Friday, January 11, 2013

எக்காலம்?
























வாழ்க்கைஎனும் நீள்பாதை
வார்த்திருக்கும் காலடிகள்
ஊழ்வினையின் உறுத்தலெனெ
உணர்ந்திருப்ப தெக்காலம்?

பின்னாள் விளைவுகளைச்
பிழையற்ற வாழ்வாக்க
முன்னாள் அறிவோடு
மூழ்குவது எக்காலம்?

செய்யாத செயல்களுக்குப்
சிறிதளவும் உண்மையின்றிப்
பொய்யாய்ப் புகழ்வதைநாம்
புறக்கணிப்ப தெக்காலம்?

கல்லாத மானிடர்பால்
காட்டுகின்ற அக்கறையில்
இல்லாத பொருளுரைக்கும்
இலக்கொழிப்ப தெக்காலம்?

பொய்யை, புனைசுருட்டைப்
போற்றுகின்ற கூட்டத்தார்
கையொலியை மறுத்துக்
கையெடுப்ப தெக்காலம்?

நீதிநெறி முறைகள்
நில்லாத சிந்தனையை
ஓதி மகிழ்வோரை
ஒதுக்குவது எக்காலம்?

சாதிக் கண்ணோட்டம்
சண்டாளர் சகவாசம்
தீதென்று சொல்லி,அதை
தீ வைப்பதெக் காலம்?

போதிக்கும் பொய்யரெலாம்
புறவேஷ தாரி எனும்
சேதிசொல்லி நாற்றிசையும்
சிந்திப்ப தெக்காலம்?

தோல்,சதையில் மயங்கித்
துவளுகின்ற பேய்மனதைக்
காலால் உதைத் திங்கு
கட்டிவைப்ப தெக்காலம்?

வீட்டுக்குள் இருந்தாலும்
வெளிஉலகில் மனம்திரியும்
கேட்டுக்குள் வீழ்வோரைக்
கேடறுப்ப தெக்காலம்?

வீட்டு நினைவுக்குள்
வீழ்ந்தாலும் நாம் அதனை
நாட்டுநலன் ஆக்கி,
நாடுவது எக்காலம்?

இறக்காமல் பிறக்கின்ற
எண்ணத்தை வளப் படுத்தி
மறக்காமல் வாழுகின்ற
மனம்பெறுவ தெக்காலம்?

வையம் அழிக்கின்ற
வன்செயல்கள் புரிந்திங்கு
தெய்வம் தொழுவோரைத்
திருடரென்ப தெக்காலம்?

நீதிசெயும் ஆசனத்தில்
நிமிர்ந்திருக்கும் நேர்மையின்றிச்
சாதிக்கும் சபை ஒழித்துச்
சாற்றுவது எக்காலம்?

ஓட்டுக்கள் வாங்குதற்கு
ஊழல்பணம் நீட்டும்
நோட்டுப் பேய்களைநாம்
நோகடிப்ப தெக்காலம்?

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.1.2013

Tuesday, January 1, 2013

பொய்ம்மை அகல;மெய்ம்மை மேவ...!


நண்பர்களே,

அனைவருக்கும் 2013ன் புத்தாண்டு வணக்கமும் வாழ்த்துக்களும்.

“அஸத்தோம ஸத் கமய;
தமஸோம ஜ்யோதிர் கமய;
ம்ருத்யோர்ம அம்ருதம் கமய...”

என்று உலகின் நன்மைக்காகப்
ப்ரார்த்திக்கிறது ரிக் வேதம்.

”பொய்யிலிருந்து உண்மைக்கும்
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும்
அழிவிலிருந்து அழியாத நிலைக்கும்

எங்களை வழி நடத்திச் செல்வாயாக!”

என்று-

செழுஞ்சுடராம் சூரியனை நோக்கி நம் முன்னோர் வேண்டிக் கொள்ளும் வழிபாடு இது.

சூரியனே உலகின் கண்கண்ட  கடவுள் என்று 
ரிக் வேதம் சொல்கிறது.

நம் அறிவுக்கு மெய்ஞ்ஞான  வித்து சூரியன்தான் என்பதைக் கண்டுணர்ந்த உண்மை இது.

மத உணர்வுகளை எல்லாம் கடந்து, உள்முகம் கொண்டு உணர்ந்தால் இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.


