Monday, July 2, 2012

நித்தியும் ஜீவன் முத்தியும்!




அறிவார்ந்த நண்பர்களே,


என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

என்பது திருமூலர் வாக்கு.


அவரது வாக்கையே எனக்கு வழங்கப்பட்ட அதிகாரமாய்க் 
கொண்டு நான் தமிழை,அதன் உயர் நெறிகள் ஓங்கியிருக்க 
உயிர்ப்புடன்  செய்து தமிழன்னைக்கு அணிகலன் ஆக்கி 
வருகின்றேன்.


ஆனால்,அக்கிரமத்தையும் அயோக்கியத்தனங்களையும் தனது
அணிகலன்களாகக் கொண்டுகடந்த நான்கு மாதங்களாக ஆர்ப்பரித்தும் 
அடங்காது திமிரியும் வந்தவன்இன்று அடிபட்ட பாம்பென ஓடி ஓடி
ஒளிகின்றான்;அடைக்கலம் தேடித் தேடி அலைகின்றான்,
பார்த்தீர்களா?.

உள்ளொன்றும் புறம் ஒன்றும் பேசித் திரிந்தவன்ஊத்தைச் சரீர மயக்கத்தில்  உப்பித் திரிந்தவன் இன்று தப்பிக்க வழியின்றித் தடுமாறுகின்றான்.

தானே கடவுள்;தன்னிடம் சரண் அடைகின்றவர்களேஜீவன் முக்தியை அடைகின்றார்கள் என்ற ஒரு சண்டாளத் தத்துவம் பேசி வந்தவன் போலீசாரிடமும் வழக்கு மன்றங்களிடமும் சரண் அடைந்து கெஞ்சுகின்றான்.

இவனுடைய கால் அழுக்குகளைக் கழுவிக் குடித்த கபோதிப் பக்தர்கள் பலர் இன்று,தங்களுடைய பாத்ரூம்களில் அவ்வாறு குடித்ததை எண்ணிக் குமட்டிக் குமட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சிலர், தங்கள் தலையை வெளியில் காட்ட முடியாமல்
முக்காடு போட்டு முனகிக் கொண்டு சபிக்கின்றார்கள்,தங்கள் மாஜிக் கடவுளை.

நண்பர்களே.
இத்தகைய இழிநிலை கொண்ட ஒருவன் யாரென உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கடந்த வாரஜூனியர் விகடன்இதழைப் படித்தவர்களுக்கு இவன் யாரெனத் தெரிந்திருக்கும்;இவனுடைய சண்டாளத்தனத்தின் பெண்டாளும் பேய்த் தனம் புரிந்திருக்கும்

என்னுடைய கட்டுரைகளை இங்கு கடந்த நான்கு மாதங்களாகப் படித்து வருபவர்களுக்கு எனது உண்மைத் தமிழின் உறுதிமிக்க சாடல்களின்  இலக்கு முற்றிலும் விளங்கி இருக்கும்.

நண்பர்களே,

ஜீவன் முக்திஎன்பது பக்குவப்பட்ட ஆன்மாவின் இறுதி நிலை.
சித்தரும் முத்தரும் மகரிஷிகளும் தேடி நின்ற உயர் கலை.

அதைக் கண்டவர் விண்டதில்லை;விண்டவர் கண்டதில்லை.

ஜீவன் முக்தியை அடைவதற்கான வழிகளைத் தேடிச் சென்ற முத்தர்கள் உணர்ந்தவை வேதங்கள்;மொழிந்தவை உபநிஷதங்கள்.

இதிகாசங்களும் புராணங்களும்தான் அவற்றின் விரிவுரைகளும் விளக்கவுரைகளும்.

இந்த மண்ணில் இனி எவனும் புதிய புத்தனாகிக் போதிக்கத் தேவை இல்லை; இருக்கின்ற வேத,உபநிஷத, சித்தர் பாடல்களைச் சேவித்து வந்தாலே போதும். ஜீவன் முக்திக்கு உகந்த நெறி யாதென விளங்கும்.

ஆனால் இந்தக் கயவன்;கபட வேடதாரி நித்தி,காவிச் சட்டையையும்  உத்திராட்சக் கொட்டையையும் அணிந்து கொண்டு, புத்தனின் போதனைகளையும்ஓஷோவின் உண்மைகளையும் துணிந்து கலந்து தன்னிஷ்டம் போல் உளறுகிறான். அவனது உளறல்கள் தங்களின்ஜீவன் முக்திக்கான ஜீவனமாய்க் கொண்டு செயல்படும் ஐந்தறிவு ஜென்மங்களாய்ப் பிறப்புற்றுப் போயினர் இவன் மூடப் பக்தர்கள்.

நமது முன்னோர் காட்டிச் சென்ற இறைநெறித் தத்துவங்களையும்
சித்தாந்த மரபுகளையும் தேடத் தெரியாத முட்டாள்களும்
அவற்றில் நுனிப் புல் மேய்ந்தவர்களும், நொதிந்துபோன இச்சையில் சாய்ந்தவர்களும்,காமக் கற்பனைகளில் வீழ்ந்தவர்களும், சில தேடல் ஞானம் கொண்டு வாழ்ந்தவர்களும் சரண் அடைகின்ற இடம்தான் இந்தப் போலிக் குருமார்களின் புண்பட்டுப் புரையோடிப் போன பாதங்கள்.

என்ன ஸ்வாமி,தங்கள் தூய மலர்ப் பாதத்தில் புண்ணும் புழுக்களும்?” என்று கேட்கும் பக்தைகளிடமும் பக்தர்களிடமும்,“அவை,
தன்னிடம் சரண் அடைந்த மகரிஷிகள்என்று நித்தி சொன்னால்கூட, அதில்  ஆனந்தப் பரவசம் அடைந்துஆகா,தங்கள் பாக்கியமே பாக்கியம்என்று பஜனை பாடும் அளவுக்கு அவர்களை ஆயிரக் கணக்கில் ஆக்கிக் கொண்டவன்தான் இவன்.

