Monday, October 14, 2013

காகித பூஜை!

எல்லோருக்கும் இன்று ஆயுத பூஜை;

எனக்குமட்டும் காகித பூஜை!

ஆம்!.
கவிதை மலர்களால் மாலை தொடுத்து
அன்னை கலைவாணிக்கு
அணிவித்து மகிழந்த காகித பூஜை!

-கிருஷ்ணன்பாலா
13.10.2013

வாணிக்குக் காணிக்கை!

தீதிலன்,உலகில் யானோர்

தெளிவுளன் நினதருளாலே;
யாதெனை வெல்லும்?;உன்னை
யாசித்தேன்; இன்று,இப்போது
ஓதிடும் உன்றன் நாமம்
ஒளிர்செயக் கண்டேன்;வாணீ,
சோதியே வருக என்னுள்;
சுடர்க, இவ்வுல கெல்லாமே!

  • ·        


பூவிற் பொலியும் வாணி; என்றன்

நாவிற்புகுந்து நற்றமிழ் செய்தாள்;
தேவி அவளென் அன்னை;என்னைத்
தேர்ந்தே இப்புவி வைத்தாள்!

கூவி அழைத்து, அவள் தமிழைக்
குவிக் கின்றேன் நான், முகநூலில்
தேவை யுடையீர்,வாருங்கள்;என்
தேன் தமிழ் விருந்தில் சேருங்கள்!

அற்புதமாக ஆர்ப்பரிக்கும்;சொல்
அடுக்கடுக்காக சரம் தொடுக்கும்;
கற்பனையிங்கே படை எடுக்கும்;அது;
காட்டா றெனவே கரை உடைக்கும்!

சிற்சில போழ்து இலக்கணத்தை
சிதறச்செய்யும்; தனை மறக்கும்!
கற்பது யாதெனக் கேட்காதீர்; அந்தக்
கலைமகள்;அவளைக் கேளுங்கள்!
·        

முன்னைப் பழம் விதியின்
முழுப் பயனில் வைத்திங்கு;
என்னைப் படைத்துலகை
எந் நாளும் காப்பவளை;
அன்னை வாணி எனும்
அறிவுடையோர் கருப் பொருளைப்
பின்தொடரும் பிள்ளைஎனப்
பேசுகின்றேன்; அறிவீரோ?

மானுடத்தின் மத்தியில் ஓர்
மனிதனெ எனைப் படைத்து,
வான்புகழும் தமிழ்மறைகள்
வளமைமிகும் இலக்கியங்கள்
நான் படிக்க அருளியவள்;
நான்முகனின் தேவியவள்;
வானவரும் போற்றுகின்ற
வாணியைத்தான் வணங்கு கின்றேன்!
·        ·
வாக்கிலே வந்தாள் அன்னை

வாணியே; ;வந்து,அந்தப்
போக்கிலே புகல வைத்தாள்;
பொய்யிலாச் சேதி;உண்மை1
நோக்கியே சொன்னேன்;நானும்
நுகர்ந்திடும்  மொழியை யிங்கு
தூக்கியே நிறுத்தி என்றும்
தோல்வியைத் தவிர்ப்பாள் வாழி!

·        ·

வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்; என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்

தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

·        ·

கல்விதான் பெரிதா? செல்வம்
காண்பதே பெரிதா? இதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்

கசடுகள் சேரா; அதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லை; அதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்; வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

·
உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
‘நலமெது? தீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்; கண்டீர் இங்கே!

·

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
‘வாணியே, வா,நீ’ என்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!
·      · 
ஊனெடுத்துப் பிறந்த பின்பு

ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
‘யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்: புரிவீரே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
13.10.2013




Sunday, October 13, 2013

வாணியை வணங்குவோம்!


வாக்கிலே என்றும் உனது
வார்த்தையே வேண்டும்; என்றன்
நோக்கிலே பிழைகள் அற்ற
நுகர்ச்சியே வேண்டும்;வாழ்க்கைப்
போக்கிலே பொய்ம்மை சேராப்
புதுமைகள் வேண்டும்;நெஞ்சில்
தேக்கிநான் வேண்டுகின்றேன்;
தேவைகள் அருள்வாய்,வாணீ!

கல்விதான் பெரிதா? செல்வம்
காண்பதே பெரிதா? இதிலே
நல்லது யாதென் றிங்கு
நவில்வதைச் சிந்திக்கின்றேன்:
செல்வத்தைச் செல்வம் என்று
சிந்திக்கும் அறிவில் லாது
செல்வதைப் பெற்ற வாழ்க்கை
சிதைந்துதான் போகும்,வீணே!

கல்வியைப் பெற்ற வாழ்வில்
கசடுகள் சேரா; அதுவே
செல்வமாய்த் திகழ வாழ்வோர்
சிதைவதும் இல்லை; அதனால்
கல்வியே உயர்ந்த தென்று
காண்கிறேன்; வாணி என்றன்
செல்வமாய்த் திகழு கின்றாள்;
சிந்தனை வேறு எதற்கு?

உலகிடைப் பிறந்த மாந்தர்
உணர்கின்ற அறிவைப் பெற்று
‘நலமெது? தீதெது?’ என்று
நாடினால் அதுதான் வாழ்வின்
பலம் மிகு துணையாய் மாறி
பலவிதம் உயர்த்தும்;அதனால்
கலைமகள் மாந்தர் வாழக்
கருப்பொருள்; கண்டீர் இங்கே!

வாணியைப் போற்றி நின்றால்
வாழ்க்கையில் அறிவு கூடும்;
வாணியால் சேரும் செல்வம்
வளர்ந்திடும் நித்தம் நித்தம்!
வாணியால் தோல்வி இல்லை;
வாழ்க்கையில் வெறுமை இல்லை;
‘வாணியே, வா,நீ’ என்று
வணங்குதல் செய்வோம் வாரீர்!

