அறிவார்ந்த நண்பர்களே,
உண்மையை மறைப்பது என்பதே பொய்யைப் போற்றுகின்ற
புன்மைத் தனம்.
எது அறத்துக்கும் நீதிக்கும் எதிரானதோ அது பாவத்துக்குப் பாதை
அமைக்கின்ற பரிதாபத்தைத் தான் வளர்க்கிறது
சமூகத்துக்குத் தேவையான ஒழுக்கப் பண்புகளை,
நீதியை, நியாயமான செய்திகளை எழுதுகின்றவர்கள் அதே ஒழுக்கத்தையும் நீதியையும்
நியாயத்தையும் கடைப்பிடிக்கின்றவர்களாக இருக்கின்றார்களா என்று ஆராய்ந்து பார்த்தால் அப்படி
இருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு
என்பதையும் அப்படி இருக்கின்றவர்களை இச்சமூகம்
மதித்துப் பார்ப்பதில்லை என்பதும் வெட்கப்படவேண்டிய உண்மை.
வெற்றுக் கருத்துக்களையும் வீணான கற்பனைகளையும் விற்றுக்
காசு பண்ணும் விபச்சார எழுத்தாளர்கள்
பெருகி விட்ட காலம் இது.
உண்மையை நாம் உண்மையான தேடலுடன்
புரிந்து கொள்ளத் தவறினால் அது
பாவகரமான பாதைக்குத்தான் நம்மை வழி நடத்தப்
பார்க்கும்.
உண்மையான எழுத்தாளர் ஒருவரை உண்மையாகப் புரிந்து
கொள்ளாமல் போன பாவத் தடத்திலிருந்து
நான் மாறிவிட்ட உண்மையை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளத்தான் வேண்டும்..
உலகம் புகழ்ந்த சுயசரிதைசரிதை நூல்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘My Story என்று மலையாளப் பெண்
எழுத்தாளரான கமலாதாஸ் அவர்கள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும்
எழுதிய சுய சரிதை நூல்.
அப்பட்டமான உண்மைகளாலும் வெட்கப்படாத தைரியத்தாலும் நிரப்பட்ட எழுத்துக்களின் வடிவம் இவரது சுயசரிதை.1976களில் இந்நூல் வெளிவந்தபோது
’சுதேசமித்திரன்’ நாளிதழில் உதவி ஆசிரியனாகப் பணியில்
இருந்தேன்.
தனது உடல் உறவு பற்றிய
செய்திகளை ஒளிவு மறைவு இல்லாமல்
வலிமை மிக்க வார்த்தைகளால் நிரப்பி,
அதை உலகோர் முன் எடுத்துரைத்த
இப்பெண் எழுத்தாளரின் துணிவு 1976களில் பெரும் சர்ச்சையைத்
தோற்றுவித்தது.
|
Kamala Das |
தனது அழகில் வசீகரிக்கப்பட்டு,
தன்பால்
காம இச்சைகொண்டு உறவாடியவர்கள்;
தன் வாழ்க்கையில் தன்னை
இன்பம் துய்த்தவர்கள்:
தனது காதல் உணர்வுகளைப்
பங்கிட்டுக் கொண்டவர்கள்:
காமம் எப்படிப் பட்டது?.
அதில் தனக்குள்ள ஈடுபாடு எத்தகையது?
என்பதைப்
பற்றிய ஒளிவு மறைவற்ற கருத்துக்களுடன்
போலித்தனமான மனிதர்கள் எப்படியெல்லாம் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டனர்?
உடல் சுகத்தில் வெட்கமின்றி
தன்னைப் பகிர்ந்து கொண்ட பெரும் புள்ளிகளின்
மிருக மனம் எப்படியெப்படி அவர்களை
நடக்க வைக்கின்றது?’
என்று திகைக்க வைக்கும்
ரகசியங்களைக் கொஞ்சமும் கூச்சமின்றி கடுகளவும் மறைக்காமல் இந்தச் சுயசரிதை நூலில்
எழுதியிருக்கிறார்.
’ஒரு இந்தியப் பெண் எப்படிப் பட்ட
துணிச்சலில் எழுதி இருக்கிறார்?’ இக்கப்பட்டவைஎன்று
பலரும் வாய்புதைத்து வியந்து விமரிசனங்களைக் குவித்துக்
கொண்டிருந்த நேரம் அது.