உலகிலேயே உன்னதமான இறை நெறி கொண்ட தேசமும்,இத்தகைய இழிநெறி கொண்டவர்களையே தங்களின் முக்திக்கு வழி காட்டும் குரு என்று கொண்டாடும் மூடர்கள் மிகுந்த தேசமும் இதுதான்.

இந்த தேசத்தில்மத நம்பிக்கை என்பது மக்களின் தனிப் பட்ட சுதந்திரம்அதில் சட்டம் நுழைய அனுமதி இல்லை என்பது அடிப்படை உரிமை என்பதால்.அதைப் பயன் படுத்திக் கொண்டு,மக்களை ஏமாற்றும் சண்டாளர்கள் பெருகி விட்டனர்.

இவர்களுக்கு மக்களின் மூடச் சித்தாந்தங்களே பெரும் மூலதனம்.
முதல் இல்லாமல் மூளைச் சலவை செய்து அவர்களைத் தங்கள் அடிமைகள் ஆக்கிக் கொண்டு அரச வாழ்க்கை நடத்தும் சாமியார்களை இந்த நாடு கண்டு வருகிறது.

ஆன்மீகத்தின் பெயரால் நடத்தப்படும் கிரிமினல் குற்றங்களை
விளக்கவும் விளங்கிக் கொள்ளவும் சட்டத்தினால் முடியாதுஎன்பதாலும்மக்களின் மத நம்பிக்கை என்பது தனி நபர் சுதந்திரத்தின் சூக்குமச் சொத்துஎன்பதாலும்தான் நித்தியைப் போன்ற நிஜப் போலிகள் நிமிர்ந்து நின்று இங்கே கடை விரிக்க முடிகின்றது.


நித்திக்குக் கிடைத்துள்ள இத்தகைய சட்டத்தின் குருட்டுப் 
பார்வையின் துணையால்அவன் தனது அழுக்குப் புண்களின் 
காய்ந்துபோன தோல்களைக்  கஷாயம் ஆக்கித் தன் மூடப் பக்தர்,
பக்தைகளுக்கு ‘அமுதநீர்’  என்று தருகிறான்.

மூடப் பக்தர்களோ அதைத் தங்கள் ’ஜீவன் முக்தியின் தாகம் போக்கும் தத்துவ நீரென’க் குடித்து ஆனந்த நடனம் புரிகின்றார்கள்.

அந்த ஆனந்தத்துக்குப்பேரானந்த நிலைஎன்று சொல்லிச் சிரிக்கின்றான் இந்தப் பித்தன் நித்தி.

அதையே கடவுளின்மந்தகாசச் சிரிப்பு’ என்று புதிய அகராதி எழுதிப் பூரிக்கின்றார்கள் நித்தியின் ’அந்த’ அழுக்கு நீரை பருகிய பக்தப் புழுக்கள்.

என்னே கொடுமை?

நண்பர்களே,

இந்த நித்தியின் புண் நிறைந்த பாதத்தில் நித்தம் உழலும் புழுக்கள் யார்? அவர்கள் எத்தகையவர்கள்? அவர்களின் ஏட்டைத் திருப்பிப் பாருங்கள்; தெளிவாகப் புரியும்:

கட்டிய கணவனிடம் கருத்து வேறுபாடு; கரம் பிடித்த மனைவியிடம் சுகம் காணாமை; குறுக்கு வழியில் பெற்ற செல்வநிலை; பாவங்களில் தேடிய சொத்து; பலரை ஏமாற்றிப் பெற்ற அந்தஸ்து;பதவி; பெற்றோரைத் தவிக்க வீட்டுப் பிற உறவுகளில் பெற்ற குடும்ப வாழ்வு;வீட்டுக்கு அடங்காமல் வெளியில் திரிந்து பெற்ற விரக்தி; போலி இறைக் கொள்கையில் பெற்ற பக்தி; செய்த பாவங்களால் பெற்ற நோய்,உடன் பிறந்தாருக்கு உரிய பங்கைத் தராது நேர்ந்த வம்பு வழக்குகளில் வழுக்கி விழும் நிலை;குடும்பச் சண்டை;குழப்பங்கள்…….

இவற்றில் சிக்கியவர்கள்தானே இவனுடைய பக்தர்கள்?

அத்தகையவர்கள் ஆனந்த நடனம் புரியும் இடம் பிடதி ஆசிரமம் என்றாகி,அதில்ஜீவன் முக்திஎப்படியெல்லாம் விலை கூறப்படுகிறது பார்த்தீர்களா?

நித்தியின் இந்தப் பாவத் திருவிளையாடல்களுக்கும் காமக்  களியாட்டங்களுக்கும் சேர்ந்துள்ள பணமும் தங்கமும் எங்கிருந்து வந்தது? என்பதை ஆராய்ந்தால் அதில் ஆன்மீக விரோதச் செயல்களும் தேசவிரோதச் சித்தாந்தங்களும் தெய்வீகத்தின் பெயரால் செய்த திருட்டுத் தனங்களுமே பல்லிளித்து நிற்கும், இந்தப் பரதேசி நித்தியைப் போலவே.

கேட்டால்தான் நடத்தி வரும் தொழில் நிறுவனத்தின் மூலம்என்கிறான்.

என்ன தொழில் என்பது இப்போது புரிகின்றதா?

மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியின் பிரசித்தி பெற்ற தொழிலின் மேம்பட்ட தொழில் நுட்பம் இங்கே சித்தாந்தம் ஆக்கப்பட்டு,அதன் வியாபாரம் இந்தப் பிடதியில் அபாரமாக நடந்து வந்திருக்கின்றதுஎன்பதை இப்போது உலகம் அறிந்திருக்கிறது.