உலகின் மிகத் தொன்மை வாய்ந்த வேதம் என, கற்றாய்ந்த அறிஞர்களாலும் மானுடவியலாளர்களாலும் போற்றப்படும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட இவ்வாசகம் மிக நுட்பமான மெய்ஞ்ஞானச் சிந்தனைக்கு நம்மை வழிநடத்தக் கூடியதாகும்.

உலகின் கண்கண்ட முழுமுதல் கடவுள் என சூரியனை நோக்கி வணங்கி வேண்டுவதுபோல் இந்த வழிபாடு காட்டும் உணர்வினை நாம் சிந்தையில் கொண்டு
இந்த நாளில் நம் எல்லோருக்குமாக  வேண்டுவோம்:

பொய்ம்மையிலிருந்து மெய்ம்மைக்கு;
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு;
அச்சத்திலிருந்து துணிச்சலுக்கு;
சுயநலத்திலிருந்து பொது நன்மைக்கு....

நம் அனைவரையும் இப் புத்தாண்டு (2013) வழி நடத்திச் செல்லுமாக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
1.1.2013

Thursday, December 27, 2012

வள்ளுவ நீதி!




நண்பர்களே,
இன்று (27.12.2012) தலைநகர் டெல்லியில்  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கவுன்ஸில் வளர்ச்சிக் கூட்டத்தில் அதிரடியாக தமிழகத்தின் முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளிநடப்புச் செய்து தேசியச் செய்திகளில் தலைப்புச் செய்திக்குரியவாராக ஆகியிருக்கிறார்.

தேசிய வளர்ச்சிக் கவுன்ஸில் கூட்டத்தில்  தமிழகத்தின் தொழில் வளம் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?

இந்தியாவின்  வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தின் பங்கு
என்ன ?
இதை மேலும் வலுப்படுத்த,மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி வசதிகள்,சலுகைகள் எவை என்பது பற்றியெல்லாம்
கம்பீரத்தோடும் கண்ணியத்தோடும் பேசி, நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டிய நம் முதல்வர், தான் 10 நிமிடங்கள்  பேசியதும்,  ‘பேச்சை முடிக்கும்படி மணியடிக்கப்பட்டதால் தனது பேச்சை முழுவதுமாக பேச அனுமதிக்கவில்லை’ என்று காட்டமாகக்  குறிப்பிட்டுவிட்டு, அதைக்  கண்டிக்கும் வகையில்  கூட்டத்திலிருந்து  வெளிநடப்புச் செய்து இன்றைய ‘தலைப்புச் செய்திகளின் முதல்வராகி’ விட்டிருக்கிறார்.

இந்த வெளிநடப்பு என்பது ஏதோ ஒருவகை அரசியல் ஆதாயத்துக்காகவே அன்றி நிச்சயம் மாநிலத்தின் நன்மைக்காகவோ, கண்ணியமான அரசியல் தர்மத்தின்  நடைமுறைகளைக் காக்கவோ அல்ல.

அறிவு சார்ந்த அரசியல் நோக்கர்கள் முகம் சுளிக்கவும்  பாமரர்கள் கூட்டம் மேடம் ஜெ. அவர்களின் துணிச்சல் பற்றி வெற்றுப் புகழாரம் சூட்டவும் இந்திய அளவில் மீடியாக்களில் பேசப்படவும்தான் இந்த வெளிநடப்பு உதவி இருக்கிறதே தவிர, தமிழகத்தின் நலன் சார்ந்த வெளிநடப்பாக  உணர முடியவில்லை.

இது எந்த வகையிலும் முதிர்ந்த ராஜதந்திரமாகவோ தமிழகத்துக்குப் பெருமை தருவதாகவோ அமையவில்லை.

மாறாக, ‘மேடம் ஜெ, அவர்களை அகில இந்திய அரசியல் அரங்கில் பக்குவமற்றவர்’  என்பதையே   காட்டி, அரசியல் நாடகத்தின்  அரைவேக்காட்டுத்தனமான அரங்கேற்றம் இது’என்பதையும் உணர்த்தியிருக்கிறது.

கோபத்தைக் காட்டவேண்டிய இடம் வேறு; சூழ்நிலை வேறு.
இது, நமக்கெல்லாம் பெருத்த அவமானத்தையும் வருத்தத்தையும் தந்திருக்கும் நிகழ்வு.
               
”சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது”

என்பது வள்ளுவ நீதி.

