Thursday, June 13, 2013

இனிய உளவாக….






அறிவுசான்ற நண்பர்களே, 
வணக்கம்.
 
முகநூலில் சமூகப் பிரக்ஞைக்கான விஷயங்களைச் சொக்க வைக்கும் நடையில் நிறையப்பேர் எழுதி வருகிறார்கள்; ஆனால், அவற்றைக் குறையப் பேர்களே படித்துக் குதூகலிக்கின்றார்கள்.

அரசியல், சினிமா, நாட்டு நடப்பு, இலக்கியம்.மொழி. ஊடகங்கள், நகைச் சுவை,புதுமைகூட்டும் புகைப் படங்கள் என்று பல்வேறு விஷயங்கள் இங்கே தரமான பதிவுகளில் பரிமாறப்பட்டு வருவது படிப்போரின் சிந்தனையைத் தீண்டும் வகையிலும் புதிதாக எழுத வருவோருக்கு எழுத்தை எப்படிக் கையாள வேண்டும்?’ என்று எழுதத் தூண்டும் வகையிலும் இருக்கின்றன.
மூன்றாந்தரமான படைப்பாளர்கள் முகநூலில் பெருகி நிற்பினும் அவர்களை  அரைகுறைகள் ஆரவாரம் செய்து ஆதரிப்பினும் நாம் இந்த அஃறிணைகளைப்  புறக்கணித்து, இருக்கின்ற உயர்வான  உண்மையை உயர்திணைகளை, உணர்ந்து, ஒப்புக்கொண்டு பாராட்டத்தான் வேண்டும்.

இன்றைய இளைஞர்களில் சிலர் பிரமிப்பூட்டும் வகையில் சிந்தித்து எழுதி வருவது கண்டு பேருவகை கொள்கின்றது மனது.

அவர்களின் படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் புகழ்ந்தும் உவந்தும் அவ்வப்போது என் கருத்தூட்டங்களைப் பதிக்கின்றவன்தான் நான்.

நான் படிக்காத,பார்க்காத,படிக்க முடியாத பதிவுகள் நான் பார்த்ததைவிட எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் என நம்புகிறேன்.

எனது கவனத்துக்கு வரும் நல்ல பதிவுகளை நான் தவறவிடுவதில்லை.

எனது எழுத்தின் நோக்கமும் நான் விரும்பிப் பார்க்கின்ற பதிவுகளின் நாட்டமும் ஒன்றுதான்.

அது, நமது தமிழ்ச் சந்ததியை உரமும் உயிர்ப்பும் மிக்கதாக்கி, சமுதாயத்தின் எதிர்கால ஆணி வேராகக் காணும் உந்துதல்தான்.

’இந்த உந்துதல் இங்கு எழுதுகின்ற நண்பர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும்’ என்று சிந்திப்பது நப்பாசையா? இல்லை நட்பாசையா? என்பதை உங்களுடைய மனச் சான்றுதான் மதிப்பிட வேண்டும்.

இத்தகைய உயர்தரப் படைப்புக்களின் எதிர்பார்ப்புக்கிடையே, எழுதத் தெரிந்த நண்பர்கள் பலர், காதல் என்ற விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதைப் பல கோணத்தில் சிந்தித்து விதம் விதமாக இங்கே பதிக்கின்றதையும் நான் கவலையுடன் காண்கின்றேன்.

நமது தலைமுறைக்கு நாம் கற்றுத்தருகின்ற பண்பாடு இதுவல்ல’ என்பதை அவர்கள்தன் சிந்திக்க வேண்டும்.

அதில் ஒரு சிலர் அப்படி காதலைப் புதிய கோணத்தில் எழுதினால் நிறையப் பேர் அதை ரசிக்கிறார்கள்; அதன் மூலம் தங்களுக்கு நட்பு வட்டம் பெருகிறது என்பதாய் எண்ணம் கொண்டு அப்படி எழுதுவதை நியாயப்படுத்துகிறார்கள்.