இவ்விடத்தில்தான் இந்திய சமுதாயத்தின் இறையாண்மை எச்சில் ஆக்கப் பட்டுக் காறி உமிழப்பட்டிருக்கிறது.

இதைத்தான் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ஜூனியர் விகடன்.

ஆனால்-
‘ஜீவன் முக்தி தரும் செய்வினைகள்என்று இவன் சொல்லிக் கொண்டு பிடதி ஆசிரமத்தில்,பெண்களைச் சீரழித்து எப்படியெல்லாம் பிய்த்துப் பெண்டாளுகிறான் இந்தச் சண்டாளன் என்பதை அதில் சிக்குண்டு சீரழிந்த பெண்ணே மன உறுதியுடன் உண்மைகளைச் சொன்ன பிறகும், இங்குள்ள மகளிர் சங்கங்கள் மவுனம் காக்கின்றன.

மாதவம் செய்த மங்கையர்களின் மகுடமாக இன்று தமிழகத்தின் தலைமைப் பதவியில் வீற்றிருக்கும் மேடம் ஜெ அவர்களின் அரசு தன் இரும்புக் கரத்தைத் தொலைத்துவிட்டுக் கரும்புக் கரத்தைக் காட்டி நிற்கிறது.

நண்பர்களே,
அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பெண் எம்.எல்..வின் காம நடத்தைக்கு,அந்தப் பகுதி மக்கள் வெகுண்டெழுந்து கொடுத்தவெகுமானம்’ பற்றி நினைத்தால், இந்தக் காமக் கொடூர வியாபாரி நித்திக்கும் அவனைக் கடவுள் என்றே கொண்டாடும் முட்டாள்களுக்கும் அவனுடைய அடியாட்களுக்கும் ஒருநாள் மக்கள் சக்தி நடத்தப் போகும் மண்டகப்படி எப்படி இருக்கும்?

எண்ணிப் பார்க்கின்றேன்.

நித்தியும் அவனுடைய அடிப்பொடி அருணகிரியும் சட்டத்துக்கு அப்பாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே.

அதை இறைவன் அளிப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான்.

இறைவன் தீர்ப்பு நாளைத் தடுக்கவோ, தள்ளி வைக்கவோ இங்கே எந்தச் சக்தியாலும் ‘வாய்தாக் கேட்டு வழக்காட முடியாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
2.7.2012
இடம்அன்னூர்த் தோட்டம்

Sunday, July 1, 2012

அநீதிக்குத் தண்டனை!



அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
இன்றைய அஸ்ஸாம் எம்.எல்.ஏக்களில் ஒருவர் பெண்.
கணவர் இருக்க இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு அந்த நபருடன் காதல் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்.

அவரும் அவருடைய புதிய முக நூல் காதலரும் ஒருவருக்கொருவர் அன்பு கலந்து இந்த நிலையை எய்திட முகநூல் நட்புப் பாலம் (?) அமைத்துத் தந்துள்ளது.

இந்தப் பெண் எம்.எல்..வின் நடத்தையில் சினமுற்றவர்கள் நேற்று (30.6.2012) அந்த எம்.எல்..வும் அவருக்கு இரண்டாவது கணவராகப் பதவி ஏற்றுக் கொண்டவரும் Chatting செய்து கொண்டிருந்த ஓட்டல் அறையில் புகுந்து, அவர்கள் இருவரையும் அடித்து உதைத்துத் துவம்சம் செய்திருக்கிறார்கள்இதை எல்லோரும் தொலைக்காட்சி செய்திகள் வாயிலாகப் பார்த்தோம் இன்று.

பொதுமக்கள் ‘தங்கள் தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினரின் ஒழுக்கம் கெட்ட செயலுக்கு வழங்கிய தீர்ப்பு இது’வெனத்தான் நாம் கருத முடிகிறது.

சட்டம் இருக்கத் தண்டனையை, சட்டத்துக்கு அப்பால் தர முனைவது சட்டப் படி தவறுதான்.

ஆனால் அந்த சட்டத்தை இயற்றும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒழுக்கக்கேடான நடத்தைக்கு அடிக்கோல் நாட்டி, முன் நின்று செயல் படும் எம்.எல்.ஏவை இதுவரை அந்த சட்டம் என்ன செய்து கொண்டிருந்தது?

அந்தப் பெண் எம்.எல். சார்ந்துள்ள ஆளும் கட்சியும் அவர்களுடைய சட்டம்,நீதி அதிகாரமும் அந்த எம்.எல்.ஏவுக்குப் பாதுகாப்பு அல்லவா கொடுத்து வந்திருக்கிறது?

அடிபட்ட பின் மீட்கப் பட்ட அப் பெண் எம்.எல்.. ‘இது தன் தனிப்பட்ட விஷயம்என்றும்அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லைஎன்றும் பேட்டி கொடுக்கின்றார்.

மக்கள் பிரதி நிதியான அவர்,முதலில் செய்திருக்க வேண்டியது விவாக ரத்து;பிறகு சட்டப்படியான இரண்டாவது திருமணம்.

அதைவிட அவர் செய்திருக்க வேண்டியதுசொந்தக் காரணத்தைச் சொல்லி  ‘எம்.எல்..பதவி விலகல்’.

ஆனால்,மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு அவர் செய்த கேடு கெட்ட செயலுக்கு அதே சட்டம் வேடிக்கை பார்த்ததே தவிர வேறு என்ன செய்தது?

ஓட்டுப் போட்ட மக்கள் இதை அனுமதிக்கவில்லை என்பதும் அவர்களின் உண்மையான பிரதிநிதிகள் அதற்கு உரிய எதிர்ப்பைச் சரியாகக் காட்டியிருக்கிறார்கள் என்றுதான்எடுத்துக் கொள்ள வேண்டும்.