அரசியலுக்கு சூழ்ச்சி,முடிவு எடுத்தல்,துணிவு மூன்றும் இலக்கணம்தான். ஆனால் அவை தவறான பாதையில் அமைந்து விட்டால் அது கேடாகவே முடிந்து விடும் என்று வள்ளுவப் பெருமான் ‘அமைச்சியலில்’ ’வினை செயல்வகை’ அதிகாரத்தில் இது பற்றிய நீதியை இடித்துச் சொல்கிறான்.

இன்றைய அரசியல் தலைவர்கள்-குறிப்பாக ஆளும் தலைவர்கள் வள்ளுவத்தைப் படித்தால் மட்டும் போதாது; அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.12.2012

Monday, December 24, 2012

கிறிஸ்துமஸ் வாழ்த்து! -25.12.2012



எல்லா மதங்களும் நதிகளைப் போலே
இறைவன் என்னும் கடலில் கலக்கும்;
எல்லா மக்களும் தத்தம் வயல்களில்
ஏர்ப்பிடித்துழுது பயிர் செய்துயிர்க்க
எல்லா நெறிகளும் அவரவர் மொழிகளில்
இறைவனின் ஆட்சியை எடுத்துணர்விக்க
எல்லைகள் வகுத்து வாழும்வகையில்
இருக்கும் உலகில் நாமிருக்கின்றோம்!

மூஸா நபியும் ஈஸா மொழியும்
முழுமையாக்குமோர் இறைவழி என்றே
தேசங்கள் தோறும் அறிவோம் ஆயின்
தெளிவு இறைவன் ஒன்றே ஆகும்;
ஏசும் மாக்கள் ஏசட்டும் இங்கே
இறைப்பெயர் இங்கு பலப்பல;அவற்றைப்
பேசும் உரிமையும் பிசகா அறிவும்
பேணுவதைத்தான் மானுடம் என்போம்!

பரம்பொருள் கண்ணன் மாடுகள் மேய்த்தான்;
பரமன்ஏசு ஆடுகள் மேய்த்தான்;
கிருஷ்ணன் என்பதும் கிறிஸ்டியன் என்பதும்
கேட்டால் செவியில் ஒன்றாய் ஒலிக்கும்!
’பரமபிதாவின் மைந்தன் மண்ணின்
பாவத்தை ஏற்கப் பிறந்தான்’ என்ற
கருணையைக் கூறும் கிறிஸ்மஸ் நாளில்
கர்த்தர் ஏசுவை வணங்கி மகிழ்வோம்!
  
மனிதநேயம் யாதெனக் காட்டவும்
மாக்களையெல்லாம் மக்கள் ஆக்கவும்
கனிவும் அன்பும் கருணையும் கொண்டு
கடமையை உணர்த்தி, நமை உய்விக்கவும்
தனிஒரு பிறவி எடுத்தே மண்ணில்
தானோர் மகவாய்ப் பிறந்தான்;ஈசன்!
புனிதன் ஏசு அவன் தான் என்று
புரிந்து போற்றுதல் மானுடர் கடமை!

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.12 2012

Friday, December 21, 2012

சொல்வதெல்லாம் உண்மை- (தொகுதி-5)


மூங்கில் காட்டுக்குள்
நுழைந்த புயலை
ஒரே மூங்கில்

கீதமாக
வெளியேற்றியது:
அட,
புல்லாங்குழல்!
    
இவண்-
                                                         கிருஷ்ணன்பாலா
                                                         21.12.2012


101

பெண்ணே,

நீ
அழகாகத் தெரிய வேண்டியது
பிறருக்கல்ல;
உன் கணவனுக்கு மட்டுமே.

அறிவோடு இருக்க வேண்டியது
உன் கணவனுக்கல்ல;
பிறருக்கு மட்டுமே.

இவை இடம் மாறும்போது

பிரச்சினைப் புயல்
மையம் கொள்ளும் இடம்
உனது மனம்தான்!

அங்கே
அறிவும் அழகும் இரண்டுமே
வலுவிழந்து
வாழ்விழந்து போய்விடுகின்றன!


102
அழகைத் தேடும் முயற்சி
அறிவற்றது;

அறிவைத் தேடும் முயற்சி
அழகானது!


103
எல்லா மதங்களும்
எல்லா சித்தாந்தங்களும்
மனித நேயத்துக்குக் கீழே
மண்டியிட்டிருக்கும்போதுதான்
மானுடத்தின் மகத்தான
சேவைக்கு
அருகதை பெறுகின்றன.


