த் தேர் இழுத்தால் ஒழிய தேர் நகராது.
தனி ஒருவன் ஒழுக்கம் பற்றி உபதேசிப்பதால் மட்டும் ஒழுக்கமும் பண்பும் ஊருக்குள் புகுந்து விடாது.
 
நண்பர்களே, எல்லோரும் சேர்ந்து கை தட்டுங்கள்;இனிய நாதம் எழும்!.

இவண்,
கிருஷ்ணன்பாலா
14.6.2013

Thursday, June 13, 2013

இனிய உளவாக….






அறிவுசான்ற நண்பர்களே, 
வணக்கம்.
 
முகநூலில் சமூகப் பிரக்ஞைக்கான விஷயங்களைச் சொக்க வைக்கும் நடையில் நிறையப்பேர் எழுதி வருகிறார்கள்; ஆனால், அவற்றைக் குறையப் பேர்களே படித்துக் குதூகலிக்கின்றார்கள்.

அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, இலக்கியம்.மொழி. ஊடகங்கள், நகைச் சுவை,புதுமைகூட்டும் புகைப் படங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இங்கே தரமான பதிவுகளில் பரிமாறப்பட்டு வருவது படிப்போரின் சிந்தனையைத் தீண்டும் வகையிலும் புதிதாக எழுத வருவோருக்கு எழுத்தை எப்படிக் கையாள வேண்டும்?’ என்று எழுதத் தூண்டும் வகையிலும் இருக்கின்றன.
மூன்றாந்தரமான படைப்பாளர்கள் முகநூலில் பெருகி நிற்பினும் அவர்களை  அரைகுறைகள் ஆரவாரம் செய்து ஆதரிப்பினும் நாம் இந்த அஃறிணைகளைப்  புறக்கணித்து, இருக்கின்ற உயர்வான  உண்மையை உயர்திணைகளை, உணர்ந்து, ஒப்புக்கொண்டு பாராட்டத்தான் வேண்டும்.

இன்றைய இளைஞர்களில் சிலர் பிரமிப்பூட்டும் வகையில் சிந்தித்து எழுதி வருவது கண்டு பேருவகை கொள்கின்றது மனது.

அவர்களின் படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் புகழ்ந்தும் உவந்தும் அவ்வப்போது என் கருத்தூட்டங்களைப் பதிக்கின்றவன்தான் நான்.

நான் படிக்காத,பார்க்காத,படிக்க முடியாத பதிவுகள் நான் பார்த்ததைவிட எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் என நம்புகிறேன்.

எனது கவனத்துக்கு வரும் நல்ல பதிவுகளை நான் தவறவிடுவதில்லை.

எனது எழுத்தின் நோக்கமும் நான் விரும்பிப் பார்க்கின்ற பதிவுகளின் நாட்டமும் ஒன்றுதான்.

அது, நமது தமிழ்ச் சந்ததியை உரமும் உயிர்ப்பும் மிக்கதாக்கி, சமுதாயத்தின் எதிர்கால ஆணி வேராகக் காணும் உந்துதல்தான்.

’இந்த உந்துதல் இங்கு எழுதுகின்ற நண்பர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும்’ என்று சிந்திப்பது நப்பாசையா? இல்லை நட்பாசையா? என்பதை உங்களுடைய மனச் சான்றுதான் மதிப்பிட வேண்டும்.

இத்தகைய உயர்தரப் படைப்புக்களின் எதிர்பார்ப்புக்கிடையே, எழுதத் தெரிந்த நண்பர்கள் பலர், காதல் என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதைப் பல கோணத்தில் சிந்தித்து விதம் விதமாக இங்கே பதிக்கின்றதையும் நான் கவலையுடன் காண்கின்றேன்.

நமது தலைமுறைக்கு நாம் கற்றுத்தருகின்ற பண்பாடு இதுவல்ல’ என்பதை அவர்கள்தன் சிந்திக்க வேண்டும்.

அதில் ஒரு சிலர் அப்படி காதலைப் புதிய கோணத்தில் எழுதினால் நிறையப் பேர் அதை ரசிக்கிறார்கள்; அதன் மூலம் தங்களுக்கு நட்பு வட்டம் பெருகிறது என்பதாய் எண்ணம் கொண்டு அப்படி எழுதுவதை நியாயப்படுத்துகிறார்கள்.

‘இந்த முகநூல் நட்பு வட்டம் எந்த வகையிலும் நமது வாழ்க்கை நிலைக்கு உடன் இருக்கும் நண்பர்கள் வட்டம் அல்ல’ என்பதை அவர்கள் உணர்வதில்லை.

‘பண்பட்ட நண்பர்கள் இந்த வலைத்தளங்களின் தொடர்பினால்
ஒருவருக்கொருவர் வாழ்க்கை நண்பர்களாக உருவாவதை  விரும்பினால் அதில் அர்த்தம் உண்டு. நான்  அப்படித்தான் விரும்பி நண்பர்களை ஏற்கிறவன்.