சட்டம் தன் கடமையை நேர்மையுடன் செய்யாவிட்டால் அதை மக்கள் சக்தி திரண்டு செய்யும் என்பது இப்போது அடி எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

வன்முறை தண்டனைக்குரியதுதான்.
அதைவிட வன்முறையைச் செய்வதற்குத் தூண்டும் செயல்கள் சட்டத்துக்கு அப்பாலும் தண்டனைக்குரியது..

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது தேர்தலுக்கு மட்டுமட்டல்ல;தேர்தலுக்குப் பிறகு,தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும்தான்.

அரச நீதியை விட ஆண்டவன் நீதி தப்புவதில்லை.

இவண்,
கிருஷ்ணன்பாலா
1.7.2012

Tuesday, June 19, 2012

‘நான்’ இனி,நீங்கள்’!


நான்எனும் அகந்தை கொண்டு
நான்சொலும் செய்தி யாவும்
தேன் பொழித் தமிழின் வீரம்
தெளிவுறக் காட்டு தற்கே!

‘ஆணவம்’ என்று இதனை
அளப்பவர் யாரும் எழுத்தின்
மாணவர் என்றே சொல்வேன்
மற்றவர் எனது தோழர்!

யாரெது சொன்ன போதும்
எதிர்ப்பிலும் நிமிர்ந்து நின்று
நேர்பட உரைத்தல்;உண்மை
நிலைத்திடச் செய்யத் தானே?


நாட்டிடைத் தீயோர் தலைமை
நாசத்தைச் செய்யும் போது
கேட்டிட யாரும் இல்லாக்
கேவலம் நிலைக்க லாமோ?

ஆட்சியைப் பிடிப் பதற்கே
அரசியல் செய்வோ ருடைய
சூழ்ச்சியை எதிர்க்கும் சக்தி
'சொல்எனும் எழுத்துக் குண்டு!

தமிழர்தம் வாழ்வும் தூய
தரம்மிகும் பண்பும் இன்று
நமைமிக வருந்த வைக்க
நலங்கெட எழுத லாமோ?

நாட்டிலே லஞ்சம்;மக்கள்
நம்பிக்கைத் துரோ கங்கள்
வாட்டிட வளைந்து நின்று
வரைவது எழுத்தா,என்ன?

பேய்களே ஆட்சி செய்தால்
பிணந் தின்னும் சாத்திரங்கள்;
நாய்களே வாழும் என்றால்
நரகல்தான் நமது வாழ்வு!

கொஞ்சமும் இரக்க மின்றி
கொடுங்கோ லாட்சி இங்கு
வஞ்சகம் புரியும்போது
வாய்பொத்தி நிற்க லாமோ?

ஓய்விலாக் கவலை; நாட்டின்
உறக்கத்தைக் கெடுக்கும் போது;
ஓய்வாகப் படுத்துக் கொண்டு
உறங்குவோன் தமிழன் அல்ல!

சத்தியம் நேர்மை வீரம்
சாற்றிடும் பண்பு யாவும்
செத்ததேன்? என்று இங்கு
சிந்தித்தால் தூக்க மில்லை!

திருடர்கள் கூட்டம் இங்கு
தெருத் தெருவாக நின்று
பெருமைகள் பேசு கின்றார்;
பிறகு நாம் என்ன செய்ய?

சாட்டையை எடுத்து இங்கு
சாடியே கயவர் கூட்டம்
ஓட்டவே செய்யும் எழுத்தின்
உறுதியைக் காட்ட வேண்டும்!

எழுத்திலே வீரம் கெட்டால்
எறும்புக்கும் அஞ்ச வேண்டும்;
கருத்திலே உண்மை நின்றால்
கயவரும் அஞ்ச வேண்டும்;

எழுதுவோர் எல்லாம் இந்த
இலக்கணம் அறிந்து, நமது
பழுதிலா வாழ்வு காக்கப்
படைத்தலே அறிவு என்பேன்!

தேங்கிடும் தேசப் பற்றில்
தெளிவுடன் பார்வை கொண்டு
ஓங்கிடும் உறுதி யோடு
உரைப்பதென் நோக்கம்;அறிக!

மிடுக்குடன் மிளிரும் எழுத்தில்
மிதந்திடும் செறுக்கை நீங்கள்
வெடுக்கெனப் புரிவீ ராயின்;
விளம்புவேன்: ‘நான்,’இனி நீங்கள்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.6.2012

Monday, June 18, 2012

நட்டம் அவருக்கில்லை;நாட்டுக்குத்தான்!


நண்பர்களே,

“இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் மறுபடியும் நான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியில் அமர விரும்பவில்லை” என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவரும் 2012 குடியரசுத்தலைவர் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்று பெரும்பான்மை இந்தியரால்
விரும்பப்பட்டவருமான டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள் அறிவித்து விட்டார் என்ற செய்தி
நம் அனைவரையும் வாடச் செய்துள்ளது.

சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் நாம் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் காண விழைந்தோம்.

ஒரு உண்மையான தமிழனைத் தங்கள் தலைக்குமேல் வைத்து அழகு பார்க்க கலைஞரும் விரும்பவில்லை; மேடம் ஜெ,அவர்களும் விரும்பவில்லை.

ஊழலின் ஒட்டு மொத்தக் குத்தகைதாரர்களாய் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை,முறைமாற்றிக் கொள்ளும் இவர்களுக்கு அந்தக் குத்தகைச் சட்டத்தையே ரத்து செய்யத் துடிக்கும் ‘லோக்பால் மசோதாவும் இந்த டாக்டர் கலாம் அவர்களும் ஒன்றுதானே?

எப்போதும் எங்கும் கலைஞர் அவர்களுக்கு எதிரான முடிவுகளையே
எடுக்கும் மேடம் ஜெ.அவர்கள், நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்களைக் குடியரசுத் தலைவராகக் கொண்டு வரும் விஷயத்தில் திரைமறைவில் ஒன்று கூடி, கூட்டணி வைத்து, கலாம் அவர்களுக்கு ஆதரவான தனிக் கட்சியைத் தோற்கடித்து விட்டனர்.