104
கற்றார் சபையில்-

முதுகைக் காட்டும்
ஆண்களும்;
முகத்தைக் காட்டும்
பெண்களும் 

ஆபத்தானவர்கள்.

105
பெண்களுக்கு-

நாணம் என்பது வேறு;
வெட்கம் என்பது வேறு.

தன்னை
மறைப்பதற்குப்
பயன் படும்
கவசம் நாணம்;

அது-

பெண்களின் நான்குவகைப் 
பொக்கிஷங்களில் ஒன்று.

வெட்கம் என்பது
தன்னை
மறைக்க முடியாதபோது
காட்டிக் கொள்ளும் கவர்ச்சி.

அது-

பலவீனமான ஆண்களை
வசப்படுத்தும்
அபாயகரமான
ஆயுதம்.

106
உலகில்
ஆணைப் படைத்தவளும்
பெண்ணைப் படைத்தவளும்
இயற்கையாகவே
தாய்தான்.

உலகில்
மானுடராக வாழ்வோர்
எல்லோருமே
பெண்ணை
மதித்து வாழும்
இயல்பான சூழ்நிலையில்-

பெண்ணின் பெருமையை
அறியாதோரே
‘ஆணுக்குப் பெண் சமம்’ என்று
பித்தலாட்டம்  பேசி,
பெண்ணியம் காப்பவர்களாய்க்
காட்டிக் கொள்கின்றனர்.

எனது
தாயையும் சகோதரிகளையும்
நானாக மதிக்கச்
சட்டம் போட்டுக்
கொட்டம் அடிக்க
இவர்கள் யார்?


107
இன்றைய
பெண்ணியவாதிகளின்
எண்ணங்கள்
உண்மையான பெண்ணியத்தை
ஏற்றி வைப்பதாக இல்லை;

சொல்லப் போனால்-
இமயச் சிகரத்தில்
இருந்து வந்ததை
எட்டிப் பிடிக்கும்
உயரத்துக்கு வைத்து விட்டு
உற்சாகப்படும் கூத்துத்தான்
அரங்கேறியுள்ளது, இன்று.


108
தனக்கு –
தெரியாததையே பேசுகிறவன்
நாத்திகன்;

தனக்குத்
தெரிந்ததையும் பேசாதிருப்பவன்
ஆத்திகன்!

நான் –
இதில் விதிவிலக்கு!


109
தன் வழியில்
அமைதியாகச் சென்று
கொண்டிருப்பவன் மீது
கல்லை எறிகின்றவன்:
நாத்திகன்!

அந்தக் கல்லையே
கடவுளின் சின்னமாக்கி
வழி படுபவன்:
ஆத்திகன்.

110
அன்பே,

முதலில்
உனது
வெட்கத்தில்தான்
வீழ்ந்தது என் மனது;

பிறகுதான்
தெரிந்தது:

வீழ்ந்தது மனமல்ல;
வாழ்க்கையே என்பது!



111
முகநூல்
தொடர்புடைய
இரண்டு பேர்
சந்தித்துக் கொண்டாரர்கள்.

அதில் ஒருவன் முட்டாள்;
இன்னொருவன் விவரமானவன்!

முட்டாள் கேட்டான்:
‘ஸார் நீங்க எழுதினா
எத்தனை பேர்
உங்க பதிவுக்கு வர்ராங்க?’

விவரமானவன் சொன்னான்:
சராசரி 300 பேர்.

முட்டாள் வெடுக்கென்று
சொன்னான்:
’அடப் போங்க ஸார்;
நான் தினசரி
400 பதிவுகளுக்கு ‘லைக்’
போடறவனாக்கும்;

அதுசரி –
உங்க பதிவை
நான் பார்ப்பதே இல்லையே?

விவரமானவன்
வெட்கத்துடன் தலைகுனிந்தான்


112
கீழே விழுந்தவன்
வலியை உணருகின்றான்;
மேலே எழுந்தவனோ
வலியை உணர்த்துகின்றான்!


113
 ‘சாதி இல்லை’
என்று
சாதிப்பதும்
சா’தீ’யாலேயே
சாதித்துக் கொள்வதும்
எங்கள்
‘தலைவர்களின் சாதி’தான்!