‘இந்த முகநூல் நட்பு வட்டம் எந்த வகையிலும் நமது வாழ்க்கை நிலைக்கு உடன் இருக்கும் நண்பர்கள் வட்டம் அல்ல’ என்பதை அவர்கள் உணர்வதில்லை.

‘பண்பட்ட நண்பர்கள் இந்த வலைத்தளங்களின் தொடர்பினால்
ஒருவருக்கொருவர் வாழ்க்கை நண்பர்களாக உருவாவதை  விரும்பினால் அதில் அர்த்தம் உண்டு. நான்  அப்படித்தான் விரும்பி நண்பர்களை ஏற்கிறவன்.

ஆனால் இளம் வட்டங்களும் இருட்டறை இதயங்களும் காதல் விஷயத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கின்றார்கள் என்பதற்கும் அவர்களை மேலும் ஈர்த்து நண்பர்களாக்கி ‘உச்சுக் கொட்டவைத்துத் தங்கள் நட்பு வட்டத்தை வளர்ப்பதும் அவர்களின் ‘Like'களுக்கும் பாராட்டுரைகளுக்கும் நன்றி அறிக்கை வாசிப்பதும்  வெட்கக் கேடானது. அவை அறிவுக் கண் கொண்டு பார்ப்போரை   எரிச்சலுறச் செய்கின்றன.

இந்த நண்பர்கள் சிலர் தொடர்ந்து காதலைப் பற்றி எழுதுவதன் நோக்கம்தான் எனக்கு ஒவ்வாமையாக உள்ளது. அவர்களுக்கிருக்கும் ‘கூர்மையான சிந்தனை’ என்னும் கத்தி வெண்ணெயை ஏன் வெட்ட வேண்டும்? என்கிறேன்.
  
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.’’

என்று இனியவை (அவையில் இனிய விஷயங்களைக்) கூறலின் சிறப்புப் பற்றி வள்ளுவன் வகுத்துச் சொன்னதன் பொருளைத் தங்கள் வசதிக்காகத் ‘திரிபு’செய்து, இனிமையும் குதூகலமும் ஊட்டும் காதல் விஷயங்களை
வாசகர்களின் பேரின்ப ரசனைக்கு விருந்தாக்குகின்றோம்’ என்கிறார்கள்.

நண்பர்களே,

காதல் என்பது தனி ஒருவனின் அந்தரங்க விஷயம்.

அதை அரங்கத்தில் ஏற்றி அவலப்படுத்துகின்ற நிலையில்
திறமை மிக்க சிந்தனையாளர்கள் இறங்கி விடக் கூடாதென்பதென் கருத்து.

காதலைப் பற்றி அறியாதார் யார்? உணராதார் யார்?

எனினும் அது சபையில் விவாதிக்கின்ற பொருள் அன்று.

முகநூலைப் பொறுத்தவரை ஆபாசத்துக்கும் அசிங்கத்துக்கும் உணர்ச்சி காட்டுகின்ற கூட்டமே அதிகம். அந்தக் கூட்டத்துக்குத் தண்ணி காட்டுவதும் தவிடு போடுவதும் ஒரு மாட்டுக்காரனின் வேலையாக இருக்க முடியுமே தவிர, தரமான படைப்பாளின் இயல்பாக இருக்க முடியாது.

எனது நண்பர்களுக்கு இதைத்தான் இலைமறைகாயாக இடித்தும் சொல்கிறேன்; எடுத்தும் சொல்லி வருகிறேன்.

இதன் அடிப்படையில், நான் எழுதி வரும் பண்பாட்டு நலன் குறித்த  கருத்துக்களைப் படித்தும் வாதித்தும் உணர்ந்து கொள்கின்ற எத்தனையோ இளம் சிந்தனையாளர்கள்,எழுச்சிமிக்க இளம் கவிஞர்கள்  இப்போதெல்லாம் நல்ல தரம் வாய்ந்த பதிவுகளைத் தந்து வருகிறார்கள்; அதில் காதலைப் பற்றிச் சொல்வதென்றாலும்கூட.

