Tuesday, December 13, 2011

உணர்ந்து எழுதுக!




முகநூல் மற்றும் வலைத்தளம் என்று
முனைந்து எழுதிடும் நண்பர்க்கெல்லாம்,
அகம்எழும் உணர்வில் தமிழ் நலன்கருதி
அன்புடன் எழுதும் பண்புரைக் கடிதம்:

சமூகத் தளமென இதனைத் தந்தார்;
சமுத்திரம் போலே சங்கமம் ஆகி
சுமூகமாக ஒருவருக் கொருவர்
சொற்களைப்  பகிர்ந்து எழுதிடுகின்றோம்!

எழுதிடும்போது எல்லைகள் வகுத்து;
’இனியவை;புதுமை;இலக்கியச் செய்திகள்
பழுதில்லாமல் படைக்கும் கவிதைகள்;
படங்கள் மற்றும் தகவல்கள் எல்லாம்

படைக்கும் திறத்தோர் படைக்கின்றவாறும்
படிப்போர் உணர்ந்து மகிழ்கின்றவாறும்
கிடைக்கும் தளம்’ என இதனைச் செய்து
கேண்மை கொள்வதே தமிழர் மேன்மை!


அண்ணன்-தங்கை ஆயினும்,கூட
அதீத அன்பைக் காட்டுதல் குறைத்து
பண்புடன் எழுதும் பக்குவம் நிறைத்து
படிப்பவர் மதிக்க,எழுதிடல் வேண்டும்!

ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற
உண்மைக் காதல் உள்ளே இருப்பின்
பருவக் காமம் அதனைக் கவியாய்;
படிப்பவர்க் கெல்லாம் எடுத்துரைக்காதீர்!

தமிழுக்கென்று தனிச் சிறப்புண்டு;
தயவும் பணிவும் தகைசால் பண்பும்
அமைந்த மொழி என அகிலம் சொல்லும்
அதனை உணர்ந்து எழுதுதல் நம் கடன்!

பண்டை இலக்கியம் பழந்தமிழ் நெறிகள்
பக்குவம் நிறைந்த காதல் கவிதைகள்
கண்டு,மகிழ்ந்து எழுதுவ தெல்லாம்
காண்போருக்கும் கற்பித்தல் பொருட்டே!

இலைமறை காயென எழுதிடும் செய்திகள்
எச்சில் இலைபோல் காற்றில் பறக்க
தலைமுறை இதனைக் கெடுக்கும் விதத்தில்
தமிழைக் கெடுத்து எழுதாதிருப்பீர்!

உங்களின் எழுத்தை உங்கள் வீட்டு
உற்றார்,பெற்றார்,உறவினர் எல்லாம்
தங்களின் உணர்வாய்த் தாங்கி மகிழத்
தரமாய் எழுதி உரமாய்த் திகழ்வீர்!

நல்ல சந்ததி இன்றைய தலைமுறை
நாளை அவர்தாம் ஆளும் குடிகள்
நல்லவர்,வல்லவர் என்றவர் இருந்து
நாடும் வீடும் காத்திடச் செய்வீர்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.12.2011

Sunday, December 11, 2011

இன்று- பாரதிதோன்றிய நாள்!





பாரதி பிறந்த நாள்!
--------------------------------------------
இந்தியர் நெஞ்சில் எல்லாம்
இமயமாய்த் தமிழை ஏற்றி
சுந்தரக் கவிதை செய்து
சுதந்திர முழக்கம் செய்த
மந்திரக் கவிஞன்;எங்கள்
மாகவி பாரதி;உலகம்
வந்தநாள் இன்று;அவனை
வணங்குதல் செய்வோ நாமே!



பாரதி போற்றி! பாரதி போற்றி!
---------------------------------------------------

பொய்யும் புளுகும் புனைந்தது உலகு
புரட்டும் திருட்டும் கலந்தது உறவு;
வையம் முழுவதும் தேடியலைந்தும்;
வாழ்வில் நேர்மை உள்ளோர் குறைவு!

கவிஞன் என்றால் பாரதிமட்டும்
கருத்தில் நிற்கக் காணு கின்றோம்;
புவியில் அவன்சொல் திறனறிந்து
பூட்டி,மனதில் பேணு கின்றோம்!

செவியில் அறைந்து அவன் உரைத்த
சிந்தனை யாவும் கொண்டிடு வோம்!
அவையில் ஒன்று;மறைவில் ஒன்று
அறியார் நாமெனக் கண்டிடு வோம்!

பாரதி தன்னைப் படித்தோர்;நமது
பாரில் பைந் தமிழ்ச் சொந்தம்;
வாரீர்,அந்தப் பாரதி உணர்வை
வாழ்த் திடுவோமே, நாம் இன்று!


இவண்-
கிருஷ்ணன் பாலா
11.12.2011



Monday, December 5, 2011

POKE என்பது.......























நண்பர்களே,

‘POKE' என்று  முக நூலில்  (Facebook) ஒரு  ‘சொடுக்கி’ இருக்கிறது.
அதன் பொருள் என்ன என்பதை  முகநூலில்  அநேக நண்பர்கள் புரியாமலேயே அதைச் ‘சொடுக்கி’    வருகிறார்களோ?’ என்று  நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில்,
நண்பர்கள் சிலர் எனது Face Book பக்கத்தை POKE
செய்தபோது அதற்குப் பதிலாக மரியாதைக்கு நானும்
ஒரு முறை Poke செய்தால்  மறுபடியும்
அவர்கள் அதையே திரும்ப Poke செய்கின்றார்கள்.

