Monday, April 11, 2011

கலியுகத்தில் நான்! (பகுதி-1)


அகர முதல எழுத்தினைப் போல               
அநேக விஷயம் அதனதன் நிலையில்
சிகரம் தொட்டு,தர்மம் சிதைய
சிறுத்திடும் இந்தக் கலிகாலத்தை
நுகரத் தெரிந்தோர் நுண்மான் புலத்தால்
நுகர்ந்தும் பகர்ந்தும் நூல்பல தெளிந்தும்
அகத்தினில் கொண்ட உண்மைகள் யாவும்
அணிந்தவன் இங்கே உரைப்பது கேளீர்!


அத்தனும் அம்மையும் ஆசைப் பட்டதில்
ஆரம்பம் முதலே உயிர், சிறை பெற்றது;
பத்து மாதம் கருவறைச் சிறையில்
பட்டபின் உடலுள் வாழ்நாள் முழுதும்!
இரத்தமும் சதையும் வற்றிவிடாமல
இராப் பகலாக, உறங்கியும் விழித்தும்
நித்தமும் இரைப் பை நிரப்புவதல்லால்
நிஜமாய் இங்கு சாதிப்ப தென்ன?


ஒருநாள் கூட உணவில்லாமல்                                    
ஓட்டும் திறமை இல்லா திருப்பதும்
இருநாள் விழித்து உணர்வில்லாமல்
இயல்பாய் வாழ முடியாதிருப்பதும்
மரணம் என்பதை மற்றவர்க் கென்றே
மனம் தெளியாது கனவில் இருப்பதும்
ஒருநாள் விழித்து;உடலை வெறுத்து
உலகைக் கனவாய்க் காண்பதும் காண்பீர்!

சொத்தும் சுகமும் சேர்ப்பதற்கென்று
சுகத்தை இழந்து பித்தாய்த் திரிந்து,
மொத்தமும் ஆசைப் பற்றினில் வீழும்
மூட மனம்இதை யாரறிவாரோ?
வித்தை,விருந்து;வேடிக்கைச் சடங்கு
வேடம் போடும் நாடக வாழ்க்கை
எத்தனை காலம் நடக்கும் என்பது
இறைவன் எழுதும் காலக் கணக்கு!


வாழும்வரையில் காண்பது யாவும்
வரவோ செலவோ யாதும் இங்கு
சூழ்வது விதிப் பயன் என்றே நூலோர்
சொன்னதை மறந்து நின்றதில் கரைந்தேன்!
’ஊழ்வினை என்னை உலகினில் பிறக்க
உந்துதல் செய்தது’ என்பதை மறைக்கச்
சூழ்நிலை தோன்றி சூழ்ச்சி செய்தது;
சூழ்ச்சியில் நானும் தோற்றுப் போனேன்!


நானாய் விரும்பி வந்தேனில்லை;
நடுவழி வந்தபின் திரும்பிடத் தெரியேன்!
தானாய் எல்லாம் நடத்திக்கொண்டு
தனியாய் என்னைப் படைத்தனன் போலும்!
ஊனாய் உடலைப் பெற்றது முதலே
ஊர்ந்தேன்;தவழ்ந்தேன்;எழுந்தேன்;நடந்தேன்;
ஆனாலும்நான் உலகிற் பிறந்த
அவசியத்தையோ அறிந்தேன் இல்லை!


அங்கும் இங்கும் அலைவதும்;அலைந்து
அமைதியைத் தேடி உறங்கி எழுவதும்
எங்கும் எதிலும் ’நான்’ ‘நான்’ என்றே
என்னை முதலாய் எண்ணிக் கொள்வதும்;
பொங்கும் அலைபோல் புதுப்புதுக் கனவில்
புகுந்து,விழித்துப் புலம்பிக் கொள்வதும்
இங்கென் வாழ்க்கை இயல்பாய்ப் போனது;
இதைத்தான் இறைவன் எழுதி வைத்தானோ?

உண்ணவும், உறங்கவும் உறங்கி எழுந்து
உழலவும் உணரவும் ஆண்பெண் உறவை
எண்ணவும் ஏங்கவும் இலக்கில்லாமல்
இயங்கவும் மயங்கவும் இவையல்லாமல்
பண்ணிடும் வேறு காரியம் இங்கு
பலவிதம் இருந்தும் மனிதருக்கதனால்
புண்ணியம் ஏதும் பூப்பது உண்டோ?
பூமியில் இதைத்தான் புரியாதுள்ளேன்!


