Friday, September 13, 2013

பாரதி பாடல்-பாடபேதம் அறிக!




அறிவார்ந்த நண்பர்களே, பாரதியின் பக்தர்களே! 
வணக்கம்.

மகாகவி பாரதி, என்போன்றோருக்கு ஞானகுரு; தமிழ்ச் சாதிக்கு பாட்டன். பாட்டெழுதும் திறமையினால் அவன் ’பாட்டன்’ என்றில்லாமல்,தனது பாட்டுச் சாசனத்தைத் தன் பின்வரும் சந்ததிகளுக்கு எழுதி வைத்ததனால்தான் அவன் நமக்குப் பாட்டன் என்றாகின்றான்.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப,அவனைப் பற்றுவதிலும் பின்பற்றுவதிலும் நமக்குள் எவ்விதப் பேதமும் கிடையாது.

அது போலவே-

‘அவன் பாடலில் உள்ள கட்டமைப்பை, நாம் எவ்வித பாடபேதமுமின்றி பேதமின்றி உணர்ந்து ஒரே மாதிரியாகவே படித்தும் புரிந்தும் வர வேண்டும்’ என்ற சிந்தனையை இங்கு வைப்பது மிகச் சரியானது’ என நம்புகிறேன்.

பாரதி எழுதிய அத்தனை பாடல்களும் இன்று முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.  கிடைத்தவற்றுள் சில பாடல்களில் கூட சில வரிகள் சரியாகக் கவனித்து முழுமைப் படுத்தப்படாமல் பாடபேதத்தோடு இருப்பதைக் காண்கின்றேன்.

‘கவிச் சூரியனான பாரதியின் படைப்புக்கள் எதுவும் எள்ளளவும் குற்றம் குறை இல்லாதவை’ என்று நம்புகிறவன் நான்.

அவ்விதம் குறைகள் இருப்பின் அது,‘பாரதியின் கைப் பிரதிகளைத் தேடி எடுத்தோ, மறு பிரதி எழுதியோ ( மக்கிப் போன பழைய தாள்களிலிருந்து
Re-Write செய்தோ)  ‘படி’ தந்தவர்களின் கவனக் குறைவால் அல்லது பாரதியின் சிந்தனயை அப்படியே தாங்கிச் சொல்லும் கவித் திறன் இல்லாதவர்களால் வந்ததாகத்தான் இருக்க முடியுமே’ தவிர,பாரதியால் அல்ல.

பாரதி கவிதைகளின் முழுப்பரிமாணத்தையும் அறிந்தோர் அவற்றை
மறுசீர் செய்ய, இப்போது வெளியிடப் பட்டுள்ள நூல்களில் உள்ள கவிதைகள் சிலவற்றின் – அச்சுப் பதிவுகளில்- பாடபேதங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

உதாரணமாக:

//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’//

என்று பாரதியின் கவிதை நூல்களில் இருப்பதையே இங்குள்ள அனைவரும் எடுத்துக் கையாண்டு வருகின்றனர்.

குறிப்பாக-
முகநூல் முதலான சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு, கவிதை எழுதும் ஆர்வலர்களும் சரி; கவிஞர்களும் சரி,ஏன்,பாரதியின் பக்தர்களும்சரி….

இந்த வரிகளையே சகஜமாக எடுத்து காட்டி இன்புற்று வருகின்றனர்.

இப்பாடலில் எது மோனைகளும் இயைபுத் தொடர்களும் பொருத்தமற்ற சொல்லாடலும்  உள்ளன.அவை இடம் மாறியுள்ளன.

உண்மையில் கவிதைத் தேட்டம் மிக்கவர்களும் இலக்கணம் அறிந்தாரும் கூட இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் அச்சில் வெளிவந்துள்ளா  ‘பாரதியார் கவிதை’ நூல்களின் அச்சுப் பிரதிகளில் உள்ள பிழைகளை அல்லது பாட பேதங்களைப் பற்றி அக்கறை செலுத்தாமல் அப்படியே ஒப்பித்து வருவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாரதியின் மீது எனக்கு ஈர்ப்புத் தோன்றிய நாள் முதலே – எனது இளம்வயது முதலே,இப்பாடலை என்னை அறியாமல்-

“தேடிச் சோறு நிதந் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

என்றுதான் பாடி வந்திருக்கின்றேன்.