114
செவிடர்கள் முன்னே
பேசிக் கொண்டிருப்பவனும்;

சிரித்துக் கொண்டு
கூத்தடிப்பவர்களின்
கூட்டத்தில்
கற்றறிந்ததைப்
பேசுபவனும்

ஊமை என்றே
உணரப்படுகின்றான்.


116
நேசிக்கத் தெரியாதவனின்
வாசிப்பும்

வாசிக்கத் தெரியாதவனின்
நேசிப்பும்

பயனற்றவை!


117
சொல்லிக் கொடுப்பதைக்
கற்றுக் கொள்பவன்:
மாணவன்;

மாணவனிடமிருந்தும்
கற்றுக் கொள்பவன்:
ஆசிரியன்.


118
நண்பனே,
நம்
முன்னோர் வகுத்த -

சாத்திரங்களையும்
சூத்திரங்களையும்

மீறுகின்ற
பாத்திரமாக

உன்னால்
நடிக்கத்தான் முடியுமே தவிர,
அவற்றைப் படிக்க முடியாது!

ஏனெனில் -

அவற்றை உணர
உனக்குத் தேவை:

ஆயுள் அல்ல;அறிவு!

119
இரண்டு ஜாதிகள்
சண்டையிட்டுக் கொண்டன.

நான்
அந்த சண்டையைக் கண்டித்தேன்.

விளைவு:

நான்
இரண்டு ஜாதிகளுக்கும்
வேண்டாத ஜாதி
ஆகிவிட்டேன்.

120
நீங்கள்
உங்கள் மத நம்பிக்கையில்
தீவிர நாட்டம்
கொண்டவர்
எனில்-

பிற மதத்தவர்
உங்களுக்குத் தரும்
மரியாதையை
அவர்களின் உணர்விலேயே
ஏற்றுக் கொள்ளுங்கள்;

அதுதான்
உங்களுக்குப் பெருமை!

பிற மதத்தவர்
தருவது
அவமரியாதை
எனில்
பொறுத்துக் கொள்ளுங்கள்;

அது -
உங்கள் சித்தாந்தங்களுக்குப் பெருமை!


121
கர்வம்
----------
இங்கே-
கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
என் எழுத்துக்கள்
விருந்து;

’கவனிக்காதவர்கள்’
என் எழுத்துக்கு விருந்து.



122
”பழையன கழிதலும்
புதியன் புகுதலும்
வழுவல;
கால மரபினானே”

என்கிறது
நன்னூல் சூத்திரம்;

அதற்காக-
கழிதல்களையெல்லாம்
புதியதெனப் புகுத்துவது
மூடர்களின் சாத்திரம்.

123
திடீரென்று
கிடைக்கின்ற அதிர்ஷ்டத்தை
வாழ்க்கையின் வெற்றி
என்று
விளம்பரப் படுத்தாதீர்!

ஏனெனில்-

வெற்றி என்பது
சுலபமானதல்ல;

சுலபமானது
வெற்றியும் அல்ல



124
மேப்பனில்லாத ஆடுகள்
-----------------------------------

’நான் சுத்த சைவம்’
என
ஆடுகளைக் கைவிட்டான்
மேல்சாதிக்காரன்;

மேய்ச்சலைத் தேடி
தோட்டம் தோட்டமாக
அலைந்து
தோட்டக்காரர்களால்
விரட்டி அடிக்கப்பட்ட
அந்த ஆடுகள்,
மேய்ச்சலை விடவும்
மேய்ப்பனுக்காக
ஏங்கின....

இதோ-
’நான் இருக்கிறேன்,
உங்கள் மேய்ச்சலுக்கு’
என்று
மார்தட்டிக் கொண்டு
கசாப்புக் கடைக்காரன்
ஒருவன் வந்தான்..

நல்ல மேய்ப்பன்
கிடைத்து விட்டதாய்
ஆடுகள்
மந்தை மந்தையாகப் பிரிந்து
தங்களுக்கு இஷ்டமான
மேய்ப்பனிடம்
அடைக்கலம் ஆகின.

இப்போது
அந்த மேய்ப்பன் சொன்னான்:

“இனி
நானே உங்கள் மேய்ப்பன்;
உங்களுக்குச்
சுவர்க்கம் பக்கத்திலிருக்கிறது”



125
எழுதும்போது
எழும் சிந்தனைகள்;

சிந்திக்கச் சிந்திக்க
முந்தும் எழுத்துக்கள்!

”எல்லாம் எழுத்து மயம்”


 (சொற்கள் சுடரும்)