இவண்-
கிருஷ்ணன்பாலா

13.10.2013

Friday, October 11, 2013

மனதொடு மனதாய்......!




மனமே, உன்னுடன் உரையாடி
மகிழ்ந்ததும் நெகிழ்ந்ததும் பலவுண்டு;
சினமோ,துயரோ,செல்வாக்கோ
சேர்ந்தால் உன்னுடன் பகிர்வுண்டு!

பறவைகள்,விலங்குகள்,புல்லினங்கள்
பரபரப்போடு வாழ்வ தில்லை;
முறையோ டவைதாம் வாழ்ந்திருந்து
முனகிக் கொண்டு சாவதில்லை!

அவையவை இயற்கைக் குணங்களுடன்
அற்புதமாக வாழ்வதைத் தான்
தவறியும் மனிதர் உணர்வதில்லை;
தத்துவம் மட்டும் பொழிகின்றார்!

பேரறிவோடு பிறக் கின்ற
பெருமை கொண்ட மானுடர்கள்
ஓரறிவுள்ள உயிரினம் போல்
உற்று உணர்ந்து வாழ்வதில்லை!

இரண்டு மூன்று நான்கைந்து
இருக்கும் அறிவு விலங்கினங்கள்
உருண்டு புரண்டு அழுவதில்லை;
உருட்டும் புரட்டும் செய்வதில்லை!

ஆனால் மனிதன் அப்படியா?
ஆறறி வாற்றல் பயனுண்டா?
ஏனோ,தானோ என உலகில்
ஏய்த்துப் பிழைப்பது அவன்குணமா?

ஆலயம் தேடி ஆண்டவனை
அழுதும் தொழுதும் பொய்பேசி
காலையும் மாலையும் சுகம்காணக்
கவலையில் உழல்வது அவன்தானே?

ஊனுடல் தானொரு ஆலயமாம்
உள்ளே இருப்பது மனசாட்சி;
மானுடன் இதனை அறியாமல்
மறந்தே வாழ்வது ஆறறிவோ?

ஊருக்கு மறைக்கும் உண்மைகளை
உள்ளே இருக்கும் மனசாட்சி;
நேருக்கு நேராய்ப் பார்த்திருக்கும்;
நினைத்தா மனிதன் பார்க்கின்றான்?

பணத்தைத் தேடி;பகைதேடி;
பலமும் நலமும் கெட்டழிந்து
குணத்தைக் கொன்று, கொடுவினையில்
குப்புற வீழ்வது அவன்விதியோ?

காமம்,வெகுளி மயக்கம் எனக்
கைக்கொண்டுழன்று;அறிவின்றி
நாமம் கெட்டு நரகடைய,
நாயினும் கீழாய் வாழ்வதுயார்?

மனமெனும் ஒன்று இருப்பதுதான்
மனிதர் அறிவின் சிகரம் என
புனிதத் தொல்காப் பியன்சொன்ன
புதிரை உணர்ந்தவன்தான் மனிதன்!

கவலைகள் இல்லா மனிதரைநான்
கடுகளவேனும் பார்த்ததில்லை;
அவலமில் லாதசூழ் நிலையை
அடையா திருந்தால் மனிதரில்லை

ஆயினும் அவற்றை எதிர்கொண்டு
அறிவின் பயனைக் கையாண்டு
‘தூயவன் மனிதன்’ எனக் காட்டத்
தூண்டும் அறிவை நீ தருக! 

மனமே,உன்னுடன் பலமுறையும்
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் உரையாடித்
தினமும் விழைவது, இதைத்தானே?’
தெளிவாய் என்னுடன் இருப்பாயே!

இவண்-
கிருஷ்ணன்பாலா

11.10.2013

Thursday, October 10, 2013

ஆச்சிக்கு அகவை 91- வாழ்த்து!


என்னருமை நண்ப ரென;
இணையற்ற மனித ரென;
தென்னகத்தின் தென் பகுதித்
திருநெல்லைப்  ‘பிள்ளை’யெனப்
பொன்மனத்தைப் பூத்தி ருக்கும்
பிரேமநா யகத் தின்தன்
அன்னை எனத் திகழும்
ஆச்சிக்கு வாழ்த் துரைத்தேன்!

அகம் தேடி வந்தார்க்கு
அகம்நிறைய விருந்தளிக்கும்
சுகம்கூட சைவத் தின்
சுவைகூட்டும் கொள்கை’யென
முகம் சுளிக்கா தின்றைக்கும்
முதுமைதனை வெல்லுகின்றார்;
தகைசான்ற பண்பாட்டின்
தருமநெறி சொல்லுகின்றார்!

சைவத் திருநெறி யின்பால்
சலிப்பில்லாக்  கடமை யுடன்
வையத் திருந் தின்று
வளையாமல் நிமிர் கின்றார்;
ஐயம் தவிர்த் தன்பில்
அனைவர்க்கும் தாய் என்று
உய்கின்ற ஆச்சி இவர்;
ஒரு குறையும் வாராது!

பன்னிரண்டு பிள்ளைகளைப்
படைத்த தொரு தாயாக;
முன்பிருந்த வாழ்க்கை யதன்
முறைமைகளை மாற் றாது;
நன்னெறிகள் அத் தனையும்
நாள்தோறும் செழித்திருக்க,
தன்னுடைய கொள்கையதில்
தளராத  பெரு மாட்டி!

‘பாப்பம்மாள்’ எனும்,இந்தப்
பாட்டிக்கு வாழ்த்துரைக்க,
மூப்பில்லை என்ற னுக்கு;
முறையல்ல;என் றாலும்
‘காப்புரிமை பெற்ற ஒரு
கவிஞன்’ என வாழ்த்து வது
கேட்பவர்க்கும் உணர்பவர்க்கும்
கிட்டாத பெரும் பேறு!