எப்போதும் என் சிந்தனைக்குள் ஊடுருவி நிற்கும் பாரதியின் இக்கவிதையின் கட்டமைப்பைக் கவனியுங்கள்.

இதன் அச்சில், வடிவில் ஏதேனும் எதுகை,மோனை,இயைபு,ஓசை மற்றும் அசைகளில் தடுமாற்றம் தட்டுகிறதா?

அதேபோல் முதலில் குறிப்பிட்டவாறு ‘பாரதியார் கவிதைகள் நூலில் உள்ள:

//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’//

என்ற பிரசுரத்தில் உள்ள வரிகளையும் கவனியுங்கள்.


//’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி ……   //
என்று வருகிறது. 

சின்னஞ் சிறுகதைகளைவிட திண்ணைக் கதைகள் என்பதுதான் பாரதியின் சீற்றத்துக்குக் காரணமாக இருக்க முடியும்.

மேலும் அடுத்து வரும் வரிகளில் எதுகை, மோனைகளும் இயைபுத் தொடரும் சரியாக அமையவில்லை.

சிறு பிழைகள்தான்; ’பாரதியின் கருத்துக் கம்பீரத்தின் கைகளைக் கட்டி விட்டது’ போன்ற உணர்வைத் தரவில்லையா?

நான் சுதேசமித்திரன் நாளிதழில் - 1976-77 களில் உதவி ஆசிரியனாகப் பணியாற்றியபோது, பாரதியின் இக்கவிதையை நானே எழுதிக் கொண்டது போல் எண்ணி அடிக்கடி எனக்குள் பாடியும் எனது இயல்புகளைப் பிறருக்குத் தெரிவிக்கும்போது எடுத்துச் சொல்லியும் இறும்பூதெய்துவதும் வழக்கம்.

ஆனால்-
முகநூலுக்கு வந்த பிறகு பாரதியின் நேசர்கள் பலர் இப்பாடலை இங்கு எடுத்துக் காட்டும் போதெல்லாம் ‘பாரதியார் கவிதைகள்’ பிரசுரங்களில் உள்ளவாறே எடுத்துக் கையாண்டு வருகிறார்கள்.

உண்மையில்,இதில்- அதாவது,’பாரதியார் கவிதைகள்’நூல் பிரசுரங்களில்,குறிப்பாக இந்த, “தேடிச் சோறு நிதம் தின்று…என்று தொடங்கும் கவிதைப் பிரசுரத்தில் எதுகைகள் இடறி இருப்பதும்
மோனைகள் முறைத்துக் கொள்வதும் இயைபும் ஓசைகளும் தட்டிக் கொள்வதுமாக இருக்கின்றன.

இதையே பிரசுரிக்கப்பட்ட எல்லா “பாரதியார் கவிதை’ நூல்களிலும்
இருக்கக் காண்கிறேன்.

விக்கிப் பீடியாவிலும் இதுவே உள்ளது.

இந்த கவிதையின் முதல், இரண்டு வரிகளை.
“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்....”

என்று-

சரிசெய்து கொண்டால் மற்ற வரிகள் அனைத்தும் கவிதைக்கே உரிய கட்டுக் கோப்புக்குள்ளும் பாரதியின் கருத்துக்குள்ளும் கம்பீரமாய் நின்று கொண்டிருப்பதைக் காணலாம்;உணரலாம்.

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று;....”

என்று உணர்ந்து, அதன் கருத்தின் கம்பீரத்தின் அடிப்படையில், இந்த பாட பேதம் புரியப்பட்டால், அதில் உள்ள எதுகை மோனைகளும் இயைபுத் தொடரும் பாரதியின் எழுச்சிமிகும் தோற்றத்தையும் முழுமையாக் காட்டும்’ என்பதை வலியுறுத்தவே இப்பதிவை அளித்திருக்கின்றேன்.

இப்படி ஒரு பாடபேதத்தைச் சுட்டிக் காட்டுவது, எவ்வகையிலும் பாரதியின் பெருமையைக் குறைக்கவில்ல;மாறாக எழுச்சியுடன் ஏற்றம் பெருகிறது’ என்பதை எடுத்து கூறவே  விரும்புகின்றேன்.

