அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
கூர்த்த மதி, பட்டறிவு, நேர்த்தியான எண்ணங்கள், அதிர்ஷ்டம் நிறைந்த
வாழ்க்கை .... இவை அமையப் பெற்ற ஒருவர் இந்திய அரசியலில் இருக்கிறார்என்றால் அவர் மேடம் ஜெ.ஜெயலலிதா தான்.
‘என்ன பேசுகிறாரோ அதை நிறைவேற்றும் துணிவு கொண்டவராகவும்
துணிவான கருத்துக்களை துச்சமாகப் பேசும் திறன் கொண்டவராகவும் உள்ள ஒருவர்’ என்று நாடு அடையாளம் கண்ட இவருக்கு இன்று பிறந்த நாள்.
67 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறார்.
மேடம் ஜெ.அவர்கள் மேலும் பல்லாண்டுகள் உடல் நலத்தோடும்
மன வளத்தோடும் வாழ்ந்திருக்க வாழ்த்துகின்றேன்.
இன்றைய அரசியலில் இவர்
ஒரு மிகப் பெரும் சக்தியாகத் திகழ்வது இறைவன் இவருக்கு அளித்திருக்கும் கொடை.
அந்தக் கொடையைக் களங்கப்படுத்தி
விடாமல் கண்ணியமும் நேர்மையும்
மனத் தூய்மையும் கொண்டு
ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை
உருவாக்கும் வல்லமை இருந்தபோதும்
இவர் அதை நிலை நாட்டாது,
வெற்றுப் புகழுரைகளுக்குள்
புதைந்துபோய், துதிபாடும்
அரசியல் கலாச்சாரத்துக்குக் கால்கோள் நாட்டிவிட்டதானது, இவரது அரசியல் வாழ்வுக்கு ஏற்பட்டிருக்கும்
கறைபட்ட நிலையும் களங்கமும்
நிறைந்த அவலநிலைதான்’ என்பதையே அறிவுடையோர்
காண்கின்றனர்.
யானை தன் தலையில் தானே மண்ணைவாரித் தூற்றிக் கொண்ட கதை
ஏனோ நம் நினைவுக்கு வருகிறது.
இதை இவர் தவிர்த்திருந்தால்,
இன்று ஆட்சிக்கட்டிலிலிருந்து நீதித் தேவதையால் நீக்கப்பட்டிருக்கும் நிந்தனை
ஏற்பட்டிருக்காது.
’டான்ஸி வழக்கில் பட்ட அனுபவங்களிலிருந்து பாடம்
கற்றுக் கொள்ளத் தவறியதுடன் இரு மடங்கு
வீரியத்துடன் இவர் அரசியல் காரியமாற்றத்
தொடங்கி விட்டது ஏன்?’
என்பது
நமக்கெல்லாம் புரியாத புதிர்தான்...
அது ஒரு Million Dollar Question!
’அரசியல் பிழைத்தோருக்கு அறம்
கூற்றாகும்’ என்பதை, இளங்கோ
அடிகள் எச்சரித்துக் காப்பியம் எழுதியிருக்கும் வரலாறு அதைப் படித்தோருக்குத் தெரியும்.
‘மந்திரிக்கு அழகு வரும் பொருள்
உரைத்தல்’ என்பதை நிரூபிக்கின்ற
மந்திரிகள் இவரிடத்தில் இல்லாது போனது துரதிர்ஷ்டம்.
‘வரும் பொருள் உரைத்தல் என்பது
வருமானத்தை உரைப்பதுதான்’ என்பதாகவே
இவரது மந்திரிமார்கள் அமைக்கப் பெற்று அதனால் சட்ட ரீதியான அவமானத்தையும் அறநிலை துறந்த நிலையையும்தான்
இவர் பெருக்கிக் கொண்டிருக்கிறார்’ என்பதால், அது, மேடம் அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்தையெல்லாம் பின்னுக்குத்
தள்ளி விட்டு விட்டதே’ என்று வருந்துகின்றவன் நான்.
அந்த வருத்தப்பட்ட நெஞ்சோடு
வாழ்த்துக்கின்ற அன்பையும் நேசத்தையும் இங்கே காட்டி, மேடம்
அவர்கள், தனது அரசியல்பிழைகளை
உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் உறுதியைத் துணிவுடன் காட்டி, அதற்கான வலிவும்
பொலிவும் பெற்று நீண்ட நாள்
வாழ வாழ்த்துவோம்.
“அல்லவை தேய அறம்பெருகும்; நல்லவை
நாடி இனிய சொலின்”
என்ற வள்ளுவத்தின் இனிய சொல்லினால்
வாழ்த்துவோமாக!
இவண்-
கிருஷ்ணன்பாலா
24.2.2015





.jpg)
.jpg)
.jpg)