திருநீறு எப்போதும்
தீட்டுகின்ற இவர் நெற்றி;
ஒருநாளும் தவ றாது
உரைக்கின்ற சிவ பக்தி;
மருவற்ற மன தோடு
மற்றவர்க்குச் சுமையின்றி
தரவாகத் தன் கடனைத்
தானேதான் செய் கின்றார்!

குறும்பான சிந்தனைகள்;
குலையாத நினைவலைகள்;
எறும்பான சுறு சுறுப்பு
எப்போதும் நல் நினைப்பு;
கரும்பான அன்பு மொழி;
கலகலக்கும் நகைச் சுவைகள்;
இரும்பான மன உறுதி;
இவரொத்த பெண்க ளிலை!

‘ஆச்சி’ என்ற ழைத்து,
அனைவருமே மதிக் கின்ற
பேச்சில் புன்ன கைத்து
பிழையில்லாப் பேரன்பை
மூச்சில் கொண்டி லங்கும்
மூதாட்டி,பாப்பம் மாள்;
ஆட்சிதான் இவர்வீட்டில்
அனைவர்க்கும் இவர் ‘ அம்மா!’

தொண்ணூற்று ஓராண்டைத்
தொல்லையின்றிக் கடந் திங்கு;
நன்நூற்றைக் காண் பதற்கு;
நடைபோடும் ஆச்சிக்கு
நன் ஊற்றுக் கவி ஊற
நாவாலும் மன தாலும்
பொன்னூற்று வாழ்த் தாக்கிப்
பூரித்தேன்,இந் நாளே!

மகிழ்வோடும் நெகிழ்வோடும்-
கிருஷ்ணன்பாலா 
10.10.2013

























குறிப்பு:
எனது இனிய நண்பர் ‘ஆடிட்டர்’ திரு.பிரேம நாயகம் அவர்களின் தாயாரும் அனைவராலும் ‘ஆச்சி’ என்று அழைக்கப்படுபவருமான ‘சிவநெறி’த் திருமதி. பாப்பம்மாள் அவர்கள்  91ஆம் அகவையை முடித்து, அகவை 92ல் அடியெடுத்து வைத்த இந்நாளில் ஆச்சிக்காகப் படைக்கக் பெற்ற கவிதை இது.

மகிழ்வோடும் நெகிழ்வோடும்
வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
10.10.2013

Monday, October 7, 2013

தேடல்-1: உடல்,உயிர்,ஆன்மா!


இந்த உடல்,உயிர்,ஆத்மா மூன்றும் வேறுவேறுதான்.

இதைத்தான் மனம்,செயல்.வாக்கு என்கிறோம்.

உயிர் இந்த உடம்புள் இருக்கின்ற காலம் வரைமுறை செய்யப்பட்டிருக்கிறது. உயிரோடு இணைந்துள்ள உடம்புக்கான தேவைகளை அந்தக் உயிர்க்கூட்டின் உணர்வுகள்தான் தீர்மானிக்கின்றன. ஆத்மா அங்கே மவுனமாகத்தான் மனச்சாட்சியாக இருக்கின்றான்.

இந்த உடலில் உயிர் இருக்கும்வரை அந்த மனசாட்சி ஒரு முடவன்தான்;எழுந்து ஓட முடியாது. ஆனால் கூடவே இருக்க முடிகிறது. அது ஒரு ஊமைதான் ;பேச முடியாது. ஆனல் கூரிய பார்வை மட்டுமே உண்டு.

உண்மையில் ஆத்மாவின் தேவையை, அதன் மேன்மையை இந்த உடலின் உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

அதனால் இருட்டில் நடக்கும் குருடனாக மனம் இந்த உடலை இயக்குகிறது.

பசியும் காமமும் ஒன்றுதான். ஒன்று உடற் பசி;இன்னொன்று உணர்வுப் பசி.

அவற்றுக்கு இரை கிடைத்தவுடன் அவை இரண்டும் அடுத்த பசி தோன்றும்வரை அடங்கிவிடுகின்றன.

ஆனால் ஆத்மா உறங்குவதில்லை. மனசாட்சியான அது,உடலின் உணர்வுகளால் தூண்டப்படும் இழிசெயல்களைத் தடுக்க முடியாது  அழுது கொண்டிருப்பதை விட,வேறு ஒன்றும் செய்ய இயலாது.

அறிவு மிகுந்தவர்களும்  உண்மையான தேடல் மிகுந்தவர்களும் நிச்சயம் தங்கள் ஆத்மாவைக் குறைந்த பட்சம் அழாமல் வைத்துக் கொள்ளவே முனைவார்கள்.

-கிருஷ்ணன்பாலா
  7.10.2013

Sunday, October 6, 2013

அரசியல் சதுரங்கம்:3 (மோதிக்கு முன்னூறு)



வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அமையவுள்ள  கூட்டணி குறித்து மக்களிடையே விவாதங்களும் விசனங்களும் தோன்றி விட்டன.

காங்கிரஸுக்குப் பல இடங்களில் டெபாசிட் பறி போகும் நிலைமை; அதனுடன் கூட்டுச் சேரும் எந்தக் கட்சியும் இந்தப் பரிதாபத்தைப் பங்கீட்டுக் கொள்ளத்தான் வேண்டும்

பிஜேபிக்கு சரியான வாக்கு வங்கி இதுவரை இல்லாதிருந்த நிலைமை மாறி, நடு நிலையாளர்களும் காங்கிரஸுக்கு எதிரான எதிர்ப்பு அலையும் சேர, நிச்சயம் 15 சதவீத வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளது.