பாரதியின் உணர்வுகளில் பலமுறை தோய்ந்து அவனுடைய கவிதைப் பெருவெள்ளத்தில் நீந்தி வரும் எனக்கு பாரதியின் கவிதைகளில் வரும் எதுகை,மோனை,இயைபு, கருத்து முதலான அனைத்திலும் பொங்கி நிற்கும் புலமையில் அளப்பறிய பெருமையும் ஈடுபாடும் உண்டு.

‘பழைய பிரதியை சரிவரக் கவனிக்காது யாரோ செய்த பிழையை,பின் வந்த கவிஞர் பெருமக்களும் பாரதியின் பக்தர்களும் கூர்ந்து கவனிக்கவில்லையோ?’ என்பதை எண்ணும் எனது மனம், ‘ஆரம்பம் முதல் நான் நெஞ்சில் பதித்திருந்த வரிகளின் கட்டமைப்பே சரியான கவிதை வடிவம்’ என்பதையும் அதைத்தான் பாரதியும் எழுதியிருக்க முடியும்’ என்பதையும் உறுதியாக நம்புகிறது.

சிறு சொற்கள் இட மற்றம்தான்.

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

என்றிருப்பதில் பாரதியின் கம்பீரமும் அவன் கவிதையின் பொருளும் சிறந்து நிற்கின்றதே தவிர,சிதைக்கப் படவில்லை.

எனவே-
இன்று பாரதியின்  நினைவு நாளைத் தொடர்ந்து, இதுபற்றி, ஓர் பார்வையை உங்கள் எல்லோருக்கும் வைத்து,அது பற்றிய உங்கள் எண்ணத்தை அறியவும் பாரதி பாட்டின்  கம்பீரத்தையும்  கட்டுக் கோப்பினையும் காக்கவும் வேண்டி இதனைப் பதிக்கின்றேன்.

வாழ்க பாரதி; வாழ்க அவன் புகழ்!

இவண்-
கிருஷ்ணன்பாலா



Monday, September 9, 2013

எனது பிள்ளையார் பக்தி!





அருமை நண்பர்களே,
 
இன்று விநாயகர் சதுர்த்திப் பெருநாள்.

நாம், எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் தொன்று தொட்டு விநாயகக் கடவுளை முன் நிறுத்தித் தொழுது விட்டுத்தான் தொடங்குவோம். இது தொன்று தொட்டுத் தொடரும் நமது பண்பாட்டு வழக்கம்தான்.

விநாயகப்பெருமானை எவர் வணங்கினாலும் அவருக்குக் கேட்டதை கேட்டபடி, நிறைவேற்றும் கேண்மைமிகும் முழுமுதற் கடவுள்.

உலகமொழிகளில் தனித்தன்மை மிக்கதான நம் தமிழ் மொழியில் நமது முன்னோரின் படைப்புகள், வழிபாடு எதிலும் விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தப்படாமல் தொடங்கப்பட்ட பட்ட படைப்புக்கள் எதுவும் இல்லை.

மிகத்தொன்மை வாய்ந்த திருமந்திரத்தில் ஐந்து கரத்தானைப் போற்றும் முதல் பாடலின் பொருளில் இருந்தே யானை முகக் கடவுளின் தனிப் பெருமையை உணரலாம்.

தேவராலும் மூவராலும் யாவராலும் வணங்கப்படும் அந்த கணநாதருக்கு இன்று பிறந்த நாள்; அதுதான்  விநாயகர் சதுர்த்தி.

அனைவரும் அந்த ஆனை முகத்தானை ஒரு முகமாகச் சிந்தித்து சிந்தையில் வைத்து வணங்கிச் சேவித்து மகிழ்வும் நெகிழ்வும் பெறுவோம்.




எனது வாழ்வின் முதல் வழிபடு தெய்வமே விநாயகர்தான். 

‘எப்பொழுதும் எனது ’ஞான குருபரனாய்’ எனது எண்ணங்களில் நிறைந்திருப்பவன் அவனே. என்பதை என் மனம் உணர்ந்து கொண்டேதான் இயங்குகிறது.

அவன் எப்படி என் மனத்துள்ளே புகுந்தான்.? 

அதை இன்று பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதலே விநாயகப் பெருமானை எண்ணித் தொழுது வருபவன் நான்.

எனக்குப் பிள்ளையாரைக் காண்பித்துப்  பற்றுக் கொள்ள வைத்தவர் என் தந்தைதான்.