இதனால், கலாம் அவர்களுக்கு நட்டம் இல்லை;நமக்குத்தான்;இந்த நாட்டுக்குத்தான்.

கலாம் அவர்களின் அறிக்கையின் நுட்பமான வரிகளைக் கவனியுங்கள்;
நல்லோருக்குக் கண்ணீர் வரும்.

அதில் நீந்தித்தான் நாம் கரை ஏறமுடியும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.6.2012
---------------------------------------------------------------------------------------




APJ Abdul Kalam
OFFICIAL STATEMENT
--------------------------------

My dear friends,

You are aware of the developments in the run up to the Presidential election. 
Though I have never aspired to serve another term or shown interest in contesting 
the election, TMC Chief Mamata Banerjee, other political parties wanted me to be their
candidate. Many, many citizens have also expressed the same wish. It only reflects their
 love and affection for me and the aspiration of the people. I am really overwhelmed by 
this support. This being their wish, I respect it. I want to thank them for the trust they 
have in me.

I have considered the totality of the matter and the present political situation, and decided not to contest the presidential election 2012.

APJ Abdul Kalam
18th June, 2012


Sunday, June 17, 2012

நீதி கெட்ட அரசும் நெறிகெட்ட ஆதீனமும்


நண்பர்களே,

மதுரை ஆதீன நிகழ்வுகள் நீதி கெட்ட அரசையும் நெறிகெட்ட ஆதீனகர்த்தரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மதுரை ஆதீனம் இப்போதுள்ள 292 அருணகிரியின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல; இந்த அருணகிரியும் நம் அப்பனின் ஒரிஜினல் பரம்பரையில்
பிறந்திருக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

முறையற்ற வழியில் 291 ஆவது ஆதீனத்தைக் கவர்ந்து,பதவி பெற்று நெறிகெட்ட முறையில் ஆட்டங்கள் போட்டவர்; அரசியல்வாதிகளுக்கு வாய்க்கரிசி போட்டு வம்புகள் அளந்தவர்;அரசியல்வாதிகளை விடவும்  அதிகம் வளர்ந்தவர் இவர்.

இப்போது வாய் மூடி, வாடித் தலை குனிந்து போய் நோய் கொண்டு உழலும் நிலைக்கு,நிலை மீறிப் போய் விட்டார்.

தெய்வத்திரு ஞானசம்பந்தரின் பெயரால் இவர் செய்த ஆன்மீக அத்துமீறல்களின் பாவங்கள்தான் இவரை நித்தியின்பால் சேர்த்தன என்பேன்.

’பாம்பறியும் பாம்பின் கால்’ ’பாவத்தை பாவம்தான் தண்டிக்கும்;’
முள்ளை முள்ளால் எடுப்பதுதான் தெய்வ நீதி.’

“அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்;அஃதறிவீர்;
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும்;நாமடியோம்;
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்”
                   (தேவாரப் பண்:1249; பதிகம்:திருநீலகண்டம்)

என்றொரு பதிகத்தைப் பாடிய திருஞான சம்பந்தப் பெருமான்,’உய்யும் வினையை நாடாதிருப்பது வாழும் நெறிகளுக்கு ஊனம்’ என்று
எச்சரித்து,கரம் கூப்பிப் பணிந்து இறைவன் பாதமலர் போற்றி வாழும் செய்வினை ஒன்றே அந்த ஊனம் நம்மைத் தீண்டாதிருக்கச் செய்யும் நல்வினையாகும்’ என்று நமக்கு உணர்த்துகிறார்.

தேவாரத்தில் தெளிந்த அறிவோடும் தீவிரப் பற்றோடும் இருக்க வேண்டிய 292 அருணகிரிக்கு இது தெரியவில்லை.தெரிந்திருந்தால் இத்தகைய கேடுகள் சூழ்ந்திருக்காது.

புலன்களை ஒடுக்கித் தவநெறி நின்று தேவாரப் பண்ணிசையை முழக்க வேண்டிய பதவியைப் பெற்றவர்;’நித்தியின் ஆட்டமும் பாட்டும் அருமை’ என்கிறார்;அதில்தான் இறையின்பம் பிறக்கிறது’ என்று தள்ளாடுகிறார்.

வெட்கக் கேடு.

இதை எதிர்க்கவும் காறித் துப்பவும் வெகுண்டெழுந்து அவரை விரட்டவும் போராடவும் இங்குள்ளோருக்கு இன்னும் ஞானம் பிறக்கவில்லை.

ஆனால் கர்நாடகச் சைவர்களுக்கு பிறந்து விட்டது. அவர்கள்தான் 
வீர சைவர்கள்.

வைகறைப் பொழுதுக்கு முன் கண் விழித்து,’சிவாய நம;’ எனச் சிந்தித்துக் கங்கை நீராடி, திருநீறும் ருத்ராட்சமும் தூய காவியும் உடுத்தி, தேவாரப் பண்ணிசை பரவ, தெய்வ நிலை கொண்டிருக்க வேண்டியவர்,வைகறைப் பொழுதுவரை, பழுது வளர்க்கும் சிந்தனைகளில் மூழ்கித் திளைத்து, ‘நம்மைக் கேட்பாரும் இல்லை; மீட்பாரும் இல்லை’ என்ற நிலையில் கிடந்து, தன்னை ஒரு ’உலகக் குரு’ என்று பிதற்றிப் பறைசாற்றிக் கொண்டு,அரசியல் சாக்கடையில் எந்நேரமும் உழன்ற ஒரு அற்ப மனிதர்தானே இந்த 292 மதுரை ஆதீனம்?

இதை இப்போதேனும் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

நித்தியைத் தன் வாரிசென இவர் தன்னிச்சையாக 293 ஆவது ஆதீனம் என்று பட்டம் சூட்டி அவனை,’போற்றியோ போற்றி’ என்று புகழ்ந்தார்.