மோதியின் எழுச்சி,அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுக்கு எப்படி காங்கிரஸ் இதுவரை தமிழகத்தில் திமுக ,அதிமுக முதுகில் ஏறிப் பயணம் செய்ததோ அதுபோல் ’மோதி’ அலைவீச்சின் மீது வரும் தேர்தலில் தேமுதிக,மதிமுக, காங்கிரஸின் அதிருப்தியாளர் பிளவுக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு,கொங்கு மக்கள் தேசியக் கட்சி,IJK என்ற பாரிவேந்தர் கட்சி, மற்றும் சிறு சிறு குழுக்கள் (குறிப்பாகத் தென் மாவட்டங்களில் தேவரினக் குழுக்கள்) எல்லாம் இணைந்து காங்கிரஸுக்கு எதிரான பலம் மிக்க கூட்டணியாக  உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமையுமானால் மோதியின் அலையால் தமிழ்நாட்டில் 30 முதல் 35 இடங்கள்வரை நரேந்திர மோதியின் அணிக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.

இதேபோல், அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் கட்சிக்கு எதிராகக் கொடி பிடித்து, மோதியுடன் கை கோர்க்கும் அரசியல் சூழல் ஏற்படும் என்பது உறுதி.

காரணம் மோதிக்கு  நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகுவதும்,காங்கிரஸ் தனது சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாத அவலம் பெருகி நிற்பதும்தான்.

இதன் எதிரொலியால் அகில இந்திய அளவில் மோதியின் கரம் 300 இடங்களுக்குக் குறையாமல் எட்டும் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.

காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதிக அளவில் அதிருப்தியாளர்களாக மாறுவார்கள் என்று நான் முன்பே  சொன்னதில் மாற்றமில்லை.

இவண்-
கிருஷ்ணன்பாலா
6.10.2013

Friday, October 4, 2013

காங்கிரஸ்:கலைந்தது,இரட்டை வேடம்!


அறிவார்ந்த நண்பர்களே,

‘பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டுத்
தள்ளி நின்றே சிரிப்பார்; அதுதான்
கொள்ளையர் கூட்டமடி;ஞானத்தங்கமே;அவர்
கொள்கையை என்ன சொல்வேன்?

என்று -
கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலின் கடைசி வரியைச் சற்று மாற்றிக் காங்கிரஸின் இரட்டை வேட ஏமாற்று நாடகத்தைப் பற்றிச் சொல்லப் பயன் படுத்த வேண்டி இருக்கிறது.

ஆம்.
லாலு பிரசாத் போன்ற KD க்களை(Known Decoits) சிறைக்குள்  தள்ளி அவர்களின் பதவியை நீக்கும், ஊழல் மற்றும் கிரிமினல்களுக்கு எதிரான நடைமுறைச் சட்டத்தைத் திருத்தி, அவர்கள் மறு அப்பீல் செய்து அதன் தீர்ப்பு வரும்வரையில் அவர்களைப் பதவியில் நீடிக்கச் செய்யும் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயன்றதும் காங்கிரஸ் கட்சிதான்; பிறகு அதை ராகுலைக் கொண்டு எதிர்க்கச் செய்து அதன் எதிரொலியாய் நாட்டில் விமர்சனங்களை எழுப்பி, ராகுலைக் கதாநாயகன் போல் சித்தரித்து ’அந்த அவசரச் சட்டத்தை ராகுல் எதிர்த்தார்’ என்பதற்காக வாபஸ் பெற்றதும் அதே காங்கிரஸ்தான்.

ஊழலைச் செய்வதும் ஊழல்வாதிகளைக் காப்பதும் பிறகு அவர்களைக் கை கழுவி விட்டு  ‘ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம்’ என்று நேர்மையாளர்கள்போல் கங்கணம் கட்டிப் பேசுவதும் ஒரே கட்சிதான்;அது காங்கிரஸ்தான் என்பது நாட்டு மக்களுக்கு உள்ளங் கையிடை நெல்லிக் கனியென ஊர்ஜிதமாகி, காங்கிரசின் இரட்டை வேடம் கலைந்து விட்டிருக்கிறது.இப்போது.

காங்கிரஸின் கூட்டாளிகள் அனைவரும் அயோக்கியர்கள்; நாட்டைப் பல வகையிலும் சுரண்டிப் பங்குபோட்டவர்கள்; ஆட்சி அதிகாரத்தில் நேரிடையாக இல்லாமலேயே ‘ஊழல் பணத்தில் பாதிப் பங்கு,அதாவது கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தத் துறை வழங்கப்பட்டிருந்தாலும் அந்தத்துறை மூலம் அடிக்கும் கொள்ளையில் கூட்டணித் தலைவிக்கு உரிய பங்கு  சேர்ந்து விட வேண்டும்’ என்ற அறிவிக்கப்படாத சட்டத்தின்படி ஊழல் கொள்ளைகள் நடத்தப்பட்டன, நமது நாட்டில்;அரசாங்க கஜானா எல்லாவகையிலும் சூறையாடப்பட்டிருக்கிறது.

இந்த ஈடு இணையில்லாத ஊழலுக்குத் தூண்டுதலாக,துணையாக,பெரிய பார்ட்னராக இருந்ததும் இருப்பதும் சோனியாவின் குடும்பமே அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

தேச பக்தர்களின் நெஞ்சங்களையெல்லாம் பதற வைக்கும் இந்த கேடு கெட்ட ஆட்சியின்  ஊழல்களுக்கு என் போன்ற சாமன்யன் ஆதாரம் காட்டத் தேவையில்லை; உச்சநீதிமன்றத்தில் பலமுறை பலவிதத்திலும் கண்டிக்கப் பட்டும் தண்டிக்கப்பட்டதுமான நிரூபணங்களே போதுமானது.

ஊழல் பெருச்சாளியை கட்டுச் சோற்றில் வைத்து ஊர்ப்பயணம் செய்து உலகை ஏமாற்றுவதில்  ‘கை’ தேர்ந்த கட்யான காங்கிரஸ்,இன்று கையறு நிலையில் புலம்பிக் கொண்டிருக்கிறது.