'என்டே கதா’ என்று மலையாளத்திலும்
My Story என்று ஆங்கிலத்திலும் வெளியான அவருடைய எழுத்துக்கள் பல பதிப்புக்களாகப் பரபரப்பாக விற்றுத்
தீர்ந்த போதும் ’அதை வாங்கிப்
படிக்க வேண்டும்’ என்ற ஆர்வம் - உந்துதல்
அப்போது என்னுள் எழவில்லை.
செருக்கும், செம்மாந்த மொழி ஆளுமையும் கொண்டிருந்த
கமலாதாஸ் அவர்கள், மலையாள இலக்கியத்துக்கும் நிறையக் கவிதைகள் படைத்து,
அவற்றுக்கு மேன்மையான கம்பீரம் அளித்திருக்கிறவர்தான். இவரது தனிமனித விமரிசனக்
கவிதைகள் உலகம் முழுவதும் பல்வேறு
ஆங்கில இதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
எனினும், “பலரோடும் பல காலமாகத் தொடர்ந்து
தான் பகிர்ந்து கொண்டு வரும் தன்
படுக்கை அறை விஷயங்களைக் கொஞ்சம்
கூடக் கூச்சமின்றி ஒரு இந்தியப் பெண்
எழுதி இருப்பதன் மூலம் தனது காம
விளையாட்டுக்கு மிகப் பெரும் விளம்பரம்
தேடிக் கொண்டிருக்கிறார்’ என்று நான் சினம்
கொண்டிருந்ததால் எனது மனம். அந்நூலைப்
புறக்கணித்திருந்தது.
எனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் நேற்று
(2.4.2015) பேசிக் கொண்டிருந்தபோது கமலாதாஸ் அவர்களைப்பற்றிய விவாதம் எழுந்தது, அந்த
நண்பர் கமலாதாஸ் அவர்களை நன்கு அறிந்து
அவரிடம் நேரிலும் உரையாடிய வாய்ப்பைப் பெற்றிருந்தவர் என்பதுடன் அப்பட்டமான ஒரு அறிவு ஜீவியாக வாழ்பவர்.
கமலாதாஸும் அவரைத் தன் புதல்வர்களுக்கு
இணையான அன்பிலும் மதிப்பிலும் வைத்திருந்தார்.
கமலாதாஸ்மீது நான் கொண்டிருந்த கசப்புணர்வை
அந்த நண்பரிடம் நான் சொன்னேன். அதற்கு
அவர் சொன்ன செய்திகளும் தகவல்களும்தான்
கமலாதாஸ் பற்றிய எனது மதிப்பீடும்
பார்வையும் தவறு என்ற உண்மை
வெளிப்பட்டது. கமலாதாஸ் அவர்கள் மீது பல
ஆண்டுகளாக நான் கொண்டிருந்த ’ கசப்பு’, எனது அறியாமையின் வடிவம்’
என்பது அப்போது எனக்குள் நறுக்கென்று
பட்டது..
MY STORY வெளியான பின், உலகம் முழுவதும்
அது பேசப்பட்டு,கடும் விமரிசனத்துக்கும் ஆளாகியிருந்த
கமலாதாஸ் அவர்களிடம் எனது நண்பர் விவாதித்திருக்கிறார்.
அப்போது, அந்த நண்பரிடம் கமலாதாஸ்
அவர்கள் சொன்ன விளக்கம், நிமிர்ந்த
நெஞ்சத்தின் நேர்மைக் கருத்துக்களாய் மின்னலென என்னுள் பாய்ச்சியது. ’கேவலமான
பெண் எழுத்தாளர்’ என்று அவரை அதுவரை
சித்தரித்திருந்த எனது தவறான மதிப்பீடு
குறித்து என் மனம் குனிந்து
போனது.
எனது பிழையான மதிப்பீட்டைத் திருத்திக்
கொள்ளச் செய்த கமலாதாஸ் அவர்களின் கருத்து விளக்கம் இதுதான்:
//நான் உண்மைகளை, உண்மையான தைரியத்தோடு எழுதுகிறவள். என் எழுத்துக்களுக்கு மக்களிடையே
பெரும் வரவேற்பு இருக்கிறது.எனது அழகைப்போலவே என்
கவிதைகளும் அழகானவை’ என்று புகழ்கிறார்கள்; அது
உண்மைதான். ஆனால் என் அழகான
தோற்றத்தைப் போலவும் என் அழகான
எழுத்துக்களைப் போலவும் நான் அழகான
வாழ்க்கையில் சிறப்பாக வாழ்கின்றவள் என்று இந்தச் சமூகம்
பொய்யாகப் புரிந்து கொண்டு நம்புவதை நான்
ஏற்க முடியாது. எனது தனிப்பட்ட வாழ்க்கை
என்பது இருட்டறைகளிலும் மூடிக் கிடக்கும் அறைகளுக்குள்ளும்
உடல் புணர்ச்சிகளால் பலரோடும் பலவகையிலும் மாறாத தொடர்புடையது..