நாடே அதிர்ந்தது; நாமெல்லாம் அவமானத்தால் குனிந்தோம்.
‘மதுரை ஆதீனத்தின் ஈனச் செயல் இது’ என நாம் அப்போதே வெகுண்டெழுந்து எழுதினோம்.

‘அருணகிரியின் ஈனச் செயல்’ என்று எழுதியதை, சமய நெறி போற்றும் நல்உள்ளங்கள் சில ரசிக்கவில்லை;

‘அய்யோ.என்ன இருந்தாலும் ஞான சம்பந்தப் பெருமான் பீடத்தில் காவியும் அவரது பாத ரட்சையும் உத்திராட்சமும் அணிந்துகொண்டு இருக்கும் சமய குரு வேடம் தரித்த ஆதீனம் அல்லவா? அவரை ஒருமையில் விளித்துச் சாடலாமா? அய்யா.உங்கள் கோபம் விளங்குகிறது.கொஞ்சம் பொறுங்கள்; நாங்கள் அவரை மீட்டு நித்தியைத் துரத்துவோம்; அய்யா,கடும் வார்த்தைகள் அவரைச் சுடும்;அதன் வடுக்களை அவர் தாங்க மாட்டார்” என்று 292 அருணகிரியார் மீது அளப்பரிய பக்தி கொண்ட கோவை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அந்த நண்பர்,மதுரை ஆதீனம் அருணகிரி மீது கொண்டிருக்கும் பகுத்தறிவில்லாப் பக்தி கண்டு வியந்தாலும் எனது மனம் மேலும் கொதிப்புற்றதே தவிர, குளிரவில்லை.

காரணம்:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
 
கொள்வர் பழிநாணு வார்.

என்பதைக் கடைப்பிடிக்கின்றவன் நான்.

மதுரை ஆதீனத்தின் இன்றைய நிகழ்வுகளிலோ பனைத்துணை அளவுக்குக் குற்றங்கள் மிகுந்துள்ளபோது எப்படி மென்மை காக்க முடியும்?

எனவேதான்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்ற குறளுக்கேற்ப, மதுரை ஆதீனத்தின் குற்றத்தின் மூலம் எங்கே என்பதைத் தெரிந்து கொண்டு அதை அறவே நீக்கும் வழி யாதென அலசி ஆய்ந்து எனது எழுத்தாயுத்தை ஏவுகின்றேன்.

நண்பர்களே,

எனது சொந்த ஊர்:தாராபுரம். அங்கே கொளிஞ்சிவாடி என்று ஒரு பழம் பெரும் அக்ரஹாரம் இருக்கின்றது. அமராவதி ஆற்றுக்குக் கிழக்கே அமைந்துள்ள அருமையான அக்ரஹாரம் அது.

”அங்கே, ஒரு பெரிய வீட்டை விலைக்கு வாங்கி, அதை ஒரு ’கார்பொரேட் விருந்தினர் மாளிகைபோல் மாற்றி’ குளிர்சாதன அறைகளைக் கட்டி,அங்கே வந்து அடிக்கடி தங்குகிற கார்பொரேட் ஆதீனம்தானே இந்த ஆள்?” என்றும் ”அங்கே இவர் பெண்களுடன் அடிக்கும் கூத்தெல்லாம் இங்குள்ள பலருக்கும் தெரியும் அவரோடு ஒரு அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் ஒருவரும் வந்து தங்கிச் செல்வது வழக்கம்தானே? இப்படிப்பட்ட ஆளைப் பற்றி.இதே ஊரைச் சேர்ந்த நீங்கள் முழு விவரம் தெரியாமல் எழுதி வருகிறீர்கள்” என்றும் என் தாராபுரத்து நண்பர்கள் சொல்லி அதிர வைக்கின்றார்கள்.

நான் தாராபுரத்துக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை ஓரிரு நாட்கள் சென்று திரும்புவது வழக்கம். அதனால் தாராபுரத்து உறவுமுறையினருடன்  நேரத்தைப் போக்கி விட்டு வேறு வெளி விவகாரங்களைப் பற்றிப் பேச நேரமில்லாது திரும்பி விடுவது வழக்கம்

ஆகையால் மதுரை ஆதீனத்தின் தாராபுரம் தொடர்பு பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது சில விஷயங்கள் தெரியத் தெரிய தலை சுற்றும் அளவுக்கு அவை விரசமாக இருக்கின்றன.

’சிவன் சொத்துக்களைத் தன் சொத்துக்களாய் எண்ணி, தெருவுக்கு ஒரு தேவடியாளை வைத்திருக்கிறவர் என்ற விமர்சனத்தை இப்போது விவரம் தெரிந்தவர்கள் கூறி,காறி உமிழ்கின்றார்கள்:கடுஞ்சொல் பொழிகின்றார்கள்.

‘நித்தியால்தானே இந்த ஆதீன கர்த்தரின்.களவு மெய்ப்பட்டிருகிறது?’ என்று கேட்டு விட்டு,’இது மற்ற ஆதீனங்களின் செயல் பாட்டுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது’ என்று சிரிக்கின்றார் எனது நெருங்கிய நண்பர் ஒருவர்.;அவர் ஆடிட்டர்;அறிவு நுட்பம் மிகுந்த மனிதர்.

மதுரை ஆதீனமான மதிகெட்ட அருணகிரிதனக்குத்தானே குழி வெட்டிக் கொண்டிருக்கிறார். துறவிக்கே உரிய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் அத்து மீறி ஆணவத்துக்கும் ஆசைக்கும் அடிமையாகிப் போனவர், இன்று மூச்சுத் திணறுகிறாராம். பத்திரிகைகள் இப்போது இவரைப் பரிகாசம் செய்கின்றன.