எத்தனை நேரம் மனிதர் மண்ணில்                     
இரவு,பகலாய் விழித்திட முடியும்?
எத்தனை காலம் இருந்து மண்ணில்
இரவை, பகலைக் கழித்திட முடியும்?
எத்தனை நாட்கள் பட்டினி இருந்து
இயல்பாய் மனிதர் வாழ்ந்திட இயலும்?
எத்தனை பணம்தான் இருந்திட்டாலும்
இரைப்பை இறுதியில் தருவது என்ன?


உண்ணல்,ஓய்தல்,உறங்கல்,எழுதல்
ஒவ்வொருநாளும் இவையே தொடர்தல்;
மண்ணில் இதுதான் நிரந்தர சுழற்சி;
மற்றெவை இந்த மாந்தரின் உடைமை?
உண்ணுதற்கெனவே உலகிற்பிறந்து
உடலை வளர்த்து,மண்ணில் புதையப்
பண்ணும் இந்தப் பம்பர வாழ்க்கை
பலயுகங் கள்எனச் சுழல்வதுதானே?

கடவுள் என்பதுநிஜமா?,பொய்யா?                                        
காரணமான கற்பனைப் பொருளா?
திடப் பொருளான வடிவம் உண்டா?
திரவப் பொருள்போல் உருவம் உடைத்தா?
ஜடப் பொருள் இந்த மானுடம் மற்றும்
ஜராசரம் அனைத்தும் சேர்ந்த வடிவா?
விடை தெரியாத குழப்பம்;எனினும்
விஷய ஞானிபோல் உரைசெய் கின்றேன்!

அண்டம் என்னும் அகண்ட வெளியில்                                       
அணுவெனத் திகழும் பூமிப் பந்தில்
அண்டிய இந்த மானுடப் புள்ளியுள்
அணுவிலும் அணுவாய் ஆகிய ஒருவன்
கண்டு வருவது கனவுகள்;அதில்தான்
காட்சிகள் இந்த மானுட வாழ்க்கை!
கண்கள் மூடினால் தான்நிஜம் தெரியும்;
கடவுளின் நோக்கம் யாதெனப் புரியும்!


அதுவரை எண்ணம் ஆயிரமாயிரம்;
அவற்றின் இடையே,குழப்பம்;தெளிவு
எதுவரை இந்த நாடகம் என்பது
இறைவன் பிடியில் இருக்கும் முடிவு!
இதனிடை நானோர் இறைவனைப்போல
எண்ணிக்கொண்டு எழுத்துகள் படைத்து
அதனிடை வாழும் அரைகுறைப் பாமரன்
அறிவீர்;என்போல் நீங்களும் தானே!


தோற்றம்,வளர்ச்சி.தொடர்ந்து முதுமை
தோல்வியும் வெற்றியும் நிலைகொள்ளாமல்
மாற்றம் என்பது மண்ணில் தோன்றும்
மாந்தருக்கெல்லாம் மாறா விதிதான்!
ஆற்றலும் அறிவும் அறிவில்லாமையும்
அவனவன் விதியில் எழுதியபடியே
ஏற்றமும் இரக்கமும் ஏழ்மையும் செல்வமும்
இறைவன் வழங்கிய நன்கொடை; கண்டேன்!


எங்கோ இருந்த இவ்வுயிர் தன்னை
இப்புவி மண்ணில் இழுத்து வைத்தவன்
எங்கோ இருந்து எழுதிடும் நாடகம்;
இதில் என்பாத்திரம்;’நான்’ எனும் சூத்திரம்!
உங்களுக்குள்ளே இருக்கும் உணர்வுகள்;
உலக மக்களின் உள்ளங்கள் எல்லாம்
தங்கி இருக்கும் தத்துவம்; எனினும்
தனித்தனி நாடக அரங்கேற்றங்கள்!
                                                                                                                                                               
உலகம் எனக்கோர் நாடக மேடை;                     
உறவுகள்,நண்பர்கள் போடும் வேடம்;
பலப் பல விதமாய் காட்சிகள் மாற்றம்;
பாசம் நேசம்;மோசம்,நாசம்;
நிலையில்லாத நிஜமும் பொய்யும்
நினைவில் மலர்ந்து கனவாய் உதிர
தொலைதூரம்போல் மரணம்;ஆனால்
தொடரும் நிழலாய்அது என் அருகில்!