எனது பல்வேறு பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவோர் ஆயிரக்கணக்கில் இந்த மாறுதலை, மறுமலர்ச்சியை உணர்ந்து வருவதில் எனக்குப் பெருமைதான்.
உயர்தர இலக்கிய அறிவை;எண்ணங்களை,தமிழர் பண்பு காக்கும் ரசனையை,சமூகப் பார்வையை, அரசியல் அவலங்களை, படிப்போரின் சிந்தனைக்கு வைப்பதும் அதில விசாரம் காட்டுவதுமே தமிழ்ச்
சிந்தனையாளர்களின் பெருமைக்கு ஏற்றது.

இதை எண்ணாது, “இங்கே காதலைப் பற்றி எழுதினால் அதை ‘’ஆஹா...ஒஹோ’ என்று கூவிக் குதிக்கின்றவர்கள் மன வளர்ச்சியற்றவர்களே” என்பதையும் மறந்து அந்தக் கூட்டத்தின் உற்சாகத்திற்காக எழுதி , நண்பர்கள் வட்டத்தைப் பெருக்குவதை  நான் அவமானகரமான  சிந்தாந்தம்’ என்றே  கூறுவேன்,

இனியாகிலும் இதை என் நண்பர்கள் உணர வேண்டும். 

இப்படிச் சொல்லியும்கூட அவர்கள் இதைப் பொருட்படுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் பண்பும் மரபும் கெட்டழிந்த சந்ததியினரைத்தான் அவர்கள் கண்டு நொந்து கண்ணீர் சிந்த நேரிடும்.


’ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்கு
 உண்மை தெரிந்ததைச் சொல்வேன்!’

என்று-

முரசு கொட்டிய பாரதி எனக்குக் கற்றுக் கொடுத்ததை.
நான் காட்டிக் கொடுக்கின்றேன்,நண்பர்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.6.2013

Tuesday, June 11, 2013

பிழைபட ஒழுகேல்!

பிழை என்பது என்ன?

நாம் எழுதும்போது வார்த்தைகளில் வரும் எழுத்துப் பிழைகள் பிழை அல்ல!

’நல்ல நெறிகளைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதும்; கற்றிருந்தால் அவற்றின் வழியிலேயே கசிந்துருகி நடக்க  வேண்டும்’ என்ற கருத்தின்றி   இருப்பதும்; நமது செயல்கள்தான் நாளைய நம் சந்ததியினரை வழிநடத்தும் பாடங்கள் என்பதை உணராமல், இறைவனின் பெயரைச் சொல்லாமல் வாழ்நாளை வீழ் நாளாக்கிக் கொண்டு, ’அப்படி வீண் நாளாக்கிவிட்டோமே’ என்று நினைக்காதிருப்பதும்; வணங்கி வாழும் நெறியற்றிருப்பதுமாகியவைதாம் பிழைகள்’  என்ற சுய தரிசனத்தோடு தனக்குத் தானே சுட்டிக் காட்டிப் பாடி இருக்கிறார்,பட்டினத்தார்

அவர் அவ்வாறு சுட்டியிருப்பது இந்த மானுடத்துக்கு.

சுயதரிசன அறிவுடையோர் அவரது பாடலை மெய்யுருகப் பாடி, தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள்;அப்பாடல்:

//கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும்நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய், கச்சி ஏகம்பனே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.6.2013

Sunday, June 9, 2013

எனது நூல் அகம்!



எனது  நூலகம்
------------------------
இதுதான் என்றன் நூலகம்;
என்னை இயக்கும் தாயகம்!
மதுதான் மயக்கம் தந்திடுமோ?
மயங்கிடுவேன் நான் நூலென்றால்...

எங்கே சுற்றித் திரிந்தாலும்
எதுவும் எனக்குச் சுவையில்லை:
இங்கே என்றன் நூலகத்தில்
இருப்பதைப் போன்ற சுகமில்லை!

உலகை நினைத்துக் கவலையினால்
உள்ளம் தோய்ந்து கசக்கின்றது;
உலகை இங்கே மறக்கின்றேன்;
ஒவ்வொரு நொடியிலும் பிறக்கின்றேன்!