ஃபொடார் தீவன ஊழல் வழக்கில் அந்த ஊழலின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்த லாலு பிரசாத் யாதவை, மத்திய கேபினட் மந்திரியாக வைத்து ஐந்து வருடங்கள் நாடாண்டது யார்? காங்கிரஸ்தானே?.

அதன் பிறகு பீகார் மக்கள் லாலுவின் கட்சியைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்த பின்னும்  அவருடைய எம்.பிக் களின் ஆதரவோடு மறுபடியும் ஐந்து ஆண்டுகள் UPA என்ற கூட்டு ஆட்சியில் இதே கூட்டாளிகளின் துணையோடு கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கட்சி எது? காங்கிரஸ்தானே?

கீழ்க் கோர்ட் முதல் உச்சநீதி மன்றம் வரை லாலுவின் வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் உறுதியான நடைமுறைகளால், சி.பி.ஐ நீதி மன்றத்தில் நேற்று  முன்தினம் லாலு குற்றவாளி என்று தண்டனை விதிக்கப் பட்டுள்ளார்..

5 ஆண்டுகள் சிறைவாசம் என்று ,இன்று (4.10.2013) ராஞ்சியில் உள்ள சிறைக்கு லாலுவை அனுப்பி, அவருடைய அரசியல் அத்தியாயம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, நீதியின்  கரங்களால்.

இன்னும் காங்கிரஸின் கூட்டாளிகளாக இருந்து கொண்டு பிரமிக்கவைக்கும் ஊழல்களைச் செய்தவர்கள் எல்லாம்,அதிகாரத்தின் பின் புலத்தாலும் பணத்தை பலத்தாலும் வெளியில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது லாலுவின் வழக்கைப் போலவே அவர்களுக்கும் நீதியின் தண்டனை அடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

இனியும் அவர்களை எந்தப் பலத்தைக் கொண்டும்  காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் காங்கிரஸே அவர்களைக் கை விட்டு விட்டு.’நாங்கள் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க மாட்டோம்; அத்தகையவர்களால்தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குக் களங்கம் ஏற்பட்டது; அவர்களை யெல்லாம் நாங்கள் களை எடுத்து விட்டோம்; எங்களுக்குப் பெருவாரியான எம்.பி.களைத் தாருங்கள். கூட்டணி இல்லாமல் தனிக் கட்சி ஆட்சி செய்வதன் மூலம் நேர்மையான நிர்வாகத்தைத் தருகிறோம்;இது சத்தியம்;சத்தியம்;சத்தியம்’  என்று புதிய கோஷத்தை போடுவதுடன்  இதற்காகத்தான் இந்திராவின் பேரன் ராஜிவ் காந்தியின் புதல்வன் ராகுல் கிரிமினல்களுக்கு ஆதரவான சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் எறியச் செய்தார்’ என்று புனிதர்கள்போல் காட்டிக் கொண்டு,லாலுவைச் சிறைக்கு அனுப்பிய விவகாரத்தையே தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்ற விளம்பர யுக்தியில் வெளிப்படும்.

ஆனால்-
ஒரு குற்றவாளியை அதுவும் ராஜத் துரோகக் குற்றவாளியை யோக்கியன் என்பதுபோல் காட்டிக் கொண்டு அவனைத் தன் கூட்டாளியாக இத்தனை ஆண்டுகள்  வைத்துக் கொண்டு மிகப் பெரிய ஜனநாய நாட்டில் மிகப் பெரிய ஊழல் அரசாங்கத்தை நடத்தி வந்த காங்கிரஸ், ‘தங்களைப் பற்றி மக்களும் மதி உடையோரும் என்ன நினைப்பார்கள்? என்ற சுய சிந்தனையற்ற கட்சியாக, இன்று  சாயம் வெளுத்துச் சாவுக் களையை எட்டி இருக்கிறது.

ஆயுதபேர ஊழல்,விமான பேர ஊழல்,இரும்புத்தாது ஊழல், நிலக்கரி ஊழல் 2ஜி ஊழல் என்று நாட்டின் மிகப் பெரிய ஊழல்களைச் செய்து இந்தியாவுக்கு ஒரு ஐந்தாண்டுக் கால பட்ஜெட்டுக்கு உரிய பணத்தைச் சுரண்டியிருப்பது காங்கிரசும் அதன் கூட்டாளிக் கட்சிகளும்தான் என்பது  நாடறிந்த உண்மை ஆன பின்னும் காங்கிரஸ்  வெட்கமற்ற வகையில் தனது யோக்கியன் வேஷத்தை விடாமல் பேசிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் அது  பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு அலையானது  காங்கிரஸை சின்னாபின்னமாகச்  சிதறடிக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு,
அதில் இருக்கிற சுயநலவாதிகளும் சரி; ஓரளவு ஒழுக்கம் உள்ள கட்சிக்காரர்களும்சரி, காங்கிரஸ்  வெலவெலத்துப்போனநிலையைக் கண்டு அஞ்சி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் காங்கிரசிலிருந்து விலகவும் அதற்கு எதிரான அணியை மேலும் வலுவுள்ளதாக்கவும் முன் வருவார்கள் என்பதை நாடு பார்க்கும்.

இப்போது ஆந்திராவில் சஞ்சீவி; மத்திய மந்திரியாக நேற்றுவரை
இருந்தவர் இன்று விலகி விட்டார். இன்னும் பலர் தேசத்தின்  நான்கு திசைகளிலிருந்தும் விலகல் அதிர்ச்சிகளைத் தருவார்கள்.

தமிழ்நாட்டில் வாசன் அவர்கள் ’இனி இந்தக் காங்கிரசில் இருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் காப்பாற்ற முடியாது’ என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு  ஆளாவார்.

எப்படியாவது மறுபடியும்  ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் நம் நாட்டில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் துணை, அதுதான் தேர்தல் கூட்டணி அதற்குத் தேவைப்பட்டே ஆக வேண்டிய நிலையும் உருவாகும்.