நடந்து முடிந்த நாடகக் கூத்தின்                                   
நாயகனாக நான் இருந்தாலும்
நடத்தி வைத்தவன் அவனே;எனது
நடிப்பின் இயக்கம் செய்தவன்;உண்மை!
நடக்கப் போகும் முடிவும் அவன்தான்
நான்அவன் கருவி;நலமும் தீங்கும்
கடந்த காலம்;என்செயல் களுக்குக்
காரணம் எல்லாம் அவன்தான்;கேளீர்!
                                                                            (தொடரும்)
-கிருஷ்ணன் பாலா
11.4.2011




Pray For Japan

உலகப் பொருளாதாரத்தையே


உருமாற்றிய தேசம்;

இன்று-

கலக்கத்தின் கரங்களில்
கரைந்து நிற்கின்றது!

கடல்கோள் அழிவை
கக்கிடும் அலைகளின்
கொடுமைப் பெயரைக்
குறித்த நாடு;


இன்று-


அதே-


கடல் அரக்கனின்
'சுனாமி’க்கரங்களில்


சிக்கி-

சின்னா பின்னபட்டு
விக்கித்து நிற்கிறது!

விரைவில்
அத் தேசம்


துன்பத்திலிருந்து
விடியலைப் பெறவும்;
அமைதியில் சூழ்ந்து
ஆறுதல் பெறவும்;
இழந்த உயிர்கள்

இறையடி நிழலில்
இரண்டறக் கலந்து
இன்பம் பெறவும்-
ஜப்பானுக்கு
ஜயம் உண்டாகவும்-

எல்லோரும் ஒன்றாய்
எண்ணித் தொழுவோம்;
எண்ணங்களாலே
இதயம் இணைவோம்!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
Published in Face Books-Notes on Sunday, 27 March 2011 at 23:23

Thursday, February 3, 2011

இந்தக் கானல் நீரில்….



 ‘முக நூல்’ (FACE BOOK) என்பது ஓர் சமூக வலைத் தளம். இதன் பயனாளிகள் ஒருவருக்கொருவர் சமூக நலனில் அக்கறை கொண்டு சமூக நலன் சார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்தும் பரிமாறியும், பரஸ்பரம் நண்பர்களாகி,உலகத்தையே ஒரு குடும்பமாகப் பாவிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த வலைத் தளம்,அதன் உண்மையான பயன்பாட்டை எட்டியுள்ளதா?

அதைப் பற்றிய நமது கண்ணோட்டம், இதே முக நூலில் பதிவு செய்யப்பட்டது. முக நூல் நண்பர்கள் நிறையப் பேர்களின் மனதிலும் பதிவாகி விட்ட கவிதை இது. நமது ‘உலகத் தமிழர் மையத்தின்’ அறிவார்ந்த வாசகர்களின் கருத்துக்கும் வைக்கப் படுகிறது, இங்கே
:


இந்தக் கானல் நீரில்....
முகவரியின்றியும் முழுமையின்றியும்
முகத்தை மூடி எழுதிக் கொண்டிருக்கும்
முகநூல் நண்பர் அனைவரும் அறிய       
முகமன் கூறி எழுதுவ தாவது:

பலருக்கும் இதுவோர் எழுத்துப் பலகை;
பலவிதம் எழுதிப் பழகிக் கொள்கிறார்;
சிலருக்கு இதுவே சிந்தனை மன்றம்;
சிறிது ஞானம் தேர்ந்து கொள்கிறார்!

அரைகுறையாகப் படித்தோர்; மற்றும்
அறிவிலியாக இருப்போ ரெல்லாம்
தரக் குறைவாக எழுதித் தள்ளித்
தறுதலைக் கூட்டம் வளர்க்கின் றார்கள்!