போலிப் பத்தினித்தனத்தைக் காட்டி,என் கணவரிடமிருந்தும்
என் பிள்ளகளிடமிருந்தும் போலித்தனமான அன்பையும் பாசத்தையும் பெற நான் விரும்புவதில்லை;அது அவர்களை ஏமாற்றிக் கொண்டு
என் வாழ்க்கையைப் போலியாக்கிக் கொள்ள நான் ஒருபோதும்
சம்மதிப்பதில்லை..
எல்லா வகையிலும் சுதந்திரத்தோடும் உண்மையோடும் வாழும் குணம் என்னுடையது;
மறைக்கப்படாத நிஜமான உணர்வுகளுக்கும் துணிவுக்கும்
இந்தச் சமூகம் மதிப்பளிக்க. வேண்டுமே
தவிர போலித்தனத்துக்கும் போலிகளுக்கும் அல்ல.
உங்கள் தவறுகளையும் பொய்யையும் சொல்லவோ ஒப்புக் கொள்ளவோ
நீங்கள் வெட்கப் படலாம்; அதற்காக,
பொய்க்கு மேல் பொய்யாகவே உங்கள்
வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளத்தான் நேரிடும். ஆனால் அது என்
வாழ்க்கையில் நிகழவே வாய்ப்பில்லை.
மறைக்கப்படாத
உண்மைகளில் கசப்புக் கொண்டு பொய்களின் தோற்றத்தில்
மயங்கும் மக்களால் இச் சமூகம் ஒருபோதும்
தலை நிமிர்ந்து நிற்பதில்லை.
உண்மைகளை மறைக்காது உரைத்து நிமிர்ந்து நிற்கின்ற
கர்வம் எனது எழுத்துக்களுக்கு இருக்க
வேண்டும்;அதில் இவள் திமிர்
பிடித்தவள் என்று இந்த சமூகம்
சொன்னால் அதுபற்றி நான் வருந்தப்போவதில்லை.
’உண்மையைச் சொல்லும் தைரியம்தன் ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டும்’
என்பதை இச்சமூகத்துக்குக் கற்பிக்க விரும்புகின்றேன்//
சுய விமரிசனம் செய்து கொண்டு உண்மையை
உச்சத்துக்கு உயர்த்துவதில் நிகரற்ற துணிவு காட்டிய
இப்பெண்மணியின் நேர்மை நிகரற்றது.
நமது வாழ்க்கையில் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டு,
அதை மறைத்துக் கொண்டு வாழ்பவர்கள் பலரும்
இங்கிருக்கிறார்கள்; பத்திரிகைகளில் அன்றாடம் பல் வேறு செய்திகளில்
இவர்கள் பவனி வருகின்றார்கள்.
நிஜமான வாழ்க்கையில் பலர் இப்படித்தான் ஒழுக்கம்
கெட்ட வாழ்வில் உள்ளத்தில் அழுக்கும் உடலில் கொழுப்பும் நிறைத்து
பாவத்தைப் பெருக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தின் புழுக்களாக
நெளிகின்றவர்கள்
கமலாதாஸ் அவர்களைப்பற்றிச் சிந்திக்கின்றபோது இங்குள்ள எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டும்.
இன்றைய எழுத்தாளர்கள் பொய்களைப் புனைந்துரைப்பதில் வெட்கப்படுவதில்லை;உண்மைகளை மறைப்பதிலோ அஞ்சுவதில்லை.
பணம், பவிசு,வெற்றுப் புகழ்,வெட்கம் கெட்ட தனிப்பட்ட
வாழ்க்கை,தனக்கு ஒரு நியாயம்;ஊருக்கு ஒரு நியாயம்
என்று வகுத்துக் கொண்டு வாழும் போலித்தனம், ஒழுக்கம் கெட்ட நடத்தை இவற்றில்
வாழ்வை அமைத்துக் கொண்டு ’சமூக நோக்கர்கள்’
என்று இவ்வுலகம் புகழ வேண்டும்’ எனப்
பெரிதும் விரும்புகின்றார்கள்.