ஒவ்வொரு நூலிலும் என்அன்னை
உள்ளே இருந்து அழைக்கின்றாள்;
ஒவ்வொரு நூலிலும் என்மகிழ்வை
உயிராய்க் காத்து வளர்க்கின்றாள்!

வீடுகள் தோறும் நூல் தொகுப்பு
விரிந்து பரவி இருந்தாலே
கேடுகள் குறையும்; புத்தகங்கள்
கேள்வியும் ஞானமும் அருள்வதனால்! 

செல்வம் இதுதான் என்றுணர்த்தி
சிந்தையில் நின்றாள் கலைவாணி;
வல்லவள் அவளே  என்தாயாய்
வழி நடத்திடவே விரும்பு கின்றேன்!

அன்னை வாணி அடிமலரை
அணைந்தேன்;அன்றித் திருமகளின்
பின்னே சென்று ’பிழை’ வாழ்வைப்
பேணுவதில்லை’ என்பேன் நான்!

பிறந்தால் மீண்டும் மண்ணில்நான்
புத்தகப் புழுவாயப் பிறந்திடவும்;
இறந்தால் இந்தப் புத்த கங்கள்
என்னை மூட, இறந் திடவும்

‘வரம் தா’ என்றே வேண்டுகின்றேன்;
வழங்கிடுவாய் என் குருதேவே!
பரம்பொருள் வடிவில் வாழ்பவனே;
பாரில் இதுவே என் ஆசை!
  
இவண்-
கிருஷ்ணன்பாலா
9.6.2013 

இராஜா.தியாகராஜன்!






முகநூலில் நற்றமிழ்ச் சான்றோனாய் வாழும்
பாவலர் திரு இராஜா.தியாகராஜன் அவர்கள்
5.6.2013 அன்று  இருபத்தைந்தாண்டுக் கால
இல்லற வாழ்வைக் கடந்தார்.

எனதினிய நண்பருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் 
தெரிவித்து எழுதப்பட்ட கவிதை வாழ்த்து இது:

இருபத்தைந்தாண்டுகள் இல்லறம் தொடர்க! 
----------------------------------------------------------------------------------
 
இருபத் தைந் தாண்டுகள் கடந்து
இல்லறப் பாதையில் இனிதே நடக்கும்
அருமைத் தமிழர்;முகநூல் வட்டம்
அறிந்து மதிக்கும் செந்நாப் பாவலர்!

இராஜாதி யாக ராஜன்; என்
இதயம் பதிந்த இனிய நண்பர்;
’இராஜாதி ராஜன்’ என்றே வாழ
இதய வாழ்த்தை இங்கே பதித்தேன்:

அன்பு நண்பனே! அறிவுத் தமிழனே!
ஆணவம் அறியா எளிய அறிஞன!;
உன்னரும் இல்லறம் ஓங்கி இருந்து;,
உன்பெயர் என்றும் நிலைத்தே இருக்க!

தமிழ்போ லினித்து தவறுகள் கசக்கத்
தரும்உன் எழுத்தின் ரசிகர்கள் யாரும்
அமிழ்தென உனது நட்பினை அடைந்தார்;
அடியேன் கூட அவ்வண்ணம் தான்!

தமிழணங் கென்னும் தாயைப் போற்றித்
தவறா துரைக்கும் நின் கவிதைகள்;
இமயச் சிகரம் ஏற்றிடும் உணர்வுகள்;
இதுதான் நினது செந்தமிழ்ப் பற்று!

என்றும் நினது இல்லறம் விரிந்து
எல்லாத் திசையிலும் நற்புகழ் அடைந்து
குன்றா வளமும் கோபுர வாழ்வும்
கொட்டிக் கிடக்கும் செல்வமும் தழைக்க!

வாழ்க்கைத் துணைவியும் வைகைச் செல்வனும்
வற்றா நதிகள் எனஉனக் கமைந்து
ஆழ்கடல் போன்ற அமைதியும் வெற்றியும்
ஆண்டவன் அருள வேண்டுகின் றேனே!