கவிதை என்ற பெயரில் கிறுக்கி
கண்டதைச் சிலபேர் எழுதிக் காட்ட
செவிடன் சபையில் சிரிப்பதைப் போல
சிலபேர் அதனை ரசிக்கின் றார்கள்;

பண்டிதம் மிகுந்த படைப்பைச் சிலபேர்
பக்குவமாக எழுதிடும் போது
கண்டு ரசித்த குருடர்கள் போல
கருத்தினைச் சொல்லிப் புளகாங் கிப்பதும்;

சமூக மாற்றம்; சரித்திர உண்மை
சாதிப்பதுபோல் சில பேர் எழுத
சமர்புரிவதுபோல் வெகுண்டு சிலபேர்
சங்கம் முழங்கி அடங்கி விடுவதும்;

அறிஞர் சிலபேர் அறிவியல் கருத்தை
அவையில் வைத்து அலங்கரிப் பதுவும்;
குறிக்கோள் இன்றிச் சிலபேர் எழுதி
குமைந்து நெஞ்சம் வருந்து கின்றதும்;

ஆண், பெண் பேதம்; அவை மரியாதை
அடக்கம் மீறி நட்பினை நாடி
நாணம் இழந்து எழுதிக் கொள்வதும்
நான் பார்க்கின்ற நாடகம் இங்கு:

சுய நலத்தோடு எழுதி இங்கு
சொல்லும் பொருளும் பேசிடுவோரும்
பயனுள வகையில் பதிவுகள் செய்து
பலருடன் நட்பைப் பகிர்ந் திடுவோரும்;

காலை, மாலை வணக்கம் சொல்லி
'காமெடி’,பேசி மகிழ்ந் திடுவோரும்
 'வேலை’ முகநூல் எழுதுவ' தென்றே
வெட்டிப் பொழுதைக் ‘களித்’திடுவோரும்

'முக நூல் சந்தைக் கூட்டம்’ என்றே
முழுதாய் உணர்ந்தவன்; மனதின் பதிவில்
இகழ்வோர்;புகழ்வோர் யாரும் நிஜமாய்
இல்லாதிருப்பது உண்மையு மாகும்!

இந் நூல் நமது நிஜவாழ் வல்ல;
இதுநம் பாதையின் இலக்கும் அல்ல;
இந் நூல் என்பது ‘கானல் நீர்’தான்;
இதுநம் தாகம் தீர்ப்பதும் அல்ல!

எனினும்,படிப்போர் எவரும் இங்கு
என்னை உணர எழுதுதல் என் கடன்;
தனியொரு வழியில்;தமிழ் நெறிகாட்டித்
தவறுகள் களைந்திட எழுதுகிறேன்,நான்!


நேர்மையோ டிருந்து ;நாளும்
நிமிர்வுடன்  எண்ணி;புத்திக்
கூர்மையோ டெழுதி உண்மை
கூறுவ தெனது கொள்கை!

யாரும் எனக்குப் பகைவர் இல்லை;
யாருக்கும் தீங்கு செய்திட இயலேன்!
காரணம் இன்றி என்பால், இங்கு
காய்பவர் நண்பர் ஆவதும் இல்லை!

நிரந்தரம் என்று என்னை,நானே
நினைப்பவ னல்லன்;எனினும்,இங்கு
நிரந் தரமான எழுத்தாய் இருக்க
நிலையாய்க்  கருத்தைப் பதிவு செய்கிறேன்!

இந்தக்கானலில் எழுதுவ தென்பது
எழுத்து மீனை வளர்ப்பது போல!
முந்தி வருவோர் முயன்று பார்க்க;
முடிந்தால் அவர்களும் மீனை வளர்க்க!

இவண்-

கிருஷ்ணன் பாலா
2.2.2011

Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!


















கரும்பு,மஞ்சள்,வாழை எங்கள்
கழனிதோறும் தங்குக;
தருமம் மிகும் தமிழர் மனம்
தரணியிலே பொங்குக!


அரும்புகின்ற நமது எண்ணம்
அவணியிதில் ஓங்கியே
அகதி ஆக வாழும் மக்கள்
ஆளும் மக்கள் ஆகுக!


புதிய பா’தை’ படைத்து இந்தப்
புவியிலெங்கும் தமிழரின்
விதியை மாற்றும் வெற்றி சூழ
வேண்டுகின்றோம் பொங்கலே!


சிதைந்து போன நமது பண்பு
சிகரமாக எழுந்திட
உதயமாக வேண்டும்;இந்த
உலகம் போற்றும் பொங்கலே!

பொங்கல் எங்கள் சின்னமாகப்
பூமியெங்கும் பொங்குக!
மங்கலங்கள் தங்குமாக
மகிழ்ச்சியோடு பொங்குக!

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களுடன் –
கிருஷ்ணன் பாலா
14.01.2011

Monday, January 3, 2011

சபாஷ்,விஜய குமார்!