இவருக்கு நேரும் கதிதான் நாளை நம் அரசுக்கும் நேரும்.

நம் தமிழர்களுக்கே உரிய சகிப்புத்தன்மை காரணமாக, ‘நரி இடம் போனால் என்ன?வலம் போனால் என்ன? நம்மை அது கடிக்காமல் போனால் சரி’ என்கிற மனப்பான்மை மிகுந்து விட்ட காரணத்தால்
இந்த 292ன் ஆரம்பம் எது? செயல்பாடுகள் எந்த அளவுக்கு ஒரு ஆதீனகர்த்தர் என்பவரின் அந்தஸ்தை மீறி இருக்கின்றன?
இவரது செயலால் நமது மரபுவழிச் சொத்தும் சமய நெறிக் கட்டுப் பாடும் எந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்டுள்ளன? மேடை கிடைத்துவிட்டால் அதில் அரசியல்வாதிகளுடனும் சமய நெறிகளைத் தாக்கும் சண்டாளர்களுடனும் இந்த அருணகிரரி கைகோர்த்து கொண்டு குத்தாட்டம் போட்டு வருவது எல்லாம் ஆதீனகர்த்தரின் செயல்பாடுகளா? என்பதைக் கண்கொண்டு பார்த்து இவரைத் தட்டி வைக்க வேண்டிய அரசு, இவரது ஆட்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தமிழர்கள் தாங்கிக் கொண்டிருந்தனர்.

இதன் எதிர்விளைவாய், இந்த உளறுவாயர், ’நம்மைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை.தன்னை ‘சுவாமீ’ என்றும் ’ஆதீனம்’ என்றும் சிரம் தாழ்ந்து வணங்கும் கூட்டம் ஞானசம்பந்தர் பெருமானைத்தான் எண்ணி வணங்குகின்றதே தவிர தன்னை அல்ல’ என்ற தெளிவு இல்லாமல், ”தானே உலகக் குரு;தனக்கு நிகர் எவரும் இல்லை” என்கிற திமிர் முளைத்துப் போய், ஆடிய தப்பாட்டங்களின் பலன் இப்போது இவரது தலையைக் காவு கொள்ளப் போகிறது.

இவர் செய்த மன்னிக்க முடியாத செயல்கள்,”சிவன் சொத்தை எவன் சொத்து? என்று கேட்டுக் கொண்டு ”நாம் யார்க்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை; ஈசனே என் கனவில் வந்து நித்தியைக் காட்டினார்; நான் அவருக்கு மகுடத்தை பூட்டினேன்’ என்று வெட்கமின்றி விளம்புகிறார் இந்த வீணர்.

நித்தி எனும் பரம சண்டாளனின் பாச வலைக்குள் இந்த 292ஐ விழ வைத்தது இவரது கிழட்டுப் பருவத்தின் கேடு கெட்ட ஆசைகளும் இச்சைகளும்தாம்.

‘காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.”.

என்ற வள்ளுவனின் வார்த்தைகளுக்கு உதாரணபுருஷனாய் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்நெறி கெட்ட செயல்களால். இப்போது இவரது நாமம் கெட்டுவிட்டதா,இல்லையா?

இந்த 292ஐ அந்த 293, ‘குரு’ என்ற ஸ்தானத்தில் வைத்துக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. இதை ’இல்லை’ என்று எவரேனும் விளக்கம் சொல்ல முடியுமா?

நித்தம் நித்தம் பேட்டிகள்;சவால்கள்;சந்தி சிரிக்கும் பேச்சுக்கள்...

ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் இரண்டுங் கெட்டான்களுக்கு எப்படி வெட்கம் என்ற பதமே இருக்காதோ,அப்படி, அதை உறுதிப்படுத்தி, நிரூபித்துக் காட்டிக் கொண்ட பித்தனாகக் கொக்கரித்தவனை கர்நாடகம் காவு கொண்டு விட்டது பார்த்தீர்களா?.

இன்று நித்தியின் திரைமறைவுக் கிரிமினல் நடத்தைகள் ஆர்த்தி என்ற அமெரிக்கப் பெண்ணால் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் நவீன இளைஞனாக வேடம் தரித்துக் கொண்டு அங்குள்ள மதுபானக் கூடங்களில் கூத்து நடத்தியிருப்பதை அமெரிக்கவாழ் இவரது நிர்வாகி ஒருவரே இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஆழ நீரில் மூழ்கிக் கொண்டு காற்று விட்டவனை, அது பொட்லியாக நீரின் மேல் தோன்றி வெடித்துக் காட்டிக் கொடுக்காமல் இருக்காதே?

எத்தனையோ இளைஞர்களும் இளம்பெண்களும்,கணவன்மார்களிடம் கசப்புக் கொண்டவர்களும் இந்த நித்தி தரும் தீர்த்தத்தால் தெளிவு(?) பெற்று இவனுக்குச் சேவகர்களாகி விட்டார்கள்.

பாவம், அதே தீர்த்தம் இந்த அருணகிரியையும் பாடாய்ப் படுத்தி நித்தியின் புகழைப் பாட வைத்துக் கொண்டிருக்கிறது.

’நித்தியின் நிழல்களுக்குக்கே நிஜமான சக்தி இருப்பதாக அரற்றிக் கொண்டு அவர்களுடைய பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்  அருணகிரி’ என்பது எல்லோருக்கும் தெரிந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த அரசுக்கு மட்டும் தெரியவில்லை.

ஒருவேளை இவனது தீர்த்தம் அரசையும் அடிமைப் படுத்தி விட்டது போலும்.

இல்லையென்றால் கர்நாடக அரசால் நித்தியின் நடத்தைகள் கிமினல் குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்டு அவன் மீது வழக்குத் தொடுத்த பின்னரும் நம் மாநில அரசு - நமது தமிழ்ப் பண்பாட்டையும் சமய நெறி மரபுகளையும் காக்க வேண்டிய இந்த அரசு, மவுனம் காக்குமா?