அன்புடன் வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
5.6.2013

Saturday, June 8, 2013

டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் வாழ்க!


இன்று தமிழிசை போற்றும் தன்னிகரில்லா 
இசைமேதை டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் 
பிறந்த நாள்.

அவர் நூறாண்டுகள்
இசைபட  இசைபட வாழ்ந்திருக்க
உலகத் தமிழர் மையம் சார்பாக வாழ்த்துவோம்,நண்பர்களே.

--------------------------------------------------------------

டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம்

கலகல’ வெண்கல ஓசை;போர்க்
களத்தினில் வெளிப்படும் வீரம்;
சலசல அருவியின் ஓட்டம்;நல்ல
சங்கதி குழைந்த ராகம்:

பலப்பல ஆலா பணையில்
பரவசம் நல்கிடும் தாளம்;
சிலசில மேதைகள் மட்டும்
சேர்த்தே தருவார் பாட்டு!

இருக்கும் மேதைகள் எல்லாம்
இணந்தே ஓருரு பெற்று
உருக்கும் இசையை வழங்கி
உறைந்தார் ஒருவர்;உண்மை!


சிவத் தலம் சிவ சீர்காழி;
சீலர்கள் பிறந்த பூமி;
சிவத்தமிழ் பெற்ற மைந்தர்
சீர்காழிகோ விந்த ராஜன்;

அவர்தம் வழியில் நின்று
அச்சரப் பிசகில் லாமல்
தவத்தமிழ் இசையை இன்று
தரும்அவர் மைந்தர் கண்டோம்!

எவரும் போற்றும் பண்பும்
இசைத்தமிழ் காட்டும் தொண்டும்
சிவ சிதம்பரத்தின் வடிவாய்
ஜெனித்தது உலகில் உண்மை!

சிவ சிதம்பரத்தின் வாழ்வு
சீர்கா ழிக்கே பெருமை;
இவர்நூ றாண்டுகள் இருந்து
இசைபட வாழ வாழ்த்து!

இசைத்தமிழ் போற்றும் எல்லோர் சார்பாகவும்
வாழ்த்தும்,
கிருஷ்ணன்பாலா
8.6.2013

Monday, June 3, 2013

கலைஞர்-அகவை’90

அறிவார்ந்த நண்பர்களே,

கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஜூன் 3 ஆம் தேதியோடு அகவை 90ஐ எட்டி நிற்கிறார்.

தி.மு.க வினரும் கலைஞரின் சார்பான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களும் அவருடைய அகவை 90ஐ முன்னிலைப் படுத்திப்
பட்டிமன்றம், பாட்டுமன்றம் என்று அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆட்சிக் களத்தில் இல்லாத நிலையிலும் இப்படி அமர்க்களப் படுத்துவது மக்கள் மன்றத்தில் மீண்டும் அமர,’ களம்’ காணும் முயற்சியாகத் தி.மு.கவுக்குத் தேவைப்படலாம்;நமக்கல்ல.

எனினும்,90 வயதிலும் துவண்டு போகாமல் கலைஞர் அவர்கள் 
துடிப்புடன் அரசியல் செய்யும் மனஉறுதியை நாம் ஒவ்வொருவரும் பேராச்சர்யத்துடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளில் மறைக்க முடியாதவராக அவர் திகழ்வதை இவரது எதிரிகளேகூட மறுக்க முடியாது.

ஒவ்வொரு தமிழனும் ஏதோ ஒரு வகையில் அவரை நிந்தித்தோ, வந்தித்தோ வசைபாடி அல்லது இசைபாடிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

”கலைஞருக்கு வாக்களித்தால் நாட்டுக்கு கேடு;
அவருடைய வீட்டுக்குப் பேறு’ 
என்று -
முத்திரை குத்தப்பட்ட அனுபவம் மக்களுக்குக் கிடைத்த போதும், 
மேடம் ஜெ. அவர்களின் புண்ணியத்தால் இரண்டு முறை  ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அதிர்ஷ்டசாலிதான் கலைஞர் என்பது கசப்பான உண்மை. 