நண்பர்களே,


இது நிஜமான நிகழ்வா? அல்லது கற்பனையும் கருத்தும் நிறைந்த நண்பர் யாராவது வடித்தனுப்பிய செய்தியா என்பதை ஆராய்ந்து பதிக்க விரும்பாமல்,செய்தியின் சிறப்பறிந்து இங்கே பதிவு செய்ய முடிவு செய்தேன்.


இது நிஜம் என்றால் -


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் அவர்களுக்கு, ‘உலகத் தமிழர் மையம்’ வாசக  நண்பர்கள் சார்பாக ‘சபாஷ்’ என்று ஒருமி்த்த குரல் கொடுப்போம்.


அவரது துணிவையும் அதேசமயம் பண்பான சிந்தனையையும் பாராட்டுவோம்.


அவர் செய்த காரியம் தமிழகத்தின் ஒட்டுமொத்த குடிமக்களின் கௌரவத்தையும் தன்மானத்தையும் தரணிக்கு எடுத்துச் சொல்கிறது.



பத்திரிகையாளர் திரு.’நாணா’
 இந்தச் செய்தியை ‘இந்தியா டு டே’ தமிழ் வார இதழின் ‘ஆர்ட் டைரக்டரும்’ சிறந்த பத்திரிகையாளுரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.’நாணா’ அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார். அனுப்பியவரின் முக்கியத்துவம் கருதியும் செய்தியின் சுவாரஸ்யம் கருதியும் நமது உலகத் தமிழர் மையம்’வலைத் தளம் மற்றும் முக நூல் வாசகர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். .)


செய்தி இதுதான்:


Coutesy: Tamil  Source
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வழக்கம் போல் ஏமாளித் தமிழர்களின் இளிச்சவாயத்தனத்துக்கு சன்மானம் வழங்கும் நிகழ்ச்சி,அதுதான் நண்பர்களே ‘இலவச தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி’ ,தி.மு.க மாவட்டச் செயலாளர் திரு. பெரியண்ண அரசு (இதில் அரசு என்ற பெயர் எப்படி,எப்போது.யாரால் இணைக்கப் பட்டது? ஓ...எல்லாம் பகுத்தறிவு செய்த மாயமாக இருக்கிறதே!) தலைமையில் அண்மையில் (23.12.2010 அன்று) நடந்தது.


விழாவின் போது,பொதுமக்கள் முன்னிலியைல் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் நடந்து கொண்டிருந்த இந்த ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா’வின் போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.


அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?


துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமானமருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.


விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.


எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.


இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.


“ நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.


இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவுஅடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’என்றார்.


டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.


மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராகப் போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை.


இதுதான் நண்பர் திரு.நாணா எனக்கனுப்பியிருந்த மின்னஞ்சலின் சாரம்.


நண்பர்களே,
பத்திரிகையாளர் திரு.நாணா அவர்களுக்கு இங்கே நாம் நன்றியைத் தெரிவிப்பதுடன், சில விஷயங்களையும் சிந்திக்க வேண்டும்.அவை வருமாறு:


1. மாவட்டச் செயலாளரோ,அவருடைய கட்சியினரோ யாரும் விவசாயி
    விஜய குமார்  அவர்களுக்கு கல்லாடையோ சொல்லாடையோ
    போர்த்தாமல் விட்டது.


2. திரு.விஜயகுமார் திருப்பிக் கொடுத்த ‘இலவச வண்ணத் தொலைக்
    காட்சிப் பெட்டியைப் பிடுங்கி,தங்களுக்குள் அடித்துக் கொண்டு
    தூக்கிச் செல்லாதிருந்தது. ( “ச்சே....இந்தப் புத்தி நமக்கேன் வராமற்
    போய் விட்டது?” என்ற கழிவிரக்கம் காரணமாக இருந்திருக்குமோ?)


3. திரு.விஜய குமார் இந்த சம்பவத்தை இன்னொரு அரசியல் கட்சிக்குச்
    சாதகமாகமாற்றிவிடாமல் இருக்க வேண்டும்.


4. இதை ஏன் ஊடகங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை?
  
இலவசத்துக்கு வசமாகாத கொத்தமங்கலம் விவசாயி, திரு. விஜய குமார் வாழ்க!


இவண்-
கிருஷ்ணன் பாலா
3.1-2011