ஆனால் இளம் வட்டங்களும் இருட்டறை இதயங்களும் காதல் விஷயத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கின்றார்கள் என்பதற்கும் அவர்களை மேலும் ஈர்த்து நண்பர்களாக்கி ‘உச்சுக் கொட்டவைத்துத் தங்கள் நட்பு வட்டத்தை வளர்ப்பதும் அவர்களின் ‘Like'களுக்கும் பாராட்டுரைகளுக்கும் நன்றி அறிக்கை வாசிப்பதும்  வெட்கக் கேடானது. அவை அறிவுக் கண் கொண்டு பார்ப்போரை   எரிச்சலுறச் செய்கின்றன.

இந்த நண்பர்கள் சிலர் தொடர்ந்து காதலைப் பற்றி எழுதுவதன் நோக்கம்தான் எனக்கு ஒவ்வாமையாக உள்ளது. அவர்களுக்கிருக்கும் ‘கூர்மையான சிந்தனை’ என்னும் கத்தி வெண்ணெயை ஏன் வெட்ட வேண்டும்? என்கிறேன்.
  
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.’’

என்று இனியவை (அவையில் இனிய விஷயங்களைக்) கூறலின் சிறப்புப் பற்றி வள்ளுவன் வகுத்துச் சொன்னதன் பொருளைத் தங்கள் வசதிக்காகத் ‘திரிபு’செய்து, இனிமையும் குதூகலமும் ஊட்டும் காதல் விஷயங்களை
வாசகர்களின் பேரின்ப ரசனைக்கு விருந்தாக்குகின்றோம்’ என்கிறார்கள்.

நண்பர்களே,

காதல் என்பது தனி ஒருவனின் அந்தரங்க விஷயம்.

அதை அரங்கத்தில் ஏற்றி அவலப்படுத்துகின்ற நிலையில்
திறமை மிக்க சிந்தனையாளர்கள் இறங்கி விடக் கூடாதென்பதென் கருத்து.

காதலைப் பற்றி அறியாதார் யார்? உணராதார் யார்?

எனினும் அது சபையில் விவாதிக்கின்ற பொருள் அன்று.

முகநூலைப் பொறுத்தவரை ஆபாசத்துக்கும் அசிங்கத்துக்கும் உணர்ச்சி காட்டுகின்ற கூட்டமே அதிகம். அந்தக் கூட்டத்துக்குத் தண்ணி காட்டுவதும் தவிடு போடுவதும் ஒரு மாட்டுக்காரனின் வேலையாக இருக்க முடியுமே தவிர, தரமான படைப்பாளின் இயல்பாக இருக்க முடியாது.

எனது நண்பர்களுக்கு இதைத்தான் இலைமறைகாயாக இடித்தும் சொல்கிறேன்; எடுத்தும் சொல்லி வருகிறேன்.

இதன் அடிப்படையில், நான் எழுதி வரும் பண்பாட்டு நலன் குறித்த  கருத்துக்களைப் படித்தும் வாதித்தும் உணர்ந்து கொள்கின்ற எத்தனையோ இளம் சிந்தனையாளர்கள்,எழுச்சிமிக்க இளம் கவிஞர்கள்  இப்போதெல்லாம் நல்ல தரம் வாய்ந்த பதிவுகளைத் தந்து வருகிறார்கள்; அதில் காதலைப் பற்றிச் சொல்வதென்றாலும்கூட.

எனது பல்வேறு பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவோர் ஆயிரக்கணக்கில் இந்த மாறுதலை, மறுமலர்ச்சியை உணர்ந்து வருவதில் எனக்குப் பெருமைதான்.
உயர்தர இலக்கிய அறிவை;எண்ணங்களை,தமிழர் பண்பு காக்கும் ரசனையை,சமூகப் பார்வையை, அரசியல் அவலங்களை, படிப்போரின் சிந்தனைக்கு வைப்பதும் அதில விசாரம் காட்டுவதுமே தமிழ்ச்
சிந்தனையாளர்களின் பெருமைக்கு ஏற்றது.

இதை எண்ணாது, “இங்கே காதலைப் பற்றி எழுதினால் அதை ‘’ஆஹா...ஒஹோ’ என்று கூவிக் குதிக்கின்றவர்கள் மன வளர்ச்சியற்றவர்களே” என்பதையும் மறந்து அந்தக் கூட்டத்தின் உற்சாகத்திற்காக எழுதி , நண்பர்கள் வட்டத்தைப் பெருக்குவதை  நான் அவமானகரமான  சிந்தாந்தம்’ என்றே  கூறுவேன்,

இனியாகிலும் இதை என் நண்பர்கள் உணர வேண்டும். 

இப்படிச் சொல்லியும்கூட அவர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் பண்பும் மரபும் கெட்டழிந்த சந்ததியினரைத்தான் அவர்கள் கண்டு நொந்து கண்ணீர் சிந்த நேரிடும்.


’ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்கு
 உண்மை தெரிந்ததைச் சொல்வேன்!’

என்று-

முரசு கொட்டிய பாரதி எனக்குக் கற்றுக் கொடுத்ததை.
நான் காட்டிக் கொடுக்கின்றேன்,நண்பர்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.6.2013