இந்த நாட்டில் ஜாதி,மத,இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு போலியான ‘மதச் சார்பற்ற கட்சி’ என்று தன்னைக் காட்டிக் கொண்டு  ‘மதவாதிகளையும் ஜாதி,இன வெறியர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கொள்ளை அடிக்கும் ஆட்சியை நடத்தி வந்தது காங்கிரஸ்தான்’ என்பதை நடுநிலைவாதிகளும் உண்மையான தேசப் பற்றாளர்களும் பொது ஜனங்களும் புரிந்து கொண்டுவிட்டார்கள்.

இனியும் மத வாதம் பேசிக் கொண்டே மதச் சார்பற்ற கட்சியை ஆதரிப்போம்’ என்று சுயநல மதவாத எண்ணம் கொண்டோர்  மக்களிடம் ஓட்டுக்கள் வாங்க முடியாது.

ஜாதி,மதம்,இனவெறிகளின் அடிப்படையில் மாநிலங்களில் தனித்தனிக் கட்சிகள் வளரவும் அவற்றின் கூட்டணியால் தேசத்தை ஆளவும் அதிர்ஷ்டம் பெற்றிருந்த காங்கிரசின் மதச் சார்பின்மை’ என்ற பித்தலாட்டம் இனி வரும் தேர்தலில் எடுபடாது.

ஏனெனில் அதுதான் காங்கிரஸின் ‘கூட்டுக்கொள்ளை ஆட்சியை’ இன்று நாடெங்கும் நாறச் செய்து விட்டது

எந்த லாலுக்களால் கூட்டணி ஆட்சியில் கொடிகட்டிப் பறந்ததோ,அதே லாலுக்களால் தனது பரம்பரை ஆட்சிக்குப் படுகுழியையும் பறித்து வைத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

மதச் சார்பின்மை வேஷம் அன்று காங்கிரஸுக்கு அதிர்ஷ்டம்; இன்று அதுவே துரதிர்ஷ்டம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
4.10.2013

Wednesday, October 2, 2013

அரசியல் சதுரங்கம்:2

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
------------------------------------------------------------------

எனது அரசியல் சதுரங்கம்:1 என்ற பதிவில் ‘ கிரிமினல் குற்றச் சாட்டுகளில் தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் பெற வேண்டும்’ என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் விளக்கம் பெற்ற சட்டத்துக்கு எதிராக ஒரு அவசரச்  சட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான  மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் எறிய வேண்டும்’ என்று ராகுல் காந்தி முழங்கி இருப்பது காங்கிரசின் கபட நாடகம் என்றும் அதன் மூலம்  அவரை ஒரு கதாநாயகனாக்கி வரும் தேர்தலில் மக்களிடம் சென்று ஓட்டுக் கேட்கும் தகுதியையாவது   பெறத் துடிக்கும் ஓரங்க நாடகத்தின் ஒத்திகை என்றும் எழுதியிருந்தேன்.

இப்போது  நூற்றுக்கு நூறு அது உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது.

இன்று (2.10.2013) மத்திய கேபினெட் கூடி ஏக மனதாகத் தீர்மானித்து’ ராகுல் காந்தியின் கருத்துச் சரியானது என்று தெளிந்து கொண்டு முன்பு கொண்டு வந்த ’அவசரச் சட்டத்தை வாபஸ் வாங்கி விடுவது’ என்று தீர்மானித்த செய்திதான் இப்போதைய அரசியல் அரங்கில் முக்கிய ஃப்ளாஷ்.

இதை முன்கூட்டியே நாம் யூகித்து எழுதிய விஷயம்தான் முகநூல் வரலாற்றில் வரலாறு படைத்த அரசியல் தீர்க்க தரிசனப் பதிவு.

ஆக, ராகுல் காந்தியை நேர்மையும் நியாயமும் மிக்க இளம் தலைவராக காங்கிரஸின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக  உருவகப்படுத்தி வரும் தேர்தலைச் சந்திக்கும் முடிவை காங்கிரஸ் எடுத்து விட்டது.

ஏனெனில்-
ராகுல் காந்திதான் இப்போதைக்கு காங்கிரஸ்காரர்களுக்குத் தலை;அவர் இல்லாத தேர்தலை முண்டங்கள் சந்திக்கவே முடியாது.

ஒருவேளை பிரியங்கா தனது உடன் பிறப்புக்காக உயிரைக் கொடுத்துப் பிரச்சாரம் செய்ய முன் வந்தால் அது காங்கிரஸ்காரகளுக்கு மேலும் பகலிலேயே கனவு காண வசதிப்படும்.

உண்மையைச் சொன்னால்,  ‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது போல், தகுதியும் திறமையும் இல்லாத காங்கிரஸ் தலைவர்களுக்கு நடுவே  தகுதியுள்ள தலைவரைப்போல் காட்டிக் கொள்ளவே ‘கிரிமினல்களுக்கு ஆதரவான அவசரச் சட்டம் முட்டாள்தனமானது; அதைக் குப்பைத்தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்’ என்ற வசனத்தை ராகுலைப் பேச வைத்திருக்கும் பித்தலாட்ட நாடகம்.

அதன் மூலம்  ஊடகங்களுக்கும் உளுத்துப்போன பிரசங்கிகளுக்கும் பேசுவதற்கும் விவாதம் செய்வதற்கும் ராகுல் காந்தியை மையப்படுத்தி விபச்சாரம்,மன்னிக்கவும் விளம்பரம் செய்து மக்களிடம் ஓட்டுக் கேட்கவும் அது வெட்கத்தையெல்லாம் விட்டொழித்து விட்டது’ என்பது நாளைய வரலாறு.

தனது சாதனைகளைச் சொல்லி இனி காங்கிரஸ் மக்களிடம் ஓட்டுக் கேட்க முடியாது.