சமூகத்தின் கேடுகளைப்பற்றி எல்லாம் விதம் விதமாக
எழுதத் தெரிந்த இவர்கள் சமூகத்தின்
அத்தனை கேடுகளையும் கொண்டவர்களாகப் போலி வாழ்க்கை வாழ்கிறவர்கள்.
உண்மைகளை மறைத்துக் கொள்வதில் தைரியமும் பொய்யைப்
புனைந்துரைத்துப் போலி மரியாதைத் தேடிக் கொள்வதில் வெட்கமற்றும்
எழுதுலகில் பவனி வரும் இவர்களை இந்தச் சமூகம் ஆராய்வதில்லை. மாறாக அவர்களுடைய எழுத்துக்களைப் புகழ்ந்து போற்றிக் கரவொலி செய்கின்றது.
.
கமலாதாஸ் அவர்கள் இத்தகையவர்களின் முகத்திரையைக்
கிழித்து எறிந்தவராக, உண்மைகளை மறைக்காது ஊருக்குத் தன்னைப் போலி எழுத்தாளராகக்
காட்டிக் கொண்டு புகழ் தேடாது,
எப்பொழுதும்
தன் எழுத்துக்களில் அறிவார்ந்த உண்மைகளையே
அற்புதமாக எழுதி வந்திருக்கின்றார்.
கமலாதாஸ் நேர்த்தியான அழகு படைத்தவர்;அவரை
விட அவர் எழுத்துக்கள் அழகானவை.
அவரது அழகுக்கு அடிமையானவர்களின் கதையையும் தன் சதையையும் வெகு
அழகாக வெட்கப்படாமல் சொல்லி இருக்கிறார்.
அதனால் லட்சக் கணக்கானோர் அறிஞர்களும்
கலைஞர்களும் இளைஞர்களும் அவரது கதையை-சுய
சரிதையைப் படித்து வியந்தனர்.
பெண்மையின் வடிவமாக அவரைக் காண்பதைவிட
உண்மையின் உரைகல்’ என்றே என்றே அவரைக் கண்டு மதித்தனர்..
|
Kamala Surayya |
உலகம் எல்லாம் வியந்து பேசப்பட்ட எழுத்துக்களில் 75
வயது வரை வாழ்ந்து
எவருடைய நிழலிலும் நில்லாமல்,
எதை நினைக்கின்றாரோ அதை
செயல்படுத்தும் துணிச்சல் கொண்ட பெண்மணி என்பதற்குச்
சான்று:
கடைசிக் காலத்தில் தன்
பெயரைக் ‘
கமலா சுரையா’
என்று மாற்றிக் கொண்டு
இஸ்லாம் மதத்தைத் தழுவிக்
கொண்டது
“நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி
விட்டதால் மதிப்பிழந்து போய் விட்டீர்கள்’ என்று
சிலர் எழுதுகின்றார்களே” என்று நண்பர் ஒருவர்
கேட்டதற்குக் கமலாதாஸ் சொன்னார்:
”நான் வாழ்ந்த வாழ்க்கையின் உள்ளார்ந்த
உண்மைகளை மறைக்காமல் எழுதி விட்டேன்; எனது
எழுத்தையும் அதன் உண்மைகளையும் நேசிப்போர் என்னை நேசிக்கட்டும்; உண்மைகளைச் சொல்வதில் வெறுப்பவர்களைக் கண்டு நான் ஏன்
வருத்தப்பட வேண்டும்?’’
உண்மையில் அவர் மரணம் அடைந்த
பிறகு அவரது உடலை அவரது
புதல்வர்களும் சில நண்பர்களும் புனேயிலிருந்து கொச்சிக்கும்
கொச்சியிலிருந்து கமலாதாஸ் பிறந்த திருவனந்தபுரத்துக்கும் அடக்கம் செய்ய விமானம் மூலம் எடுத்துச்
சென்றனர்.
அப்போது, இந்த மூன்று இடங்களிலும் (புனே,கொச்சி,திருவனந்தபுரம்) ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கமலாதாஸ் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி
செலுத்தினர்.
ஒரு எழுத்தாளருக்கு, தனது மரணத்தின் போது பல்லாயிரக் கணக்கானவர்களைக் கண்ணீர் மல்க வைக்கின்ற
தகுதி இருக்கிறது என்றால் அது அவர் அழகான எழுத்தாளர் என்பதால் அல்ல;அவர்தம் எழுத்துக்களில்
உரைத்த உண்மையும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த அழகுதான்.
கமலாதாஸ் உண்மையின் துணிச்சலை வெகு அழகாக வடித்துக்
காட்டியவர்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
3.4.2015