என் தந்தை முருகப் பெருமானிடத்தில் அளவற்ற பக்தி கொண்டிருந்தவர்; அதேசமயம், தினமும் காலையில் குளித்து விட்டு எனது வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் காலை உணவருந்துவார்; வேலைக்குச் செல்வார்.

கிணற்றில் குளித்துவிட்டு பிள்ளையாரை வணங்கி நெற்றி நிறையத் திருநீறு பூசி மனமுருக வணங்கி விட்டுப் பின்  வீட்டில் மாட்டியிருக்கும் முருகப் பெருமான், சீரடி சாயிபாபா, சரஸ்வதி படங்களுக்குத் தவறாமல் ஊது பத்தி ஏற்றிக் கும்பிடும் அவரது பக்தியின் நேர்த்தி எனது பிஞ்சுமன வயலில் விதைக்கப்பட்ட விதை.

அது அருகெனத் தழைத்துப் பரவி, ஆல்போல்  என்னுள்ளே வேரூன்றி இருக்கிறது.

அதன் தாக்கத்தால்தான் நானும் நாள் தவறாமல் காலையில் எழுந்ததும் ஊருக்குக் கிழக்குப்புறத்தில் சின்னாற்றைத் தாண்டி அமைந்திருக்கும் ’துலுக்கன் தோட்டத்துக் கிணற்றில் குளித்துவிட்டு எங்கள் ஊர்ப் பிள்ளையாரைக் கும்பிடுவது வழக்கமாகவும் பழக்கமாகவும் எனது வாழ்வில் படிந்து போன அன்றாடக் கடமை என்றாகி விட்டது.

எழுந்து, காலைக் கடனை முடித்ததும் ‘அப்புனு (செல்லமாக ’அப்பா’ என்று கூப்பிடும் சொல்லின் திரிபுதான்; ‘அப்பனே’ என்பதற்குப் பதிலாக ‘அப்புனு’ என்று கிராமியப் பாணியில் என் அம்மா என்னை அழைப்பது இப்படித்தான்) கோயலுக்குப் போய்ட்டு வா; நேரமாச்சில்ல” என்று அன்போடு என்னைக் கோவிலுக்குப் போகச் சொல்லித் தூண்டுவார்,அம்மா.

முதலில் அம்மாவின் நிர்ப்பந்தமும் அப்பாவின் முருக பக்தியின் தாக்கமும் என்னைப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல வைத்து, நாள்பட நாள்பட அதுவே எனக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பந்தத்தை உருவாக்கி விட்டது.

எனக்குள் ஏற்பட்டிருந்த அதீதமான பிள்ளையார் பக்தியும் அதன் எதிரொலியாக, தமிழ்கூறும் நல்லுலகிற்குள் என்னை விசேஷமாக உந்தச் செய்த அவ்வையாரும் அவரது அதி அற்புதமான பாடல்களும் என்னுள் பிள்ளையார் பக்தியில் இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

அவ்வையின் சில பாடல் வரிகள், மந்திரச் சொற்கள்போல் என் உணர்வில் பதிந்து போய் அதன் உள்ளர்த்தங்களில் விரிவான பதங்களைத் தேட வைத்ததும் அதன் தொடர்ச்சியால் பழம் பாடல்காட்சிகள் – குறிப்பாகத் தனிப்பாடல் திரட்டுக்களும், விநோத ரஸமஞ்சரியும்,விவேக சிந்தாமணியும் காளமேகப் புலவர் கதையும் பாட்டுக்களும் பாரதியின் கவிதைகளும் எனக்குள் ஓர் தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு விட்டது.

இதெல்லாம் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் கால கட்டத்திலிருந்தேதான் உருவாயிற்று’ என்பது இப்போது நினைக்கையில் விவரிக்க முடியாத ஆச்சர்யத்தை தருகின்றது.
 
எனது பிள்ளையார் பக்திக்கு மூல வித்து அவ்வைப் பெருமாட்டிதான்.

”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா”

என்ற அப்பெருமாட்டியின் பிள்ளையார் வணக்கப் பாடல்தான் எனது
8அல்லது 9 வயதுப் பிஞ்சு மன வயலில் ஊன்றப்பட்ட  நல்வித்துக்கள்.