ஆனால் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளிக்கும் அறிவிப்புக்களைச் செய்து அவற்றை நிறைவேற்ற அடுத்த ஆட்சி உரிமைக்கு காங்கிரஸ் மடிப் பிட்சை ஏந்தும் ஏமாற்றுத் தனத்துக்கும் தயாராகப் போகிறது.

நமது மக்கள் பாமரர்கள் என்பது ஊர்ஜிதமான ஒன்று;அவர்கள் பகுத்தறிந்து ஓட்டுப்போடும் பக்குவத்துக்கு வந்து விட்டார்கள் என்பதற்கான சான்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

நரேந்திர மோடி இன்னும் எச்சரிக்கையாக இருந்து தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்.

ஏனெனில் மக்கள் பொய்யான வாக்குறுதிகளில் புளகாங்கிதமும் பூரிப்பும் கொள்கிறவர்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2013

அண்ணல் காந்தியை அழித்தவர் யார்?

அறிவார்ந்த நண்பர்களே,

இன்று அண்ணல் காந்தி பிறந்த நாள்; அண்ணல் காந்தியை ஓர் அவதாரமூர்த்தியாய் அர்ச்சித்த தென்னாட்டுக் காந்தி  ‘கர்மவீரர்’ காமராஜ் மறைந்த நாளும்கூட.

காந்திஜியை உண்மையாக மதிப்பவர்கள் இன்று நிச்சயமாகக் காங்கிரஸ் சார்புக் கொள்கை உடையவர்கள் அல்லர்.

காந்திஜியை எதிர்ப்பவர்கள் தேச விரோத எண்ணம் கொண்டவர்களும் அல்லர்.

காந்திஜியின் புகைப்படங்களைப் போட்டும் அவரது கொள்கை இதுவெனக் கூறிக் கொண்டும் காங்கிரஸ்காரர்கள் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று ஆட்சிக் கட்டில் ஏறி, அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்து நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டு வருகிறவர்கள்’ என்பதை நாம் இன்று எண்ணிப் பார்க்கின்றோம்.

காந்தி அடிகளின் வாழ்க்கையும் கொள்கைகளும் வெளிப்படையானவை; நேர்மையானவை. இன்றுவரை அவரைப் போன்ற மகாத்மா எந்த நாட்டு அரசியல் விடுதலைக்கும்  கிடைத்ததில்லை.

‘இது காந்தி தேசம்’ என்ற பெருமை கொண்ட தனிப் பெரும் நாடு. அதன் நிர்மாணம் பாரத தேசத்துப் பண்பாட்டின் நெறிகளின் வழியே உருவக்கப்பட்டிருப்பதற்குக் காந்தி அடிகளே காரணம்.

காந்திஜியைக் கை விட்டு விட்டு இந்தத் தேசத்தின் பெருமையை எவர் பேசினாலும் அவர்கள் கபோதிகளே;கருத்திழந்து பேசும் அஞ்ஞானப் போதிகளே.

அவரது சத்திய சோதனை நூலைப் படித்திராத மூடர்கள் வேண்டுமானால் காந்திஜியைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களையும் பொய்க் கதைகளையும் அள்ளி விடலாம்.

ஆனால் காந்தி அடிகளின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி,அவர் தென் ஆஃப்ரிக்காவில் வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடத் துணிந்த விதம்,பிறகு அதிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி, இந்திய சுய நிர்ணய விடுதலைக்காக அஹிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி,உலகில் எங்கும் காணாத வழியில் அறவழிப் போராட்டத்தைப் பரப்பிய விதம்,உப்புச் சத்தியாக் கிரகப் போராட்டம், அறவழியில் ஒத்துழையாமை இயக்கம்,சுதேசி இயக்கம் என்று பல்வேறு  ஆயுதங்களை அவர் கையில் எடுத்து, சூரியனேஅஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆணவத்தையும் அகந்தையையும் ‘இந்தியர்கள் என்றால் ’இளிச்சவாய அடிமைகள்’ அவர்களின் திமிரையும் தவிடு பொடியாக்கி, அவர்களை அடிபணிய வைத்து  இந்தியாவுக்குக் கௌரவமான விடுதலையைப் பெற்றுத் தந்த ஆத்மப் பேரொளி.

உலகில் அவருக்கு இணையான சத்திய சீலர்கள் எந்த நாட்டிலும் இல்லை;எவரும் இல்லை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இறுதி வடிவம் அவரது சுட்டு விரல் அசைவில்தான் நின்றது;அவரது அஹிம்சை நெறியே வெள்ளையர்களின் மனதை வென்றது.

‘அவர் யார்?’ என்பதைப் படிக்காமல், ‘காந்தியை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொல்லும் ’கமர்கட்டு’ கருத்தாளர்களிடம் நாம் அனுதாபம் கொள்ள முடியுமே தவிர ஆத்திரம் கொள்ள முடியாது.

அண்ணல் காந்திஜியை பற்றித் தவறான பார்வை கொண்டு எழுதுவோர் இந்திய சமூகத்தில் மதிப்பிழந்து போவார்கள், ‘மதி கெட்டவர்கள்’ என்ற மதிப்பினால்.

அத்தகையவர்களால்தான்,அண்ணல் காந்தி அடிகளைப் பற்றி  உண்மைக்கு மாறான சில செய்திகள்,கதைகளாகத் திரிக்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

அவர் பெண்களோடு பயணம் செய்ததும் பெண்களோடு ஒரே அறையில் தங்கியதும் அனர்த்தமாகத் திரிக்கப்பட்டு அனாச்சாரமான எண்ணக் கலவையில் இன்று சிலர் காந்தி மகாத்மாவை விமர்சிக்கின்றார்கள்.