‘கலைஞரின் அரசியலாலும் ஆட்சியாலும் தமிழர்களுக்கு நன்மை’ என்பதைவிட, ‘அவருடைய குடும்பத்தாருக்கும் அவர்தம் அனைத்து வாரிசுகளுக்கும் கோடி கோடி நன்மை’ என்பது நமக்குத் தெரியும்; நாட்டுக்கும் புரியும்.

இன்று -
தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க ‘கோடீஸ்வரப் பரம்பரை’ என்று பேசப்படும் அளவுக்கு அவருடைய பேரன் பேத்திகள் அத்தனைபேரையும் ஆக்கி விட்ட ’மிகப் பெரும் ராஜதந்திரி’ கலைஞர்  என்பதில் எள்முனை கூட சந்தேகம் இல்லை.

‘இந்தியாவே அதிரும்படி வெளித்தெரிந்த 2ஜி ஊழலை எப்படி அவர் அமுக்கிக் கொண்டிருக்கிறார்? என்பது ’அவருக்கும் சோனியாவுக்கும் மட்டுமே தெரிந்த ’ராஜ ரகசியம்’ என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர்..

அவர் எதிர்க்கட்சியில் இருந்த சமயங்களிலெல்லாம் அதிசயிக்கத்தக்க 
ராஜதந்திரியாகவும்; ஆட்சிக்கட்டிலில் இருந்தபோதெல்லாம் ’அருவறுக்கத்தக்க சின்னப் புத்திக்காரராகவும் இருந்தார்’ என்பதற்கு அவருடைய குடும்பப் பித்தும் சினிமா விழாக்களிலேயே அதிகம் கலந்து கொண்டு ஆனந்தப்பட்ட சில்லறைக் குணமுமே  சான்றுகள்;

வேறு சாட்சிகள் எதுவும் தேவையில்லை.

இவரிடம் எனக்குப் பிடித்ததெல்லாம்  எத்தகைய தோல்விகரமான சூழ்நிலையிலும் இலக்கியத் தமிழைக் கையில் எடுத்துக் கொண்டு படிப்போரை சொக்க வைத்து விடுகின்ற தமிழறிவும், சமயோசிதப் புத்தியும், இரவுபகலாக எந்நேரமும் எதையாவது எழுதி அதைப் புத்தகமாகப் போட்டு அதிலும் காசு பார்த்து விடுகின்ற சாமார்த்தியமும்தான்.

இவரால் எந்த நிலையிலும் துடைக்க முடியாத களங்கம்:
’உலகத் தமிழினக் காவலர்’ என்று தன்னை வெட்கமின்றி அறிவித்துக் கொண்டு தமிழினம் இலங்கையில் கொசுக்கள் போல் நசுக்கப் பட்டபோது கோட்டையில் கோலோச்சிக் கொண்டு சோனியாவோடு சொக்கட்டான் ஆடிப் பதவி சுகம் பேணிய பச்சைத் துரோகம்தான்.

‘செம்மொழித் தமிழ் மாநாடு’ என்று ஒரு மிகப்பெரும் ஜால்ரா மாநாட்டைக் கோவையில் நடத்தி, அதில் தங்களைக் ‘கொம்பேறி மூக்கன்’களாகக் காட்டித் தமிழ் வீரம் பேசித் திரிந்த கவிஞர்களையெல்லாம் காக்கைக் கூட்டங்களாக மாறச் செய்தது கலைஞரின் அறிவுத் திறனா? அல்லது அரசுப்பணத்தை அள்ளி இரைத்த அயோக்கியத் தனமா? என்று பட்டிமன்றம் நடத்தாமல் அதிமுக அரசை அமுக்கி வைத்திருக்கிறாரே, அந்த சாகசம் கலைஞரைத் தவிர யாருக்கும் வராது.