”விநாயகப் பெருமானே,
பால்,தேன்,வெல்லப்பாகு,பருப்பு ஆகிய நான்கு வகைப் பொருட்களை நான் உனக்குக் காணிக்கையாகப் படைப்பேன்; அதை நீ ஏற்று, எனக்கு சங்கத் தமிழாகிய இயல்,இசை,நாடகம் என்ற மூன்று தமிழ் ஆற்றல்களயும் தந்தருள வேண்டும்”

என்பதே இப்பாட்டின் பொருள்.

மிக எளிமையான வெண்பாவில் அவ்வை வடித்த இந்த அமுதப் பாடல்தான் என்னைப் ’பிள்ளையாரை,  பாடல் மூலமும் வணங்க வேண்டும்’ என்ற பக்தியை வளர்த்தது.  

அதுவே, நான், வளர வளர பல்வேறு அற நூல்களையும் நீதி நூல்களையும் என்னைத்தேடிதேடி விரும்ப வைத்தது; தமிழின் கூர்மையையும் அதன் மேன்மைமிகும் சீர்மையையும் என்னுள்ளே அரும்ப வைத்தது.

நான்கு வகைப் பொருட்களை விநாயகப் பெருமானுக்குப் படைத்து மூன்று வகைத் தமிழைக் கேட்ட அவ்வைப் பெருமாட்டிதான் என்னையும் அதே விநாயகப் பெருமான்மீது ஒரு பாடலை எழுதத் தூண்டினாள். 


திருமூலரின் ’’ ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை....”எனத் தொடங்கும் திருமந்திரத்தின் முதற் பாடலையொத்த சாயலில் எனது பாடல் ஒன்று இங்கே அமைந்திருப்பதற்கு திருமந்திரத் தேடலும் ஒரு காரணம்.

நான் விநாயகப் பெருமானுக்கு எழுதிய, அப்பாடல்:

’பூதம்ஐந்தையும் பூட்டிய கரத்துளன்:
வேதம் நான்கையும் வெளித்தரும் வடிவினன்;
ஓதும் முதற்பொருள் ஆனவி நாயகன்:
பாதம் பணிந்துளம் பற்றுகின்றேனே!

பஞ்ச பூதங்களையும் பற்றியிருக்கின்ற ஐந்து கரங்கள் கொண்டவன்;
நான்கு வேதங்களின் சொரூபமாகத் திகழ்பவன்; தேவர் முதலாய் யாவரும் வணங்கும் முழுமுதற் பொருளென ஆன விநாயகன்;அவனுடைய பாதத்தை எனது மனத்துளே வைத்து வணங்குகின்றேன்”

என்பது இதன் பொருள்.

ஆக, எனது தமிழுக்கு மூல முதல்வன், விநாயகப் பெருமான்தான் ; அவனது பெருங்கருணையினாலேதான் சரஸ்வதி எனக்குள் அவ்வையின் வடிவில் புகுந்தாள்; அவள் புகுந்த பிறகுதான் எனக்கு இவ்வுலகம் புரிந்தது;என்னையும் இவ்வுலகம் புரிந்தது.

அருமை நண்பர்களே,
நமது தமிழ்ப் பாரம்பரியத்தின் முழுமுதற் பொருளாய்ப் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானை இன்று, இந்த விநாயகர் சதுர்த்திப் பெருநாளில் அவ்வைத் தமிழின் ஆழ்ந்த  வெளிப்பாட்டோடு செவ்வை மனத்தின் சேவிப்போடு சிந்தித்து நிறைவு கொள்வோமாக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
9.9.2013

Thursday, September 5, 2013

ஆசிரியர் போற்றுதும்!

அறிவு சார்ந்த நண்பர்களே,


மாதா,பிதா,குரு, தெய்வம்    என்ற நான்கும்  மனிதனின் அடிப்படை அறிவில் உணர்ந்திருக்க வேண்டிய  மெய்ப் பொருட்கள் என்பதை பாரத தர்மம் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.

இந்தப் பாரதத் தர்மத்தை, பூர்வகாலம்தொட்டு இன்றுவரை நமது அறிவுக் கண்களைத் திறந்து கற்றுணர்த்தி நாம் அதனைப் பரம்பரை பரம்பரையாகப் பற்றிவரச் செய்து வருகிறவர்கள் ஆசிரியப் பெருமக்கள்தாம்.