‘மகாத்மா காந்தி அடிகளை விமர்சிப்பதற்கு நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறது?’ என்பதை அவ்வாறு விமர்சிப்பவர்கள் தங்களைக் கண்ணாடி முன் நிறுத்தி உறுதி செய்து கொள்ளட்டும்.

‘இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை; நேருவைப் பிரதமராக ஆங்கீகரித்தது; வல்லபாய் படேலின்  முக்கியத்துவத்தை ஓரம் கட்டியது;நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தை ஒப்புக் கொள்ளாதது இவை அண்ணல் காந்தி அடிகளின் அரசியல் பிழை என  அலசுவது, அரை வேக்காட்டுத்தனம்.

அன்றைய அரசியல் நிர்பந்தமும் சூழ்நிலைகளும் அவ்வாறு எழுதுபவர்களுக்கும் விமர்சிப்பவர்களுக்கும் விளங்காது; காந்திஜி தனி மனிதராக இருந்து கொண்டு நேர்மை;சத்தியம்,அஹிம்சை இவற்றின் அடிப்படையிலேயே மனச் சாட்சியோடு நடந்து கொண்டவர்.

‘தீவிர மத வெறித்தனத்தினால், இந்தியா துண்டாடப்பட்டுவிட்டதே’ என்று அதே அளவு மத வெறி உணர்வு கொண்ட நாதுராம் விநாயக் ராம் கோட்சே இந்தியப் பிரிவினையை அங்கீகரித்த காந்தி அடிகளின் மீது கருத்திழந்த வன்மம் கொண்டு   அண்ணலைச் சுட்டு வீழ்த்தினான்.

கோட்சே என்னும் அந்த தனிமனிதன் செய்த கொலையினால் முழுமையான பலனை அடைந்தது காங்கிரஸ்தான்.

இந்தியா சுதந்திரம்  பெற்ற கையோடு  ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதில் காங்கிரஸ்கார்களிடையே உக்கிரமான உள்கட்சி மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

காந்தி அடிகள் கவலையோடு சொன்னார்:
‘இனி காங்கிரஸைக் கலைத்து விட வேண்டும். அது ‘இந்திய தேசிய விடுதலைக்கு பாடுபட்ட இயக்கம்’ என்ற அளவோடு கலைக்கப்படுவதே மரியாதையானது’

சுதந்திரம் பெறும்வரையில் காந்தியின் காலடியில் தவம் செய்து வந்தவர்கள்,விடுதலைக்குப் பிறகு நேரு குடும்பத்தின் முறைவாசல் காரர்களாக மாறி,பதவிப் பித்துக் கொண்டவர்களாகி விட்டனர்.
நேரு குடும்பத்தின் வேலைக்காரர்களைக் கண்டாலே காலில் விழும் காங்கிரஸார் சோனியாவிடம் எப்படி இருப்பார்கள்? அவர் புதல்வன் ராகுலிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? என்பதையெல்லாம் நாம் இப்போது விளக்க வேண்டியதில்லை.

இத்தகைய பதவி வெறி கொண்ட காங்கிரஸ்காரர்களுக்கு  அந்தப் பதவியே கிடைக்காமல் செய்யும் கருத்தைச் சொன்ன காந்தி அடிகளை எப்படிப் பிடிக்கும்?

கோட்சேயைத் தூண்டி விட்டு மத உணர்வின் அடிப்படையில் வெறி கொண்டோ வீர லட்சியம் கொண்டோ காந்தியைக் கொல்ல விட்டது யாராக இருக்க முடியும்? என்று சிந்தித்தால் காந்தியைக் கொன்றவர்களின் ரகசியப் பின்னணி புலப்படும்.

கோட்சே, காந்தி அடிகளைக் கொன்றதன் பலனாகத்தானே, காங்கிரஸ் காந்தி அடிகளைத் தனது கட்சியின் அடையாளமாகக் (iCon) காட்டிக் காட்டியே ஓட்டுக்கள் வாங்கி, காங்கிரஸ்காரர்கள்  கோடிக் கணக்கில் இன்று ஊஊழல் செய்து உப்பரிகையில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள்?

காந்திஜியின் திருமேனியைக் கோட்சே கொன்றான்’ என்றால் அவரது ‘காந்தியின் குல்லா’வைப் போட்டுக் கொண்ட,இந்தப் பகல் வேஷதாரிகள்தான் காந்திஜியின் கொள்கை அனைத்தையும் கூறு போட்டு விற்றுக் காசாக்கிக் காந்திஜியை உண்மையாகக் கொன்றவர்கள்’ என்பேன்.

அதற்காக அடித்தளம் இட்டு, கோட்சேயைத் தூண்டி விட்டவர்கள் இந்தக் காங்கிரஸ் கூடாரத்தின் கொள்கைத் தீபமாக வேஷம் போட்டுக் கொண்டு திரிந்தவர்களோ என்ற அறிவுப்பூர்வமான ஐயப்பாடு எனக்குள் தோன்றுகிறது.

இந்திய சுதந்திரம் பெற்று ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் காந்தி அடிகள் கொல்லப்பட்ட துயரம் குறித்து அன்றைய பிரிட்டீஷ் பிரதமர்  வின்ஸ்டன் சர்ச்சில் மிக வருந்திச் சொன்னார்:

‘நாங்கள் இத்தனை காலமாகப் பாதுகாத்து வைத்திருந்த காந்தியை நீங்கள் ஒரு ஆண்டுக்குள் கொன்று விட்டீர்களே!’


நண்பர்களே,
இந்தக் கருத்து கோட்சேவுக்குப் பொருந்தாது; முழுக்க முழுக்க காங்கிரசின் பதவிப் பித்தர்களுக்கே பொருந்தும்.

அதனால்தான் சொல்கிறேன்:

‘எனக்குக் கோட்சே மீது கோபம் உண்டு; ஆனால் இந்தக் காங்கிரஸ்மீது கொலை வெறியே உண்டு!’

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.10.2013