’பிறன்மனை விழையாப் பேராண்மை’ குறித்து குறள் எழுதிய வள்ளுவனுக்குத் தனிப் பெரும் சிலை எழுப்பியதைக் கொண்டு,’அய்யன் வள்ளுவனின் அறிவு வாரிசு கலைஞர்’ என்று கழக உடன் பிறப்புக்களையெல்லாம் உணர்ச்சிப் பிழம்பாய்க் குலவையிட வைத்திருப்பது கண்டு எம்போன்றோர் உணர்ச்சியற்ற ஜடங்களாய் நிற்கிறோம்.

‘தமிழைக் காக்கும் சக்தி தனக்கு மட்டுமே உண்டு’ என்பதாகக் கழக உடன்பிறப்புக்களை எல்லாம் முடுக்கி விட்டு, ஊர் ஊராக மேடைகளில் முழங்கச் செய்து, அதன் மூலம் அறிவு வளராதவர்களையும் ஏமாளித் தமிழர்களையும்  தன்பின்னே அணிவகுத்து நிற்கச் செய்த ஆற்றலும் அறிவும் இவரது ஈடில்லாத சொத்துக்கள்.

நானும் கூட1972களிலும் 1997 களிலும் கலைஞரை வாழ்த்தி அற்புதமான கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றால், அந்த ’அறிவு வளராதவர்களின் கூட்டம்’  எப்படிப்பட்டதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி அதிகாரம் இருந்தால் ’முடவனைக்கூட மூங்கில் மரம் ஏறினான்’ என்று இந்த முட்டாள் உலகம் சொல்லும்; அதிகாரத்தின் இனிமை எத்தகைய காரத்தையும் சோரம் போகச் செய்துவிடும்’ என்பதை  கலைஞரின் அரசியல் வெற்றிகள் காட்டும்.

தெய்வப் பற்றில் தேர்ந்த திருக்குவளை முத்துவேலருக்குப் பிறந்த தட்சிணாமூர்த்தி, தெய்வ நிந்தனையில் நாத்திகம் பேசிய கூட்டத்தில் இளம் பிரச்சாரகராகத் தன்னை இணைத்துக் கொண்டு ’கருணாநிதி’ என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டு அரசியலில் மிகப் பெரும் வெற்றிகளை அடைந்தபோதிலும்  இவரது வாழ்க்கை வரலாறு சகதியும் சேறும் நிறைந்தது.

அந்தச் சகதியிலும் சேற்றிலும் முளைத்த குவளை மலர் இந்தத் ’திருக்குவளை மலர் ’என்று கவிஞர்களும் பேச்சாளர்களும் கல்வியாளர்களும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும் இன்று போற்றி வருவதைக் காண்கிறோம்.

அன்று-
வறுமையிலும் பற்றாக்குறையிலும் வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு மூலதனமே நாக்குத்தான். அந்த நாக்கு, அரசியலில் வாக்கு வங்கிகளை வளைத்து போடும் வல்லமை கொண்டதாக இருந்த காரணத்தாலேயே-

”பொய்யுடையொருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே; மெய் போலும்மே!’
என்றாகி விட்டது.

சுயநலமும் குடும்பப் பாசமும் மிக்க தலைவர் ’இவரை விட இன்னொரு தலைவர் தமிழ் நாட்டில் பிறக்க முடியாது’ என்பதை விடவும் ‘பிறக்கக் கூடாது’ என்றே வேண்டுவோம்.

இவரை வாழ்த்துவதற்காக ‘தமிழுக்கு வயது 90’ என்றெல்லாம் புகழ்கிறார்கள்.

தமிழ்ப் பண்பாட்டின் காரணமாக நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வரை, திருக்குவளை முத்துவேலர் கலைஞர் கருணாநிதி அவர்களை நாமும் வாழ்த்துவோம்:

’தமிழுக்கு வயது 90;’ என்றல்ல; ’தவறுகளுக்கு வயது 90’ என்று.

இனியும் தவறுகளாக வாழாமல், செய்த தவறுகளுக்கு பிராயச் சித்தம் தேடும் வாழ்வில் நீண்ட காலம் வாழ்வாராக!

உலகத் தமிழர் மையம் சார்பில் வாழ்த்தும்-
கிருஷ்ணன்பாலா
3.6.2013