நண்பர்களே

நித்தி, நமது சமயத்துக்கு மட்டுமல்ல;அத்தனை சமயங்களுக்கும்
சைத்தான்;கடுகளவும் கருணையற்றவன்; காமப் பேய் பிடித்துக் காவி கட்டிக் கொண்டு இளிச்சவாயர்களையும் ஏமாந்த பணக்காரர்களையும்
தன் பாதங்களில் விழ வைத்து பல்லிளித்துக் கொண்டிருக்கும் மாய்மாலக்காரன்;மாபாவி.

பாவத்தில் முளைத்த பணத்தாலும் கேடு கெட்ட குணத்தாலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களை உறவாக்கிக் கொண்டு,உல்லாசம் காணும் உளுத்தன்.
.
’இந்தக் கேடு கெட்டகிரிமினலைச் சரண் அடைந்து எனது வாரிசே நீதான்’ என்று வணங்கியவர் நம் வணக்கத்துக்குரியவரா?

கூடா நட்பு கேடாய் முடியும்;இது 292மற்றும் 293 ஆகிய 420களுக்கு மட்டுமல்ல அரசுக்கும்தான்.

அவனை, ஆட்சியாளர்களும், ஏன் நீதி மன்றங்களும்கூட கண்டு கொள்ளாமல் இருக்கலாம்;ஆனால். திருஞானசம்பந்தரின் திருவுளம் விடாது.

ஞானசம்பந்தரின் பெயரால் பெற்ற அந்தஸ்தை அற்பத் தேவைகளில் செலுத்தி ஆசைகளில் உழன்ற பாவச் செயல்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனை, பிடதிப் பித்தன் நித்தியால் நேர்ந்துள்ளது’ என்பதே எனக்குள் உணர்த்தப்படும் செய்திகள்.

இந்த அருணகிரியையும் அந்தச் சண்டாளன் நித்தியையும் இரக்கமின்றித் தண்டிக்கும்; இவர்களுக்குத் துணை நிற்கும் எவரையும் நரகத்தில் இடர்படுத்தும்; எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இதோ-
நம் மக்களுக்கு இருக்க வேண்டிய வீரமும் விவேகமும் கர்நாடக மக்களுக்குத் தோன்றி, நித்தியைத் துரத்தத் தொடங்கி விட்டது.

நம் தமிழர்களுக்கு இனி மேலும் வீரம் பிறந்து விழித்தெழுந்து கொள்ளாமல் போனாலும் இறைவன் சபையில் கடும் தண்டனைத் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது.

திருஞான சம்பந்தர் பெருமானின் அற்புத வாழ்வை அறியாத அற்ப மானிடர்க்கு இப்போது இது புரியாது.

’மதுரை ஆதீனத்தின் கோவில் சொத்துக்களை எல்லாம் கூத்துக்
கெட்ட குமரிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறார்’ என்ற குற்றச் சாட்டை இந்த அரசு
ஏன் கடுமையாகக் கண் கொண்டு பார்க்கவில்லை?

அரசின் புலனாய்வுத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது அதன் கைகள் கட்டப்பட்டுள்ளதா?

இந்து அறநிலைத்துறை என்பது இந்து சமயத்தின் நெறிகளைக் குழி தோண்டிப் புதைக்கும் ஆதீனச் செயல்களுக்கு ஆலாபனை பாடும் நிலையில் வைக்கப் பட்டிருக்கின்றதா?

ஒரு கிரிமினலைக் காப்பாற்றி தமிழர்களின் சமய நெறிகளைச் சாகடிக்கும் இந்த அரசை மக்கள் விரைவில் கைவிட்டு விடும் சூழ்நிலை தெய்வக் கட்டளையால் நிச்சயம் ஏற்படும்..

கர்நாடகத்தில் கிரிமினல் என்று அறியப் பட்ட ஒருவன் இங்கு சிவில் குற்றவாளியாகக் கூட இந்த அரசுக்குத் தெரியாமல் இருக்கின்றதே!; கர்நாடக மக்களுக்கு உள்ள சமய நோக்கமும் வீரமும் இந்தத் தமிழர்களுக்கு இல்லாது இருக்கிறதே?.

இந்த நிலை கண்டு எனதுள்ளம் கொதிக்கின்றது.

நண்பர்களே,

நான் ஆரம்பம் முதலே மதுரை ஆதீனச் செயல்பாட்டில் உறுதி கொண்டு எதிர்க்கின்றேன்,

சூடாக இருப்பினும் என் எழுத்துக்கள் எப்போதும் அநீதியைத்தான் சுட்டும்; அறம் சார்ந்துதான் முட்டும்..

எதன் பொருட்டும் தடுமாறாது.

‘நாமார்க்கும் பகை அல்லோம்;பயமும் கொள்ளோம்;
நல்லோர்க்குத் துணை செல்வோம்;நியாயம் வெல்வோம்:
ஏமாற்றோம்;ஏமாறோம்; துணிந்து நிற்போம்;
எதுவரினும் அறம் மாறிச் செல்லோம் நாமே”

என்பதே எனது எழுத்துக்களின் தார்மீகப் பலம்;கொள்கை.

எனவேதான், இந்தக் கபடக் காவியின் கைங்கரியத்தை எல்லாம் கடுமையாகச் சாடும் கடமை எனது எழுத்துக்களுக்கு இயல்பாகிப் போனது.

ஆனால்,தமிழும் சமய நெறிகளும் தவழ்ந்து வளர்ந்த மதுரை ஆதீனத்தில் நடக்கும் இழிசெயல்களின் எதிர் விளைவுகளைத் தமிழன் உணராது இருக்கின்றானே?

தமிழை நினைத்தால் தலை நிமிர்கின்றேன்;தமிழனை நினைத்தால் தலை குனிகின்றேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.06.2012