'’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’   (குறள்:392)

என்று வள்ளுவன் சொன்னதற்கேற்ப வாழும் உயிர்களாகிய மனிதர்க்கு எண்ணும் எழுத்தும் என்ற இரண்டு கண்களைத் தந்தவர்கள் ஆசிரியர்களே அன்றி வேறு எவரும் இலர்.

மாதா,பிதா,தெய்வம் என்ற மூன்றின் பெருமைகளையும் நமக்கு விளங்கச் செய்து வருபவர்களும் ஆசிரியர்களே;
அவர்களைத்தான் நமது பாரதத் தர்மம் ’குரு’ எனக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

’குரு இல்லா வித்தை பாழ் ‘என்கிறாள் அவ்வை.

குருவே விஷ்ணு,பிரம்மா,மகேஸ்வரனாகிய ஈசன் என்கிறது நமது வேதம்.

நாம் வாய்திறந்து பேசும் மொழிக்கு அர்த்தம் சொல்லி உணர்த்தியவர்களும் நாம் உழைத்து வாழும் வழிக்கு வழிகாட்டியவர்களும்  நமது பெருமைகளுக்கெல்லாம் அடித்தளமாக இருப்பவர்களும் நமது சம்பிரதாயங்களைச் சரிந்து விடாமல் காத்து வழி நடத்தி வருபவர்களும் நம்மை இந்த உலகில்  மேம்பட்ட குடிமக்களாய் இருக்கும் நெறிகளைக் கற்பித்து வருபவர்களும் குருமார்களே.

//தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.//

என்கிறது குறள்,இவர்களை.

அதாவது, தாங்கள் இன்புறக் கூடிய விஷயங்கள் புற உலகில் பரவி இருத்தல் கண்டு பேரானந்த நிலையில் பரவசம் அடைகின்றவர்கள் அவர்கள்.

ஒரு ஆசியரிடம் பாடம் படித்த மாணாக்கர்களில்  தேசத்தின் தலைவர் முதலாக,ஒரு அலுவலகத்தின் ‘அட்டெண்டர்வரை’ அனைத்துமாய் வளர்ந்து பரவி,நிற்கிறார்கள்.

ஆசிரியன் ஆசிரியனாகவே தம் வாழ்நாளின் இறுவரை வாழ்கின்றார், ஆனால் அவர் மூலமே இந்த தேசத்துக்கும் உலகுக்கும் தேவையான தலைவர்களும் விஞ்ஞானிகளும்,நிர்வாகிகளும்,தொழில் துறையினரும், கலைஞர்களும், ஞானியரும் உழைப்பாளர்களும் நல்ல பெற்றோரும்  நலம்படக் கற்றோரும் உருவாகிறார்கள்.

பிறரை உயர்த்தி அவர்களின் உயர்வைத் தங்கள் உயர்வாய் எண்ணி மகிழும் தியாக சீலர்கள்தான் ஆசிரியப் பெருமக்கள்.

அந்த ஆசிரியப் பெருமக்களைத்தான் நாம் நமது குரு என்று மதித்துப்  போற்றி  வணக்கம் செலுத்தி வருகிறோம்.

’ஆசிரியன்’ என்றால் குற்றம் களைபவர் என்று பொருள்.

அத்தகைய உயர் மாண்புடைய குருமாரை இன்று நம்முள் சிலர் கேலியாகப் பேசுவதும் கிண்டல் செய்து எழுதுவதுமாக இருப்பதை  இங்கு காண்கிறேன்,

’வாத்தி’ சொன்னார்; வாத்தி எழுதினார்; வாத்தி திட்டினார்’ என்றெல்லாம் தங்கள் பள்ளீப் பருவகாலத்தை நினைவு கூரும்போது இங்கு தங்கள் நன்றி கெட்ட குணத்தையும் திமிர் பிடித்த  கொள்கையையும் காட்டிக் கொள்வதில் மகிழும் அவர்கள் ’தாங்கள் செய்யும் பாவம் இன்னது’ என்பதை அறியாதவர்கள்.

நமது குற்றங்களை நீக்கி நல்வழிப்படுத்தும் அறிவை நமக்குப் புகட்டிய அந்த ஆசிரியர்கள், நமக்குப் பல்வேறு வகைகளில் முன் நின்று வாழ்விக்கும் தெய்வங்கள்’ என்பதை இன்று, இந்த ஆசிரியர் நினைவு தினத்திலேனும் சிந்தித்து சேவிப்போம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
5.9.2013