எனவே -
‘முகநூலில்  'Poke' என்ற சொடுக்கி இருப்பதன்
பயன் என்ன என்பதை நண்பர்கள் அறிந்து கொள்ள
வேண்டும்’ என்பதற்காக  என் விளக்கத்தை இங்கே
சொல்லி வைக்கின்றேன்:

நண்பர்களும் இதைப் புரிந்து கொள்வார்களாக!:

முதன் முதலில் ஒருவர் இன்னொருவர்பால் POKE
செய்தால்:
அது,
அவருடைய பதிவுகளைப் பார்த்து
அவரைச்  செல்லமாகக் கிள்ளும் நிலைக்குச் சமம்.

அவருடைய பதிவுகளுக்குத் தனது பார்வை
பட்டுக் கொண்டிருக்கிறது எனக் காட்டிக் 
கொள்வதாகவும் இந்த Poke பொருள் சொல்லும்.

முதன் முதலாக உங்களை ஒருவர் Poke
செய்து,பதிலுக்கு நீங்கள் Poke செய்தால்
அது:
அவருக்கு நீங்கள் ‘உங்கள் அன்பைப் புரிந்து
கொண்டேன்’  என்று பதில் உணர்த்துவதாகும்.

ஆனால் -
அதற்குப் பிறகு Pokeக்கு Poke என்று
தொடரும்போது -
Pokeக்கு அர்த்தங்கள் அவரவர்
போக்குக்கேற்ப மாறுபடுகின்றன.

அவை எவ்வாறு எனப் புரிந்து
கொள்ள இதோ:

Poke என்றால்:
சிந்தனையில் நுழைவோரைக் ‘சுட்டுதல்’;
செறுக்கோடு எழுதுவோரை ‘தட்டுதல்’
மந்தமாயிருப்போரைக் ‘குட்டுதல்’;
மனதுக்கினியோரைக்  ‘கட்டுதல்’

அன்புக்குரியோரை ‘ஒட்டுதல்’
அழைப்புக்குப் பதிலாக ’எட்டுதல்’
வம்புத்தனமாக ‘முட்டுதல்’
வரைமுறை இல்லாமல் ‘கொட்டுதல்’

என்று-

எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம்.
அது அவரவர் மனோ நிலையைப் பொறுத்த விஷயம்.

எனினும்,
Poke என்பதன்  போக்கைப் புரிந்து நீங்கள் கொண்டால் சரி.

இப்படிக்கு,
பொழுது Pokeஉடன்--
கிருஷ்ணன் பாலா
5.12.2011

Thursday, December 1, 2011

எது சாத்தானின் வேலை?

"யோகா கலை என்பது சாத்தானின் வேலை” 


என்று - 


கேபீரியல் அமோர்த் என்னும் 85 வயது போதகர் திருவாய் மலர்ந்திருக்கிறார். (ஆதாரம்: தினகரன் நாளிதழ் / 1.12.2011/பக்கம் 12) 

இவர் சாதாரண போதகர் எனில் நாம் இந்தக் கருத்தை வழிப்போக்கன் ஒருவன் சொன்னதாகக் காதில் போடாமல் இருந்திருக்க முடியும்.

ஆனால், இத்தாலியில் உள்ள வாடிகனின் கிறிஸ்துவ மதத் தலைமைப் போதகர் என்ற தகுதியில் சொல்லியிருப்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.

’உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்தி மனிதனை ஆரோக்கியமுள்ளவனாக்கி, அவனை மெய்ஞ்ஞானத்தில் மிதக்கச் செய்து இறைநிலையோடு கலந்து இன்புறச் செய்யும் ஆற்றல் படைத்தது யோகக் கலை’ என்பதை இன்று எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் உணர்ந்து ஆர்வத்தோடு பின்பற்றத் தொடங்கி இருக்கின்றார்கள். இது ஒருவகையில் பிரபஞ்ச அறிவை மனிதனுக்குள் புகுத்தும் வல்லமை கொண்டது.
இதன் மெய்ப்பாடாகத்தான், இன்று,உலகெங்கிலும்,குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் யோகக் கலை அமைப்புக்கள் பெருகி வருகின்றன.

பதஞ்சலி முனிவர் மூலம்,இந்தியப் புராதன ஞானியர் உலக மாந்தருக்கு அருளிய உன்னதமான இறைஞானக் கலை என்பதாலும் உலகின் எல்லா மதத்தினரின் உணர்வுகளிலும் இதன் பெருமை இன்று வேர்விடத் தொடங்கியிருப்பதாலும் ’இதன் மூலம் கிறித்துவர்களின் மனம் மெய்ஞ்ஞானத்தை நோக்கி மாற்றம் அடைந்து விடுமோ?’ என்கிற மத உணர்வின் மாசு பட்ட எண்ணத்தினாலும்தான் இவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.




’எது சாத்தானின் வேலை?’ என்பதைப் புத்தியுள்ளோர் புரிந்து கொள்வர்.


இவண் - 
கிருஷ்ணன்பாலா
1.12.2011